உங்களை அன்புடன் அழைக்கிறோம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இராப் போஜனத்தை ஆரம்பித்து வைத்தார், அது சரித்திர புகழ்வாய்ந்த ஏதோ ஒரு நிகழ்ச்சி மட்டுமே அல்ல. அது ஆரம்பித்து வைக்கப்பட்டது முதற்கொண்டு மக்கள் மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த இரவில் நிகழ்ந்தவற்றை சுவிசேஷப் பதிவுகளில் வாசிக்கையில் அநேகருடைய இருதயம் நெகிழ்ந்திருக்கிறது. அதனால் அந்த இராப் போஜனத்தை பல்வேறு முறைகளில் நினைவுகூர அவர்கள் முயன்றிருக்கிறார்கள்.
இவையெல்லாம் புரிந்துகொள்ளத்தக்கதே, ஏனென்றால் இந்நிகழ்ச்சியை தவறாமல் ஆசரிக்கும்படி இயேசு கிறிஸ்துவே தமது சீஷர்களிடம் கட்டளையிட்டார். “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று திட்டவட்டமாக அவர் கூறினார்.—லூக்கா 22:19; 1 கொரிந்தியர் 11:23-25.
ஒருவர் இந்த ஆசரிப்பிலிருந்து உண்மையிலேயே பலன் பெற வேண்டுமானால் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து அதன் அர்த்தத்தை திருத்தமாக புரிந்துகொள்ள வேண்டும். அதோடு, இந்நிகழ்ச்சியை எப்பொழுது, எப்படி ஆசரிக்க வேண்டும் என்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை அறிந்துகொள்வதும் முக்கியம்.
இயேசுவின் கட்டளைக்கு இசைவாக, உலகெங்கிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் 2003, ஏப்ரல் 16-ம் தேதி புதன்கிழமை அன்று மாலை இயேசுவின் மரணத்தை நினைவுகூருவதற்கு ஒன்றுகூடி வருவார்கள். அது அவர்களுக்கு வேதவசனங்களை ஆராய்வதற்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் தங்களுடைய விசுவாசத்தையும் அன்பையும் புதுப்பித்துக் கொள்வதற்குமுரிய சமயம். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என இயேசு கூறினார். (யோவான் 3:16) இயேசு கிறிஸ்துவிலும் பரலோக பிதாவாகிய யெகோவா தேவனிலும் வைத்திருக்கும் உங்களுடைய விசுவாசத்தையும் அன்பையும் நீங்கள் பலப்படுத்திக்கொள்ளலாம்; இதற்காக அந்த நாள் மாலையில் யெகோவாவின் சாட்சிகளோடு கூடிவரும்படி உங்களை அன்புடன் அழைக்கிறோம்.