உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 10/1 பக். 8
  • அலெகான்டராவின் கடிதம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அலெகான்டராவின் கடிதம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • இதே தகவல்
  • “ஆவியிலே அனலாக” மெக்ஸிக்கோவில்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • ‘நான் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • “குழந்தைகளுடைய வாயினாலும்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 10/1 பக். 8

ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை

அலெகான்டராவின் கடிதம்

கடிதம் எழுதுதல் சாட்சி கொடுப்பதற்கு பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் அருமையான முறையாகும். இப்படி எழுதுவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என சிலசமயங்களில் தோன்றலாம்; ஆனால் இந்த முறையை விடாமல் பயன்படுத்தியவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. “காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே” என்ற பைபிளின் ஞானமான அறிவுரையை மனதில் வைத்து அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள்.​—⁠பிரசங்கி 11:6.

அலெகான்டரா என்ற ஓர் இளம் சாட்சி, மெக்சிகோ நாட்டு யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சுமார் பத்து வருடங்கள் சேவை செய்தார். புற்று நோய் பாதித்திருந்ததால் ‘கீமோதெரபி’ சிகிச்சையை பெற்றுக் கொண்டிருந்தார். அவருடைய நிலைமை நாளுக்குநாள் மோசமானது; தன்னுடைய தினசரி வேலைகளைக்கூட செய்வதற்கு சக்தி இல்லாமற்போனது. ஆனாலும் ஊழியத்தை விட்டுவிட அவருக்கு மனதில்லை. எனவே கடிதங்கள் எழுத தீர்மானித்தார். இலவசமாக வீடுகளில் நடத்தப்படும் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி குறிப்பிட்டு எழுதியதோடுகூட தனது அம்மாவின் டெலிஃபோன் நம்பரையும் சேர்த்து எழுதினார். பிறகு அக்கடிதங்களை தன் அம்மாவிடம் கொடுத்து, வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது பூட்டிய வீடுகளில் அவற்றை போட்டுவிட்டு வரும்படி கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில் டியோஹானீ என்ற இளம் பெண் ஒரு வீட்டில் வேலை செய்ய குவாதமாலாவிலிருந்து மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கண்கூனுக்கு வந்திருந்தாள். அங்கிருந்தபோது அவள் யெகோவாவின் சாட்சிகளை சந்திக்க நேரிட்டது. பைபிளை பற்றி அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதில் மிகவும் சந்தோஷப்பட்டாள். பிறகு அவளுடைய முதலாளி வீட்டார் மெக்சிகோ நகரத்திற்குப் போக முடிவுசெய்தார்கள். அவளையும் தங்களோடு வரும்படி அழைத்தார்கள். ஆனால் அங்கே போனால் யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள முடியாமல் போய்விடுமே என்று எண்ணி டியோஹானீ அவர்களுடன் போக தயங்கினாள்.

“கவலைப்படாதே, யெகோவாவின் சாட்சிகள் எல்லா இடத்திலேயும் இருக்கிறார்கள். நாம் அங்கு போனதும் அவர்களைத் தேடி கண்டுபிடிக்கலாம்” என்று அவளுடைய முதலாளி வீட்டார் உறுதியளித்தார்கள். அவர்கள் கொடுத்த வாக்கினால் அவளும் அவர்களுடன் போக சம்மதித்தாள். மெக்சிகோ நகரத்துக்கு போய் சேர்ந்ததும் டியோஹானீயின் முதலாளி வீட்டார் யெகோவாவின் சாட்சிகளை தேடினார்கள். மெக்சிகோவில் 41,000-⁠க்கும் அதிகமான சாட்சிகளும் 730 சபைகளும் இருந்தும் ஏனோ அவர்களால் சாட்சிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

சாட்சிகளுடன் பைபிள் படிப்பை மறுபடியும் தொடர முடியாமல் போனதால் கொஞ்சம் நாட்களிலேயே டியோஹானீ மனம் தளர்ந்து போனாள். ஒரு நாள் அவளுடைய முதலாளியின் மனைவி அவளிடம் வந்து, “உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி! உன்னுடைய கடவுள் உன் ஜெபத்தை கேட்டுவிட்டார்” என்று சொன்னாள். அவளிடம் ஒரு கடிதத்தை நீட்டி, “சாட்சிகள் இந்தக் கடிதத்தை உனக்காக போட்டிருக்கிறார்கள்” என்றாள். அது அலெகான்டராவின் கடிதம்.

டியோஹானீ அலெகான்டராவின் அம்மாவையும் தங்கை ப்லாங்காவையும் சந்தித்து அவர்களோடு பைபிள் படிக்க சம்மதித்தாள். சில வாரங்களுக்குப் பிறகு அவள் அலெகான்டராவை பார்க்க சென்றபோது இரண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்து பரவசமடைந்தார்கள். ஆவிக்குரிய விதத்தில் முன்னேற்றம் அடைய தொடர்ந்து பைபிளை படிக்கும்படி டியோஹானீயை அலெகான்டரா உற்சாகப்படுத்தினார்.

சில மாதங்களுக்குப் பிறகு, ஜூலை 2003-⁠ல் அலெகான்டரா இறந்துவிட்டார். தைரியத்திற்கும் விசுவாசத்திற்கும் சிறந்த முன்மாதிரியை அவர் விட்டுச் சென்றார். அவருடைய சவ அடக்கத்தின்போது டியோஹானீயை சந்தித்தவர்கள், அவள் சொன்னதைக் கேட்டு மனம் உருகிப்போனார்கள். அவள் சொன்னதாவது: “அலெகான்டராவும் அவருடைய குடும்பத்தாரும் எனக்கு நல்ல முன்மாதிரியாக இருந்தார்கள். யெகோவாவுக்கு சேவை செய்யவும் சீக்கிரத்தில் முழுக்காட்டுதல் பெறவும் நான் தீர்மானித்திருக்கிறேன். அலெகான்டராவை பரதீஸில் எப்பொழுது பார்ப்பேன் என ஏங்குகிறேன்!”

ஆம், கடிதம் எழுதுவது சின்ன விஷயமாக தோன்றலாம். ஆனால் அது எவ்வளவு அருமையான பலன்களை, நிரந்தர பலன்களைத் தரும் என்பதை பாருங்கள்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்