தேவனை மகிமைப்படுத்துங்கள் மனிதனை அல்ல
“தேவனை மகிமைப்படுத்துங்கள்”—இதுவே யெகோவாவின் சாட்சிகளால் சமீப மாதங்களில் உலகெங்கிலும் நடத்தப்பட்ட மாவட்ட மாநாடுகளின் தலைப்பு. நீதியை நேசிக்கும் ஜனங்கள் இந்த மாநாடுகளில் கலந்துகொண்டு தேவனை மகிமைப்படுத்தும் விதத்தைக் கற்றுக்கொண்டார்கள். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகள் கல்வி புகட்டுபவையாக இருந்தன. அவற்றை நாம் இப்பொழுது மறுபார்வை செய்வோமாக.
பைபிள் அடிப்படையில் மூன்று நாட்கள் தொடர்ந்தாற்போல் நடைபெற்ற இம்மாநாடுகளில் பெரும்பாலோர் கலந்துகொண்டார்கள்; நான்கு நாட்கள் நடைபெற்ற விசேஷ சர்வதேச மாநாடுகளில் சிலர் கலந்துகொண்டார்கள். மொத்தத்தில், வந்திருந்த அனைவரும் 30-க்கும் அதிகமான வேதப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கு செவிசாய்த்தார்கள். ஆன்மீக காரியங்களுக்கு போற்றுதலை அதிகரிக்க உதவிய பேச்சுகள், விசுவாசத்தைப் பலப்படுத்திய அனுபவங்கள், பைபிள் நியமங்களின் நடைமுறைப் பயனை சிறப்பித்துக் காட்டிய நடிப்புகள், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சந்தித்த சவால்களை சித்தரித்துக் காட்டிய நாடகம் ஆகியவை இவற்றில் இடம் பெற்றன. நீங்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு குறிப்புகள் எடுத்திருந்தால் இந்தக் கட்டுரையை வாசிக்கையில் அவற்றை மறுபார்வை செய்து பார்க்கலாம் அல்லவா? இது, நீங்கள் அனுபவித்து மகிழ்ந்த ஆன்மீக விருந்தைப் பற்றிய பசுமையான நினைவுகளை உங்கள் மனத்திரையில் ஓடவிடுவதுடன் உங்களுக்கு அறிவுரையையும் அளிக்கும் என்பது நிச்சயம்.
முதலாம் நாள் பொருள்: ‘யெகோவாவே, மகிமையை . . . பெற்றுக்கொள்ளுகிறதற்கு நீர் பாத்திரராயிருக்கிறீர்’
ஆரம்ப பாட்டுக்கும் ஜெபத்துக்கும் பிறகு, “தேவனை மகிமைப்படுத்த கூடியிருத்தல்” என்ற தலைப்பில் முதல் பேச்சாளர் உரையாற்றினார். மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் அன்புடன் வரவேற்று, கூடிவந்திருப்பதன் முக்கிய காரணத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தினார். வெளிப்படுத்துதல் 4:11-ஐ மேற்கோள் காட்டி மாநாட்டின் பிரதான பொருளை அவர் வலியுறுத்தினார். பிறகு தேவனை மகிமைப்படுத்துவது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை விளக்கினார். தேவனை மகிமைப்படுத்துவது “வணக்கம்,” “துதி,” “நன்றி” செலுத்துவதை உட்படுத்துகிறது என சங்கீதப் புத்தகத்திலிருந்து எடுத்துக்காட்டினார்.—சங்கீதம் 95:6, NW; 100:4, 5, திருத்திய மொழிபெயர்ப்பு; 111:1, 2.
