‘நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்’
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:35.
1. இயேசு தமது மரணத்திற்கு சற்று முன்பு எந்தக் குணத்தை வலியுறுத்தினார்?
“அன்புக் குழந்தைகளே.” (யோவான் [அருளப்பர்] 13:33, தமிழ் கத்தோலிக்க பைபிள்) இயேசு தமது மரணத்திற்கு முந்தின மாலை வேளையில் இந்தக் கனிவான வார்த்தைகளைச் சொல்லி அப்போஸ்தலர்களை அழைத்தார். இதற்கு முன்னால் இயேசு அவர்களிடம் பேசுகையில் கருணைமிக்க இந்த வார்த்தைகளை பயன்படுத்தியதாக சுவிசேஷப் பதிவுகளில் காணப்படுவதில்லை. ஆனால் அந்த விசேஷித்த இரவின்போது, அவர்கள் மீது தாம் வைத்திருந்த ஆழமான அன்பை தெரிவிப்பதற்காக இதுபோன்ற பாசமுள்ள வார்த்தைகளைச் சொல்ல அவர் தூண்டப்பட்டார். சொல்லப்போனால், அந்த இரவில் சுமார் 30 தடவை அன்பைப் பற்றி பேசினார். இந்தக் குணத்தை அவர் ஏன் அவ்வளவு வலியுறுத்தினார்?
2. அன்பு காட்டுவது கிறிஸ்தவர்களுக்கு ஏன் அவ்வளவு முக்கியம்?
2 அன்பு ஏன் அவ்வளவு முக்கியம் என்பதை இயேசு இவ்வாறு விளக்கினார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35; 15:12, 17) கிறிஸ்துவை பின்பற்றுவது சகோதர சிநேகத்தைக் காண்பிப்பதோடு நெருங்கிய தொடர்புடையது. உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏதோ ஒரு வகையான உடையினாலோ அல்லது வழக்கத்திற்கு மாறான சில பழக்கங்களாலோ அடையாளம் கண்டுகொள்ளப்படுவதில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் கனிவும் மென்மையுமான அன்பினால்தான் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார்கள். கிறிஸ்துவின் சீஷராயிருப்பதற்கு மூன்று முக்கிய தேவைகள் இருப்பதாக முந்தின கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. குறிப்பிடத்தக்க இவ்விதமான அன்பே அதில் இரண்டாவதாக இடம் பெறுகிறது. தொடர்ந்து இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய எது நமக்கு உதவி செய்யும்?
‘அன்பிலே இன்னும் அதிகமாய்ப் பெருக வேண்டும்’
3. அன்பைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் என்ன அறிவுரையைத் தந்தார்?
3 முதல் நூற்றாண்டில் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களிடையே நிலவிய விசேஷித்த அன்பே இன்று கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் மத்தியிலும் நிலவுவதை காண முடிகிறது. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “சகோதர சிநேகத்தைக் குறித்து நான் உங்களுக்கு எழுத வேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்குத் தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே. அந்தப்படி நீங்கள் . . . சகோதரரெல்லாருக்கும் செய்து வருகிறீர்கள்.” ஆனாலும் பவுல் அவர்களிடம் மேலும் இவ்வாறு கூறுகிறார்: “அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருக” வேண்டும். (1 தெசலோனிக்கேயர் 3:12; 4:9, 10) நாமும் பவுலின் அறிவுரையை மனதில் ஏற்று, “இன்னும் அதிகமாய்” ஒருவருக்கொருவர் அன்புகாட்ட முயல வேண்டும்.
4. பவுல் மற்றும் இயேசுவின் வார்த்தைகளின்படி நாம் யாருக்கு விசேஷ கவனம் செலுத்தவேண்டும்?
