வாழ்க்கை சரிதை
பூரண ஆயுசோடு திருப்தி
மியுரியல் ஸ்மித் சொன்னபடி
தடதடவென என் வாசல் கதவு தட்டப்பட்டது. காலையில் ஆர்வத்துடன் பிரசங்கித்துவிட்டு மதிய உணவுக்காக அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்தேன். வழக்கம் போல தேநீர் தயாரிப்பதற்கு ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அரை மணிநேரம் ஓய்வெடுக்க தயாராக இருந்தேன். தொடர்ந்து கதவு தட்டப்படும் ஓசையைக் கேட்டு, இந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டே கதவை திறக்கச் சென்றேன். யார் என தெரிந்துவிட்டது. வாசலில் நின்றிருந்த இருவர் தாங்கள் காவல்துறை அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். தடை செய்யப்பட்டிருக்கும் அமைப்பான யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் உள்ளதா என சோதனையிட வந்திருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.
ஆஸ்திரேலியாவில் யெகோவாவின் சாட்சிகள் ஏன் தடை செய்யப்பட்டிருந்தார்கள்? நான் எப்படி அவர்களில் ஒருத்தியானேன்? 1910-ல், எனக்கு 10 வயதாக இருக்கையில் என் அம்மா எனக்குத் தந்த பரிசு பொருளோடு இதெல்லாம் ஆரம்பமானது.
வடக்கு சிட்னியில் குரோஸ் நெஸ்டின் புறநகர் பகுதியில் மரத்தால் கட்டப்பட்ட ஒரு வீட்டில் எங்களுடைய குடும்பம் வசித்தது. ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்புகையில் வீட்டு வாசலில் அம்மா ஒரு நபரோடு பேசிக்கொண்டிருந்தார். நான் இதுவரை பார்த்திராத இந்தப் புதியவர் யார் என தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வமாக இருந்தது. அவர் சூட் அணிந்திருந்தார், பை நிறைய புத்தகங்களை வைத்திருந்தார். வெட்கத்தோடு அவர்களிடம் அனுமதி கேட்டு வீட்டிற்குள் புகுந்துகொண்டேன். ஆனால் சில நிமிடம் கழித்து அம்மா என்னை கூப்பிட்டார். “இவரிடம் சில அழகான புத்தகங்கள் இருக்கு, எல்லாம் பைபிள் சம்பந்தமானவை. உனக்கு பிறந்த நாள் வரப்போவதால், பரிசாக உனக்கு புதிய உடை வாங்கித் தருகிறேன் அல்லது இந்தப் புத்தகங்களை வாங்கித் தருகிறேன். எது வேண்டும்?” என்று கேட்டார்.
“ரொம்ப தேங்ஸ்மா, எனக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்” என்று பதிலளித்தேன்.
ஆகவே பத்து வயதில், சார்லஸ் டேஸ் ரஸல் எழுதிய வேதாகமத்தின் பேரில் படிப்புகள் என்ற ஆங்கில புத்தகத்தின் மூன்று தொகுப்புகள் எனக்குக் கிடைத்தன. அவற்றைப் புரிந்துகொள்வதற்கு எனக்குக் கடினமாக இருக்கும், ஆகவே என் அம்மாவின் உதவி எனக்குத் தேவைப்படும் என்பதை அந்த நபர் அம்மாவிடம் விளக்கினார். எனக்கு அதை கற்றுத்தர அம்மாவும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். ஆனால் வருத்தகரமாக, இதற்குப் பின் அம்மா இறந்துவிட்டார். என்னையும் என் தம்பி, தங்கையையும் எந்த குறையும் வைக்காமல் அப்பா பார்த்துக்கொண்டார். ஆனால் இப்போது எனக்கு பொறுப்புகள் அதிகமாகிவிட்டன, அவை பெரும் சுமையாக தோன்றின. ஆனால் மற்றொரு சோக சம்பவம் சீக்கிரத்தில் நடக்கவிருந்தது.