“தேவனை மகிமைப்படுத்துவோர் ஆசீர்வதிக்கப்படுவர்” என்பதே அடுத்த பேச்சின் தலைப்பு. ஆர்வத்தைத் தூண்டும் ஒரு குறிப்பை பேச்சாளர் சொன்னார். 60 லட்சத்துக்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் உலகெங்கும் 234 நாடுகளில் இருப்பதால், யெகோவாவை மகிமைப்படுத்துகிறவர்கள் மீது சூரியன் அஸ்தமிப்பதில்லை என்றே சொல்லலாம். (வெளிப்படுத்துதல் 7:15) விசேஷ விதத்தில் முழுநேர சேவை செய்யும் அநேக சகோதர சகோதரிகளிடம் எடுக்கப்பட்ட பேட்டி இந்தப் பேச்சின் அருமையான அம்சமாக திகழ்ந்தது. இது கூடிவந்திருந்தோரின் இருதயத்தை மகிழ்வித்தது.
“தேவனின் மகிமையை சிருஷ்டிப்பு அறிவிக்கிறது” என்பதே அடுத்த பேச்சு. வானங்கள் பேசாமல் மௌனமாக இருந்தாலும் தேவனுடைய மகத்துவத்தைத் துதிக்கின்றன, அவர் காட்டும் அன்பான அக்கறைக்கு நம் போற்றுதலை அதிகரிக்க உதவுகின்றன. இந்த விஷயம் விரிவாக விளக்கப்பட்டது.—ஏசாயா 40:26.
எதிர்ப்பு, துன்புறுத்துதல், உலக செல்வாக்குகள், பாவ சிந்தைகள் ஆகியவை மெய்க் கிறிஸ்தவர்களின் உத்தமத்திற்கு சவால்விடுகின்றன. எனவே, “உத்தம பாதையிலே நடவுங்கள்” என்ற பேச்சை கூடிவந்திருந்தோர் உன்னிப்பாக கவனிக்க வேண்டியிருந்தது. சங்கீதம் 26-ம் அதிகாரத்திலுள்ள வசனங்கள் ஒவ்வொன்றாக கலந்தாலோசிக்கப்பட்டன. ஒழுக்க ரீதியில் உறுதியான நிலைநிற்கை எடுத்த பள்ளி செல்லும் ஒரு சாட்சியும், ஒருகாலத்தில் கேள்விக்கிடமான பொழுதுபோக்குகளில் அதிகமாக ஈடுபட்டு இப்போது அப்பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கைகள் எடுத்திருக்கும் ஒருவரும் பேட்டி காணப்பட்டார்கள்.
“மகிமையான தீர்க்கதரிசன காட்சிகள் நம்மை உந்துவிக்கின்றன!” என்ற முக்கிய பேச்சோடு காலை நிகழ்ச்சி முடிவுற்றது. கடவுளுடைய மேசியானிய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு செயல்படுவதோடு சம்பந்தப்பட்ட அற்புதமான தீர்க்கதரிசன காட்சிகளால் தூண்டுவிக்கப்பட்ட தானியேல் தீர்க்கதரிசியும், அப்போஸ்தலர்களாகிய யோவான், பேதுரு ஆகியோரும் வைத்த முன்மாதிரியைப் பற்றி பேச்சாளர் குறிப்பிட்டார். முடிவின் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதற்குரிய தெளிவான அத்தாட்சியைக் காணத் தவறுகிறவர்களைப் பற்றி குறிப்பிடுகையில், “கிறிஸ்து ராஜ்ய வல்லமையில் வந்திருப்பது நிஜம் என்பதில் அவர்கள் தங்கள் கவனத்தை மறுபடியும் ஒருமுகப்படுத்தவும் மீண்டும் ஆவிக்குரிய பலத்தைப் பெறவும் வேண்டுமென நாங்கள் உள்ளப்பூர்வமாய் விரும்புகிறோம்” என பேச்சாளர் சொன்னார்.
