எந்த காரியத்திலும் கறைபடாதபடி சுத்தமாயிருங்கள்
சுத்தமாக இருக்க ஆசைப்படுவது சகஜமானதே—ஆனால் கடவுளுடன் நம் உறவைப் பொருத்ததிலோ அவரைப் பிரியப்படுத்துவதற்கு அது அவசியமான ஒன்று. சுத்தம், தூய்மை, சுத்திகரிக்கும் செயல் ஆகியவற்றை விவரிக்க அநேக எபிரெய, கிரேக்க வார்த்தைகள் உண்டு; சுத்திகரிக்கும் செயல் என்பது அழுக்கும் கலப்படமும் மாசும் இல்லாத கறையற்ற, தூய்மையான நிலைக்குத் திரும்புவதை குறிக்கிறது. அந்த எல்லா வார்த்தைகளும் சரீர சுத்தத்தை மட்டுமல்லாமல் ஒழுக்க அல்லது ஆவிக்குரிய சுத்தத்தையும் பெரும்பாலும் குறிக்கின்றன.
சரீர சுத்தம்
இஸ்ரவேல் தேசத்தார் 40 வருடங்கள் வனாந்தரத்தில் நாடோடிகள் போல் சுற்றித் திரிந்தாலும் அவர்களுடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் ஓரளவு அவர்களை ஆரோக்கியமுள்ளவர்களாக ஆக்கின. நோய்களை கண்டறிவதும் அவற்றிற்குச் சிகிச்சை அளிப்பதும் உட்பட, அவர்களுடைய கூடார வாழ்க்கை சம்பந்தமாக கடவுள் கொடுத்திருந்த சட்டங்களே கேள்விக்கிடமின்றி இதற்குக் காரணமாக இருந்தன. சுத்தமான நீரின் முக்கியத்துவமும் இந்த நியாயப்பிரமாண ஏற்பாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பரிசேயர்களின் ஆவிக்குரிய அசுத்தத்தையும் மாய்மாலத்தையும் பற்றி இயேசு குறிப்பிடுகையில் சரீர சுத்தம் சம்பந்தமான நியமத்தைக் குறித்தும் சொன்னார். அவர்களது மாய்மால நடத்தை, ஒரு கிண்ணத்தின் அல்லது பாத்திரத்தின் வெளிப்புறத்தை நன்கு சுத்தப்படுத்திவிட்டு உட்புறத்தையோ அப்படியே அசுத்தமாக விட்டுவிடுவதற்கு ஒப்பாக இருந்தது. (மத்தேயு 23:25, 26) இயேசு தம்முடைய கடைசி பஸ்காவின் போது இதே போன்ற ஓர் உதாரணத்தைப் பயன்படுத்தினார். அப்போது அவருடைய சீஷர்களுடன் யூதாஸ் காரியோத்தும் இருந்தான். அவர்கள் ஏற்கெனவே குளித்திருந்ததாலும் அவர்களுடைய எஜமானர் அவர்களுடைய பாதங்களை கழுவி சுத்தம் செய்திருந்ததாலும் அவர்கள் சரீரப்பிரகாரமாக ‘முழுவதும் சுத்தமாயிருந்தார்கள்.’ எனினும் ஆவிக்குரிய அர்த்தத்தில் “நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல” என இயேசு சொன்னார்.—யோவான் 13:1-11.
சகஜமானது ஆனாலும் அசுத்தமானது—ஏன்?
சகஜமானதும் சரியானதுமான காரியங்களான மாதவிடாய், மணமானவர்களுக்கு இடையில் தாம்பத்திய உறவு, பிள்ளைப்பேறு போன்றவை ஒருவரை ‘அசுத்தப்படுத்தும்’ என நியாயப்பிரமாணத்தில் ஏன் கூறப்பட்டது? ஒருவிதத்தில் அது, மணவாழ்க்கையின் மிக நெருக்கமான உறவுகளை உன்னத நிலைக்கு உயர்த்தியது, தம்பதியினருக்கு சுயகட்டுப்பாட்டை கற்பித்தது, இனப்பெருக்க உறுப்புகளுக்கு உயர்மதிப்பைக் கொடுத்தது, உயிர் மற்றும் இரத்தத்தின் பரிசுத்த தன்மைக்கு மரியாதை காட்டியது. இந்தச் சட்டதிட்டங்களை கண்டிப்புடன் கடைப்பிடித்ததால் கிடைத்த சுகாதாரம் சம்பந்தப்பட்ட பலாபலன்களைக் குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு மற்றொரு அம்சமும் இருக்கிறது.
