உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w03 6/15 பக். 31
  • பறவைகள் கற்பிக்கும் பாடங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பறவைகள் கற்பிக்கும் பாடங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
w03 6/15 பக். 31

பறவைகள் கற்பிக்கும் பாடங்கள்

“ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?” (மத்தேயு 6:26) இந்த வார்த்தைகளை, கலிலேய கடலருகே தம் பிரசித்திப் பெற்ற மலைப்பிரசங்கத்தில் இயேசு கிறிஸ்து கூறினார். பிரசங்கத்தை இயேசுவின் சீஷர்கள் மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கவில்லை. மாறாக, அதைக் கேட்க, அவருடைய சீஷராகும் வாய்ப்பை பெற்றிருந்த அநேகர் நாட்டின் நாலாபுறத்திலிருந்தும் வந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஏழைகள்; வியாதிப்பட்டவர்களை குணப்படுத்த அவரிடம் அழைத்து வந்திருந்தனர்.​—⁠மத்தேயு 4:23–5:2; லூக்கா 6:17-20.

இயேசு வியாதிப்பட்ட அனைவரையும் சுகப்படுத்திய பிறகு, இன்னும் முக்கியமான ஆன்மீகத் தேவைகளுக்கு கவனம் செலுத்தினார். அப்படி அவர் போதித்த ஒரு பாடமே மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகாயத்துப் பறவைகள் காலங்காலமாக இருந்து வருபவை. அவற்றில் சில புழுப்பூச்சிகளையும், இன்னும் சில பழங்களையும் கொட்டைகளையும் தின்று உயிர்வாழ்கின்றன. இவ்விதம் பறவைகளுக்கு ஏராளமாக உணவளிக்கும் கடவுள், தம்முடைய ஊழியர்கள் அன்றாட உணவைப் பெற்றுக்கொள்ள உதவுவதற்கும் நிச்சயம் திறன் பெற்றிருக்கிறார். இதை அவர் எப்படி செய்கிறார்? அவர்கள் தினசரி உணவுக்காக பணம் சம்பாதிப்பதற்கு ஒரு வேலை கிடைக்கும்படி உதவலாம்; அல்லது தேவையான உணவு வகைகளை அவர்களே பயிரிட்டு பெறுவதற்கு உதவலாம். இதைத்தவிர, அவசர தேவையின்போது, அன்பான அக்கம்பக்கத்தாரும் நண்பர்களும் தங்கள் உணவை பகிர்ந்தளிக்கும்படி அவர்களுடைய மனதை கடவுள் தூண்டலாம்.

பறவைகளின் வாழ்க்கையை கூர்ந்து கவனிப்பதன் மூலம் இன்னும் அநேகத்தை நாம் கற்றுக்கொள்ளலாம். உதாரணமாக, குஞ்சுகளை வளர்ப்பதற்காக கூடு கட்டும் அபார இயல்புணர்ச்சியுடன் கடவுள் பறவைகளை படைத்திருக்கிறார். இப்போது இரண்டு வித்தியாசமான கூடுகளை கவனியுங்கள். முதல் கூடு, இடது பக்கம் நீங்கள் பார்க்கும் ஆப்பிரிக்க பாறை குருவியின் (African rock martin) கூடு. இது பாறை முகப்பில் அல்லது வீட்டின் சுவரில் கட்டப்படுகிறது. இப்படிப்பட்ட கூடுகளின் கூரையாக அமைவது, நீட்டிக்கொண்டிருக்கும் பாறைகள் அல்லது நீங்கள் படத்தில் பார்க்கும் விதமாக கட்டிடங்களின் கூரை ஓரங்கள். கூட்டின் தரை மிகச் சிறிய களிமண் உருண்டைகளால் ஆனது; அவை ஒன்றோடொன்று ஒட்டப்பட்டு கப் வடிவில் அமைந்துள்ளன. இவ்வாறு தேவையான களிமண் உருண்டைகளை சேகரிக்க, அந்த ஜோடி குருவிகள் கடினமாக உழைக்கின்றன; தங்களுடைய வீட்டை கட்டி முடிப்பதற்கு ஒரு மாதத்திற்கும் மேல் எடுக்கின்றன. பிறகு தங்கள் வீடு மெத்தென்று சொகுசாக இருப்பதற்கு புல்லையும் இறகுகளையும் கம்பளமாக விரிக்கின்றன. அப்பா குருவி, அம்மா குருவி இரண்டுமே குஞ்சுகளுக்கு உணவளிக்கின்றன. இரண்டாவது கூடு, கீழே நீங்கள் பார்க்கும் ஆண் தூக்கணாங் குருவி (masked weaver) கூடு. இந்த படுசுறுசுறுப்பான ஆப்பிரிக்க பறவை, புற்கள் அல்லது மற்ற தாவரங்களின் சிறு சிறு இலைதழைகளைக் கொண்டு தன்னுடைய கூட்டை கட்டுகிறது. இவ்வாறு தன்னுடைய அழகிய வீட்டை ஒரே நாளில் ஜம்மென கட்டி முடித்துவிடுகிறது. ஆகையால், ஒரு பருவ காலத்தில் மட்டும் முப்பதுக்கும் அதிகமான கூடுகளை கட்டிவிடும் திறமைசாலி அது!

இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? கூடு கட்டுவதற்கு தேவையான திறமைகளையும் ஏராளமான பொருட்களையும் பறவைகளுக்கு கடவுள் அளிக்கும்போது, தம்முடைய ஊழியர்கள் வீடுகளை பெற்றுக்கொள்ள கட்டாயம் உதவுவார் அல்லவா? இருந்தபோதிலும், பொருளாதார தேவைகளை பெற்றுக்கொள்ளும்படி யெகோவா தேவன் நமக்கு உதவுவதற்கு, நாம் ஒன்றை செய்ய வேண்டும் என இயேசு கூறினார். அதாவது, “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” என்பதாக இயேசு வாக்குறுதி அளித்தார். (மத்தேயு 6:33) ‘தேவனுடைய ராஜ்யத்தை முதலாவது தேடுவது எதை அர்த்தப்படுத்துகிறது?’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். அதற்கான பதிலை உங்களுக்கு சொல்வதற்கு, இந்த பத்திரிகையை கொடுத்துவரும் யெகோவாவின் சாட்சிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்