“தாழ்மையுள்ளோருக்கு யெகோவாவின் மகிமை வெளிப்படுத்தப்படுகிறது” என்ற பேச்சுடன் பிற்பகல் நிகழ்ச்சி ஆரம்பமானது. யெகோவா இப்பிரபஞ்சத்திலேயே அதி உன்னதராக இருக்கிறபோதிலும், மனத்தாழ்மை காட்டுவதில் அவர் எப்படி முன்மாதிரி வைக்கிறார் என்பதை பேச்சாளர் விளக்கினார். (சங்கீதம் 18:35, NW) உண்மையில் மனத்தாழ்மையுடன் நடப்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார், ஆனால் தங்களுடைய சகாக்களிடம் அல்லது உயர்ந்தவர்களிடம் மட்டும் மனத்தாழ்மையைக் காட்டிவிட்டு தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களிடம் கடுமையாக நடந்துகொள்பவர்களை அவர் கண்டிக்கிறார்.—சங்கீதம் 138:6.
அடுத்ததாக, “ஆமோஸ் தீர்க்கதரிசனம்—நம் நாளுக்கான அதன் செய்தி” என்ற முக்கிய தலைப்பில் ஒரு தொடர்பேச்சு. பல்வேறு அம்சங்களை வலியுறுத்திக் காட்டிய இந்தப் பேச்சில் பைபிள் தீர்க்கதரிசனம் விளக்கப்பட்டது. ஆமோஸின் உதாரணத்தை சுட்டிக்காட்டி வரப்போகும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பைக் குறித்து மக்களுக்கு எச்சரிப்பு விடுக்கும் நம் பொறுப்பின் மீது முதல் பேச்சாளர் கவனத்தைத் திருப்பினார். “கடவுளுடைய வார்த்தையை தைரியத்தோடு பேசுங்கள்” என்பதே அவருடைய பேச்சின் தலைப்பு. இரண்டாவது பேச்சாளர், “பூமியில் நிலவும் துன்மார்க்கத்திற்கும் துயரத்திற்கும் யெகோவா என்றாவது முடிவுகட்டுவாரா?” என்ற கேள்வியை எழுப்பினார். “துன்மார்க்கருக்கு எதிரான தெய்வீக நியாயத்தீர்ப்பு” என்ற அவருடைய பேச்சு, கடவுளுடைய நியாயத்தீர்ப்பு எப்போதும் நியாயமானது, யாரும் தப்பிக்க முடியாது, அது கண்மூடித்தனமாக இருக்காது என்பதைக் காட்டியது. அந்தத் தொடர்பேச்சின் கடைசி பேச்சாளர், “யெகோவா இருதயத்தை ஆராய்கிறார்” என்ற பொருளின் மீது கவனம் செலுத்தினார். யெகோவாவைப் பிரியப்படுத்த ஆவலாயிருப்போர் ‘தீமையை வெறுத்து, நன்மையை விரும்புங்கள்’ என்ற ஆமோஸ் 5:15-லுள்ள வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
இருதயத்தை மகிழ்விக்கும் திராட்ச ரசம் போன்ற மதுபானங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படலாம். ஒருவர் குடித்து வெறிக்காவிட்டாலும் மதுபானத்தை மிதமிஞ்சி அருந்தினால் உடல் ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் ஆபத்துக்கள் வரலாம். “மதுபான துஷ்பிரயோகம் என்ற கண்ணியை தவிருங்கள்” என்ற பேச்சில் இவற்றை பேச்சாளர் பட்டியலிட்டார். பின்வரும் வழிநடத்தும் நியமம் ஒன்றை அவர் குறிப்பிட்டார்: எந்தளவு குடித்தால் போதை உண்டாகும் என்பது நபருக்கு நபர் வேறுபடுகிறது, ஆகவே உங்கள் “நடைமுறை ஞானத்தையும் யோசிக்கும் திறனையும்” கெடுக்கும் எந்த அளவு மதுவும் உங்களுக்கு மிக அதிகமே.—நீதிமொழிகள் 3:21, 22, NW.
நாம் கொடிய காலங்களில் வாழ்ந்து வருகிறோம், ஆகவே ‘இக்கட்டுக் காலங்களில் யெகோவாவே நமக்கு அடைக்கலம்’ என்ற அடுத்த பேச்சு பெரும் ஆறுதலளித்தது. ஜெபம், பரிசுத்த ஆவி, சக கிறிஸ்தவர்கள் மூலம் சமாளிப்பதற்கு உதவி பெறலாம்.
