ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
“ஆவியிலே அனலாக” மெக்ஸிக்கோவில்
“முழு தேசமும் அனலாகவும், சுறுசுறுப்போடு துடித்துக் கொண்டிருப்பது போலவும் இருக்கிறது.” இவ்வாறு எழுதுகிறது மெக்ஸிக்கோவிலுள்ள காவற்கோபுரம் சங்கத்தின் கிளைக்காரியாலயம். இந்தக் கூற்று எத்தனை உண்மையாக இருக்கிறது! அந்தத் தேசத்தின் விறுவிறுப்பான, தொடர்ச்சியான 70 மாதாந்தர உச்சநிலைகளும் ஆகஸ்ட் மாத உச்சநிலையாகிய 2,77,436 பிரஸ்தாபிகளும் சுறுசுறுப்பான செயல்நடவடிக்கைகளுக்கு அத்தாட்சியாக இருக்கிறார்கள். மேலுமாக, 4,00,000-க்கும் மேல் பைபிள் படிப்புகள் அறிக்கைச் செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ஞாபகார்த்த தினத்தில் ஆஜர் எண்ணிக்கை 10,46,291 எட்டியது. என்னே சிறந்த ஓர் அஸ்திவாரம்!
மெக்ஸிக்கோவில் யெகோவாவின் சாட்சிகளுடைய அந்தஸ்தில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றம் 1989-ன் ஒரு சிறப்பு அம்சமாக இருந்தது. இதன் விளைவாக முதல் முறையாக வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையில் பைபிளைப் பயன்படுத்தவும் கூட்டங்களை ஜெபத்தோடு ஆரம்பிக்கவும் முடிகிறது. இதற்கு உடனடியாக பலனிருந்தது. இரண்டு மாதங்களில், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 17,000-யும் தாண்டியது.
இதைக் குறித்த சகோதரர்களின் சந்தோஷம், அவர்களுடைய கருத்துக்களில் காணப்படுகிறது. ஒருவர் எழுதினார்: “கடிதம் சபைக்கு வாசிக்கப்பட்டபோது, சபையார் இடையில் குறுக்கிட்டு இரண்டு முறை இயல்பாக கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள். அது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது!” மற்றொருவர் சொன்னார்: “ஆனந்தக் கண்ணீரை எங்களால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. இதன் பலன் காலந்தவறாமல் நேரத்துக்கு வருவதில் காணப்பட்டு வருகிறது. ஆரம்ப ஜெபத்துக்கு அனைவரும் இருக்க விரும்புகிறார்கள்.”
மற்றொரு சாட்சி சொல்வதாவது: “எங்கள் பிராந்தியத்தில், கத்தோலிக்க சர்ச்சின் பைபிள் படிப்பு திட்டத்தில் சுறுசுறுப்பாயிருக்கும் ஒரு பெண் இவ்விதமாகச் சொன்னாள்: ‘முன்னர் [சாட்சிகள்] வெறுமென தங்களுடைய குறிப்புகளோடும் தங்கள் பத்திரிகைகளோடும் எங்களை வாயடைத்து நிற்கச் செய்தார்களேயானால், இப்பொழுதோ கதவண்டையில் அவர்கள் பைபிளைத் திறந்து பேச, நாங்கள் செயலிழந்து நிற்கிறோம்!’”
மெக்ஸிக்கோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள், பைபிளைக் கொண்டு சந்தர்ப்ப சாட்சிக் கொடுத்தலையும்கூட வலியுறுத்துகிறார்கள். ஒரு சகோதரி சந்தித்தப் பெண், அவளிடம், கருச்சிதைவைப் பற்றி அவள் என்ன நினைக்கிறாள் என்று கேட்டாள். சாட்சி சொன்னதாவது: “நான் என்ன நினைக்கிறேன் என்பது அல்ல, பைபிள் என்ன சொல்கிறது என்பதே முக்கியமாக இருக்கிறது.” பல வேதவசனங்களை வாசித்தப் பிறகு, சகோதரி இவ்விதமாக விளக்கினாள்: “சிருஷ்டிகருக்கு உயிர் அதிமுக்கியமானது, இன்னும் பிறவாதவர்களுடைய உயிரும்கூட.”