1914-ல் முதல் உலகப்போர் துவங்கியது. ஒரு வருடத்துக்குப் பின்பு எங்கள் அருமை அப்பா கொல்லப்பட்டார். நாங்கள் இப்போது அநாதைகளாகிவிட்டோம். தம்பியையும் தங்கையையும் உறவினர்கள் அழைத்துச் செல்ல, என்னை கேத்தலிக் போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டார்கள். சில சமயங்களில் தனிமை என்னை வாட்டியெடுக்கும். ஆனாலும் இசையில் இருந்த ஆர்வத்தால் தொடர்ந்து பியானோ கற்றுக்கொள்ள வாய்ப்பைப் பெற்றதற்காக நன்றியுள்ளவளாய் இருக்கிறேன். வருடங்கள் உருண்டோடின, போர்டிங் பள்ளியில் படிப்பு முடிந்துவிட்டது. 1919-ல் இசை கருவிகளை விற்பனை செய்து வந்த ராய் ஸ்மித்தை மணந்தேன். 1920-ல் எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது, மறுபடியும் அன்றாட வாழ்க்கையின் கவலை கடலில் மூழ்கினேன். ஆனால் அந்தப் புத்தகங்களுக்கு என்ன ஆயிற்று?
பக்கத்து வீட்டுக்காரர் ஆன்மீக சத்தியத்தை பகிர்ந்து கொள்கிறார்
இந்த எல்லா ஆண்டுகளிலும் நான் எங்கு போனாலும் இந்த “பைபிள் புத்தகங்களை” என்னோடு எடுத்துச் சென்றேன். அவற்றை வாசிக்காவிட்டாலும், அவற்றில் அடங்கியிருக்கும் செய்தி முக்கியமானது என என் உள்மனது ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தது. பிறகு ஒரு நாள் 1920-களின் பிற்பகுதியில், எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் லில் பிம்ஸன் என்பவர் எங்களைப் பார்க்க வந்திருந்தார். உள்ளே போய் உட்கார்ந்து நாங்கள் டீ குடித்தோம்.
“ஓ, உங்களிடம் அந்தப் புத்தகங்கள் இருக்கிறதா?” என்று அவர் ஆச்சரியமாக கேட்டார்.
“என்ன புத்தகங்கள்?” என்று நான் வியப்போடு கேட்டேன்.
புத்தக அலமாரியில் இருந்த வேதாகமத்தின் பேரில் படிப்புகள் என்ற புத்தகங்களை அவர் காட்டினார். லில் அந்தப் புத்தகங்களை என்னிடம் இரவல் வாங்கிப் போய் ஆர்வமாக படித்தார். வாசித்த காரியங்கள் அவருக்கு அதிக உற்சாகமூட்டியதை காண முடிந்தது. பைபிள் மாணாக்கர் என்று அப்போது அறியப்பட்டிருந்த யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து லில் இன்னும் சில புத்தகங்களைப் பெற்றுக்கொண்டார். மேலும், அவர் கற்றுக்கொண்ட எல்லா காரியங்களையும் எங்களிடம் சொல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை. அவர் த ஹார்ப் ஆஃப் காட் என்ற புத்தகத்தையும் பெற்றிருந்தார். அந்தப் புத்தகத்தை எங்களிடம் கொடுத்தார். நேரத்தை ஒதுக்கி பைபிள் அடிப்படையிலான இந்தப் புத்தகத்தை நான் வாசித்தபோதே யெகோவாவின் சேவையில் என் வாழ்க்கை ஆரம்பமானது. கடைசியாக என்னுடைய சர்ச்சால் பதிலளிக்க முடியாத முக்கிய கேள்விகளுக்கு பதில்களை கண்டுபிடித்தேன்.
பைபிளின் செய்திக்கு ராய் விசேஷ கவனம் செலுத்தியதால் நாங்கள் இருவரும் ஆர்வமுள்ள பைபிள் மாணாக்கர்களாக ஆனோம். இதற்கு முன்னால் ராய், ஃபிரீமேஸன்ஸ் என்ற மதப்பிரிவை சேர்ந்தவராக இருந்தார். இப்போது எங்கள் குடும்பம் உண்மை வணக்கத்தில் ஐக்கியப்பட்டிருந்தது. வாரத்தில் இருமுறை ஒரு சகோதரர் வந்து எங்கள் முழு குடும்பத்துக்கும் பைபிள் படிப்பு நடத்தினார். பைபிள் மாணாக்கர் நடத்திய கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தபோது எங்கள் உற்சாகம் இன்னும் அதிகரித்தது. சிட்னியில் கூட்டங்கள் நியூ டெளன் என்ற புறநகர் பகுதியில் வாடகைக்கு எடுத்திருந்த ஒரு சிறிய அறையில் நடத்தப்பட்டன. அந்தச் சமயத்தில் தேசம் முழுவதிலுமே 400-க்கும் குறைவான சாட்சிகளே இருந்தார்கள், ஆகவே பெரும்பாலான சகோதரர்கள் கூட்டங்களுக்கு வர கணிசமான தூரம் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது.