அந்த நாளின் இறுதிப் பேச்சு, அதாவது “‘நல்ல தேசம்’—பரதீஸிற்கு முன்நிழல்” என்ற பேச்சு, எல்லோருக்கும் ஆனந்தத்தையும் ஆச்சரியத்தையும் அளித்தது. ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற புதிய வெளியீடே இதற்கு காரணம்! இதில் அநேக பைபிள் வரைபடங்கள் அடங்கியுள்ளன.
இரண்டாம் நாள் பொருள்: ‘ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையை அறிவியுங்கள்’
தினவசனத்தை கலந்தாலோசித்த பிறகு, “யெகோவாவின் மகிமையை கண்ணாடி போல பிரதிபலியுங்கள்” என்ற தலைப்பில் மாநாட்டின் இரண்டாவது தொடர்பேச்சு கொடுக்கப்பட்டது. அதன் முதல் பகுதி, “எங்கும் நற்செய்தியைப் பரப்புதல்” என்ற தலைப்பை விவரித்தது; அதில் வெளி ஊழிய அனுபவங்களின் நிஜ சம்பவ நடிப்புகள் இடம் பெற்றன. இரண்டாவது பகுதியில், “மக்களுடைய பார்வையை மறைத்துள்ள திரையை நீக்குதல்” என்ற தலைப்பில் பேச்சாளர் பேசினார், மறுசந்திப்பு செய்வது போன்ற ஒரு நடிப்பும் அதில் இடம் பெற்றது. “நமது ஊழியத்தில் இன்னும் முழுமையாக ஈடுபடுதல்” என்பது தொடர்பேச்சின் கடைசி பகுதியின் தலைப்பாக இருந்தது; வெளி ஊழிய அனுபவங்களைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டும் பேட்டிகள் இப்பேச்சிற்கு உயிரூட்டின.
“காரணமின்றி பகைக்கப்படுதல்” என்பது நிகழ்ச்சியின் அடுத்த பேச்சின் தலைப்பாகும். அதில், எதிர்ப்பின் மத்தியிலும் கடவுளுடைய பலத்தால் உத்தமத்தைக் காத்துக்கொண்ட உண்மையுள்ளவர்களின் ஊக்குவிக்கும் பேட்டிகள் இடம் பெற்றன.
மாநாடுகளில் அதிக ஆவலுடன் எதிர்பார்க்கும் அம்சமான முழுக்காட்டுதல் பேச்சிற்குப் பிறகு தகுதியுள்ள நபர்கள் அனைவரும் தண்ணீரில் முழுக்காட்டுதல் பெற்றார்கள். ஒருவர் தன்னை முழுமையாக யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதை தண்ணீர் முழுக்காட்டுதல் அடையாளப்படுத்துகிறது. எனவே, “ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழ்வது தேவனை மகிமைப்படுத்துகிறது” என்ற தலைப்பு அந்தப் பேச்சிற்கு வெகு பொருத்தமானதே.
பிற்பகல் நிகழ்ச்சி, “மேன்மை பற்றிய கிறிஸ்துவின் சிந்தையை வளர்த்துக்கொள்ளுங்கள்” என்ற பேச்சுடன் ஆரம்பமானது; சுய பரிசோதனை செய்துபார்ப்பதற்கு இது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. கிறிஸ்துவின் மனத்தாழ்மையைப் பின்பற்றுவதால் மேன்மை கிடைக்கிறது என்ற ஆர்வத்தைத் தூண்டும் இந்தக் குறிப்பை பேச்சாளர் சொன்னார். எனவே தனிப்பட்ட இலக்குகளை எட்டுவதற்கு கிறிஸ்தவர் ஒருவர் பொறுப்பை நாடக்கூடாது. ‘பிறர் கண்ணில் படாவிட்டாலும், பயனளிக்கும் வேலைகளைச் செய்ய எனக்கு மனமிருக்கிறதா?’ என்ற கேள்வியை அவர் கேட்டுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் எப்போதாவது சோர்வாக உணர்ந்திருக்கிறீர்களா? அதற்கான பதில் தெரிந்த ஒன்றே. “சோர்வாக இருந்தாலும் சோர்ந்து விடுவதில்லை” என்ற பேச்சை அனைவரும் அனுபவித்து மகிழ்ந்தார்கள். யெகோவா “அவருடைய ஆவியினாலே [நாம்] . . . வல்லமையாய்ப் பலப்பட” செய்வார் என்பதை நீண்ட காலம் சத்தியத்திலிருப்பவர்களின் பேட்டிகள் காட்டின.—எபேசியர் 3:16.
