“இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்”
“இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.” (மத்தேயு 10:8) நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக அப்போஸ்தலர்களை அனுப்பியபோது இயேசு இந்தக் கட்டளையை அவர்களுக்குக் கொடுத்தார். இந்தக் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிந்தார்களா? கீழ்ப்படிந்தார்கள், இயேசு இந்தப் பூமியை விட்டுச் சென்ற பின்பும் அவர்கள் இதைத் தொடர்ந்து செய்து வந்தார்கள்.
உதாரணமாக, ஒருசமயம் மாயவித்தைக்காரனாயிருந்த சீமோன், அப்போஸ்தலரான பேதுருவும் யோவானும் பெற்றிருந்த அற்புதகரமான வல்லமையைப் பார்த்து, அவர்களிடத்தில் பணத்தைக் கொடுத்து தனக்கும் இந்த வல்லமையை அருள வேண்டுமென கேட்டார். ஆனால் பேதுருவோ சீமோனை கடிந்துகொண்டு, “தேவனுடைய வரத்தைப் [“இலவச பரிசை,” NW] பணத்தினாலே சம்பாதித்துக் கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது” என்று சொன்னார்.—அப்போஸ்தலர் 8:18-20.
பேதுருவின் அதே மனநிலையை அப்போஸ்தலன் பவுலும் காட்டினார். பவுல் நினைத்திருந்தால், கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவ சகோதரர்களுக்கு பண விஷயத்தில் ஒரு சுமையாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி இல்லாமல் தன்னுடைய தேவைகளுக்காக தன் சொந்த கையினால் உழைத்தார். (அப்போஸ்தலர் 18:1-3) அதனால்தான், கொரிந்தியருக்கு நற்செய்தியை “செலவில்லாமல்” பிரசங்கித்ததாக அவரால் உறுதியாக சொல்ல முடிந்தது.—1 கொரிந்தியர் 4:12; 9:18.
ஆனால், கிறிஸ்துவை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் பலர் ‘இலவசமாய்க் கொடுக்கும்’ அதே மனவிருப்பத்தைக் காட்டுவதில்லை என்பதே வருந்தத்தக்க விஷயம். சொல்லப்போனால், கிறிஸ்தவமண்டலத்தின் மதத் தலைவர்கள் அநேகர் ‘கூலிக்கே உபதேசிக்கிறார்கள்.’ (மீகா 3:11) சில மதத் தலைவர்களோ தங்கள் மந்தைகளிடமிருந்து பணம் திரட்டி பணக்காரராக ஆகியிருக்கிறார்கள். 1989-ல் ஐ.மா. சுவிசேஷகர் ஒருவருக்கு 45 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. காரணம்? தனது “ஆதரவாளர்களிடமிருந்து லட்சக்கணக்கான டாலர் பணத்தை மோசடி செய்து, கார், பங்களா என்று வாங்கி குவித்தார், இன்பச் சுற்றுலாக்களுக்கென செலவழித்தார்; அதோடு, தனது நாய்க்கு ஏ/சி பொருத்தப்பட்ட அறையையும் அமைத்துக் கொடுத்தார்.”—பீப்பிள்ஸ் டெய்லி க்ராஃபிக், அக்டோபர் 7, 1989.
கானாவில், ஒருமுறை ரோமன் கத்தோலிக்க பாதிரி ஒருவர் பூசையின்போது சபையாரிடம் திரட்டிய பணத்தை அவர்கள் மீதே வீசி எறிந்தார் என மார்ச் 31, 1990 தேதியிட்ட கானேயன் டைம்ஸ் குறிப்பிட்டது. “வயதில் பெரியவர்களாக பெரிய பெரிய நோட்டுகளை அவர்கள் போட வேண்டும் என எதிர்பார்த்ததால்தான் அவர் அப்படி செய்தார்” என அந்த செய்தித்தாள் கூறுகிறது. அநேக சர்ச்சுகள் தங்கள் அங்கத்தினர்களின் மனதில் பேராசையை தூண்டிவிட முயலுகின்றன என்பதில் ஆச்சரியமில்லை. அதிக பணம் சேர்ப்பதற்காக சூதாட்டங்களையும் பிற திட்டங்களையும் ஏற்பாடு செய்து அதில் ஈடுபட அவர்களைத் தூண்டுகின்றன.