எங்களுடைய குடும்பம் சிட்னி துறைமுகத்தை கடந்துதான் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. 1932-ல் சிட்னி துறைமுக பாலம் கட்டப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு முறையும் படகில்தான் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. இதற்கு அதிக நேரமும் பணமும் செலவானாலும் யெகோவா அளிக்கும் ஆன்மீக ஆகாரம் எதையும் தவறவிடாதிருக்க பெரும் முயற்சி எடுத்தோம். சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருப்பதற்கு நாங்கள் எடுத்த முயற்சிகள் வீண்போகவில்லை. ஏனென்றால் சீக்கிரத்தில் இரண்டாம் உலகப்போர் துவங்க இருந்தது, நடுநிலை வகிப்பு பிரச்சினையை எங்கள் குடும்பம் நேரடியாக சந்திக்கவிருந்தது.
சோதனைகளும் ஆசீர்வாதங்களும் நிறைந்த காலம்
1930-களின் ஆரம்ப வருடங்கள் எனக்கும் என் குடும்பத்துக்கும் அதிக உற்சாகம் அளித்தன. 1930-ல் நான் முழுக்காட்டுதல் பெற்றேன், 1931-ல் நடைபெற்ற மறக்க முடியாத அந்த மாநாட்டில் யெகோவாவின் சாட்சிகள் என்ற அழகான பெயரை ஏற்றுக்கொள்ள எழுந்து நின்றவர்களில் நானும் ஒருத்தி. பின்பற்றும்படி அமைப்பு உற்சாகப்படுத்திய எல்லா பிரசங்க முறைகளிலும் ஏற்பாடுகளிலும் பங்குகொண்டு அந்தப் பெயருக்கு ஏற்ப வாழ்வதற்கு ராயும் நானும் அதிகம் பிரயாசப்பட்டோம். உதாரணமாக, 1932-ல், சிட்னி துறைமுக பாலத்தின் திறப்பு விழாவை காண வந்திருந்த அனைவருக்கும் நற்செய்தியை அறிவிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேஷ சிறுபுத்தக விநியோகிப்பில் நாங்கள் கலந்துகொண்டோம். ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட கார்கள் விசேஷமாக பயன்படுத்தப்பட்டன. எங்களுடைய காருக்கும் ஒலிபெருக்கி பொருத்தப்படும் வாய்ப்பு கிடைத்தது. இதன் உதவியால் சிட்னி தெருக்களில் சகோதரர் ரதர்ஃபோர்டின் பதிவு செய்யப்பட்ட பைபிள் பேச்சுக்களை ஒலிபரப்பினோம்.
ஆனால் நிலைமைகள் மாறின, காலங்கள் கடினமாயின. 1932-ல் பொருளாதார மந்தம் ஆஸ்திரேலியாவை உலுக்கியது. ஆகவே ராயும் நானும் எங்கள் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்ள தீர்மானித்தோம். பிரயாண செலவுகளைக் குறைப்பதற்காக சபை அருகில் வீட்டை மாற்றிக்கொண்டோம். ஆனால் இரண்டாம் உலகப்போரின் மேகங்கள் உலகை சூழ்ந்துகொண்ட போது ஏற்பட்ட திகிலில் பொருளாதார பிரச்சினைகள் அற்ப காரியமாக தோன்றின.
உலகத்தின் பாகமாக இருக்கக்கூடாது என்ற இயேசுவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்ததால் உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்துதலுக்கு ஆளானார்கள். இதில் ஆஸ்திரேலியா விதிவிலக்கல்ல. போர்க் கால நிலவரத்தில் கொதித்தெழுந்தவர்கள் எங்களை கம்யூனிஸ்டுகள் என்று முத்திரை குத்தினார்கள். ஆஸ்திரேலியாவில் சாட்சிகளுக்குச் சொந்தமான நான்கு வானொலி நிலையங்களின் மூலமாக அவர்கள் ஜப்பானிய படைக்கு செய்திகளை அனுப்புவதாக எதிரிகள் பொய் குற்றம் சாட்டினார்கள்.
