ஒற்றுணர்வு—கரிசனைக்கும் கருணைக்கும் திறவுகோல்
மற்றொருவரின் வேதனையை உங்களால் தணிக்க முடிந்த வரை, நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை வீணாகவில்லை” என்று ஹெலன் கெல்லர் எழுதினார். உணர்ச்சிப்பூர்வமான வலியை கெல்லர் நன்றாகவே புரிந்துகொண்டிருந்தார். 19 மாதமாக இருந்தபோதே, நோய் காரணமாக அவருடைய கண் பார்வை முழுமையாக பறிபோனது, காதும் கேளாமல் போனது. ஆனால் கருணை உள்ளம் படைத்த ஓர் ஆசிரியை ஹெலனுக்கு பிரேய்ல் மொழியில் வாசிக்கவும் எழுதவும் பின்னர் பேசவும் கற்றுக்கொடுத்தார்கள்.
கெல்லரின் ஆசிரியை ஆன் சுலிவனுக்கு, உடல் ஊனத்தோடு போராடுவது எவ்வளவு ஏமாற்றம் அளிக்கும் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. அவர்களும் ஏறக்குறைய பார்வையற்றவர்கள்தான். ஆனால் ஆன் பொறுமையின் சிகரமாக இருந்து ஒவ்வொரு எழுத்தாக ஹெலனின் கைகளில் எழுதிக் காட்டி அவற்றை சொல்லிக் கொடுத்தார்கள். இந்த ஆசிரியை காட்டிய ஒற்றுணர்வால் மிகவும் உற்சாகமடைந்த ஹெலன், பார்வையற்றோருக்கும் காது கேளாதோருக்கும் உதவி செய்வதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கத் தீர்மானித்தார். பெரும் பாடுபட்டு தனக்கிருந்த ஊனத்தை சமாளிக்க கற்றுக்கொண்ட பின்பு, அதே போல அல்லல்படும் மற்றவர்களிடம் அவருக்குக் கருணை பிறந்தது. அவர்களுக்கு உதவி செய்ய விரும்பினார்.
சுயநலம் மிக்க இந்த உலகில், ‘மனமிரங்காமல் தன் இருதயத்தை அடைத்துக்கொண்டு’ மற்றவர்களின் தேவைகளை கண்டுகொள்ளாமல் கண்களை மூடிக்கொள்வது ரொம்ப சுலபம். (1 யோவான் 3:17) என்றாலும், அயலாரிடமும் ஒருவருக்கொருவரும் ஊக்கமான அன்பை காட்டும்படி கிறிஸ்தவர்களுக்கு கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. (மத்தேயு 22:39; 1 பேதுரு 4:8) ஆனால், ஒருவரையொருவர் நேசிக்க மனப்பூர்வமாய் தயாராக இருந்தாலும், மற்றவரின் துயரைத் துடைக்க கிடைக்கும் வாய்ப்புகளை பெரும்பாலும் கவனிக்கத் தவறுகிறோம் என்ற மறுக்க முடியாத உண்மையை நீங்கள் ஒருவேளை உணர்ந்திருக்கலாம். மற்றவரின் தேவைகள் என்னவென்பது நமக்கு தெரியாததே அதற்குக் காரணமாக இருக்கலாம். ஒற்றுணர்வு என்ற திறவுகோல் இருந்தால், கரிசனை, கருணை என்ற கதவுகள் திறக்கும்.
ஒற்றுணர்வு என்பது என்ன?
மற்றவரின் நிலைமையை, உணர்வுகளை, உள்நோக்கங்களை புரிந்துகொண்டு இரங்குவதே ஒற்றுணர்வு என்று ஓர் அகராதி கூறுகிறது. மற்றவரின் நிலைமையில் நம்மை வைத்துப் பார்க்கும் திறமை என்றுகூட அது விவரிக்கப்படுகிறது. அப்படியென்றால் ஒற்றுணர்வு என்பது முதலாவதாக மற்றவரின் சூழ்நிலைமைகளைப் புரிந்துகொள்வதையும் இரண்டாவதாக அந்த சூழ்நிலைகள் காரணமாக அவருக்கு ஏற்படும் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதையும் தேவைப்படுத்துகிறது. ஆம், ஒற்றுணர்வு மற்றொருவரின் வலியை நம் இருதயத்தில் உணருவதை உட்படுத்துகிறது.
