சுத்தமான மனசாட்சி விலை என்ன?
“இ ருபதாயிரம் ரியாலை பெற்றுக்கொள்ள அரசுக்கு உத்தரவு.” இப்படியொரு வினோதமான தலைப்புச் செய்தி பிரேஸில் நாட்டு செய்தித்தாள் கோரேயூ டூ போவூ-வில் சமீபத்தில் காணப்பட்டது. லூயிஸ் அல்வோ டி ஆராவுழு என்ற தபால்காரர் ஒரு சிறிய நிலத்தை மாநில அரசுக்கு விற்றதைப் பற்றிய செய்தி அதில் வெளியாகியிருந்தது. நிலத்தின் உரிமையை மாநில அரசுக்கு மாற்றிக்கொடுத்த பின்பு தனக்கு தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட பணத்தைவிட 20,000 ரியால் (சுமார் 8,000 அமெரிக்க டாலர்) அதிகம் கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு லூயிஸ் ஆச்சரியமடைந்தார்!
கூடுதலாக பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்குள் அவருக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. அரசாங்க இலாகாக்களுக்கு பல முறை சென்றும் பணத்தைத் திருப்பித் தர முடியாமல் போனபோது ஒரு வழக்கறிஞரை வைத்து நீதிமன்றத்தில் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளும்படி லூயிஸுக்கு ஆலோசனை கூறப்பட்டது. “யாரோ தவறு செய்துவிட்டார்கள், அரசாங்க முறைப்படி செய்ய வேண்டியதால் இழுபறியாக இருக்கிறது, அதை எப்படி சரி செய்வது என்பது யாருக்கும் தெரியவில்லை” என்று குறிப்பிட்ட நீதிபதி, அத்தொகையை அரசு பெற்றுக்கொள்ளவும் சட்ட நடவடிக்கைக்கான தொகையை பார்ட்டிக்கு செலுத்தவும் அரசுக்கு உத்தரவிட்டார். “நான் இதுவரை இப்படியொரு வழக்கை சந்தித்ததே இல்லை” என்றும் அவர் கூறினார்.
யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகிய லூயிஸ் இவ்வாறு சொல்கிறார்: “எனக்குரியதல்லாத ஒன்றை வைத்துக்கொள்வதற்கு பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட என்னுடைய மனசாட்சி எனக்கு இடங்கொடுக்கவில்லை. நான் எப்படியாவது பணத்தைத் திருப்பிக் கொடுத்தாக வேண்டும்.”
இப்படிப்பட்ட மனப்பான்மை அநேகருக்கு மிகவும் வினோதமானதாக அல்லது புரிந்துகொள்ள கடினமானதாக தோன்றலாம். ஆனால் உண்மை கிறிஸ்தவர்கள் அரசாங்க அதிகாரிகளோடு தொடர்புகொள்கையில் சுத்தமான மனசாட்சியைக் காத்துக்கொள்வது மிகவும் அவசியம் என்பதை கடவுளுடைய வார்த்தை காட்டுகிறது. (ரோமர் 13:5) யெகோவாவின் சாட்சிகள் “நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க” திடதீர்மானமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.—எபிரெயர் 13:18.