இராணுவ சேவையில் பங்கேற்க அழைக்கப்பட்ட இளம் சகோதரர்கள் தங்கள் நம்பிக்கையை விட்டுக்கொடுக்கும்படி அதிகமாக வற்புறுத்தப்பட்டனர். எங்களுடைய மூன்று மகன்களும் விசுவாசத்தில் உறுதியாக இருந்து நடுநிலைமையைக் காத்துக்கொண்டார்கள் என்பதை சொல்வதில் பேரானந்தம் அடைகிறேன். எங்கள் மூத்த மகன் ரிச்சர்டு 18 மாத சிறை தண்டனை பெற்றான். இரண்டாவது மகன் கெவின் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஆட்சேபிப்பவர் என்பதாக தன்னை பதிவுசெய்து கொண்டான். ஆனால் எங்கள் இளைய மகன் ஸ்டுயர்ட் வாகன விபத்துக்கு பலியானபோது நாங்கள் கதிகலங்கிப் போனோம். நடுநிலை வகிப்பது சம்பந்தமாக நீதிமன்றத்தில் தன் எதிர்வாதத்தை முடிப்பதற்கு போகையில் இந்த விபத்து நேர்ந்தது. இந்த சம்பவத்தால் நாங்கள் மிகவும் உடைந்து போனோம். ஆனாலும் ராஜ்யத்திலும் யெகோவா அளித்திருக்கும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையிலும் கவனத்தை ஒருமுகப்படுத்தியது சகித்து நிலைத்திருக்க எங்களுக்கு உதவியது.
உண்மையான பரிசை அவர்கள் கண்டுபிடிக்காமல் போனார்கள்
1941 ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவில் யெகோவாவின் சாட்சிகளுக்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டது. ஆனால் இயேசுவின் அப்போஸ்தலர்கள் செய்த விதமாகவே, ராயும் நானும் மனுஷருக்கு கீழ்ப்படிவதற்கு பதிலாக அரசராக கடவுளுக்கே கீழ்ப்படிகிறவர்களாக இரண்டரை ஆண்டுகள் தொடர்ந்து இரகசியமாக ஊழியம் செய்து வந்தோம். இந்தச் சமயத்தில்தான் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டபடி சாதாரண உடையில் இரண்டு போலீஸ்காரர்கள் வந்து என் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். என்ன நடந்தது?
நான் அவர்களை உள்ளே அழைத்தேன். அவர்கள் வீட்டுக்குள் வந்தபோது, “நீங்கள் வீட்டை சோதனையிடுவதற்கு முன்பாக தேநீரை குடிக்க அனுமதி தரமுடியுமா?” என்று கேட்டேன். ஆச்சரியம், அவர்கள் அதற்கு சம்மதித்தார்கள். நான் சமையல் அறைக்குச் சென்று யெகோவாவிடம் ஜெபித்தேன், நிதானமாக யோசிக்க கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டேன். நான் திரும்பிவந்த போது, ஒரு போலீஸ்காரர் எங்கள் படிப்பு அறைக்குச் சென்று உவாட்ச்டவர் சொஸைட்டியின் குறியிடப்பட்டிருந்த எல்லா பிரசுரங்களையும் எடுத்துக்கொண்டார். என்னுடைய பையில் இருந்த புத்தகங்களையும் பைபிளையும்கூட அவர் விட்டுவைக்கவில்லை.
“வேறு புத்தகங்கள் எதையும் நீங்கள் அட்டை பெட்டிகளில் மறைத்து வைக்கவில்லை அல்லவா?” என்று அவர் கேட்டார். “ஒவ்வொரு வாரமும் இந்த சாலையின் கடைசியில் நடத்தப்படும் ஒரு கூட்டத்துக்கு செல்வதாகவும் அங்கு நிறைய புத்தகங்களை நீங்கள் எடுத்துச் செல்வதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது” என்றார்.