அந்தப் பெண், தான் முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், மருத்துவ பரிசோதனை குழந்தை குறையுள்ளதாக இருக்கும் என்பதாக தெரிவித்ததாகவும் சொன்னாள். அவளுடைய மருத்துவர் அவள் கருச்சிதைவைச் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார். அவளுடைய கணவனும் இதற்கு ஒப்புக் கொண்டான். ஆனால் அவள்தானே நிச்சயமற்றவளாக இருந்தாள். பிரஸ்தாபி மேலுமாக பைபிளிலிருந்து அவளோடு பேசிவிட்டு, தன் பெயரைக் கொடுத்தாள். பின்னர் அவர்கள் பிரிந்து சென்றார்கள்.
ஐந்தாண்டுகளுக்குப் பின்பு, ஒரு மாவட்ட மாநாட்டில், நான்கு வயது குழந்தையோடு ஒரு தம்பதி, சகோதரியையும் அவளுடைய கணவனையும் பார்க்க விரும்பினார்கள். அதேப் பெண்! என்ன நடந்திருக்கிறது? சாட்சியோடு பேசிய பின்பு, அந்தப் பெண் தன் குழந்தையைக் கொண்டிருக்க தீர்மானித்தாள். அவளுடைய மருத்துவர் மறுபடியுமாக அவளை பார்க்க மறுத்துவிட்டார். குழந்தை அங்கயீனமாகப் பிறக்குமானால் அவளைவிட்டுப் போய்விடுவதாகவும்கூட கணவன் மிரட்டினான். பேறுகால சமயம் வந்தபோது, அவள் உதவிக்காக, அவளால் பார்க்க முடிந்த முதல் மருத்துவரிடம் சென்றாள்.
குழந்தை பிறந்தவுடனேயே மருத்துவர் சொன்னார்: “உங்களுக்கு என் பாராட்டுக்கள் அம்மா! அழகான சிறிய பெண் குழந்தை உங்களுக்குப் பிறந்திருக்கிறாள்!” தன்னுடைய செவிகளை நம்பாமல், குழந்தையைக் கவனமாகப் பரிசோதித்துப் பார்க்கும்படியாக அவள் அவரிடம் கேட்டாள். பின்னர் அவரிடம் தன் கதையைச் சொன்னாள். மருத்துவரால் “இது ஓர் அற்புதம்” என்று மாத்திரமே சொல்ல முடிந்தது. உயிரின் புனிதத்தன்மையைக் குறித்ததில் யெகோவாவின் நோக்குநிலையை மதிப்பதற்கு தனக்கு தைரியமிருந்தது குறித்து அந்தப் பெண் மகிழ்ச்சியடைந்து தன் அழகான ஆரோக்கியமான குழந்தைக்கு அந்தச் சகோதரியின் பெயரை வைத்தாள். அவள் போதிய அளவு பலப்பட்டவுடன், சாட்சிகளைத் தேடி அவர்களோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். ஓராண்டுக்குள்ளாகவே அவளும் அவளுடைய கணவரும் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.
அப்போஸ்தலனாகியப் பவுல் துரிதப்படுத்தியது: “ஆவியிலே அனலாயிருங்கள். யெகோவாவுக்கு ஊழியஞ்செய்யுங்கள்.” (ரோமர் 12:11, NW) மெக்ஸிக்கோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் எல்லா இடங்களிலுமுள்ள மெய்க் கிறிஸ்தவர்களைப் போலவே இந்த அறிவுரைக்கு இருதயப்பூர்வமாக செவி கொடுக்கிறார்கள். இதன் காரணமாகவே, முழு தேசமும் அனலாயும் ஆவிக்குரிய நடவடிக்கையில் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. யெகோவா தம்முடைய உண்மையுள்ளவர்களை எத்தனை நிறைவாக ஆசீர்வதிக்கிறார்! (w90 1/1)