நாம் இப்போது கலந்தாலோசிக்கும் பண்பை பைபிள் பல விதங்களில் குறிப்பிடுகிறது. “பிறரிடம் பரிவு, சகோதர அன்பு, இரக்கம்” ஆகியவற்றை கிறிஸ்தவர்கள் காட்டும்படி அப்போஸ்தலன் பேதுரு அறிவுரை கூறினார். (1 பேதுரு 3:8, கத்.பை.) “பரிவு” என்பதற்குரிய கிரேக்க வார்த்தையின் அர்த்தம், “மற்றொருவரோடு சேர்ந்து பாடுபடுவது” அல்லது “கருணை காட்டுவது” என்பதாகும். அப்போஸ்தலனாகிய பவுல் உடன் கிறிஸ்தவர்களிடம், “சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்” என்று சொன்னபோது இதே கருத்தைத்தான் சொன்னார். “ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்” என்றும் பவுல் சொன்னார். (ரோமர் 12:15, 16) பிறருடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்க்காவிட்டால், நம்மைப் போல பிறரை நேசிப்பது முடியாத காரியம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா?
அனைவரிடமும் இயற்கையாகவே ஒற்றுணர்வு ஓரளவு குடிகொண்டிருப்பது உண்மைதான். பசியால் வாடும் பிள்ளைகளை அல்லது கதிகலங்கி நிற்கும் அகதிகளைப் பார்க்கும்போது யார்தான் நெகிழ்ந்து போகாமல் இருப்பர்? தன் குழந்தை அழும்போது அன்புள்ளம் படைத்த எந்தத் தாய்தான் அதை பார்த்துக்கொண்டு பேசாதிருப்பார்? ஆனால் எல்லா துயரங்களுமே எளிதில் கண்ணுக்குப் புலப்படுபவை அல்ல. மனச்சோர்வு, வெளியே தெரியாத ஒரு உடல்நல குறை, அல்லது உண்ணும் பழக்கத்தில் கோளாறு போன்றவற்றை நாம் ஒருபோதும் அனுபவிக்காதிருந்தால் அவற்றால் அவதிப்படுகிறவரின் உள்ளக் குமுறலைப் புரிந்துகொள்வது எவ்வளவு கடினம்! ஆனாலும்கூட, நமக்கு பழக்கமில்லாத சூழ்நிலைமைகளில் இருப்பவர்களிடம்கூட நாம் ஒற்றுணர்வு காட்ட முடியும், காட்ட பழகிக்கொள்ள வேண்டும் என்று வேதவசனங்கள் காட்டுகின்றன.
ஒற்றுணர்வுக்கு பைபிள் உதாரணங்கள்
ஒற்றுணர்வு காட்டுவதில் யெகோவாவே நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரி வைக்கிறார். பரிபூரணராக இருந்தபோதிலும் அவர் நம்மிடம் பரிபூரணத்தை எதிர்பார்ப்பதில்லை. “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.” (சங்கீதம் 103:14; ரோமர் 5:12) நம்முடைய குறைபாடுகளை அறிந்திருப்பதால், ‘நம் திராணிக்கு மேலாக சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுப்பதில்லை.’ (1 கொரிந்தியர் 10:13) அவர் தம்முடைய ஊழியர்களையும் தம்முடைய ஆவியையும் பயன்படுத்தி, சோதனைக்குத் தீர்வுகாண நமக்கு உதவுகிறார்.—எரேமியா 25:4, 5; அப்போஸ்தலர் 5:32.
தம்முடைய ஜனங்கள் படும் வேதனை தமக்கே நேரிட்டத்தைப் போல யெகோவா உணருகிறார். பாபிலோனிலிருந்து நாடு திரும்பிய யூதர்களிடம், “உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்” என அவர் சொன்னார். (சகரியா 2:8, NW) கடவுள் காட்டும் ஒற்றுணர்வை நன்கு புரிந்துகொண்டிருந்த பைபிள் எழுத்தாளராகிய தாவீது அவரிடம், “என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?” என கூறினார். (சங்கீதம் 56:8) யெகோவா தம்முடைய உண்மை ஊழியர்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் போராட்டத்தில் சிந்தும் கண்ணீரை ஒரு புத்தகத்தில் எழுதி வைத்திருப்பதைப் போல ஞாபகத்தில் வைத்திருப்பதை அறிவது எத்தகைய ஆறுதலின் அருமருந்தாக இருக்கிறது!