“அது உண்மைதான், ஆனால் இப்போது அங்கில்லை” என்று பதிலளித்தேன்.
“அது எங்களுக்குத் தெரியும், மிஸ்ஸஸ் ஸ்மித். இந்த மாவட்டம் எங்கும் பலருடைய வீடுகளில் புத்தகங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரியும்” என்றார்.
எங்களுடைய மகனின் படுக்கை அறையில், ஃபீரிடம் ஆர் ரோமனிஸம் என்ற சிறுபுத்தகங்கள் அடங்கிய ஐந்து கார்ட்டன்கள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தார்கள்.
“கராஜில் வேறு எதுவும் நீங்கள் பதுக்கி வைக்கவில்லையே?” என்று அவர் கேட்டார்.
“இல்லை, அங்கே எதுவும் இல்லை” என்று பதிலளித்தேன்.
சாப்பாட்டு அறையிலுள்ள அலமாரியை திறந்தார். அதில் பூர்த்தி செய்யப்படாத சபை ஊழிய அறிக்கை படிவங்களைக் கண்டார். இவற்றை எடுத்துக்கொண்டு, கராஜையும் சோதனை போட வேண்டும் என்று விடாப்பிடியாய் சொன்னார்.
“அப்படியானால் இந்தப் பக்கமாக வாங்க” என்று அழைத்தேன்.
அவர்கள் என் பின்னால் வந்தார்கள், அதை சோதனை போட்ட பிறகு ஒருவழியாக புறப்பட்டு போனார்கள்.
அந்த ஐந்து கார்ட்டன்களை கண்டுபிடித்தபோது அது தங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று போலீஸ்காரர்கள் நினைத்தார்கள்! ஆனால் உண்மையான பரிசை அவர்கள் எடுத்துச் செல்லவில்லை. அப்போது நான் சபை செயலராக இருந்தேன். என்னிடம் பிரஸ்தாபிகளின் பட்டியலும் மற்ற முக்கிய தகவல்களும் இருந்தன. இதுபோன்ற திடீர் சோதனைகளுக்கு தயாராக இருக்கும்படி சகோதரர்கள் எங்களை எச்சரித்திருந்தார்கள். ஆகவே இந்த ஆவணங்களை வெகு பத்திரமாக மறைத்து வைத்திருந்தேன். அவற்றை கவரில் போட்டு டீ, சர்க்கரை, மாவு ஆகிய டின்களுக்குள் அடியில் வைத்திருந்தேன். கராஜுக்கு அருகில் இருந்த பறவைகள் கூண்டில் சிலவற்றை வைத்திருந்தேன். ஆகவே போலீஸார் தேடி வந்த தகவலை கண்டுபிடிக்காமல் போய்விட்டார்கள்.
முழுநேர ஊழிய பிரவேசம்
1947-க்குள், எங்கள் பிள்ளைகளுக்கு, அவரவருக்கு குடும்பமென்று ஆகிவிட்டது. இந்தச் சமயத்தில் முழுநேர ஊழியத்தை ஆரம்பிக்க முடியுமென ராயும் நானும் தீர்மானித்தோம். தென் ஆஸ்திரேலியாவில் ஊழியம் செய்வதற்கு தேவை இருந்தது. ஆகவே எங்கள் வீட்டை விற்றுவிட்டு ஒரு கேரவனை (வாகனத்தில் வீடு) வாங்கி அதற்கு மிஸ்பா என்று பெயரிட்டோம். அதற்கு “காவற்கோபுரம்” என்று அர்த்தம். ஒதுக்குப்புறமான இடங்களில் பிரசங்கிப்பதற்கு இந்த வாழ்க்கை முறை உதவியாக இருந்தது. நியமிக்கப்படாத நாட்டுப்புற பிராந்தியத்தில் நாங்கள் அடிக்கடி ஊழியம் செய்தோம். அந்த சமயத்தில் நடந்த சில சம்பவங்கள் இன்னும் மனதில் பசுமையாக உள்ளன. அப்போது பெவர்லி என்ற இளம் பெண்ணுக்கு பைபிள் படிப்பை நடத்தி வந்தேன். முழுக்காட்டுதல் வரை முன்னேறுவதற்கு முன்பாகவே அவள் அந்த இடத்திலிருந்து குடிமாறி சென்றுவிட்டாள். பல வருடங்கள் கழித்து ஒரு மாநாட்டில் ஒரு சகோதரி என்னிடம் வந்து அவளே அந்த பெவர்லி என சொன்னபோது நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை! அத்தனை வருடங்கள் கழித்து அவள் தன் கணவனோடும் பிள்ளைகளோடும் யெகோவாவை சேவித்து வருகிறாள் என்பதை எண்ணிப் பார்க்கையில் அது எனக்கு அதிக சந்தோஷத்தை அளித்தது.
