உண்மையான பாதுகாப்பு என்றாவது கிடைக்குமா?
பாசத்தைப் பொழியும் அம்மா அப்பாவுடன் பிள்ளைகள் கொஞ்சிக் குலவும் காட்சியை யார்தான் ரசிக்க மாட்டார்கள்? இப்படிப்பட்ட அன்பான சூழலில் வளரும் பிள்ளைகள் எந்த கவலையுமின்றி பாதுகாப்பாக உணருகிறார்கள். ஆனாலும் அநேக பிள்ளைகளுக்கு சந்தோஷமான வாழ்க்கை என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது. சில பிள்ளைகள் தூங்கக்கூட இடமில்லாமல் ஒவ்வொரு நாளும் தவிக்கிறார்கள்; இப்படி வீடுவாசலின்றி பாதுகாப்பற்ற சூழலில் வாழும் பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் நம்பிக்கையே கிடையாதா?
எதிர்காலம் இருண்டதாக தோன்றினாலும் கடவுளுடைய வார்த்தை நம்பிக்கை அளிக்கிறது. எல்லாரும் பாதுகாப்பாக வாழும் நாளைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி முன்னரே அறிவித்திருக்கிறார்: ‘வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாய் இருப்பதில்லை.’—ஏசாயா 65:21, 22.
ஆனால் இந்த நம்பிக்கைக்கு வலுவான ஆதாரம் இருக்கிறதா? “நம்பிக்கை” என்ற வார்த்தை எப்போதுமே நிச்சயத்தைக் குறிப்பதில்லை என்பதை நினைவில் வையுங்கள். உதாரணமாக, “நம்பிக்கையே கடைசியாக அழிகிறது” என பிரேசில் நாட்டு மக்கள் அடிக்கடி சொல்கிறார்கள். நம்பிக்கைக்கு வலுவான காரணம் இல்லாத போதிலும் மக்கள் தொடர்ந்து நம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்பதே இதன் அர்த்தம். இருப்பினும் ஜீவனுள்ள தேவன் நமக்கு அளிக்கும் நம்பிக்கை வித்தியாசமானது. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “அவர் [கடவுள்] மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்.” (ரோமர் [உரோமையர்] 10:11, பொது மொழிபெயர்ப்பு) இதுவரை நிறைவேறியுள்ள பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பார்க்கும்போது யெகோவா தேவனுடைய மற்றெல்லா வாக்குறுதிகளும்கூட நிறைவேறும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. அவ்வாறு எதிர்காலத்தில் அந்த வாக்குறுதிகள் நிஜமாகும்போது பிள்ளைகள் தெருக்களில் வாழ்வதைப் பார்க்க மாட்டோம்.
நம்பிக்கை இழந்து தவிப்பவர்கள் பைபிள் தரும் நடைமுறையான ஆலோசனையை பயன்படுத்தினால் இப்பொழுதும்கூட தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தி உண்மையான பாதுகாப்பை கண்டடைய முடியும். எப்படி? இதற்கான பதிலைக் கண்டுபிடிக்க யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ ஆவலோடு இருக்கிறார்கள்.