வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
சபையானது கர்த்தருடைய இராப்போஜனத்தை அனுசரிக்கும்போது அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு கிறிஸ்தவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆஜராக முடியாமல் போனால் அவருக்காக வேறு ஏதாவது ஏற்பாடு செய்யப்படுமா?
ஆம். அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு கிறிஸ்தவர், உடல்நிலை சரியில்லாமலோ அல்லது படுத்த படுக்கையாகவோ இருக்கையில் சபையானது கிறிஸ்துவின் நினைவு ஆசரிப்பை அனுசரிக்கும்போது ஆஜராக முடியாமல் போனால் அவருக்காக மாற்று ஏற்பாடு செய்ய முடியும், அவ்வாறு செய்யவும் வேண்டும். ஒருவேளை அன்று இரவே, அதாவது சூரிய உதயத்திற்கு முன்பாகவே அந்த சகோதரருக்கு அப்பம் மற்றும் திராட்ச ரசத்தில் கொஞ்சத்தை எடுத்துச் செல்ல, ஒரு மூப்பரையோ அல்லது முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவ சகோதரரையோ மூப்பர் குழு ஏற்பாடு செய்யலாம்.
சூழ்நிலைக்கு தகுந்தவாறு அந்த மூப்பரோ அல்லது அந்த சகோதரரோ சுருக்கமான குறிப்புகளை சொல்லி பொருத்தமான வசனங்களையும் படிக்கலாம். கர்த்தரின் இராப்போஜனத்தை தொடங்கி வைத்தபோது இயேசு காண்பித்த மாதிரியை அவர் பின்பற்றலாம். உதாரணமாக, மத்தேயு 26:26 போன்ற ஒரு வசனத்தை படித்துவிட்டு, ஜெபம் செய்தபின்பு புளிப்பில்லாத அப்பத்தை கொடுக்கலாம். அடுத்ததாக அந்த சகோதரர் மத்தேயு 26:27, 28 போன்ற வசனங்களை படித்துவிட்டு, மீண்டும் ஜெபம் செய்தபின் திராட்ச ரசத்தை கொடுக்கலாம். அந்த சின்னங்களின் அர்த்தத்தைக் குறித்தும் சுருக்கமான குறிப்புகளை சொல்லலாம்; பிறகு, முடிவான ஜெபத்தை செய்ய வேண்டும்.
சபை ஆசரிக்கும் கர்த்தருடைய இராப்போஜனத்திற்கு ஆஜராக அவசியமான எல்லா முயற்சியையும் எடுக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர் மோசமான உடல்நிலை காரணமாகவோ மருத்துவமனையில் இருப்பதாலோ தவிர்க்க முடியாத வேறு காரணத்தாலோ நிசான் 14 சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நினைவு ஆசரிப்புக்கு ஆஜராக முடியாமல் போனால் என்ன செய்வது? அப்படிப்பட்ட சூழ்நிலையில் அபிஷேகம் செய்யப்பட்ட அந்த நபர், மோசேயின் நியாயப்பிரமாணச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாட்டை தனக்கு பொருத்தி சரியாக 30 நாட்களுக்கு பிறகு தனியாக அதை ஆசரிக்கலாம்.—எண்ணாகமம் 9:9-14.