1979-ல் பயனியர் ஊழியப் பள்ளிக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது. தொடர்ந்து பயனியர் ஊழியம் செய்வதற்கு நல்ல படிப்பு பழக்கங்களைப் பின்பற்றுவது அவசியம் என அந்தப் பள்ளியில் வலியுறுத்தப்பட்டது. அது எவ்வளவு உண்மை என்பதை அறிந்துகொண்டேன். படிப்பு, கூட்டங்கள், ஊழியம் ஆகியவையே என் வாழ்க்கை என்பதாக இருந்திருக்கிறது. 50-க்கும் அதிக ஆண்டுகள் ஒழுங்கான பயனியராக ஊழியம் செய்ய முடிந்ததை பாக்கியமாக கருதுகிறேன்.
உடல்நல பிரச்சினைகளை சமாளித்தல்
கடந்த சில பத்தாண்டுகளாக புதிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. 1962-ல் எனக்கு க்ளாகோமா என்ற கண் அழுத்த நோய் இருப்பது தெரிய வந்தது. அந்தச் சமயத்தில் அதற்கு அவ்வளவு நல்ல சிகிச்சை கிடையாது, என் கண்பார்வை வேகமாக மங்கிவிட்டது. ராயின் உடல்நிலையும் மோசமானது. 1983-ல் கடும் பக்கவாதத்தால் அவர் பெரிதும் பாதிக்கப்பட்டார்; ஓரளவு செயல்பட முடியாமல் போனதோடு அவர் பேசும் சக்தியையும் இழந்தார். அவர் 1986-ல் காலமானார். முழுநேர ஊழியத்தை செய்து வந்த காலத்தில் அவர் எனக்கு பக்கபலமாய் இருந்திருக்கிறார், அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
இத்தனை பிரச்சினைகள் மத்தியிலும் நல்ல ஆவிக்குரிய பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தேன். ஓரளவுக்கு கிராமப்புறமான எங்கள் பகுதியில் பயணிப்பதற்கு வசதியாக உறுதியான ஒரு காரை வாங்கினேன், என்னுடைய மகள் ஜாய்ஸின் உதவியோடு பயனியர் சேவையைத் தொடர்ந்தேன். என் பார்வை இன்னும் மங்கியது, கடைசியில் ஒரு கண் பார்வையை முழுமையாக இழந்துவிட்டேன். டாக்டர்கள் எனக்கு செயற்கை க்ளாஸ் கண் ஒன்றைப் பொருத்தினார்கள். அப்போதும், பூதக்கண்ணாடி, பெரிய அச்செழுத்தில் வரும் பிரசுரங்கள் ஆகியவற்றின் உதவியால் ஒரே கண்ணில் எஞ்சியிருந்த கொஞ்ச பார்வையை வைத்தே தினமும் மூன்றிலிருந்து ஐந்து மணிநேரம் படித்து வந்தேன்.
படிப்பு நேரமென்றால் எப்போதுமே எனக்கு மிக அருமையான நேரம். அப்படியிருக்கையில், ஒரு நாள் பிற்பகல் படித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று கண் இருண்டுவிட்டது, எதையுமே பார்க்க முடியவில்லை, அது எனக்கு எந்தளவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். யாரோ திடீரென விளக்கை அணைத்துவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் பார்வையை முழுமையாக இழந்துவிட்டேன். அதற்குப்பின் எப்படி தொடர்ந்து படித்து வருகிறேன்? இப்போது எனக்கு சரியாக காது கேட்காவிட்டாலும் ஆடியோ கேசட்டுகளின் உதவியாலும் என் குடும்பத்தினரின் அன்பான ஆதரவினாலும் என்னை ஆவிக்குரிய விதத்தில் பலமாக வைத்துக்கொள்கிறேன்.
