உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 11/1 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • இதே தகவல்
  • ‘உலக சிந்தையை’ உதறித்தள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • மதுபானங்களைக் குடிப்பதே தவறா?
    விழித்தெழு!—2006
  • குண்டுக் குழந்தைகள் என்ன தீர்வு?
    விழித்தெழு!—2009
  • உடல் பருமன் உண்மையிலேயே ஒரு பிரச்சினையா?
    விழித்தெழு!—2004
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 11/1 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

பெருந்தீனியை கிறிஸ்தவ சபை எவ்வாறு கருதுகிறது?

பெருந்தீனி, குடிவெறி ஆகிய இரண்டையுமே கடவுளுடைய வார்த்தை கண்டனம் செய்கிறது. இரண்டுமே கடவுளுடைய ஊழியர்களுக்கு ஏற்கத்தகாதது என அது குறிப்பிடுகிறது. அதனால்தான் கிறிஸ்தவ சபை, மனந்திரும்ப விரும்பாத பெருந்தீனிக்காரனை பழக்கமான குடிவெறியனுக்கு சமமாய் கருதுகிறது. குடிவெறியரும்சரி பெருந்தீனிக்காரரும்சரி, கிறிஸ்தவ சபையின் பாகமாக இருக்க முடியாது.

நீதிமொழிகள் 23:20, 21 இவ்வாறு சொல்கிறது: “மதுபானப் பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக் காரரையும் சேராதே. குடியனும் போஜனப் பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.” உபாகமம் 21:20-⁠ன்படி, ‘அடங்காத துஷ்டனாயிருக்கும்’ ஒருவனுக்கு நியாயப்பிரமாணம் மரண தண்டனை விதிக்கிறது. இந்த வசனத்தின்படி, மனந்திரும்பாத, கலகக்காரனாக இருந்தவனுடைய இரு குணங்கள் ‘பெருந்தீனி’ மற்றும் ‘குடிவெறி.’ ஆம், பூர்வ இஸ்ரவேலில், பெருந்தீனி கடவுளுடைய ஊழியர்களுக்கு பொருந்தாத குணமாக கருதப்பட்டது என்பது திட்டவட்டமாக தெரிகிறது.

பெருந்தீனி என்றால் என்ன? கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் இதைப் பற்றி என்ன சொல்கிறது? பழக்கமாக பேராசையோடு புசித்துக்கொண்டும் குடித்துக்கொண்டும் இருப்பவர்களே பெருந்தீனிக்காரர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆகவே, பெருந்தீனியும் ஒரு வகை பேராசைதான்; மேலும், ‘பேராசைக்காரர்கள்’ கடவுளுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 6:9, 10; பிலிப்பியர் 3:18, 19; 1 பேதுரு 4:3) கூடுதலாக, ‘மாம்சத்தின் கிரியைகளைப்’ பற்றி கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் எச்சரிக்கையில், “வெறிகள், களியாட்டுகள் முதலானவை” பற்றியும் குறிப்பிட்டார். (கலாத்தியர் 5:19-21) பெருந்தீனிக்காரராய் இருப்பவர்கள் வழக்கமாக குடிவெறியராயும் களியாட்டம் செய்பவர்களுமாய்தான் இருப்பார்கள். அதோடு, “முதலானவை” என்று பவுல் சொன்னதில் பெருந்தீனியும் உட்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஒரு கிறிஸ்தவர் யாவரறிந்த பெருந்தீனிக்காரராக இருக்கும்போதும், பேராசைபிடித்த அப்பழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல் பிடிவாதமாக இருக்கும்போதும், மற்ற ‘மாம்சத்தின் கிரியைகளில்’ ஈடுபடுகிறவர்களை சபை நீக்கம் செய்வது போலவே இவரையும் சபை நீக்கம் செய்ய வேண்டும்.​—⁠1 கொரிந்தியர் 5:11, 13.a

கடவுளுடைய வார்த்தை குடிவெறியரை எப்படி கருதுகிறதோ அதே விதமாகவே பெருந்தீனிக்காரரையும் கருதுகிறது. ஆனால் குடிவெறியரை சுலபமாக கண்டுபிடிக்க முடிகிறது போல் பெருந்தீனிக்காரரை சுலபமாக கண்டுபிடிக்க முடிவதில்லை. ஒருவர் குடித்து வெறித்திருக்கிறாரா என்பதை நாம் பார்த்தவுடனேயே கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் ஒருவர் மனந்திரும்ப விரும்பாத பெருந்தீனிக்காரராக எப்போது மாறுகிறார் என்பதை தீர்மானிப்பது மிக கடினம்; ஏனெனில் வெறுமனே வெளித்தோற்றத்தைப் பார்த்து இதை கண்டுபிடிக்க முடியாது. இதனால், சபையிலுள்ள மூப்பர்கள் இப்பிரச்சினையை கையாளும்போது மிக கவனமாகவும் விவேகமாகவும் நடந்துகொள்ள வேண்டும்.