தாராள குணம் இரத்தத்தில் ஊறிய குணமல்ல; எனவே நாம் அதை கற்றுக்கொள்ள வேண்டும். ‘தாராளமாய்க் கொடுப்போம், உதாரகுணமுள்ளவர்களாய் இருப்போம்’ என்ற பேச்சில் இந்த முக்கியக் குறிப்பு வலியுறுத்தப்பட்டது. “வயதான, வியாதிப்பட்ட, மனச்சோர்வுற்ற, அல்லது தனிமையில் வாடும் நம் சகோதர சகோதரிகளுடன் ஒரு நாளில் சில நிமிடங்களை செலவிட மனமுள்ளவர்களாய் இருக்கிறோமா?” என்ற சிந்தனையைத் தூண்டும் இக்கேள்வி கேட்கப்பட்டது.
“‘அந்நியருடைய சத்தத்திற்கு’ எச்சரிக்கையாக இருங்கள்” என்ற பேச்சு கூடிவந்திருந்தோரின் கவனத்தை ஈர்த்தது. அந்தப் பேச்சு, இயேசுவைப் பின்பற்றுகிறவர்களை ஆடுகளுக்கு ஒப்பிட்டு, அவர்கள், ‘நல்ல மேய்ப்பனின்’ சத்தத்துக்கு மட்டுமே செவிசாய்க்கிறார்கள், பிசாசு செல்வாக்கு செலுத்தும் அநேக மீடியாக்கள் மூலம் வரும் ‘அந்நியருடைய சத்தத்திற்கு’ அவர்கள் செவிசாய்ப்பதில்லை என குறிப்பிட்டது.—யோவான் 10:5, 14, 27.
கேட்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால் பாடகர் குழு ஒன்றிசைந்து பாட வேண்டும். அப்படியானால் தேவனை மகிமைப்படுத்துவதற்கு உலகம் முழுவதிலுமுள்ள உண்மை வணக்கத்தார் ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். எனவே, நாம் அனைவரும் ‘சுத்தமான பாஷையை’ பேசி ‘தோளோடு தோள்’ (NW) சேர்ந்து யெகோவாவை சேவிப்பதற்கு, “‘ஒரே வாயினால்’ தேவனை மகிமைப்படுத்துங்கள்” என்ற பேச்சு பயனுள்ள அறிவுரைகளைக் கொடுத்தது.—செப்பனியா 3:9.
பெற்றோர்கள், முக்கியமாக சிறு பிள்ளைகளை உடையவர்கள், அந்த நாளின் கடைசி பேச்சான “நம் பிள்ளைகள்—அருமையான செல்வங்கள்” என்ற பேச்சை முழுமையாக அனுபவித்து மகிழ்ந்தார்கள். கூட்டத்தாருக்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கும் விதத்தில் 256 பக்க புதிய புத்தகம் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தின் தலைப்பு பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்பதாகும்; தங்களுக்குக் கடவுள் தந்த பரிசான பிள்ளைகளுடன் ஆவிக்குரிய ரீதியில் பலனளிக்கும் விதத்தில் நேரத்தை செலவிட பெற்றோருக்கு இது உதவியாக இருக்கும்.
