எதை வாசிப்பது—சாலொமோனின் ஞானமான அறிவுரை
“அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.” (பிரசங்கி 12:12) இவ்வார்த்தைகளை இஸ்ரவேலின் அரசனாகிய சாலொமோன் ஞானி 3,000 ஆண்டுகளுக்கு முன் எழுதினார். புத்தகங்களை வாசிக்கவே வேண்டாமென அவர் சொல்லவில்லை. மாறாக, தேர்ந்தெடுத்து படிப்பதன் அவசியத்தையே வலியுறுத்தினார். இது காலத்திற்கு ஏற்ற நினைப்பூட்டுதல். ஏனெனில் இன்று ஒவ்வொரு வருடமும் உலகில் கோடானுகோடி பிரசுரங்கள் அச்சிடப்படுகின்றன!
சாலொமோன் குறிப்பிட்ட ‘அநேக புத்தகங்கள்,’ ஊக்கமும் புத்துணர்ச்சியும் தராத புத்தகங்களே. எனவே அவற்றை அதிகம் படிப்பது, நிலையான பயன்களைத் தருவதற்குப் பதிலாக ஒருவருடைய ‘உடலை இளைக்கவே’ செய்யும் என சாலொமோன் கூறினார்.
என்றபோதிலும், வாசகருக்குப் பயனளிக்கும் நம்பகமான நல் அறிவுரைகளை வழங்கும் புத்தகங்கள் கிடையவே கிடையாது என்றா சாலொமோன் சொல்ல வந்தார்? இல்லை. ஏனெனில் அவர் இப்படியும் எழுதினார்: “ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள் போலவும் சங்கத் தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள் போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது.” (பிரசங்கி 12:11) உண்மையில், சில புத்தகங்கள் “தாற்றுக்கோல்கள் போல” நல்லதை செய்ய தூண்டுகோலாக அமைகின்றன. ஒரு நபரை சரியான பாதையில் செல்ல அவை தூண்டிவிடலாம். மேலுமாக, அவை “அறையப்பட்ட ஆணிகள் போல” ஒருவரது தீர்மானத்தை வலுப்படுத்த உதவி செய்து மன உறுதியையும் தரலாம்.
அப்படிப்பட்ட ஞானமான வாக்கியங்களை நாம் எங்கே கண்டடையலாம்? சாலொமோனுடைய கருத்துப்படி, ஒரே மேய்ப்பரான யெகோவாவிடமிருந்து வரும் வாக்கியங்களே அனைத்திலும் குறிப்பிடத்தக்கவை. (சங்கீதம் 23:1) எனவே அப்படிப்பட்ட ஞானமான வாக்கியங்களை படித்துத் தெரிந்துகொள்வதற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கத்தக்க மிகச் சிறந்த புத்தகம், கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகமாகிய பைபிளே. அதிலுள்ள கடவுளுடைய வார்த்தைகளை தவறாமல் படிக்கையில் ஒருவர் ‘தேறினவராகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவராகவும்’ மாறக்கூடும்.— 2 தீமோத்தேயு 3:16, 17.