4 கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட அதே கடிதத்தில், “திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள்” என்று பவுல் தன் சக விசுவாசிகளை உற்சாகப்படுத்தினார். (1 தெசலோனிக்கேயர் 5:14) மற்றொரு சந்தர்ப்பத்தில், ‘பலமுள்ளவர்கள் பலவீனருடைய பலவீனங்களைத் தாங்க வேண்டும்’ என்று கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்டினார். (ரோமர் 15:1) பலவீனருக்கு உதவுவது சம்பந்தமாக இயேசுவும் போதனைகளைக் கொடுத்தார். தாம் கைதான இரவில் பேதுரு தம்மை மறுதலிப்பார் என இயேசு முன்னறிவித்தபின், “நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என்று பேதுருவிடம் சொன்னார். ஏன்? ஒருவேளை அவர்களும்கூட இயேசுவை கைவிட்டிருப்பார்கள், அவர்களுக்கும் உதவி தேவைப்பட்டிருக்கும். (லூக்கா 22:32; யோவான் 21:15-17) ஆகவே, ஆவிக்குரிய விதத்தில் பலவீனராக இருப்பவர்களுக்கும், கிறிஸ்தவ சபையோடு தொடர்பிழந்தவர்களுக்கும் நம்முடைய அன்பைக் காட்டும்படி கடவுளுடைய வார்த்தை நம்மை அறிவுறுத்துகிறது. (எபிரெயர் 12:12) நாம் ஏன் அதை செய்ய வேண்டும்? இயேசு கொடுத்த இரண்டு தெளிவான உதாரணங்கள் இதற்கு பதிலளிக்கின்றன.
காணாமற்போன ஆடும், காசும்
5, 6. (அ) என்ன இரண்டு சுருக்கமான உதாரணங்களை இயேசு சொன்னார்? (ஆ) இந்த உதாரணங்கள் யெகோவாவைப் பற்றி நமக்கு என்ன காண்பிக்கின்றன?
5 வழிவிலகிப் போனவர்களைப் பற்றிய யெகோவாவின் நோக்கை போதிப்பதற்கு, இயேசு இரண்டு சுருக்கமான உதாரணங்களை ஜனங்களிடம் சொன்னார். அதில் ஒன்று ஒரு மேய்ப்பனைப் பற்றியது. இயேசு இவ்வாறு சொன்னார்: “உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? கண்டுபிடித்த பின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்து சந்தோஷம் உண்டாகிறதைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—லூக்கா 15:4-7.
6 இரண்டாவது உதாரணம் ஒரு பெண்ணைப் பற்றியது. இயேசு இவ்வாறு சொன்னார்: “ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிற வரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ? கண்டுபிடித்த பின்பு, தன் சிநேகிதிகளையும் அயல் வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா? அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—லூக்கா 15:8-10.
7. காணாமற்போன ஆடு, காசு ஆகிய உதாரணங்களிலிருந்து நாம் என்ன இரு பாடங்களை கற்றுக்கொள்கிறோம்?
7 இந்த சுருக்கமான உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (1) பலவீனமாகிவிட்டவர்களைப் பற்றி நாம் எவ்வாறு உணர வேண்டும் என்பதையும் (2) அவர்களுக்கு உதவிசெய்ய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவை காட்டுகின்றன. இந்தக் குறிப்புகளை இப்போது நாம் சிந்திக்கலாம்.
காணாமற் போனது, ஆனால் அருமையானது
8. (அ) தங்கள் உடைமையை இழந்த மேய்ப்பனும் அந்த ஸ்திரீயும் எப்படி பிரதிபலித்தார்கள்? (ஆ) காணாமற்போன தங்கள் உடைமையைக் குறித்து அவர்கள் உணர்ந்த விதம், அதை அவர்கள் எப்படி கருதினார்கள் என நமக்கு சொல்கிறது?
8 இரண்டு உதாரணங்களிலும் ஏதோ ஒன்று காணாமல் போய்விடுகிறது, ஆனால் அதன் சொந்தக்காரர்களின் பிரதிபலிப்பை கவனியுங்கள். மேய்ப்பன் இவ்வாறு சொல்லவில்லை: ‘எனக்குத்தான் இன்னும் 99 ஆடுகள் இருக்கின்றனவே, ஒன்று காணாமல் போனால் என்ன? அது இல்லாவிட்டால் பரவாயில்லை.’ அந்த ஸ்திரீ இவ்வாறு சொல்லவில்லை: ‘ஒரு காசைப் பற்றி ஏன் கவலைப்படணும்? மீந்திருக்கும் ஒன்பது காசுகள் எனக்குப் போதும்.’ அதற்கு பதிலாக மேய்ப்பன் தன்னிடம் ஒரேவொரு ஆடு மட்டுமே இருப்பது போல காணாமற்போன அந்த ஆட்டுக்காக தேடி அலைந்தான். அந்த ஸ்திரீ தன்னிடம் வேறு காசே இல்லை என்பது போல காணாமற்போன அந்தக் காசுக்காக வருத்தப்பட்டாள். இரண்டு உதாரணங்களிலும் காணாமற்போன பொருள் அதன் சொந்தக்காரரின் மனதில் அருமையான ஒன்றாகவே இருந்தது. இது எதைக் காட்டுகிறது?