இயேசு கிறிஸ்துவும் தம்முடைய பரலோக தந்தையைப் போலவே மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து நடந்தார். ஒரு செவிடனை சுகப்படுத்த நினைத்தபோது, அந்த அற்புதத்தால் அவனை அநாவசியமாக தர்மசங்கடப்படுத்தக்கூடாது அல்லது அவனுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடாது என்பதற்காக அவனை தனியே அழைத்துக் கொண்டுபோய் பிறகு சுகப்படுத்தினார். (மாற்கு 7:32-35) மற்றொரு சமயம், தன்னுடைய ஒரே மகனை அடக்கம் செய்வதற்கு போய்க்கொண்டிருந்த ஒரு விதவையை இயேசு கவனித்தார். உடனடியாக அவளுடைய வேதனையை அவர் உணர்ந்தார்; சவ அடக்க ஊர்வலத்தை அணுகி அந்த வாலிபனை உயிர்த்தெழுப்பினார்.—லூக்கா 7:11-16.
தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இயேசு, தமஸ்குவுக்கு போகும் வழியில் சவுலுக்கு தரிசனமானார்; அப்போது, சீஷர்களை கடுமையாய் துன்புறுத்தியது தம்மை எந்தளவு பாதித்தது என்பதை பவுலுக்கு புரிய வைக்கும் வகையில், “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்று சொன்னார். (அப்போஸ்தலர் 9:3-5) நோயுற்றிருக்கும் தன் குழந்தையின் வேதனையை ஒரு தாய் உணருவதைப் போலவே சீஷர்கள் அனுபவித்த வேதனையை இயேசு உணர்ந்தார். அதே விதமாகவே நம்முடைய பரலோக பிரதான ஆசாரியராகிய அவர் ‘நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கிறார்’ அல்லது ராதர்ஹாம் மொழிபெயர்ப்பின்படி, ‘நம்முடைய குறைபாடுகளைக் கண்டு பரிவு காட்டுகிறார்.’—எபிரெயர் 4:15.
அப்போஸ்தலன் பவுல் மற்றவர்களுடைய வேதனையையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ள கற்றுக்கொண்டார். “ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?” என்று அவர் கேட்டார். (2 கொரிந்தியர் 11:29) பிலிப்பியில் பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஒரு தேவதூதன் அவர்களை அற்புதமாக விடுவித்தார்; அப்போது யாரும் தப்பியோடவில்லை என்பதை சிறைச்சாலைக்காரனுக்கு அறிவிக்க வேண்டும் என்பதுதான் முதலில் பவுலுடைய மனதுக்குப் பட்டது. சிறைச்சாலைக்காரனின் நிலையில் தன்னை வைத்து பார்த்ததால், அவன் தற்கொலை செய்துகொள்ளலாம் என்பதை அவர் புரிந்துகொண்டார். ரோமர்களைப் பொறுத்தவரை சிறையிலடைக்கப்பட்ட ஒருவரை வெகு பத்திரமாய் காவல் காக்கும்படி உத்தரவிடப்பட்டும், அந்த கைதி தப்பியோடும்படி விட்டுவிட்டால் சிறைச்சாலைக்காரன் கடுமையாக தண்டிக்கப்படுவான் என்பதை பவுல் அறிந்திருந்தார். (அப்போஸ்தலர் 16:24-28) சிறைச்சாலைக்காரனுடைய உயிரைக் காப்பாற்ற பவுல் செய்த இந்த தயவான காரியம் அவன் நெஞ்சை தொட்டதால் அவனும் அவன் வீட்டாரும் கிறிஸ்தவர்களாவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர்.—அப்போஸ்தலர் 16:30-34.
