ஆவிக்குரிய மாரடைப்பை நீங்கள் தவிர்க்கலாம்
உலகின் நம்பர் 1 அத்லெட், சகல திறமைகளையும் பெற்றவர். பார்க்க திடகாத்திரமானவர். பயிற்சி நேரத்தில் ஒருநாள் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார். அந்த அத்லெட்டின் பெயர் ஸியிர்கியே கிரின்காஃப். பனிச்சறுக்கில் இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றவர். மொட்டு மலர ஆரம்பித்தவுடனே கருகினது—இருபத்தெட்டே வயதில். என்னே பரிதாபம்! காரணம் என்ன? மாரடைப்பு. அவருடைய மறைவு முற்றிலும் எதிர்பாராததென சொல்லப்பட்டது, ஏனென்றால் அவருக்கு இருதய நோய் இருந்ததற்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. ஆனால் அவரை பரிசோதித்தபோது, அவருடைய இருதயம் விரிவடைந்திருந்ததும் இதய தமனிகளில் அதிகமான அடைப்புகள் இருந்ததும் தெரிய வந்தது.
பலருக்கு எந்த எச்சரிக்கையுமின்றி திடீரென மாரடைப்பு ஏற்படுவதாக தோன்றினாலும் உண்மை அதுவல்ல என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மூச்சுத்திணறல், அளவுக்கு அதிகமாக குண்டாக இருத்தல், மார்பு வலி ஆகிய அறிகுறிகள் எச்சரிக்கை விடுக்கும்போது அவை பெரும்பாலும் அசட்டை செய்யப்படுவதுதான் உண்மை. இதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக உயிருக்கு ஆபத்து ஏற்படாவிட்டாலும் அநேகர் வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றவர்களாக கஷ்டப்படுகின்றனர்.
மாரடைப்பை தவிர்க்க, உணவுக்கும் வாழ்க்கை பாணிக்கும் இடைவிடாமல் கவனம் செலுத்தி, தவறாமல் மெடிக்கல் செக்கப் செய்துகொள்ள வேண்டும் என்பது இன்றைய மருத்துவர்களின் ஒருமித்த கருத்தாகும்.a அதோடு அவசியம் ஏற்படும்போது மாற்றங்களைச் செய்ய உண்மையிலேயே மனமுள்ளவர்களாய் இருந்தால் மாரடைப்பினால் ஏற்படும் மோசமான விளைவுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள அதிக உதவியாக இருக்கும்.
ஆனால் நம்முடைய இருதயத்தின் மற்றொரு அம்சத்திற்கு நாம் இன்னுமதிக கவனம் செலுத்த வேண்டும். “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” என்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 4:23) இந்த வசனம் முக்கியமாக அடையாள அர்த்தமுள்ள இருதயத்தைப் பற்றியே சொல்கிறது. நம் சொல்லர்த்தமான இருதயத்தைக் காத்துக்கொள்ள விழிப்புடன் இருப்பது அவசியம். அதே சமயத்தில், நம்முடைய ஆவிக்குரிய மரணத்திற்கு வழிநடத்தும் நோய்களுக்கு எதிராக நம்முடைய அடையாள அர்த்தமுள்ள இருதயத்தை பாதுகாத்துக்கொள்ள மிக ஜாக்கிரதையாய் இருப்பது அதைவிட முக்கியமானதாகும்.
அடையாள அர்த்தமுள்ள மாரடைப்பை பகுத்தாராய்தல்
சொல்லர்த்தமான இருதய நோயை போலவே, ஆவிக்குரிய விதத்திலும் மாரடைப்பை தவிர்ப்பதற்கான முக்கிய வழிகளில் ஒன்று அது ஏன் ஏற்படுகிறது என்பதை அறிந்து, பின்னர் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். சொல்லர்த்தமாகவும் அடையாள அர்த்தத்திலும் இருதயத்தில் கோளாறுகள் ஏற்படுவதற்குரிய முக்கிய காரணங்கள் சிலவற்றை நாம் ஆராயலாம்.
உணவு. நொறுக்குத் தீனி வாய்க்கு ருசியாக இருந்தாலும் உடலுக்கு நல்லதல்ல என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வோம். அதே விதமாக மனதிற்கு உகந்ததல்லாத உணவு எளிதாக கிடைத்தாலும், புலன்களுக்கு இன்பமளித்தாலும், ஒருவரின் ஆவிக்குரிய நலனுக்கு கேடு விளைவிக்கும். முறைகேடான பாலுறவு, போதைப் பொருள், வன்முறை, மாயமந்திரம் ஆகியவற்றை சித்தரிக்கும் விஷயங்கள் பல நாசூக்காக மீடியாக்களில் விளம்பரம் செய்யப்படுகின்றன. இப்படிப்பட்ட விஷயங்களால் மனதின் பசியை ஆற்றுவது அடையாள அர்த்தமுள்ள இதயத்துக்கு சாவுமணி அடிக்கும். கடவுளுடைய வார்த்தை இவ்வாறு எச்சரிக்கிறது: “மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:16, 17.