9. மேய்ப்பனும் அந்த ஸ்திரீயும் காண்பித்த அக்கறை எதைக் காட்டுகிறது?
9 இந்த இரண்டு உதாரணங்களுக்குப் பின்னும் இயேசு சொன்ன முடிவான வார்த்தைகளை கவனியுங்கள்: “அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்.” “அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” ஆகவே மேய்ப்பனின் அக்கறையும் அந்த ஸ்திரீயின் அக்கறையும் யெகோவா மற்றும் அவருடைய பரலோக சிருஷ்டிகளின் உணர்வுகளை சிறிய அளவில் படம்பிடித்துக் காட்டுகின்றன. காணாமற் போனவை மேய்ப்பனுக்கும் ஸ்திரீக்கும் எப்படி அருமையானதாக இருந்ததோ அதைப் போலவே, வழிவிலகிப் போனவர்களும் கடவுளுடைய மக்களோடு இருந்த தொடர்பை இழந்தவர்களும் யெகோவாவின் பார்வையில் இன்னும் அருமையானவர்களாகவே இருக்கின்றனர். (எரேமியா 31:3) இப்படிப்பட்டவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாக பலவீனமாக இருக்கலாம், ஆனால் கலகம் செய்கிறவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் பலவீனராக இருந்தாலும், ஓரளவு யெகோவாவின் கட்டளைகளை இன்னும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கலாம். (சங்கீதம் 119:176; அப்போஸ்தலர் 15:28, 29) ஆகவே கடந்த காலத்தில் செய்தது போலவே யெகோவா ‘அவர்களை இன்னமும் தம்முடைய முகத்தைவிட்டுத் தள்ளுவதற்கு’ தாமதிக்கிறார்.—2 இராஜாக்கள் 13:23.
10, 11. (அ) சபையிலிருந்து வழிவிலகிப் போனவர்களை நாம் எவ்வாறு நோக்க வேண்டும்? (ஆ) இயேசு கொடுத்த இரண்டு உதாரணங்களின்படி, அவர்கள் மீது நமக்கு அக்கறை இருப்பதை எவ்வாறு காட்டலாம்?
10 கிறிஸ்தவ சபைக்கு வராத பலவீனரைக் குறித்து யெகோவாவையும் இயேசுவையும் போலவே நாமும் ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்கிறோம். (எசேக்கியேல் 34:16; லூக்கா 19:10) ஆவிக்குரிய விதத்தில் பலவீனமாக இருக்கும் நபரை காணாமற்போன ஆடாகவே நாம் கருதுகிறோம், உதவினாலும் முன்னேறவே மாட்டார் என்று முடிவுகட்டி விடுவதில்லை. ‘பலவீனமாக இருப்பவரைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? சபைக்கு அவரால் எந்த இழப்பும் இல்லையே’ என்று நினைப்பதற்கு பதிலாக, வழிவிலகிப்போன ஆனால் மனம் திரும்ப விரும்புகிறவர்களை யெகோவா அருமையானவர்களாக கருதும் விதமாகவே நாமும் கருத வேண்டும்.
11 ஆனால் நமக்கு அக்கறை இருப்பதை எவ்வாறு காட்டலாம்? (1)நாமே வலியப் போய் உதவுவதன் மூலமும் (2) கனிவோடு இருப்பதன் மூலமும் (3) ஆர்வமுள்ளவர்களாய் இருப்பதன் மூலமும் அக்கறை காட்டலாம் என்பதை இயேசுவின் இரண்டு உதாரணங்கள் காட்டுகின்றன. தனித்தனியாக இந்த அம்சங்களை பார்க்கலாம்.
வலியப் போய் உதவுங்கள்
12. ‘காணாமற் போனதை தேடித் திரிகிறான்’ என்ற வார்த்தைகள் மேய்ப்பனின் மனநிலையைப் பற்றி நமக்கு என்ன சொல்கின்றன?
