நீங்கள் எப்படிப்பட்ட பெயரெடுக்கிறீர்கள்?
இறந்தவர்கள் பற்றிய அறிவிப்புகளை செய்தித் தாளில் எப்பொழுதாவது புரட்டிப் பார்த்திருக்கிறீர்களா அல்லது இறந்தவருடைய வாழ்க்கையையும் சாதனைகளையும் பற்றிய அறிக்கையை பார்த்திருக்கிறீர்களா? ‘ஜனங்கள் என்னைப் பற்றி என்ன சொல்வார்கள்?’ என உங்களையே நீங்கள் கேட்டதுண்டா? இறந்த பிறகு தங்களைப் பற்றி எப்படிப்பட்ட நபராக நினைத்துப் பார்ப்பார்கள் என எத்தனை பேர் யோசிக்கிறார்கள்? ஆகவே, ஒளிவுமறைவற்ற இந்தக் கேள்விகளை சிந்தித்துப் பாருங்கள்: நீங்கள் நேற்றைக்கு இறந்திருந்தால் இன்றைக்கு உங்களைப் பற்றி ஜனங்கள் என்ன பேசிக்கொள்வார்கள்? நீங்கள் எப்படிப்பட்ட பெயரை சம்பாதித்திருக்கிறீர்கள்? உங்களுக்குத் தெரிந்தவர்களும் கடவுளும் உங்களை எப்படிப்பட்ட நபராக நினைத்துப் பார்க்க விரும்புகிறீர்கள்?
“விலையுயர்ந்த நறுமணத் தைலத்தைவிட நற்புகழே மேல். பிறந்த நாளைவிட இறக்கும் நாளே சிறந்தது” என பைபிளில் பிரசங்கி புத்தகத்தை எழுதிய ஞானி ஒருவர் கூறினார். (பிரசங்கி [சபை உரையாளர்] 7:1, பொது மொழிபெயர்ப்பு) ஏன் ஒருவருடைய பிறந்த நாளைவிட இறந்த நாள் சிறந்தது? ஏனென்றால் பிறக்கும்போது ஒருவர் எந்த பெயருடனும் பிறப்பது கிடையாது. வேறு வார்த்தையில் சொன்னால், ஒன்றுமே எழுதப்படாத ‘சிலேட்’டைப் போல அவர் இருக்கிறார். வாழ்க்கை எனும் பாதையில் அவர் பயணிக்கும் போதுதான் நற்பெயரையோ கெட்ட பெயரையோ சம்பாதிப்பார். இவ்வாறு, பல வருட காலமாக நற்பெயரை சம்பாதித்தவர்களுக்கு பிறந்த நாளைவிட இறந்த நாள் உண்மையில் சிறந்ததாகவே இருக்கிறது.
ஆகவே நமக்கு முன்னால் ஒரு தெரிவு இருக்கிறது. சொல்லப்போனால், ஒவ்வொரு நாளும் நமக்கு முன்னால் அநேக தெரிவுகள் இருக்கின்றன, நாம் எடுக்கும் இந்தத் தெரிவுகளே மரண நாளில் நாம் எப்படிப்பட்ட பெயரை விட்டுச் செல்கிறோம் என்பதை தீர்மானிக்கும், முக்கியமாக கடவுள் நம்மை எப்படிப்பட்டவராக நினைத்துப் பார்ப்பார் என்பதை தீர்மானிக்கும். எனவே, அதே எபிரெய ஞானி இவ்வாறு எழுதினார்: “நேர்மையாளரைப் பற்றிய நினைவு ஆசி விளைவிக்கும்; பொல்லாரின் பெயரோ அழிவுறும்.” (நீதிமொழிகள் 10:7, பொ.மொ.) கடவுளுடைய ஆசி பெற அவரால் நினைக்கப்படுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
நாம் ஞானமாய் நடந்தால், கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக வாழ்ந்து அவரைப் பிரியப்படுத்துவதே நமது குறிக்கோளாக இருக்கும். இது, கிறிஸ்து சொன்ன அடிப்படை நியமங்களைப் பின்பற்றுவதை அர்த்தப்படுத்துகிறது: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது.”—மத்தேயு 22:37-40.
கொடை வள்ளல்கள், மனிதாபிமானிகள், உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள், அல்லது வியாபாரத்தில், விஞ்ஞானத்தில், மருத்துவத்தில், வேறுபல துறைகளில் சாதனை படைத்தவர்கள் என சிலர் நினைவுகூரப்படுகிறார்கள். ஆனால் உங்களை மற்றவர்கள் எப்படி நினைவுகூர வேண்டுமென விரும்புவீர்கள்?
பிறர் நம்மை எடை போடுவது போல நம்மை நாமே எடை போடும் வரத்தை கடவுள் நமக்கு கொடுத்தால் நன்றாயிருக்கும் என ஸ்காட்லாந்து கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் (1759-96) தெரிவித்தார். உங்களை நீங்களே எதார்த்தமாய் எடைபோட்டு பார்த்து, மற்றவர்களோடும் கடவுளோடும் உங்களுக்கு நற்பெயர் இருப்பதாக உங்களால் சொல்ல முடியுமா? விளையாட்டு துறையிலோ வியாபார துறையிலோ படைக்கும் குறுகிய கால சாதனைகளைவிட மற்றவர்களுடன் நம்முடைய உறவுகளே நீண்ட கால நோக்கில் அதிக முக்கியத்துவமுடையவை. ஆகவே, நம்முடைய பேச்சிலும் பழக்கத்திலும் அங்க அசைவுகளிலும் மற்றவர்களை நடத்தும் விதம் அவர்கள் மீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது? நம்மை சிநேகப்பான்மையானவராக கருதுகிறார்களா அல்லது ஒதுங்கி வாழ்பவராக கருதுகிறார்களா? அன்பானவராகவா அல்லது மூர்க்கமானவராகவா? வளைந்து கொடுப்பவராகவா அல்லது கண்டிப்பானவராகவா? கனிவானவராகவும் மனிதநேயமிக்கவருமாகவா அல்லது அக்கறையற்றவரும் கண்டுகொள்ளாதவருமாகவா? கடுமையாக விமர்சிப்பவராகவா அல்லது ஆக்கபூர்வ அறிவுரை வழங்குபவராகவா? கடந்தகால மற்றும் நவீனகால உதாரணங்கள் சிலவற்றிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை நாம் இப்பொழுது ஆராயலாம்.
[பக்கம் 3-ன் படம்]
பிறர் நம்மை எடை போடுவது போல நம்மை நாமே எடை போடும் வரத்தை கடவுள் நமக்கு கொடுத்தால் நன்றாயிருக்கும் என ராபர்ட் பர்ன்ஸ் நினைத்தார்
[படத்திற்கான நன்றி]
From the book A History of England