நொறுக்குத் தீனிக்கு அடிமையானவர் பழங்கள், பச்சை காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவைக் கண்டால் முகத்தை சுளிப்பார். அது போலவே மனதையும் இருதயத்தையும் உலகப்பிரகாரமான “நொறுக்கு தீனியால்” நிரப்பிக்கொள்ள பழகிவிட்ட ஒருவருக்கு ஆரோக்கியமான, பலமான ஆவிக்குரிய உணவு சுவைக்காது. கொஞ்ச காலத்திற்கு வேண்டுமானால் அவர் கடவுளுடைய வார்த்தையின் ‘பாலை’ உண்டு உயிர் பிழைத்திருக்கலாம். (எபிரெயர் 5:13) கிறிஸ்தவ சபையிலும் ஊழியத்திலும் அடிப்படை ஆன்மீக பொறுப்புகளை ஏற்பதற்குத் தேவையான ஆன்மீக முதிர்ச்சியை அவர் வளர்த்துக்கொள்ளாதிருப்பார். (மத்தேயு 24:14; 28:19; எபிரெயர் 10:24, 25) அந்த நிலையிலிருந்த சிலர் செயலற்ற சாட்சிகளாகும் அளவுக்கு தங்கள் ஆவிக்குரிய பலம் குன்ற அனுமதித்திருக்கின்றனர்!
வெளித்தோற்றம் ஏமாற்றுவதாய் இருக்கக்கூடும் என்பது மற்றொரு ஆபத்தாகும். ஒரு கிறிஸ்தவன் பொருள் ஆசைமிக்க தத்துவங்களில் அல்லது ஒழுக்கயீனத்தையும் வன்முறையையும் மாந்திரீகத்தையும் சிறப்பித்துக்காட்டும் பொழுதுபோக்கில் இரகசியமாக ஈடுபடலாம்; ஆனால் இவற்றால் பலவீனமடைந்திருக்கும் அடையாள அர்த்தமுள்ள இருதயத்தின் அதிகரித்துவரும் நோய்ப்பட்ட நிலையை, பெயருக்கு செய்யும் கிறிஸ்தவ கடமைகள் மூடி மறைத்துவிடலாம். இப்படிப்பட்ட ஆகாத ஆவிக்குரிய உணவு ஒருவரின் அடையாள அர்த்தமுள்ள இதயத்தை பாதிக்காதபடி தோன்றலாம்; ஆனால் ஊட்டச்சத்து குறைவுபடும் உணவு எப்படி தமனிகளை கடினமாக்கி சொல்லர்த்தமான இருதயத்தை சேதப்படுத்திடுமோ அவ்வாறே இது அடையாள அர்த்தமுள்ள இருதயத்தை செயலிழக்கச் செய்துவிடும். தவறான ஆசைகளுக்கு இருதயத்தில் இடங்கொடுக்கக் கூடாது என்பதை இயேசு இவ்வாறு எச்சரித்தார்: “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.” (மத்தேயு 5:28) ஆம், ஊட்டச்சத்து குறைவுபடும் ஆவிக்குரிய உணவு அடையாள அர்த்தமுள்ள மாரடைப்புக்கு வழிதிறக்கலாம். ஆனால், இன்னும் சிந்திக்க வேண்டிய சில காரியங்கள் உண்டு.