கடவுள் ஆரம்பத்தில் ஆதி மனிதனையும் மனுஷியையும் பாலுறவு தூண்டுதல்களுடனும் பிள்ளைகளைப் பிறப்பிக்கும் திறன்களுடனும் படைத்திருந்தார்; அவர்கள் கூடிவாழ்ந்து பிள்ளைகளைப் பெற்றெடுக்கும்படி கட்டளையிட்டிருந்தார். எனவே அந்தப் பரிபூரண தம்பதியினர் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதில் பாவமேதுமில்லை. எனினும், பாலுறவு விஷயத்தில் அல்லாமல் தடை செய்யப்பட்ட கனியைப் புசிக்கும் விஷயத்தில் ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனபோது, மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. பாவம் செய்த குறுகுறுக்கும் குற்ற மனசாட்சி திடீரென அவர்கள் நிர்வாணிகளாய் இருப்பதை உணர்த்தியது, உடனடியாக, பாலுறுப்புகளை கடவுள் பார்க்காதபடிக்கு மறைத்துக்கொண்டார்கள். (ஆதியாகமம் 3:7, 10, 11 ) அப்போது முதற்கொண்டு பரிபூரண பிள்ளைகளைப் பெற்றெடுக்கும்படியான கட்டளையை மனிதர்களால் நிறைவேற்ற முடியாமல் போனது. மாறாக, வழிவழியாக வரும் பாவமெனும் கறையையும் மரணமெனும் தண்டனையையும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கடத்துகிறார்கள். நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கும் தேவபயமுள்ள பெற்றோரும் பாவமுள்ள பிள்ளைகளையே பெற்றெடுக்கிறார்கள்.—சங்கீதம் 51:5.
பிறப்புறுப்புகளின் செயல்பாடுகள் சம்பந்தமாக நியாயப்பிரமாணம் கட்டளையிட்டவை, சுயகட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும், உணர்ச்சிகளை அடக்கவும், இனப்பெருக்கம் செய்வதற்கான கடவுளுடைய வழிவகைகளை மதிக்கவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பித்தன. உடலின் இயல்பான செயல்பாடுகளினால் பிறப்பு உறுப்புகளிலிருந்து வெளிப்படுகிறவற்றால் ஆண்களும் பெண்களும் அக்காலப்பகுதியில் அசுத்தமானவர்களாக கருதப்பட்டது பொருத்தமாக இருந்தது. இது மனிதனின் சுதந்தரிக்கப்பட்ட பாவத்தன்மையை நினைப்பூட்டியது. குறைபாடுகளால் அசாதாரணமாக, நீண்ட நாட்களுக்கு இப்படி வெளிப்பட்டால், அவர்கள் நீண்ட காலம் அசுத்தமாயிருக்கும்படி எதிர்பார்க்கப்பட்டது. அதன் இறுதியில், குளிப்பதோடுகூட பாவநிவாரண பலி செலுத்துவதும் அவசியமாக இருந்தது. பிரசவித்திருக்கும் ஒரு தாயும் இவ்வாறு செய்ய வேண்டியிருந்தது. இவருடைய பாவநிவிர்த்திக்காக கடவுளுடைய ஆசாரியன் அந்தப் பலியை செலுத்துவார். இவ்வாறே இயேசுவின் தாயாகிய மரியாள் பரம்பரையாக தனக்கிருந்த பாவத் தன்மையை அறிக்கையிட்டாள்; தன் முதற்பேறான குமாரனைப் பெற்றெடுத்த பின்பு பாவநிவாரண பலியை செலுத்துவதன் மூலம் தான் பாவமற்றவளோ தூயவளோ அல்ல என்பதை ஒப்புக்கொண்டாள்.—லூக்கா 2:22-24.
கிறிஸ்தவர்களும் சுத்தமும்
இயேசு பூமியிலிருந்த காலத்தில் நியாயப்பிரமாண சட்டமும் அதன் அடிப்படையிலான பழக்கவழக்கங்களும் பின்பற்றப்பட்ட போதிலும் கிறிஸ்தவர்கள் அந்த நியாயப்பிரமாணத்தின் கீழும் சுத்திகரிப்பு சம்பந்தமான அதன் சட்டதிட்டங்களின் கீழும் இல்லை. (யோவான் 11:55) நியாயப்பிரமாணம் ‘வரப்போகிற நன்மைகளின் நிழலாய்’ இருந்தது; ‘அவைகளின் பொருள் கிறிஸ்துவைப் பற்றியதாய்’ இருந்தது. (எபிரெயர் 10:1; கொலோசெயர் 2:17) எனவே, பவுல் இந்த சுத்திகரிப்பு காரியங்களின் சம்பந்தமாக இவ்வாறு எழுதினார்: “அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீர சுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!”—எபிரெயர் 9:13, 14, 19-23.
ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமே, சகல விதமான பாவத்திலிருந்தும், அநியாயங்களிலிருந்தும் கிறிஸ்தவர்களை சுத்திகரிக்கிறது. (1 யோவான் 1:7, 9 ) சபை கறையற்றதாக, பரிசுத்தமானதாக, பிழையற்றதாக இருக்கும்படிக்கும் ஆட்கள் “தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கியமுள்ளவர்களாகவும்” இருக்கும்படிக்கும் கிறிஸ்து, “சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கு . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” (எபேசியர் 5:25-27; தீத்து 2:14 ) எனவே இந்தக் கிறிஸ்தவ சபையிலுள்ள ஒவ்வொருவரும் “முன் செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து”விடாமல், தொடர்ந்து கடவுளுடைய ஆவியின் கனிகளை வெளிக்காட்டுவது அவசியம். ஏனெனில் கனி கொடுக்கிறவர்களையே “அதிக கனிகளைக் கொடுக்கும்படி, [கடவுள்] சுத்தம் பண்ணுகிறார்.”—2 பேதுரு 1:5-9; யோவான் 15:2, 3.
சுத்தத்தின் உயர்ந்த தராதரத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
ஆகையால் கிறிஸ்தவர்கள் “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசி”யிலிருந்து தங்களைப் பாதுகாப்பதற்கு உடல் ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் ஆவிக்குரிய ரீதியிலும் சுத்தம் சம்பந்தமான உயர்ந்த தராதரத்தைக் காத்துக்கொள்வது அவசியம். (2 கொரிந்தியர் 7:1) ‘ஒரு நபருக்குள் போவது அல்ல ஆனால் அவரிடமிருந்து வெளிவருகிறதே அவரை அசுத்தமுள்ளவராக்குகிறது’ என இயேசு சொன்னதற்கு இசைவாகவே, சுத்திகரிக்கும் தன்மை படைத்த கிறிஸ்துவின் இரத்தத்திலிருந்து பயனடைய விரும்புவோர் ஆவிக்குரிய சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்கள் “சுத்தமான இருதயத்”தையும் கடவுளுக்கு முன்பாக “சுத்த மனச்சாட்சி”யையும் காத்துக்கொள்கிறார்கள். (மாற்கு 7:15, NW; 1 தீமோத்தேயு 1:5; 3:9; 2 தீமோத்தேயு 1:4) “ஒன்றும் சுத்தமாயிரா[த],” மனசாட்சியில் கறைபட்ட அவிசுவாசிகளுடன் ஒப்பிடுகையில், சுத்தமான மனசாட்சி உள்ளவர்களுக்கு “சகலமும் சுத்தமாயிருக்கும்.” (தீத்து 1:15) இருதயத்தில் பரிசுத்தமாக இருக்க எப்போதும் விரும்புகிறவர்கள் “அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, . . . உங்களைச் சுத்திகரியுங்கள்” என ஏசாயா 52:11-ல் சொல்லப்பட்ட புத்திமதிக்கு செவிசாய்க்க வேண்டும். (சங்கீதம் 24:4; மத்தேயு 5:8) இவ்வாறு செய்பவர்களின் ‘கைகள்’ அடையாள அர்த்தத்தில் சுத்தமாக இருக்கும், கடவுளும் அவர்களை சுத்தமானவர்களாக கருதி அவர்களுடன் தொடர்புகொள்கிறார்.—யாக்கோபு 4:8; 2 சாமுவேல் 22:27; சங்கீதம் 18:26; தானியேல் 11:35; 12:10.
நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லாதபோதும் அப்போஸ்தலன் பவுல் ஒருசமயம் ஆலயத்தில் சடங்காசார முறைப்படி தன்னை சுத்திகரித்துக்கொண்டார். அப்படி அவர் செய்தது முரண்பாடாக இருந்ததா? பவுல் நியாயப்பிரமாணத்தையோ அல்லது அதன் முறைமைகளையோ எதிர்க்கவில்லை; ஆனால் கிறிஸ்தவர்கள் அதற்குக் கீழ்ப்படியும்படி கடவுள் எதிர்பார்க்கவில்லை என்பதை மட்டுமே காட்டினார். கடவுள் கட்டளையிட்டிருந்த நியாயப்பிரமாண முறைமைகள் புதிய கிறிஸ்தவ சத்தியங்களை மீறாதவரையில் அவற்றைக் கடைப்பிடிப்பதில் எந்த ஆட்சேபணையும் உண்மையில் இருக்கவில்லை. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்திக்கு யூதர்கள் செவிசாய்ப்பதற்கு தான் முட்டுக்கட்டையாய் இருந்துவிடாதபடிக்கு பவுல் அப்படி நடந்துகொண்டார். (அப்போஸ்தலர் 21:24, 26; 1 கொரிந்தியர் 9:20) இவை எல்லாவற்றிலும் பவுல், மற்றவர்களின் இரட்சிப்பில் பெரும் அக்கறை காட்டினார், இதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். ஆகையால், “எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறே[ன்]” என அவரால் சொல்ல முடிந்தது. (அப்போஸ்தலர் 20:27; 18:6) எனவே உடல் ரீதியிலும், ஒழுக்க ரீதியிலும், ஆவிக்குரிய ரீதியிலும் சுத்தமாக இருக்க கடினமாய் உழைப்போமாக. இவ்வாறு செய்வது கடவுளின் அங்கீகாரப் புன்னகையைப் பெற்றுத் தரும்.