மூன்றாம் நாள் பொருள்: “எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்”
ஆவிக்குரிய எண்ணங்களுக்கு இடமளிக்கும் தினவசன நினைப்பூட்டுதல்களுடன் மாநாட்டின் கடைசி நாள் ஆரம்பமானது. இந்த நாளின் காலை நிகழ்ச்சி குடும்ப ஏற்பாட்டிற்கு கூடுதல் கவனம் செலுத்தியது. “பெற்றோர்களே, குடும்பத்தைப் பலப்படுத்துங்கள்” என்ற முதல் பேச்சு கூட்டத்தாரின் மனதைத் தயார்படுத்தியது. தங்கள் குடும்பத்துக்காக பொருள் சம்பந்தமானவற்றை அளிக்கும் பெற்றோரின் பொறுப்புகளைக் குறித்து சிந்தித்த பின்னர் பிள்ளைகளுடைய ஆவிக்குரிய தேவைகளுக்குக் கவனம் செலுத்துவதே பெற்றோரின் முக்கியப் பொறுப்பு என பேச்சாளர் குறிப்பிட்டார்.
அடுத்த பேச்சாளர் “இளைஞர்கள் யெகோவாவைத் துதிக்கும் வழிகள்” என்ற தலைப்பை பிள்ளைகளுக்காக கலந்தாலோசித்தார். இளைஞர்கள் எண்ணற்றோராய் இருப்பதாலும் அவர்களுடைய இளமை துடிப்பு புத்துணர்ச்சி அளிப்பதாலும் அவர்கள் “பனிக்கு” ஒப்பாய் இருப்பதாக அவர் சொன்னார். அவர்களுடன் சேர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்வதில் பெரியவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். (சங்கீதம் 110:3) முன்மாதிரியாக திகழும் இளைஞர்களின் மனங்கவரும் பேட்டிகளும் இந்தப் பேச்சில் இடம்பெற்றிருந்தன.
பூர்வ கால ஆடை அலங்காரத்துடனான பைபிள் நாடகங்கள் எப்போதும் மாவட்ட மாநாடுகளில் ஆர்வத்தைத் தூண்டும் அம்சமாக இருந்திருக்கின்றன; இந்த மாநாடும் அதற்கு விதிவிலக்கல்ல. “எதிர்ப்பின் மத்தியிலும் தைரியமாக சாட்சி கொடுங்கள்” என்ற நாடகம் இயேசுவின் முதல் நூற்றாண்டு சாட்சிகளை சித்தரித்துக் காட்டியது. இது ஏதோ பொழுதுபோக்கு அம்சமாக இல்லாமல், போதனை அளிப்பதாகவே இருந்தது. “நற்செய்தியை அறிவிப்பதை ‘விட்டுவிடாதீர்கள்’” என்ற தலைப்பில் நாடகத்திற்கு பின் கொடுக்கப்பட்ட பேச்சு, நாடகத்தின் முக்கிய குறிப்புகளை வலியுறுத்திக் காட்டியது.
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின் சிறப்பு அம்சத்தை சபையார் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தார்கள்; அதுவே, “இன்று தேவனை மகிமைப்படுத்துகிறவர்கள் யார்?” என்ற பொதுப் பேச்சு. பொதுவாக, அறிவியலும் மத அமைப்புகளும் தேவனை மகிமைப்படுத்தவில்லை என்பதற்கான ஆதாரத்தை பேச்சாளர் அளித்தார். யெகோவாவின் பெயர் தரித்த ஜனத்தார் மட்டுமே அதாவது அவருடைய சத்தியத்தை பிரசங்கிக்கிற, போதிக்கிற ஜனத்தார் மட்டுமே உண்மையில் இன்று அவருடைய பெயரை மகிமைப்படுத்துகிறார்கள்.
