வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தம்மைத் தொடுவதற்கு மகதலேனா மரியாளை அனுமதிக்கவில்லை; அப்படியிருக்க, ஏன் தோமாவை மட்டும் அனுமதித்தார்?
மகதலேனா மரியாளிடம் தம்மைத் தொடக் கூடாது என இயேசு சொன்னது போல் சில பைபிள் மொழிபெயர்ப்புகள் குறிப்பிடுகின்றன. உதாரணத்திற்கு, இயேசுவின் வார்த்தைகளை தமிழ் யூனியன் பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை.” (யோவான் 20:17) எனினும், “தொடு” என பொதுவாக மொழிபெயர்க்கப்படும் மூல கிரேக்க வினைச்சொல், “பற்றிக்கொள், பிடித்து தொங்கு, கெட்டியாகப் பிடி, இறுகப் பிடி” என்றும் பொருள்படும். நியாயமாக பார்க்கப்போனால், தம்மை வெறுமனே தொடுவதற்கு மகதலேனா மரியாளை இயேசு தடை செய்யவில்லை. ஏனெனில் தமது கல்லறைக்கு அருகே இருந்த மற்ற பெண்கள் தமது ‘பாதங்களைத் தழுவிட’ அவர் அனுமதித்தார்.—மத்தேயு 28:9.
இயேசுவின் வார்த்தைகளில் பொதிந்துள்ள உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள மற்ற அநேக மொழிபெயர்ப்புகள் உதவுகின்றன; பொது மொழிபெயர்ப்பு, திருத்திய மொழிபெயர்ப்பு போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இவற்றில், “பற்றிக்கொள்ளாதே” அல்லது “பற்றிப்பிடித்துக் கொள்ளாதே” என்று இயேசு சொன்னதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அப்படியானால், தம்மை நெருங்கப் பின்பற்றிய மகதலேனா மரியாளிடம் இயேசு ஏன் அப்படி சொல்ல வேண்டும்?—லூக்கா 8:1-3.
இயேசு அப்போதே பூமியைவிட்டு பரலோகத்திற்கு ஏறிச் சென்றுவிடுவாரோ என மகதலேனா மரியாள் பயந்துவிட்டாள். தன் ஆண்டவரோடுகூட இருக்க வேண்டும் என்ற பலமான ஆசை காரணமாக அவரைப் போகவிடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தாள். எனவே, தாம் இன்னும் போகவில்லை என்பதை அவளுக்கு உறுதிப்படுத்தவே தம்மைப் பற்றிக்கொள்ளாதபடி இயேசு அவளிடம் சொன்னார். அவ்வாறு பற்றிக்கொள்வதை விட்டு, தம்முடைய சீஷரிடம் போய் தாம் உயிர்த்தெழுந்த செய்தியை அறிவிக்குமாறு கட்டளையிட்டார்.—யோவான் 20:17.
இயேசுவுக்கும் தோமாவுக்கும் இடையே நடந்த உரையாடலோ வித்தியாசமானது. சீஷர்கள் சிலருக்கு இயேசு காட்சியளித்தபோது தோமா அங்கு இருக்கவில்லை. அதனால் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து தோமா சந்தேகப்பட்டார். இயேசுவின் கைகளில் ஆணி அறைந்திருந்த காயத்தைக் கண்ணாரக் கண்ட பின்பும், அவருடைய விலாவில் ஏற்பட்டிருந்த காயத்தில் கையை போட்டுப் பார்த்த பின்பும்தான் நம்பப்போவதாக தோமா சொல்லியிருந்தார். எட்டு நாட்கள் கழித்து, இயேசு தமது சீஷர்களுக்கு மறுபடியும் காட்சியளித்தார். இந்த முறை, தோமாவும் அவர்களோடு இருந்தார். எனவே, காயங்களைத் தொட்டுப் பார்க்கும்படி தோமாவிடம் இயேசு சொன்னார்.—யோவான் 20:24-27.
ஆகவே, மகதலேனா மரியாளுடைய விஷயத்தில், தம்மைப் போக விடக்கூடாது என்று ஆசைப்பட்டது சரியல்ல என்பதை இயேசு உணர்த்தினார்; தோமாவின் விஷயத்திலோ, சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார். இந்த இரு சந்தர்ப்பங்களிலும் இயேசு நடந்து கொண்ட விதம் நியாயமானதே!