இதற்கு எதிர்மாறாக, யெகோவாவின் சாட்சிகளோ இயேசுவையும் அவருடைய ஆரம்பகால சீஷர்களையும் பின்பற்ற முயலுகிறார்கள். அவர்கள் மத்தியில் சம்பளத்துக்கு நியமிக்கப்பட்ட மத குருக்கள் இல்லை. யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொருவருமே ஊழியர்கள்; ‘ராஜ்ய நற்செய்தியை’ பிறருக்கு பிரசங்கிக்கும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (மத்தேயு 24:14) ஆகவே, உலகம் முழுவதிலுமுள்ள 60 லட்சத்திற்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் “ஜீவத் தண்ணீரை” மக்களுக்கு இலவசமாய் அளித்து வருகிறார்கள். (வெளிப்படுத்துதல் 22:17) இதனால், ‘பணமில்லாதவர்களும்’ பைபிளின் செய்தியிலிருந்து நன்மை பெற முடிகிறது. (ஏசாயா 55:1) அவர்களுடைய உலகளாவிய வேலையை நடத்த மனமுவந்த நன்கொடைகளையே பயன்படுத்துகின்றனர், ஒருபோதும் பணத்தை கேட்டு வாங்குவதில்லை. கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களாக அவர்கள் ‘கடவுளின் வார்த்தையை மலிவு சரக்காக விற்பவர்கள் அல்லர், ஆனால் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்ற முறையில் நல்மனதோடு பேசுபவர்கள்.’—2 கொரிந்தியர் 2:17, NW.
ஆனால் யெகோவாவின் சாட்சிகள் ஏன் தங்களுடைய சொந்த செலவிலேயே பிறருக்கு உதவ மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள்? எது அவர்களை தூண்டுகிறது? இலவசமாய் கொடுக்கிறார்கள் என்று சொல்லும்போது, தங்கள் முயற்சிகளுக்கு சுத்தமாக எந்த பலனையுமே பெறுவதில்லை என்றா அர்த்தம்?
சாத்தானின் சவாலுக்கு பதில்
செல்வந்தர்களாய் ஆக வேண்டும் என்ற ஆவல் அல்ல, யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆவலே இன்று உண்மை கிறிஸ்தவர்களை முக்கியமாகத் தூண்டுகிறது. இதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிசாசாகிய சாத்தான் எழுப்பிய சவாலுக்கு அவர்களால் பதில் கொடுக்க முடிகிறது. நீதிமானாயிருந்த யோபுவைக் குறித்ததில் யெகோவாவிடம் சாத்தான் சவால் விட்டான். “யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?” என்று அவன் கேட்டான். யோபுவுக்கு கடவுள் வேலிபோல் பாதுகாப்பை அளித்திருப்பதால்தான் அவன் அவரை சேவிக்கிறான் என சாத்தான் குற்றம்சாட்டினான். யோபுவின் சொத்துசுகங்களை அபகரித்துவிட்டால், அவன் கடவுளுடைய முகத்துக்கு நேராக தூஷிப்பான் என சாத்தான் வாதாடினான்.—யோபு 1:7-11.
இந்த சவாலுக்கு பதில் கொடுப்பதற்காக, யோபுவை சோதிக்கும்படி சாத்தானுக்கு கடவுள் அனுமதியளித்தார்; “அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது” என்று சாத்தானிடம் சொன்னார். (யோபு 1:12) அதன் விளைவு? சாத்தான் ஒரு பொய்யன் என யோபு நிரூபித்தார். எத்தனையோ கஷ்டங்கள் வந்தபோதிலும் யோபு உண்மைப் பற்றுறுதியோடு நிலைத்திருந்தார். “சாகும் வரையில் என் உத்தமத்தை கைவிடேன்” என்று அவர் சொன்னார்!—யோபு 27:5, 6, NW.
இன்றும் உண்மை வணக்கத்தார் யோபுவின் அதே மனநிலையைக் காட்டுகிறார்கள். கடவுளிடமிருந்து எதையாவது பெற வேண்டும் என்பதற்காக அவரை அவர்கள் சேவிப்பதில்லை.
தகுதியற்ற தயவு—கடவுள் தரும் இலவச பரிசு
மெய்க் கிறிஸ்தவர்கள் ‘இலவசமாய்க் கொடுப்பதற்கு’ மற்றொரு காரணம் அவர்கள் கடவுளிடமிருந்து ‘இலவசமாய்ப் பெற்றிருப்பதுதான்.’ நமது முற்பிதாவாகிய ஆதாம் செய்த பாவத்தின் காரணமாக, மனிதகுலம் பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமைப்பட்டு கிடக்கிறது. (ரோமர் 5:12) ஆகவே, கடவுள் நம் மீதுள்ள அன்பால் தம் மகனையே பலியாக மரிப்பதற்கு ஏற்பாடு செய்தார்; தனக்கு வரவிருந்த மிகப்பெரிய இழப்பையும் பொருட்படுத்தாமல் இதை செய்தார். மனிதகுலம் இதற்கு கொஞ்சமும் தகுதியற்றது. இது உண்மையில் கடவுளிடமிருந்து வந்திருக்கும் ஒரு பரிசே.—ரோமர் 4:4; 5:8; 6:23.
அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பவுல் சொன்ன விஷயத்தை ரோமர் 3:23, 24 இவ்வாறு குறிப்பிடுகிறது: “எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி, இலவசமாய் [“இலவச பரிசாகிய,” NW] அவருடைய கிருபையினாலே [“தகுதியற்ற தயவினாலே,” NW] கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்.” பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை உடையோரும் ‘இலவச பரிசைப்’ பெற்றுக்கொள்கிறார்கள். கடவுளுடைய நண்பர்களாக, நீதிமான்கள் என அறிவிக்கப்படும் பாக்கியமும் இந்தப் பரிசில் உட்படும்.—யாக்கோபு 2:23; வெளிப்படுத்துதல் 7:14.
கிறிஸ்தவர்கள் அனைவரும் கடவுளுடைய ஊழியர்களாக சேவை செய்யும் வாய்ப்பையும் கிறிஸ்துவின் மீட்கும் பலி அளிக்கிறது. “கடவுளுடைய இலவச பரிசாகிய தகுதியற்ற தயவினாலே நான் இதற்கு [பரிசுத்த இரகசியத்திற்கு] ஊழியக்காரனானேன்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபேசியர் 3:4-7, NW) தாங்கள் பெற தகுதியில்லாத அல்லது சம்பாதிக்க முடியாத இத்தகைய ஒரு பரிசை கடவுள் அவர்களுக்கு அளித்து, இந்த ஊழியத்தை நிறைவேற்றும்படி கட்டளையிட்டிருக்கிறார்; ஆகவே, இந்த மீட்கும்பலியின் ஏற்பாட்டைப் பற்றி பிறரிடம் சொல்வதற்காக கடவுளுடைய உண்மை ஊழியர்கள் பணத்தை எதிர்பார்க்க முடியாது.
நித்திய ஜீவன்—தன்னலத்தை தூண்டுகிறதா?
அப்படியானால், எந்தவொரு பலனையும் எதிர்பார்க்காமல் தம்மை சேவிக்க வேண்டுமென கடவுள் நினைக்கிறார் என்றா அர்த்தம்? இல்லவே இல்லை. “உங்கள் கிரியையையும், . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே” என தன் சக விசுவாசிகளிடம் அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபிரெயர் 6:10) யெகோவா ஓர் அநியாயக்காரரும் அல்ல. (உபாகமம் 32:4) மாறாக, யெகோவா ‘தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர்.’ (எபிரெயர் 11:6) ஆனால், பரதீஸில் நித்திய ஜீவ வாழ்க்கையைப் பற்றிய வாக்குறுதி தன்னலத்தை தூண்டுவதாக இல்லையா?—லூக்கா 23:43.
நிச்சயமாக இல்லை. அதற்கு ஒரு காரணம், பரதீஸான பூமியில் என்றென்றும் வாழும் ஆசை கடவுள் தந்தது. முதல் மனித தம்பதிகளுக்கு இந்த எதிர்பார்ப்பை அளித்தவர் கடவுளே. (ஆதியாகமம் 1:28; 2:15-17) ஆதாமும் ஏவாளும் இந்த எதிர்பார்ப்பை தங்கள் சந்ததிகளுக்கு அளிக்க தவறியபோது அதை மீண்டும் அளிக்கவும் கடவுள் ஏற்பாடு செய்தார். அதைக் குறித்து தம்முடைய வார்த்தையில் அவர் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறார்: “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்.” (ரோமர் 8:20) ஆகவே, பூர்வ காலத்து மோசேயைப் போல இன்று கிறிஸ்தவர்களும் ‘இனிவரும் பலன் மேல் நோக்கமாயிருப்பது’ முற்றிலும் சரியானதே. (எபிரெயர் 11:26) இந்தப் பலனை ஒரு லஞ்சமாக கடவுள் கொடுப்பதில்லை. தம்மை சேவிப்போர் மீதுள்ள நிஜமான அன்பினால் இதை அவர் அளிக்கிறார். (2 தெசலோனிக்கேயர் 2:16, 17) இவ்வாறு “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.”—1 யோவான் 4:19.