ஒற்றுணர்வை எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம்
நம் பரம தந்தையையும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவையும் பின்பற்றும்படி திரும்ப திரும்ப பைபிள் உற்சாகப்படுத்துகிறது; ஆகவே ஒற்றுணர்வு என்ற குணத்தை நாம் வளர்த்துக்கொள்வது அவசியம். நாம் எவ்வாறு இதைச் செய்யலாம்? மற்றவர்களின் தேவைகளையும் உணர்ச்சிகளையும் உடனடியாக புரிந்துகொள்ளும் திறனை மேன்மேலும் வளர்ப்பதற்கு உதவும் மூன்று முக்கிய வழிகள் இருக்கின்றன: செவிகொடுத்துக் கேட்பது, கூர்ந்து கவனிப்பது, கற்பனை செய்து பார்ப்பது.
செவிகொடுத்து கேளுங்கள். மற்றவர்கள் சொல்வதைக் கவனமாக கேட்டால், அவர்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும். எந்தளவுக்கு நன்றாக செவிகொடுத்து கேட்கிறோமோ அந்தளவுக்கு அவர்கள் மனம்விட்டு தங்கள் உணர்ச்சிகளை எல்லாம் அப்படியே கொட்டிவிடுவார்கள். “ஒரு மூப்பர் நான் சொல்வதை செவிகொடுத்து கேட்பார் என்று உறுதியாக தெரியும்போதுதான் நான் அவரிடம் பேசுவேன். என்னுடைய பிரச்சினையை உண்மையில் புரிந்துகொள்கிறார் என்பதும் எனக்குத் தெரிய வேண்டும். நான் சொல்வதை கவனமாக கேட்டு அதன் சம்பந்தமாக பல கேள்விகளைக் கேட்கையில் அவர் மீது எனக்கு அதிக நம்பிக்கை பிறக்கிறது” என்று மிரியாம் கூறுகிறாள்.
கூர்ந்து கவனியுங்கள். எல்லாருமே அவர்களுடைய உணர்ச்சிகளை அல்லது அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளை வாய்விட்டுச் சொல்ல மாட்டார்கள். ஆனால் கூர்ந்து கவனிக்கும் நபர், சக கிறிஸ்தவர் ஒருவர் சோர்வாக இருப்பதை, வாலிபர் ஒருவர் கலகலப்பாக பேசாமல் ஒதுங்கியிருப்பதை, அல்லது வைராக்கியமுள்ள ஊழியர் உற்சாகமிழந்திருப்பதை கவனித்துவிடுவார். ஒரு பிரச்சினை தலைதூக்குகையிலேயே அதை சட்டென உணரும் திறமை பெற்றோருக்கு மிக மிக அவசியம். “நான் வாயைத் திறக்கவே வேண்டாம், பார்த்ததுமே என் மனதிலுள்ளதை அம்மா எப்படியோ கண்டுபிடித்துவிடுவார்கள், ஆகவே என்னுடைய பிரச்சினைகளை ஒளிவுமறைவில்லாமல் அவர்களிடம் பேசுவது எனக்கு சுலபமாக இருக்கும்” என்று மாரீ கூறுகிறாள்.
கற்பனை செய்து பாருங்கள். ஒற்றுணர்வை வளர்த்துக்கொள்வதற்கு சிறந்த வழி உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்வதுதான்: ‘அந்த மாதிரி நிலைமையில் நான் இருந்தால் எப்படி இருப்பேன்? நான் எவ்வாறு நடந்துகொள்வேன்? அப்போது எனக்கு என்ன உதவி தேவையாக இருக்கும்?’ ஆறுதல் சொல்ல வந்த யோபின் மூன்று போலி நண்பர்களுக்கும் அவருடைய நிலையில் தங்களை வைத்துப் பார்க்க முடியவில்லை. ஆகவே, யோபு சில பாவ செயல்களைச் செய்திருப்பாரென அவர்களாகவே எண்ணிக்கொண்டு அவரை கண்டனம் செய்தார்கள்.