12 முதல் உதாரணத்தில், மேய்ப்பன் ‘காணாமற் போனதை தேடித்திரிகிறான்.’ தானே முயற்சி எடுத்து காணாமற்போன ஆட்டை கண்டுபிடிக்க மனதார முயலுகிறான். கஷ்டம், ஆபத்து, தூரம் ஆகிய எதுவும் அவனைத் தடை செய்வதில்லை. அதற்கு பதிலாக அதைக் ‘கண்டுபிடிக்கும் வரை’ அந்த மேய்ப்பன் விடாப்பிடியாக இருந்தான்.—லூக்கா 15:4.
13. பண்டைய காலங்களில் வாழ்ந்த உண்மையுள்ள மனிதர்கள் பலவீனமானவர்களின் தேவைகளுக்கு எவ்வாறு பிரதிபலித்தார்கள், இப்படிப்பட்ட பைபிள் உதாரணங்களை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
13 அதேவிதமாகவே உற்சாகம் தேவைப்படுகிற ஒருவருக்கு உதவி செய்ய பலமுள்ளவர் முன்வர வேண்டும். பண்டைய காலங்களில் வாழ்ந்த உண்மையுள்ள மனிதர்கள் இதை புரிந்திருந்தார்கள். உதாரணமாக, சவுலின் குமாரன் யோனத்தான் தன்னுடைய ஆருயிர் நண்பர் தாவீதுக்கு உற்சாகம் தேவைப்பட்டதை கவனித்தபோது, “எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், அவன் கையைத் திடப்படுத்தி”னார். (1 சாமுவேல் 23:15, 16) பல நூற்றாண்டுகளுக்குப் பின், அதிபதியாகிய நெகேமியா தன்னுடைய யூத சகோதரர்களில் சிலர் சோர்வுற்றிருப்பதை அறிந்தபோது அவரும்கூட உடனடியாக “எழும்பி” ‘யெகோவாவை நினைத்துக்’ கொள்ளும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார். (நெகேமியா 4:14) நாமும்கூட இன்று ‘எழுந்து’—வலியப் போய்—பலவீனரை பலப்படுத்த வேண்டும். ஆனால் சபையில் இதை யார் செய்ய வேண்டும்?
14. பலவீனமாயிருப்பவர்களுக்கு கிறிஸ்தவ சபையில் யார் உதவ வேண்டும்?
14 விசேஷமாக கிறிஸ்தவ மூப்பர்களுக்கு ‘தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தி’ ‘மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்’ என்று சொல்லுகிற பொறுப்பு இருக்கிறது. (ஏசாயா 35:3, 4; 1 பேதுரு 5:1, 2) “திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள்” என்று பவுல் மூப்பர்களுக்கு மாத்திரமே அறிவுரை சொல்லவில்லை என்பதை கவனியுங்கள். அதற்குப் பதிலாக இந்த வார்த்தைகளை முழு “தெசலோனிக்கேயர் சபைக்கு”ம் பவுல் எழுதினார். (1 தெசலோனிக்கேயர் 1:1; 5:14) ஆகவே பலவீனமானவர்களுக்கு உதவுவது எல்லா கிறிஸ்தவர்களும் செய்ய வேண்டிய வேலை. உதாரணத்திலுள்ள மேய்ப்பனைப் போல, ஒவ்வொரு கிறிஸ்தவரும் ‘காணாமற் போனவரை தேடித் திரிய’ தூண்டப்பட வேண்டும். நிச்சயமாகவே மூப்பர்களோடு ஒத்துழைப்பது அதிக பலன் தருவதாக இருக்கும். உங்கள் சபையில் பலவீனமாக இருக்கும் ஒருவருக்கு உதவ உங்களால் எதையாவது செய்ய முடியுமா?
கனிவோடு நடந்துகொள்ளுங்கள்
15. மேய்ப்பன் ஏன் அவ்வாறு நடந்துகொண்டான்?
