வெறும் வழக்கமா லஞ்சமா?
போலந்து நாட்டில் சில கல்லூரிகளில், ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்குவதற்காக மாணவர்கள் வழக்கமாக வசூலில் இறங்கிவிடுவார்கள். பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இப்படி செய்கிறார்கள். இதனால் காட்டார்சினா என்ற கிறிஸ்தவ இளம் பெண்ணுக்கு தர்மசங்கடமான ஒரு சூழ்நிலை. “பணம் கொடுப்பதா வேண்டாமா?” என அவளுக்கு மனப்போராட்டம். “இது சர்வ சாதாரணமா நடக்கிற வழக்கம்தான். இப்படி கொடுக்கிறதால உனக்கு எந்த நஷ்டமும் வந்துடாது, சொல்லப்போனால் லாபம்தான் அதிகம், அதனால் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத சந்தேகமெல்லாம்?” என சக மாணவர்கள் நியாயம் கற்பித்தார்கள்.
“முதல் வருஷத்தில் நானும் பணம் கொடுத்ததை ஒத்துக்கிறேன்” என காட்டார்சினா கூறுகிறாள். “ஆனால் அப்படி செய்ததால் பைபிள் கண்டிக்கிற லஞ்சத்திற்கு நானும் உடந்தையாக இருந்திருக்கிறேன் என்பது பின்னாடிதான் எனக்குப் புரிஞ்சுது.” லஞ்சம் கொடுப்பதை யெகோவா வன்மையாக கண்டிப்பதைப் பற்றிய வேதவசனங்கள் அவளுடைய நினைவுக்கு வந்தன. (உபாகமம் 10:17; 16:19; 2 நாளாகமம் 19:7) “நண்பர்களோட நச்சரிப்பு தாங்காமல் விட்டுக்கொடுத்துவிடுவது எவ்வளவு சுலபம் என்பதை நான் புரிஞ்சிக்கிட்டேன். இந்த விஷயத்தை நல்லா யோசித்துப் பார்த்துவிட்டு, அதுக்கப்புறம் இந்த மாதிரியான வழக்கத்தில் நான் ஈடுபடவே இல்லை” என காட்டார்சினா கூறுகிறாள். கடந்த மூன்று வருடங்களில் மற்ற மாணவர்கள் கேலி கிண்டல் செய்தபோதிலும், பைபிள் அடிப்படையிலான நம்பிக்கைகளின் நிமித்தம், இனிமேல் இப்படிப்பட்ட “பரிசுகளுக்காக” பணம் வசூலிக்க போவதில்லையென சிலரிடம் அவளால் விளக்கிக் கூற முடிந்தது.
இதனால், சுயநலக்காரி, சமூக விரோதி என்று காட்டார்சினாவுக்கு சிலர் பட்டம் கட்டினர். “இப்போதும் அவர்களில் சிலருக்கு என்னைக் கண்டாலே ஆகாது. ஆனால் நிறைய பேர் என்னுடைய கருத்தை மதிக்கிறதால் எனக்கு சந்தோஷம்” என அவள் கூறுகிறாள். காட்டார்சினா பைபிள் நெறிமுறைகளை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தி என்பதை எல்லாரும் அறிந்துகொண்டார்கள்.