உதாரணமாக, உடல் பருமன் பெருந்தீனியின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால் எப்போதும் அதுவே காரணமாக இருக்க முடியாது. ஒருவரின் வியாதி அல்லது பரம்பரைகூட உடல் பருமனுக்கு காரணமாக இருக்கலாம். அதோடு உடல் பருமன் என்பது ஒரு சரீர நிலை, பெருந்தீனி என்பதோ ஒரு மன நிலை என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும். உடல் பருமன் என்பது “மட்டுக்குமீறிய கொழுப்பு,” பெருந்தீனி என்பதோ பேராசையோடு அல்லது கட்டுப்பாடில்லாமல் உண்பது. எனவே பெருந்தீனிக்காரரின் அறிகுறி அவருடைய உருவம் கிடையாது, மாறாக, உணவு மீது அவர் கொண்டுள்ள மனப்பான்மையே. பார்ப்பதற்கு சராசரி உருவமுடையவராகவோ ஒல்லியாகவோ காணப்படும் நபரும்கூட பெருந்தீனிக்காரராக இருக்கலாம். அதோடு, சராசரி எடை அல்லது உருவம் என்பதும் இடத்திற்கு இடம் பெருமளவு வேறுபடுகிறது.

பெருந்தீனிக்காரரின் அறிகுறிகள் என்னென்ன? பெருந்தீனிக்காரர் எப்போதுமே கட்டுப்பாடில்லாமல் சாப்பிடுவார்கள்; தொண்டைவரை சாப்பிட்டுவிட்டு அஜீரணத்தால் கஷ்டப்படுவார்கள் அல்லது நோய்வாய்ப்படுவார்கள். யெகோவாவுக்கும் அவருடைய சாட்சிகளுக்கும் என்ன அவதூறு வந்தாலும் அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படுவதில்லை என்பதை அவர்களுடைய சுயக் கட்டுப்பாடில்லாத நடத்தை சுட்டிக்காட்டுகிறது. (1 கொரிந்தியர் 10:31) மறுபட்சத்தில், சில நேரங்களில் மட்டுமே அளவுக்கதிகமாக சாப்பிடுபவரை உடனடியாக “பேராசைக்காரர்” என்று சொல்லிவிட முடியாது. (எபேசியர் 5:5, NW) எனினும், கலாத்தியர் 6:1-⁠ன்படி, அப்படிப்பட்ட நபருக்கு உதவி தேவைப்படலாம். “சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப் பண்ணுங்கள்” என்று பவுல் சொல்கிறார்.

பெருந்தீனியை எச்சரித்து பைபிள் கொடுக்கும் ஆலோசனை இன்று ஏன் அவ்வளவு முக்கியமாக இருக்கிறது? ஏனென்றால் இயேசு குறிப்பாக நம்முடைய நாளைக் குறித்து இவ்வாறு எச்சரித்தார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். . . . அது ஒரு கண்ணியைப் போல வரும்.” (லூக்கா 21:34, 35) ஆன்மீக சீர்குலைவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு எந்நேரமும் சாப்பாட்டிலேயே மூழ்கி விடாமல் இருப்பது அவசியம்.

மிதமாக இருப்பது ஒரு கிறிஸ்தவ நற்பண்பு. (1 தீமோத்தேயு 3:2, 11, NW) எனவே, பைபிளின் ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்து, குடிப்பதிலும் புசிப்பதிலும் மிதமாக இருக்க அரும்பாடு படுகிற யாவருக்கும் யெகோவா நிச்சயமாக உதவுவார்.​—⁠எபிரெயர் 4:⁠16.

[அடிக்குறிப்பு]

a மே 1, 1986 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுர இதழில் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியைப் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்