15 காணாமற்போன ஆட்டை ஒருவழியாக கண்டுபிடித்ததும், மேய்ப்பன் என்ன செய்கிறான்? “அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்”கொள்கிறான். (லூக்கா 15:5) நெகிழ வைக்கும் என்னே ஒரு விவரிப்பு! பழக்கமில்லாத பிராந்தியங்களில் இரவுபகலாக அந்த ஆடு திரிந்திருக்கலாம், சிங்கங்கள்கூட அவற்றை துரத்திக்கொண்டு போயிருக்கலாம். (யோபு 38:39, 40) அதோடு உணவு இல்லாமல் அந்த ஆடு பலவீனமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. திரும்ப மந்தையிடம் வந்துசேரும் வழியில் ஏற்படும் இடைஞ்சல்களை சொந்த பலத்தினால் மேற்கொள்ள முடியாத அளவுக்கு அது மிகவும் நொடிந்து போயிருக்கும். ஆகவே மேய்ப்பன் கீழே குனிந்து, கனிவோடு ஆட்டைத் தூக்கி, எல்லா இடையூறுகளையும் தாண்டி மந்தையிடம் அதைக் கொண்டுவந்து சேர்க்கிறான். இந்த மேய்ப்பன் காண்பித்த அக்கறையை நாம் எவ்வாறு காட்டலாம்?
16. காணாமற்போன ஆட்டின் மீது மேய்ப்பன் காட்டிய அதே கனிவை நாமும் ஏன் காட்ட வேண்டும்?
16 சபையோடு தொடர்பை இழந்துவிட்ட நபர் ஆவிக்குரிய கருத்தில் மிகவும் களைப்பாக இருக்கலாம். மேய்ப்பனிடமிருந்து பிரிந்திருந்த ஆட்டைப் போல, அந்த நபர் பகைமை நிறைந்த இந்த உலகின் பிராந்தியத்தில் எந்த நோக்கமுமில்லாமல் சுற்றி திரிந்திருக்கலாம். மந்தையாகிய கிறிஸ்தவ சபை அளிக்கும் எந்த பாதுகாப்பும் இல்லாத நிலையில் “கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரி”யும் பிசாசின் தாக்குதல்ககளை முன்னொருபோதும் இல்லாதளவுக்கு அதிகமாக எதிர்ப்பட்டிருக்கலாம். (1 பேதுரு 5:8) அதோடு, ஆவிக்குரிய உணவில்லாமல் இன்னும் அதிக பலவீனமாகவும் இருக்கலாம். ஆகவே, சபைக்குத் திரும்பும் அந்த பயணத்தில் எதிர்ப்படக்கூடிய இடையூறுகளை உதவியின்றி அவரால் தாண்ட முடியாது. ஆகவே அடையாள அர்த்தத்தில் நாம் கீழே குனிந்து, பலவீனமானவரை கனிவோடு தூக்கி, அவரை சுமந்து திரும்பி வரவேண்டும். (கலாத்தியர் 6:2) அதை நாம் எவ்வாறு செய்யலாம்?
17. பலவீனமாயிருக்கும் ஒருவரைப் பார்க்க செல்லும்போது நாம் எவ்வாறு அப்போஸ்தலனாகிய பவுலைப் போல நடந்துகொள்ளலாம்?
17 அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ?” (2 கொரிந்தியர் 11:29; 1 கொரிந்தியர் 9:22) பலவீனர் உட்பட எல்லா மக்களிடமும் பவுல் பரிவிரக்கத்தோடு இருந்தார். நாமும்கூட பலவீனமாயிருப்பவர்களிடம் அதே போன்ற பரிவான உணர்வுகளைக் காட்ட வேண்டும். ஆவிக்குரிய விதத்தில் பலவீனமாயிருக்கும் ஒரு கிறிஸ்தவரை போய் பார்க்கையில், அவர் யெகோவாவின் பார்வையில் உயர்ந்த மதிப்புள்ளவர் என்பதையும் அவர் வராதிருப்பது சபையாருக்கு மிகுந்த இழப்பாக இருப்பதையும் அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். (1 தெசலோனிக்கேயர் 2:17) உதவி செய்ய அவர்கள் தயாராக இருப்பதையும் அவருக்கு ‘இடுக்கணில் உதவ பிறந்திருக்கிற சகோதரனாக’ இருப்பதற்கு மனமுள்ளவர்களாய் இருப்பதையும் அவருக்குத் தெரியப்படுத்துங்கள். (நீதிமொழிகள் 17:17; சங்கீதம் 34:18) நம்முடைய இருதயத்திலிருந்து வரும் சொற்கள், அவரை கனிவோடு படிப்படியாக தூக்கி நிறுத்தி, அவர் மந்தைக்குத் திரும்ப தெம்பளிக்கலாம். அடுத்ததாக, நாம் என்ன செய்ய வேண்டும்? ஸ்திரீயையும் காணாமற்போன காசையும் பற்றிய உதாரணம் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறது.