உடற்பயிற்சி. உடல் உழைப்பில்லாமல் பெரும்பாலும் உட்கார்ந்தே வேலை செய்யும் வாழ்க்கை பாணி உடையவர்களுக்கு மாரடைப்பு எளிதில் வரலாம் என்பது யாவரும் அறிந்த உண்மை. அதே விதமாக ஆவிக்குரிய விதத்திலும் அதிக உழைப்பை உட்படுத்தாத வாழ்க்கை பாணியை உடையவர்களுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படலாம். உதாரணமாக, ஒருவர் தனக்கு பிடித்த மற்ற வேலைகளை பாதிக்காத அளவில் கிறிஸ்தவ ஊழியத்தில் ஏதோ ஓரளவு பங்குகொள்ளலாம். அவர் ‘வெட்கப்படாத ஊழியக்காரனாய் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிப்பதற்கு’ மிகக் குறைந்த முயற்சி எடுக்கலாம் அல்லது கொஞ்சம்கூட முயற்சியே எடுக்காமலும் இருக்கலாம். (2 தீமோத்தேயு 2:15) அல்லது ஒருவர் ஏதோ சில கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வரலாம், ஆனால் அதற்காக தயாரிக்கவோ அல்லது அதில் பங்கெடுக்கவோ எவ்வித முயற்சியும் எடுக்காமல் இருக்கலாம். அவருக்கு ஆவிக்குரிய இலக்குகளோ ஆவிக்குரிய காரியங்களிடம் நாட்டமோ உற்சாகமோ இல்லாதிருக்கலாம். ஆவிக்குரிய பயிற்சி இல்லாததால் ஒரு காலத்தில் அவருக்கு இருந்த விசுவாசம் பலவீனமடைகிறது அல்லது செத்துவிடுகிறது. (யாக்கோபு 2:26) எபிரெய கிறிஸ்தவர்களில் சிலர் இப்படி மந்தமான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்ந்ததை கவனித்த அப்போஸ்தலனாகிய பவுல் இந்த ஆபத்தைக் குறித்து அவர்களுக்கு எழுதினார். ஆவிக்குரிய காரியங்களில் அவர்கள் எந்தளவுக்கு கடினப்பட்டு போகலாம் என்பதைக் குறித்து அவர்களை அவர் எச்சரிப்பதைக் கவனியுங்கள்: “சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.”—எபிரெயர் 3:12, 13.
மன அழுத்தம். எக்கச்சக்கமான மன அழுத்தம் மாரடைப்புக்கு வழிநடத்தும் மற்றொரு முக்கிய காரணம். அதே விதமாக மன அழுத்தத்தால் அல்லது “லவுகீக கவலை”களால் அடையாள அர்த்தமுள்ள இருதயம் மிக சுலபமாக சாவை தேடிக்கொள்ளலாம். இதனால் அந்த நபர் கடவுளை சேவிப்பதையே முழுவதுமாக நிறுத்திவிடலாம். அதன் சம்பந்தமாக இயேசு கொடுத்த அறிவுரை காலத்துக்கேற்றதாகும்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.” (லூக்கா 21:34, 35) இரகசிய பாவத்தின் காரணமாக நீண்ட காலம் நாம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாலும்கூட நம்முடைய அடையாள அர்த்தமுள்ள இருதயம் பாதிப்புக்குள்ளாகலாம். இந்த மன அழுத்தம் தீங்கை விளைவிக்கிறது. இது போன்ற வேதனையை அனுபவித்த தாவீது ராஜா இவ்வாறு எழுதினார்: “என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை. என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச் சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.”—சங்கீதம் 38:3, 4.
மிதமிஞ்சிய தன்னம்பிக்கை. பலர் மாரடைப்புக்கு முன்பாக தங்கள் உடல் ஆரோக்கியத்தைக் குறித்து மிக நம்பிக்கையாக இருந்திருக்கின்றனர். மருத்துவ பரிசோதனை தங்களுக்கு தேவையில்லை என்று நினைத்து அவற்றை முற்றிலும் அலட்சியப்படுத்தியும் இருக்கிறார்கள். அதே விதமாக, பல காலம் கிறிஸ்தவர்களாக இருந்துவருவதால் தங்களுக்கு எதுவும் நடக்காது என சிலர் நினைக்கலாம். பெரிதாக ஏதோவொன்று சம்பவிக்கும் வரை ஆவிக்குரிய செக்கப் அல்லது சுயபரிசோதனை செய்துகொள்ளாமல் அசட்டையாக இருந்துவிடுவார்கள். மிதமிஞ்சிய தன்னம்பிக்கையைக் கண்டித்து அப்போஸ்தலன் பவுல் கொடுத்த இந்த நல்ல புத்திமதியை மனதில் வைப்பது மிகவும் அவசியம்: “தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” நம்முடைய அபூரண இயல்பை ஒப்புக்கொண்டு அவ்வப்போது ஆவிக்குரிய பரிசோதனை செய்து கொள்வதே ஞானமான காரியமாகும்.—1 கொரிந்தியர் 10:12; நீதிமொழிகள் 28:14.
எச்சரிக்கை விடுக்கும் அறிகுறிகளை அசட்டை செய்யாதீர்கள்
அடையாள அர்த்தமுள்ள இருதயநிலைக்கு வேதாகமம் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதற்கு நல்ல காரணமிருக்கிறது. எரேமியா 17:9, 10-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கும், இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.” யெகோவா நம்முடைய இருதயத்தை ஆராய்வதோடு, நாமே சுயபரிசோதனை செய்வதற்கு உதவும் அன்பான ஏற்பாட்டையும் அளிக்கிறார்.
‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமை’ மூலமாக நமக்கு காலத்திற்கேற்ற நினைப்பூட்டுதல்கள் கொடுக்கப்படுகின்றன. (மத்தேயு 24:45, NW) உதாரணமாக, நம்முடைய அடையாள அர்த்தமுள்ள இருதயம் நம்மை வஞ்சிக்கும் முக்கியமான வழிகளில் ஒன்று, உலகப்பிரகாரமான கற்பனை உலகில் நம்மை சஞ்சரிக்க வைப்பதாகும். இவை நிஜமல்லாத கற்பனைகள், பகற்கனாக்கள், வெறுமையான மனப் பிரமைகள். இவை முக்கியமாக அசுத்தமான எண்ணங்களை தூண்டிவிடுமானால் மிகவும் ஆபத்தானவை. ஆகவே இவற்றை நாம் அடியோடு அப்புறப்படுத்த வேண்டும். இயேசுவைப் போல் நாம் அக்கிரமத்தை வெறுத்தால் உலகப்பிரகாரமான கற்பனை உலகில் சஞ்சரிக்காதபடி நம்முடைய இருதயத்தை காத்துக்கொள்வோம்.—எபிரெயர் 1:8, 9.
மேலுமாக கிறிஸ்தவ சபையில் அன்புள்ள மூப்பர்களின் உதவி நமக்கிருக்கிறது. மற்றவர்கள் காட்டும் அக்கறையை நாம் பெரிதும் போற்றுகிறோம் என்றாலும் அடையாள அர்த்தமுள்ள இருதயத்தை கவனித்துக்கொள்ளும் முடிவான பொறுப்பு நம் ஒவ்வொருவருடையதே. ‘எல்லாவற்றையும் குறித்து நிச்சயப்படுத்திக்கொண்டு’ ‘நாம் விசுவாசமுள்ளவர்களோவென்று நம்மைநாமே சோதித்து அறிவது’ நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கடமை.—1 தெசலோனிக்கேயர் 5:21, NW; 2 கொரிந்தியர் 13:5.
இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
“மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்ற பைபிள் நியமம் நம்முடைய அடையாள அர்த்தமுள்ள இருதயத்தின் ஆரோக்கியத்திற்கும் பொருந்தும். (கலாத்தியர் 6:7) அநேக சமயங்களில் ஆவிக்குரிய தன்மைக்கு திடீரென்று விபரீதம் நேர்ந்ததாக தோன்றும்; உண்மையில், தீங்கு விளைவிக்கும் நாட்டங்களில் நீண்ட காலம் இரகசியமாக ஈடுபட்டதால் வந்த விளைவாகத்தான் அது இருக்கும். உதாரணத்திற்கு அந்நபர் இரகசியமாக ஆபாச படங்களை பார்த்து வந்திருக்கலாம், பொருட்களை சேர்ப்பதில் அதிக நாட்டம் காட்டி வந்திருக்கலாம், பேர் புகழையோ அதிகாரத்தையோ பெற பாடுபட்டு வந்திருக்கலாம்.
ஆகவே இருதயத்தைப் பாதுகாப்பதற்கு, ஒருவர் உட்கொள்ளும் ஆவிக்குரிய உணவுக்குக் கவனம் செலுத்துவது அவசியம். கடவுளுடைய வார்த்தையை உட்கொண்டு மனதுக்கும் இருதயத்துக்கும் நல்ல ஊட்டத்தை கொடுங்கள். மனதைக் கெடுக்கும் நொறுக்குத் தீனி எளிதில் கிடைத்தாலும் உடலுக்குப் பிரியமானதாக இருந்தாலும் அது அடையாளப்பூர்வமான இருதயத்தை மரத்துப்போகவே செய்யும். ஆகவே அதை வெறுத்து ஒதுக்கித் தள்ளுங்கள். மிகவும் பொருத்தமான—மருத்துவ ரீதியிலும் உண்மையான—ஒரு ஒப்புமையை பயன்படுத்தி சங்கீதக்காரன் இவ்வாறு எச்சரிக்கிறார்: “அவர்கள் இருதயம் கொழுப்பைப் போலவே சுரணையற்று போயிருக்கிறது.”—சங்கீதம் 119:70, NW.
