வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
சங்கீத புத்தகத்தின் எண்கள் ஏன் பல்வேறு பைபிள் மொழிபெயர்ப்புகளில் வேறுபடுகின்றன?
பிரெஞ்சு மொழிபெயர்ப்பே முதன்முதலில் அதிகாரங்களாகவும் வசனங்களாகவும் பிரிக்கப்பட்ட முழு பைபிள்; இது ராபர் ஏட்டியன் என்பவரால் 1553-ல் பிரசுரிக்கப்பட்டது. ஆனால் இதற்கு வெகு நாட்களுக்கு முன்னரே சங்கீத புத்தகம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் இது அநேகரால் இயற்றப்பட்ட தனித்தனி சங்கீதங்களின் அல்லது பாடல்களின் தொகுப்பு.
பொது மக்கள் வழிபாட்டில் பயன்படுத்துவதற்காக இந்த சங்கீதங்களை ஒன்றாக தொகுக்கும்படி யெகோவா முதலில் தாவீதை வழிநடத்தியதாக தெரிகிறது. (1 நாளாகமம் 15:16-24) பிற்பாடு, ஆசாரியனும் ‘தேறின வேதபாரகனுமாகிய’ எஸ்றா முழு சங்கீத புத்தகத்தையும் நாம் இன்றைக்கு வைத்திருக்கும் வடிவில் தொகுத்ததாக நம்பப்படுகிறது. (எஸ்றா 7:6) இவ்வாறு, தனித்தனி சங்கீதங்கள் சங்கீத புத்தகமாக ஒன்றாக தொகுக்கப்பட்டது.
அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய முதல் மிஷனரி பயணத்தின்போது அந்தியோகியாவிலிருந்த (பிசீதியா) ஜெப ஆலயத்தில் சொற்பொழிவாற்றினார்; அப்போது சங்கீத புத்தகத்திலிருந்து மேற்கோள் காண்பித்து, “நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே” என்று கூறினார். (அப்போஸ்தலர் 13:32) இந்த வார்த்தைகள் இன்றைய பைபிள்களில் இரண்டாம் சங்கீதம் 7-ம் வசனத்தில் காணப்படுகின்றன. என்றாலும், பல்வேறு பைபிள் மொழிபெயர்ப்புகளில் அநேக சங்கீதங்களின் எண்களில் வித்தியாசம் இருக்கிறது. சில மொழிபெயர்ப்புகள் எபிரெய மஸோரெட்டிக் மூலவாக்கியத்தை அடிப்படையாகவும், மற்றவையோ கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பை—அதாவது, பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் முடிக்கப்பட்ட எபிரெய வேதாகமத்தின் மொழிபெயர்ப்பை—அடிப்படையாகவும் கொண்டிருப்பதே இதற்கு காரணம். உதாரணமாக, செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பில் எப்படி சங்கீத புத்தகம் எண்களிடப்பட்டுள்ளதோ அந்த முறையிலேயே லத்தீன் வல்கேட் மொழிபெயர்ப்பிலும் எண்களிடப்பட்டுள்ளது. இதிலிருந்தே பல கத்தோலிக்க பைபிள்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பிலும் பிற மொழிபெயர்ப்புகளிலும் எபிரெய மஸோரெட்டிக் மூலவாக்கியத்தின் அடிப்படையில் எண்களிடப்பட்டுள்ளன.
இவற்றில் காணப்படும் முக்கியமான வித்தியாசங்கள் யாவை? எபிரெயுவில் மொத்தமாக 150 சங்கீதங்கள் உள்ளன. ஆனால் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு 9-ம் 10-ம் சங்கீதத்தை ஒன்றாகவும், 114-ம் 115-ம் சங்கீதத்தை ஒன்றாகவும் சேர்த்திருக்கிறது. மேலும், இது 116-ம் சங்கீதத்தையும் 147-ம் சங்கீதத்தையும் இரண்டு இரண்டு சங்கீதங்களாக பிரித்திருக்கிறது. சங்கீதங்களின் மொத்த எண்ணிக்கை ஒன்றுதான் என்றாலும், 10-ம் சங்கீதத்திலிருந்து 146-ம் சங்கீதம் வரைக்கும், எபிரெய வாசகத்திலுள்ளதைவிட செப்டுவஜின்ட்டில் காணப்படும் எண்ணிக்கையில் ஒன்று குறைவுபடுகிறது. இதனால், நன்கு பரிச்சயமான 23-ம் சங்கீதம் டூவே வர்ஷனில் 22-ம் சங்கீதம்; ஏனென்றால் இந்த மொழிபெயர்ப்பு லத்தீன் வல்கேட்டிலுள்ள எண் வரிசையின்படி அமைந்துள்ளது, லத்தீன் வல்கேட்டோ செப்டுவஜின்ட்டின் அடிப்படையில் உள்ளது.
சில சங்கீதங்களில் வசன எண்களும் ஒரு மொழிபெயர்ப்பிலிருந்து மற்றொரு மொழிபெயர்ப்பில் வித்தியாசமாக இருக்கலாம். ஏன்? சில மொழிபெயர்ப்புகள் “சங்கீதங்களின் தலைப்பை முதல் வசனமாக கணக்கிடும் யூத வழக்கத்தைப்” பின்பற்றுவதே இதற்கு காரணம் என மெக்ளின்டாக் மற்றும் ஸ்டிராங் என்பவர்களுடைய சைக்ளோப்பீடியா கூறுகிறது. சொல்லப்போனால், தலைப்பு நீளமாக இருந்தால், அது பெரும்பாலும் இரண்டு வசனங்களாக கணக்கிடப்படுகிறது, அதனால் சங்கீதத்திலுள்ள வசன எண்களும் அதிகமாகின்றன.