அந்தப் பொதுப் பேச்சிற்குப் பிறகு, அந்த வாரத்திற்குரிய பாடத்தின் காவற்கோபுர சுருக்கம் இடம் பெற்றது. பின்னர், “‘மிகுந்த கனிகளைக் கொடுத்து’ யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்” என்ற முடிவான பேச்சு இருந்தது. கூடிவந்திருக்கும் அனைவரும் பின்பற்றுவதற்கு பத்து குறிப்புகள் அடங்கிய தீர்மானத்தை பேச்சாளர் வாசித்தார். இது படைப்பாளராகிய யெகோவாவுக்குப் பல்வேறு வழிகளில் மகிமையை செலுத்துவதை மையமாக கொண்டிருந்தது. “ஆம்” என்ற ஏககுரல் பூமியின் ஒரு முனை தொடங்கி மறுமுனை மட்டும் அனைத்து மாநாடுகளிலும் ஒலித்தது.
“தேவனை மகிமைப்படுத்துங்கள்” என்ற தலைப்பு கூடிவந்திருந்த ஒவ்வொருவரின் காதுகளில் ரீங்காரமிட, மாநாடு முடிவடைந்தது. யெகோவாவுடைய ஆவி மற்றும் அவருடைய காணக்கூடிய அமைப்பின் உதவியோடு மனிதனை அல்ல ஆனால் தேவனையே மகிமைப்படுத்த எப்போதும் நாடுவோமாக.
[பக்கம் 23-ன் பெட்டி/படங்கள்]
சர்வதேச மாநாடுகள்
ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் நான்கு நாள் சர்வதேச மாநாடுகள் நடைபெற்றன. இந்த மாநாடுகளில் கலந்துகொள்ள உலகெங்குமுள்ள குறிப்பிட்ட சில சாட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்றவர்களுக்கும் அழைப்பு விடுத்தவர்களுக்கும் ‘பரஸ்பர உற்சாகம்’ கிடைத்தது. (ரோமர் 1:12, NW) இதில், பழைய நட்புகள் புதுப்பிக்கப்பட்டன, புதிய நட்புகள் மலர்ந்தன. “பிற நாடுகளிலிருந்து வரும் அறிக்கைகள்” என்ற பகுதி சர்வதேச மாநாடுகளின் விசேஷ அம்சமாக இருந்தது.
[பக்கம் 25-ன் பெட்டி/படங்கள்]
தேவனை மகிமைப்படுத்தும் புதிய வெளியீடுகள்
“தேவனை மகிமைப்படுத்துங்கள்” மாவட்ட மாநாடுகளில் இரண்டு புதிய பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற 36 பக்க பைபிள் அட்லஸ், நீடித்து உழைக்கும் அட்டையுடன் வரைபடங்களையும் பைபிள் சம்பந்தப்பட்ட இடங்களின் புகைப்படங்களையும் கொண்டது. பக்கத்துக்குப் பக்கம் வண்ணமும், அசீரியா, பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரீஸ், ரோம் ஆகிய வல்லரசுகளின் வரைபடங்களும் உள்ளன. இயேசுவின் ஊழியத்தையும் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியையும் விளக்கும் தனித்தனி வரைபடங்களும் உள்ளன.
பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகம் 256 பக்கங்களும் சுமார் 230 படங்களும் கொண்டது. படங்களை வெறுமனே பார்வையிடுவதன் மூலமும் புத்தகத்திலுள்ள சிந்தனையைத் தூண்டும் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலமும் அடிக்கடி பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிக்கலாம். பிள்ளைகளின் ஒழுக்கத்தை சீர்குலைப்பதற்காக அவர்கள் மீது சாத்தான் நடத்தும் தாக்குதலை முறியடிப்பதற்கு உதவும் விதத்தில் இந்தப் புதிய பிரசுரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
[பக்கம் 23-ன் படம்]
விசுவாசத்தைப் பலப்படுத்தும் அனுபவங்களை மிஷனரிகள் சொன்னார்கள்
[பக்கம் 24-ன் படங்கள்]
“தேவனை மகிமைப்படுத்துங்கள்” மாவட்ட மாநாடுகளில் முழுக்காட்டுதல் முக்கிய அம்சமாக இருந்தது
[பக்கம் 24-ன் படங்கள்]
சிறியோரும் பெரியோரும் கண்டு மகிழும் பைபிள் நாடகங்கள்