அபூரண மனிதர்கள் உணர்ச்சிகளை புரிந்துகொள்வதைவிட தவறுகளை விமர்சிப்பதை எளிதாக காண்கிறார்கள். ஆனால் துயரப்படும் ஒருவரின் கஷ்டங்களை எண்ணிப் பார்க்க நாம் பெரும் முயற்சி செய்தால், கண்டனம் செய்வதற்கு பதிலாக அவரிடம் பரிதாப உணர்ச்சிதான் பிறக்கும். “சொல்லப்படுவதை முதலில் கவனமாக கேட்டு, அந்தச் சூழ்நிலைமையை முழுமையாக புரிந்துகொள்ள முயற்சி செய்கையில்தான் என்னால் சிறந்த ஆலோசனைகளைத் தர முடிகிறது” என க்வான் என்ற அனுபவம் வாய்ந்த மூப்பர் கூறுகிறார்.
யெகோவாவின் சாட்சிகள் விநியோகிக்கும் பிரசுரங்கள் இந்த விஷயத்தில் அநேகருக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கின்றன. மனச்சோர்வு, பிள்ளைகள் துஷ்பிரயோகம் போன்ற சிக்கலான பிரச்சினைகளை காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் அலசி ஆராய்ந்திருக்கின்றன. காலத்துக்கேற்ற இந்தத் தகவல், கஷ்டப்படுகிறவர்களின் உணர்ச்சிகளைக் குறித்து அதிக உணர்வுள்ளவர்களாக இருக்க வாசகருக்கு உதவி செய்திருக்கின்றன. அதே விதமாகவே, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகம் பிள்ளைகள் எதிர்ப்படும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள அநேக பெற்றோருக்கு உதவியிருக்கிறது.
கிறிஸ்தவ நடவடிக்கைகளுக்கு உதவும் ஒற்றுணர்வு
பகிர்ந்துகொடுக்க நம்மிடம் உணவிருக்கும்போது பசியால் வாடும் குழந்தையைப் பார்த்துவிட்டு அதை அதற்குக் கொடுக்காமல் இருக்க மாட்டோம். நமக்கு ஒற்றுணர்வு இருந்தால், ஒருவருடைய ஆன்மீக நிலைமையையும் புரிந்துகொள்வோம். இயேசு, “திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி”னார் என அவரைப் பற்றி பைபிள் சொல்கிறது. (மத்தேயு 9:36) இன்று லட்சக்கணக்கானவர்களின் ஆன்மீக நிலைமையும் அப்படித்தான் உள்ளது, அவர்களுக்கு உதவி தேவை.
இயேசுவின் காலத்தைப் போலவே, இன்றும் சிலருடைய இருதயங்களைச் சென்றெட்ட வேண்டுமானால் தப்பெண்ணத்தை அல்லது ஆழமாக பதிந்திருக்கும் பாரம்பரியத்தை மீறி செயல்படுவது அவசியம். ஒற்றுணர்வுள்ள ஊழியர் மனதை கவரும் விதமாக செய்தியை சொல்வதற்காக, கேட்பவர்களுக்கும் தனக்கும் பொதுவாக உள்ள அல்லது அவர்களது மனங்களிலுள்ள விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு முயற்சி செய்வார். (அப்போஸ்தலர் 17:22, 23; 1 கொரிந்தியர் 9:20-23) ஒற்றுணர்வின் தூண்டுதலால் நாம் செய்யும் தயவுள்ள செயல்களும், செவிகொடுத்துக் கேட்கிறவர்கள் ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொள்ள வழிசெய்யும். பிலிப்பியிலிருந்த சிறைச்சாலைக்காரனுடைய விஷயத்தில் இதுவே உண்மையாக இருந்தது.
சபையிலுள்ள மற்றவர்களின் குறைபாடுகளை பொறுத்து போவதற்கு ஒற்றுணர்வு ஒப்பற்ற உதவி அளிக்கிறது. நம்மைப் புண்படுத்திவிட்ட ஒரு சகோதரரின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ள பிரயாசப்பட்டால் அவரை மன்னிப்பது மிகவும் சுலபம் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை அவருடைய சூழலில் அதே நிலைமையில் நாம் இருந்தால் ஒருவேளை அப்படித்தான் நடந்துகொண்டிருப்போம். யெகோவா ஒற்றுணர்வு உள்ளவராக இருப்பதால், ‘நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.’ அது போலவே நமக்கும் ஒற்றுணர்வு இருந்தால், மற்றவர்களும் அபூரணர்களே என்பதை மனதில் வைத்து ‘தாராளமாக மன்னிப்போம்’ அல்லவா?—சங்கீதம் 103:14; கொலோசெயர் 3:13, NW.