கடவுளை சேவிப்பதில் சரியான உள்நோக்கம்
இருந்தாலும், இன்று கிறிஸ்தவர்கள் கடவுளை சேவிப்பதில் தங்கள் உள்நோக்கங்களை எப்போதும் ஆராய்வது அவசியம். யோவான் 6:10-13 வசனங்களில், ஐந்தாயிரம் பேருக்கு மேற்பட்ட ஒரு கூட்டத்தாருக்கு இயேசு அற்புதமாக உணவளித்ததைப் பற்றி நாம் வாசிக்கிறோம். அதைத் தொடர்ந்து சிலர் தங்களுடைய தன்னல நோக்கங்களுக்காகவே இயேசுவை பின்பற்ற ஆரம்பித்தனர். இயேசு அவர்களிடம், “நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள்” என்று சொன்னார். (யோவான் 6:26) சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்பு, ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் சிலரும் அவ்வாறே கடவுளை சேவித்தனர்; ‘அவர்களது நோக்கமும் தூய்மையாக இருக்கவில்லை.’ (பிலிப்பியர் 1:17, பொது மொழிபெயர்ப்பு) ‘இயேசு கிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களை ஒப்புக்கொள்ளாத’ சிலர் கிறிஸ்தவர்களோடு கூட்டுறவு கொண்டு, அதன் மூலம் தங்களுக்கு ஆதாயம் கிடைப்பதற்கான வழிகளையும் தேடினர்.—1 தீமோத்தேயு 6:3-5.
இன்று ஒரு கிறிஸ்தவர், பரதீஸில் என்றென்றும் வாழ வேண்டும் என்ற ஒரே ஆசையின் காரணமாக கடவுளை சேவிக்கிறார் என்றால் அவரும் தன்னல நோக்கத்துக்காகவே சேவிப்பவராக இருப்பார். இதனால் நாளடைவில் அவர் ஆவிக்குரிய ரீதியில் வீழ்ந்து விடலாம். சாத்தானிய உலகம் தான் எதிர்பார்த்ததைவிட அதிக காலத்திற்கு நீடித்திருப்பது போல் அவருக்கு தோன்றுவதால், முடிவு வருவதற்கு காலம் கடந்துகொண்டே போவதாக நினைத்து அவர் ‘தளர்ந்துபோகலாம்.’ (கலாத்தியர் 6:9) பொருள் சம்பந்தமாக தான் செய்திருந்த தியாகங்களை நினைத்தும்கூட அவர் எரிச்சலடையலாம். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [“யெகோவாவிடத்தில்,” NW] உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” என இயேசு நமக்கு நினைப்பூட்டுகிறார். (மத்தேயு 22:37) அன்பு என்ற பிரதான நோக்கத்தின் நிமித்தமாக கடவுளை சேவிக்கும் ஒருவர், ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே கடவுளை சேவிக்க வேண்டுமென நினைப்பதில்லை. அவர் யெகோவாவை என்றென்றுமாக சேவிக்க தீர்மானமாயிருக்கிறார்! (மீகா 4:5) கடவுளுக்கு சேவை செய்வதற்காக ஏதேனும் தியாகங்கள் செய்திருந்தால் அதைக் குறித்து அவர் தன்னையே நொந்து கொள்வதில்லை. (எபிரெயர் 13:15, 16) கடவுள் மீதுள்ள அன்பு, வாழ்க்கையில் கடவுளுடைய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க அவரை தூண்டுகிறது.—மத்தேயு 6:33.
இன்று 60 லட்சத்திற்கும் மேலான மெய் வணக்கத்தார் யெகோவாவின் சேவைக்கு தங்களை ‘மனப்பூர்வமாய் அளிக்கிறார்கள்.’ (சங்கீதம் 110:3) நீங்கள் அவர்களில் ஒருவரா? இல்லையெனில், கடவுள் அளிப்பவற்றைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்: சத்தியத்தைப் பற்றிய தூய அறிவு; (யோவான் 17:3) பொய் மதப் போதனைகளின் பிடியிலிருந்து விடுதலை; (யோவான் 8:32) என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பு. (வெளிப்படுத்துதல் 21:3, 4) இவை எல்லாவற்றையும் கடவுளிடமிருந்து இலவசமாய் பெறுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவுவார்கள்.
[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]
செல்வந்தர்களாக வேண்டும் என்ற ஆவல் அல்ல, யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆவலே இன்று உண்மை கிறிஸ்தவர்களை முக்கியமாகத் தூண்டுகிறது
[பக்கம் 21-ன் படம்]
கடவுள் அளித்த மீட்கும்பொருள் என்ற இலவச பரிசு நற்செய்தியை இலவசமாய் அறிவிப்பதற்கு கிறிஸ்தவர்களைத் தூண்டுகிறது.