ஆர்வமுள்ளவராயிருங்கள்
18. (அ) உவமையிலுள்ள ஸ்திரீ ஏன் நம்பிக்கை இழக்கவில்லை? (ஆ) அந்த ஸ்திரீ ஆர்வத்துடன் எடுத்த முயற்சிகள் யாவை, அதன் விளைவு என்ன?
18 காசை தொலைத்துவிடும் ஸ்திரீக்கு அதை கண்டுபிடிப்பது கஷ்டம் என்று தெரியும், ஆனாலும் அவள் நம்பிக்கை இழக்கவில்லை. ஏனெனில் அந்தக் காசு ஒருவேளை பரந்த முட்புதர்களுள்ள வயலில் அல்லது ஆழமான சேறுள்ள ஏரியில் விழுந்திருந்தால் அதைக் கண்டெடுக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்து முயற்சியை கைவிட்டிருப்பாள். ஆனால் கைக்கெட்டும் தூரத்தில் எங்கோ வீட்டுக்குள்தான் விழுந்திருக்கும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்ததால், அவள் எல்லா இடத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் தேட ஆரம்பிக்கிறாள். (லூக்கா 15:8) முதலாவதாக இருட்டாயிருந்த வீட்டை வெளிச்சமாக்குவதற்கு விளக்கைக் கொளுத்துகிறாள். பின்பு காசு தட்டுப்படும் சத்தம் கேட்காதா என்ற ஆவலுடன் அவள் தரையை துடப்பத்தினால் பெருக்குகிறாள். கடைசியாக வெள்ளிக்காசின் மேல் வெளிச்சம்பட்டு அது அவள் கண்ணில் படும்வரை அவள் மூலைமுடுக்கெல்லாம் தேடிப் பார்க்கிறாள். அந்த ஸ்திரீ ஆர்வத்தோடு செய்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது!
19. காணாமற்போன காசைப் பற்றிய உவமையிலுள்ள பெண்ணின் செயல்களிலிருந்து பலவீனருக்கு உதவுவதில் என்ன பாடங்களை கற்றுக்கொள்ளலாம்?
19 பலவீனமாக இருக்கும் கிறிஸ்தவருக்கு உதவி செய்ய வேண்டிய பொறுப்பு நம் திறமைகளுக்கு அப்பாற்பட்டதல்ல என்பதை உவமையின் இந்த விவரம் நமக்கு நினைப்பூட்டுகிறது. அதே சமயத்தில் முயற்சி தேவை என்பதையும் புரிந்துகொள்கிறோம். ஆம், அப்போஸ்தலன் பவுல் எபேசுவிலிருந்த மூப்பர்களிடம் இவ்வாறு சொன்னார்: ‘இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்க வேண்டும்.’ (அப்போஸ்தலர் 20:35அ) வீட்டைச் சுற்றி ஏனோதானோவென்றோ, வெறுமென அங்குமிங்குமாகவோ, தற்செயலாகவோ அல்லது அவ்வப்போது மட்டுமோ பார்த்து அந்த ஸ்திரீ காசை கண்டுபிடிக்கவில்லை என்பதை நினைவில் வையுங்கள். அவள் அதைக் “கண்டுபிடிக்கிற வரைக்கும்” ஒழுங்கான முறையில் தேடினாள். அதேவிதமாக, ஆவிக்குரிய விதத்தில் பலவீனமாக இருக்கும் ஒரு நபரை ஆதாயப்படுத்திக்கொள்ள முயலும்போது, நாம் ஆர்வத்துடனும் ஒரு நோக்கத்துடனும் அவரை அணுக வேண்டும். அதற்காக நாம் என்ன செய்யலாம்?
20. பலவீனருக்கு உதவ என்ன செய்யப்படலாம்?