தவறு செய்த ஒருவருக்கு அறிவுரை கூற வேண்டிய சந்தர்ப்பத்தில் அவருடைய மனதின் உணர்ச்சிகளையும் உள்ளக் குமுறலையும் புரிந்துகொண்டால் இன்னும் தயவாக நடந்துகொள்வோம். ‘நானும்கூட இதே தவறை செய்திருக்க வாய்ப்புண்டு. எனக்குக்கூட அவருடைய நிலைமை வரலாம்’ என ஒற்றுணர்வுள்ள கிறிஸ்தவ மூப்பர் நினைத்துப் பார்க்கிறார். இதன் காரணமாகவே, “ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு” என பவுல் பரிந்துரை செய்கிறார்.—கலாத்தியர் 6:1.
ஒற்றுணர்வு இருந்தால் சக கிறிஸ்தவர் வாய்விட்டு கேட்க தயங்கினால்கூட நாமாகவே முடிந்தவரை நடைமுறை உதவியளிக்க முன்வருவோம். “ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? . . . வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்” என அப்போஸ்தலன் யோவான் எழுதுகிறார்.—1 யோவான் 3:17, 18.
“கிரியையினாலும் உண்மையினாலும்” அன்பு காட்டுவதற்கு, நம்முடைய சகோதரரின் குறிப்பிட்ட தேவைகள் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தோடு அவர்களுடைய தேவைகள் என்னவென்று நாம் கூர்ந்து கவனிக்கிறோமா? இதுதான் ஒற்றுணர்வு.
பரிவை வளர்த்துக்கொள்ளுங்கள்
இயல்பாக நாம் அதிக ஒற்றுணர்வு உள்ளவர்களாய் இல்லாதிருக்கலாம், ஆனால் இப்படிப்பட்ட பரிவை வளர்த்துக்கொள்ளலாம். இன்னும் நன்கு செவிகொடுத்துக் கேட்டால், இன்னும் அதிகமாக கூர்ந்து கவனித்தால், இன்னும் அடிக்கடி மற்றவரின் நிலைமையில் நம்மை வைத்து யோசித்தால் நம்முடைய ஒற்றுணர்வு வளரும். அப்பொழுது நம்முடைய பிள்ளைகளிடமும் சக கிறிஸ்தவர்களிடமும் அயலாரிடமும் அதிக அன்பையும் தயவையும் கருணையையும் காட்ட தூண்டப்படுவோம்.
சுயநலம் உங்கள் ஒற்றுணர்வுக்கு முட்டுக்கட்டையாய் இருக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். “உங்களுள் ஒவ்வொருவரும் தன் நலத்தையே நாடாது, பிறர் நலத்தையும் நாட வேண்டும்” என்று பவுல் எழுதினார். (பிலிப்பியர் 2:4, கத்.பை.) யெகோவாவும் அவருடைய பிரதான ஆசாரியர் இயேசு கிறிஸ்துவும் காட்டும் ஒற்றுணர்வில்தான் நம்முடைய நித்திய எதிர்காலமே இருக்கிறது. ஆகவே இந்தக் குணத்தை வளர்த்துக்கொள்ளும் தார்மீக பொறுப்பு நமக்கிருக்கிறது. ஒற்றுணர்வு நம்மை மேம்பட்ட ஊழியராகவும் சிறந்த பெற்றோராகவும் ஆக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒற்றுணர்வு ‘வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதில் அதிக மகிழ்ச்சி’ என்ற அனுபவ பாடத்தைக் கற்றுக்கொள்ள நமக்கு உதவும்.—அப்போஸ்தலர் 20:35, NW.
[பக்கம் 25-ன் படம்]
மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தோடு அவர்களுடைய தேவைகளை கூர்ந்து கவனிப்பதை ஒற்றுணர்வு உட்படுத்துகிறது
[பக்கம் 26-ன் படம்]
அன்புள்ள ஒரு தாய் தன் பிள்ளையிடம் இயல்பாக காட்டும் ஒற்றுணர்வை நாமும் காட்ட கற்றுக்கொள்வோமா?