முடிவு வரை சகித்திருத்தல்
இப்போது நூறு வயதை தாண்டிவிட்ட எனக்கு இன்னும் சில உடல் உபாதைகள் வந்துவிட்டன. மிகவும் தளர்ந்துவிட்டேன். சில சமயங்களில் எங்கோ தொலைந்துவிட்டதுபோல் ஒரு குழப்ப உணர்வு எனக்கு ஏற்படுகிறது. சொல்லப்போனால், இப்போது என்னால் சுத்தமாக பார்க்க முடியாததால் சிலசமயம் உண்மையிலேயே தொலைந்து போய்விடுகிறேன். இன்னமும் பைபிள் படிப்புகளை நடத்த எனக்கு ஆர்வம் இருக்கிறது, ஆனால் தற்போதைய என் உடல் நிலையில் என்னால் பைபிள் படிப்புகளை நடத்த வெளியே போய்வர முடியாது. ஆரம்பத்தில் இது எனக்கு அதிக மனச்சோர்வை அளித்தது. என் வரையறைகளை புரிந்துகொண்டு, உள்ளதை வைத்து திருப்தியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இது சுலபமாக இல்லை. ஆனால் இன்னமும் நம்முடைய மகா உன்னத கடவுளாகிய யெகோவாவைப் பற்றி பேசி ஒவ்வொரு மாதமும் அதை அறிக்கை செய்ய முடிவதைப் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். நர்ஸுகள், வியாபாரிகள், மற்றவர்கள் என யார் என் வீட்டுக்கு வந்தாலும் அந்தச் சந்தர்ப்பங்களை தவறவிடாமல் சாதுரியமாக பைபிளைப் பற்றி பேசுகிறேன்.
நான்கு தலைமுறைகளாக என் குடும்பத்தார் யெகோவாவை உண்மையுடன் சேவிப்பதை பார்க்கும் ஆசீர்வாதம் அதிக திருப்தியளிப்பதாக இருந்திருக்கிறது. இவர்களில் சிலர் தேவை அதிகமிருக்கும் இடங்களில் பயனியர் ஊழியம் செய்கின்றனர். மூப்பர்களாக அல்லது உதவி ஊழியர்களாக அல்லது பெத்தேல் ஊழியர்களாக சேவிக்கின்றனர். என் வயதிலிருக்கும் அநேகரை போலவே இந்த ஒழுங்குமுறையின் முடிவு வெகு சீக்கிரத்தில் வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் எழுபதாண்டுகளாக எப்பேர்ப்பட்ட அதிகரிப்பை கண்ணார கண்டிருக்கிறேன்! இந்த மகத்தான பணியில் நான் ஈடுபட்டிருப்பது எனக்கு அதிக திருப்தியை அளிக்கிறது.
என் விசுவாசமே என்னை இன்னும் உயிரோடே வைத்திருப்பதாக என்னைப் பார்க்க வரும் நர்ஸ்கள் சொல்வர். நானும் அதை ஒப்புக்கொள்கிறேன். யெகோவாவின் சேவையில் ஆர்வத்துடன் ஈடுபடுவதே மிகச் சிறந்த வாழ்க்கை முறை. தாவீது ராஜாவைப் போலவே பூரண ஆயுசோடு திருப்தியாக இருப்பதாக என்னால் சொல்ல முடியும்.—1 நாளாகமம் 29:28, NW.
(இந்தக் கட்டுரை முடிவாக தயாரிக்கப்படுகையில் சகோதரி மியுரியல் ஸ்மித் ஏப்ரல் 1, 2002-ல் காலமானார். அவர் 102 வயதை எட்ட இன்னும் ஒரு மாதமே இருந்தது. விசுவாசத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் அவர் உண்மையில் சிறந்த உதாரணமாக விளங்கினார்.)
[பக்கம் 24-ன் படங்கள்]
ஐந்து வயதாக இருக்கையிலும், என் கணவர் ராயை 19 வயதில் சந்தித்தபோதும்
[பக்கம் 26-ன் படம்]
எங்கள் காரும் மிஸ்பா என்று நாங்கள் பெயர் சூட்டிய கேரவனும்
[பக்கம் 27-ன் படம்]
1971-ல் என் கணவர் ராயோடு