20 பலவீனமாக இருக்கும் ஒருவர் விசுவாசத்தையும் நன்றியுணர்வையும் வளர்த்துக்கொள்ள நாம் எவ்வாறு உதவலாம்? பொருத்தமான ஒரு கிறிஸ்தவ பிரசுரத்தை வைத்து அவரோடு பைபிளைப் படிப்பதே அவருக்கு தேவைப்பட்ட உதவியாக இருக்கலாம். ஆம், பலவீனமான ஒருவருக்கு பைபிள் படிப்பை நடத்தும்போது, அவருக்கு இடைவிடாமல் முழுமையாக உதவி செய்ய அது நம்மை அனுமதிக்கிறது. தேவைப்படும் உதவியை யார் அளிப்பார் என்பதை பெரும்பாலும் ஊழிய கண்காணியே முடிவு செய்யலாம். என்ன விஷயங்களை படிக்கலாம், எந்த பிரசுரம் அதிக பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் குறித்து அவர் ஆலோசனை வழங்கலாம். உவமையிலுள்ள ஸ்திரீ பயனுள்ள கருவிகளைப் பயன்படுத்தி தான் நினைத்த காரியத்தை நிறைவேற்றியதைப் போலவே, பலவீனரைத் தாங்கும்படி கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு உதவும் கருவிகள் இன்று நம்மிடமும் இருக்கின்றன. இந்த முயற்சியில் நம்முடைய இரண்டு புதிய கருவிகள் அல்லது பிரசுரங்கள் விசேஷமாக பயனுள்ளவையாக இருக்கும். அவை ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் மற்றும் யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்.a
21. பலவீனருக்கு உதவி செய்வது எப்படி அனைவருக்கும் ஆசீர்வாதங்களைத் தருகிறது?
21 பலவீனருக்கு உதவி செய்வது அனைவருக்கும் ஆசீர்வாதங்களைத் தருகிறது. உதவியைப் பெறுகிறவர் உண்மையான நண்பர்களோடு திரும்ப இணையும் சந்தோஷத்தை அனுபவிக்கிறார். அதே சமயத்தில் கொடுப்பதில் மட்டுமே கிடைக்கும் இருதயப்பூர்வமான மகிழ்ச்சியை நாம் அனுபவிக்கிறோம். (லூக்கா 15:6, 9; அப்போஸ்தலர் 20:35ஆ) சபையின் ஒவ்வொரு அங்கத்தினரும் மற்றவரில் அன்புடன் அக்கறை காட்டும்போது முழு சபையும் அன்பில் வளருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பலவீனரை ஆதரிக்க விரும்பும் நம் அக்கறையுள்ள மேய்ப்பர்களான யெகோவாவையும் இயேசுவையும் அது கனப்படுத்துகிறது. முக்கியமாக, அவர்களின் பூமிக்குரிய ஊழியர்கள் அதேபோல செய்யும்போது அவர்கள் இருவருக்கும் அது கனத்தைச் சேர்க்கிறது. (சங்கீதம் 72:12-14; மத்தேயு 11:28-30; 1 கொரிந்தியர் 11:1; எபேசியர் 5:1) ஆகவே தொடர்ந்து ‘ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருப்பதற்கு’ நமக்கு என்னே நல்ல காரணங்கள் இருக்கின்றன!
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
உங்களால் விளக்க முடியுமா?
• அன்பு காட்டுவது நம் ஒவ்வொருவருக்கும் ஏன் இன்றியமையாதது?
• பலவீனருக்கு நம்முடைய அன்பை காட்ட ஏன் முன்வர வேண்டும்?
• காணாமற்போன ஆடு, காசு ஆகிய உதாரணங்கள் நமக்கு என்ன பாடங்களை கற்பிக்கின்றன?
• பலவீனமாக இருக்கும் ஒருவருக்கு உதவ நாம் என்ன நடைமுறையான படிகளை எடுக்கலாம்?
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
பலவீனருக்கு உதவும்போது நாம் வலியப் போய் முயற்சிக்கிறோம், கனிவோடும் ஆர்வத்துடனும் அதை செய்கிறோம்
[பக்கம் 16, 17-ன் படம்]
பலவீனருக்கு உதவுவது அனைவருக்கும் ஆசீர்வாதங்களைத்தருகிறது