வெளியே தெரியாத இரகசிய பலவீனங்கள் நெடுங்காலமாக இருந்தால், அவற்றை நீக்கிவிட கடினமாக உழையுங்கள். இல்லாவிட்டால், அடையாள அர்த்தமுள்ள தமனிகளை அவை அடைத்துவிடும். உலகத்தின் கவர்ச்சி உங்களுக்கு அதிக இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தருவதுபோல தோன்ற ஆரம்பித்தால் அப்போஸ்தலன் பவுல் கொடுத்த இந்த ஞானமான ஆலோசனையை தியானியுங்கள். அவர் இவ்வாறு எழுதினார்: “சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், . . . இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள் போலவும் இருக்க வேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.” (1 கொரிந்தியர் 7:29-31) பொருளாதார செல்வங்கள் உங்களைக் கவர்ந்திழுக்க ஆரம்பித்தால், யோபுவின் வார்த்தைகளை எண்ணிப் பாருங்கள்: ‘நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப் பார்த்து: நீ என் ஆதரவு என்று சொன்னதுண்டானால் இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.’—யோபு 31:24, 28; சங்கீதம் 62:10; 1 தீமோத்தேயு 6:9, 10.
பைபிள் அடிப்படையில் கொடுக்கப்படும் ஆலோசனையை பழக்கமாக அசட்டை செய்வது எவ்வளவு சீரியஸான விஷயம் என்பதை விளக்க பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.” (நீதிமொழிகள் 29:1) இதற்கு மாறாக, நம்முடைய அடையாள அர்த்தமுள்ள இருதயத்தை நல்ல விதமாக நாம் கவனித்துக்கொண்டால், சிக்கலற்ற எளிய வாழ்க்கை தரும் இன்பத்தையும் மன சமாதானத்தையும் நாம் அனுபவிக்கலாம். இதுவே எப்போதும் சிபாரிசு செய்யப்படும் உண்மை கிறிஸ்தவத்தின் வழியாக இருந்திருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதும்படி ஆவியால் ஏவப்பட்டார்: “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.”—1 தீமோத்தேயு 6:6-8.
தேவ பக்தியுள்ள வழியில் நம்மை பயிற்றுவித்து அதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டால், ஆரோக்கியமான, பலமான அடையாள அர்த்தமுள்ள இருதயம் நமக்கிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். நம்முடைய ஆவிக்குரிய உணவுக்கு நாம் கூர்ந்த கவனம் செலுத்தி வந்தால் இந்த உலகின் அழிவுக்கேதுவான வழிகளும் யோசனைகளும் நம்முடைய ஆவிக்குரிய தன்மையை எந்த விதத்திலும் பாதிக்காதபடி பார்த்துக்கொள்வோம். எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவா அவருடைய அமைப்பின் மூலமாக செய்திருக்கும் ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், அடையாள அர்த்தமுள்ள நம்முடைய இருதயத்தை தவறாமல் பரிசோதித்துப் பார்ப்போமாக. இதை ஊக்கத்தோடு செய்வது, ஆவிக்குரிய மாரடைப்பால் வரும் வருத்தமான விளைவுகளைத் தவிர்ப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
[அடிக்குறிப்பு]
a கூடுதலான தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகள் பிரசுரிக்கும் விழித்தெழு!-வில் 1996, டிசம்பர் 8 தேதியிட்ட பிரதியில், “மாரடைப்பு—என்ன செய்யலாம்?” என்ற தலைப்பில் வெளிவந்த தொடர் கட்டுரைகளை தயவுசெய்து காண்க.
[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]
ஊட்டச்சத்து குறைவான உணவு எப்படி தமனிகளை கடினமாக்கி சொல்லர்த்தமான இருதயத்தை சேதப்படுத்துமோ அவ்வாறே ஊட்டச்சத்து குறைவுபடும் ஆவிக்குரிய உணவு அடையாள அர்த்தமுள்ள இருதயத்தை செயலிழக்க செய்யும்
[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]
உடலுழைப்பு இல்லாத ஆவிக்குரிய வாழ்க்கைப் பாணி கவலை தரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
‘லவுகீக கவலைகள்’ சொல்லர்த்தமான இருதயத்தை சுலபமாக சாகடித்துவிடும்
[பக்கம் 11-ன் படம்]
நம் ஆவிக்குரிய ஆரோக்கியத்தை அசட்டை செய்வது மிகுந்த வேதனைகளுக்கு வழிநடத்தலாம்
[பக்கம் 13-ன் படங்கள்]
நல்ல ஆவிக்குரிய பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொள்வது அடையாள அர்த்தமுள்ள இருதயத்தைப் பாதுகாக்கிறது
[பக்கம் 9-ன் படத்திற்கான நன்றி]
AP Photo/David Longstreath