“சிநேகத் தீவுகளில்” கடவுளின் சிநேகிதர்கள்
1932-ல் டோங்கா தீவுகளை வந்தடைந்த ஒரு கப்பல் விலைமதிக்க முடியா விதைகளைச் சுமந்து வந்தது. அதுதான் “மரித்தோர் எங்கு இருக்கிறார்கள்?” என்ற ஆங்கில சிற்றேடு. அதை சார்ல்ஸ் விடி என்பவருக்குக் கப்பல் தலைவர் கொடுத்தார். சத்தியம் இதுதான் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு, சார்ல்ஸ் கேட்டுக்கொண்டபடி, அந்தச் சிற்றேட்டை அவரது தாய்மொழியில் மொழிபெயர்க்க யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் அவருக்கு அனுமதி அளித்தது. மொழிபெயர்த்து முடித்தப் பிறகு அச்சிடப்பட்ட 1,000 சிற்றேடுகளை அவர் பெற்றார். அவற்றை மற்றவர்களுக்கு வினியோகிக்க ஆரம்பித்தார். இப்படித்தான் யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய சத்தியத்தின் விதைகள் டோங்காவில் தூவப்பட தொடங்கின.
தென் பசிபிக் வரைபடத்தில் சர்வதேச தேதிக் கோடும் மகரரேகையும் சந்திக்கிற இடத்திற்குச் சற்று மேற்கே டோங்கா தீவுகளை நீங்கள் பார்க்கலாம். டோங்கா தீவுகளிலேயே மிகப் பெரியது டோங்காடபு தீவு. இது நியுஜிலாந்திலுள்ள ஆக்லாந்து நகரிலிருந்து சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. டோங்காவில் மொத்தம் 171 தீவுகள் உள்ளன, அவற்றில் 45 தீவுகளில்தான் மக்கள் வசிக்கிறார்கள். பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் குக் என்பவர் இந்த ஒதுக்குப்புறத் தீவுகளுக்குச் சிநேகத் தீவுகள் என்று பெயர் சூட்டினார்; இவர் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரபல ஆய்வுப் பயணி ஆவார்.
டோங்கா தீவுகளின் மொத்த ஜனத்தொகை 1,06,000. இதில் மூன்று தீவுக் கூட்டங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை டோங்காடபு, ஹாபை, வாவுவா. அங்கிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஐந்து சபைகளில் மூன்று சபைகள் ஜனத்தொகை அதிகமுள்ள டோங்காடபு தீவுக் கூட்டத்திலும், ஒன்று ஹாபை தீவுக் கூட்டத்திலும், மற்றொன்று வாவுவா தீவுக் கூட்டத்திலும் இருக்கிறது. கடவுளுடைய சிநேகிதர்களாக மக்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகளுக்கு ஒரு மிஷனரி இல்லமும் நுகுஅலோஃபா என்கிற தலைநகரத்திற்கு அருகில் மொழிபெயர்ப்பு அலுவலகமும் உள்ளது.—ஏசாயா 41:8.
சார்ல்ஸ் விடி 1964 வரை முழுக்காட்டுதல் பெறாதபோதிலும், அவர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரென 1930-களின் ஆரம்பத்திலிருந்தே எல்லாருக்கும் தெரிந்திருந்தது. மற்றவர்களும் அவருடன் சேர்ந்து சாட்சி கொடுக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். பிறகு 1966-ல் 30 பேர் அமரும் அளவுக்கு ஒரு ராஜ்ய மன்றம் கட்டப்பட்டது. 1970-ல் நுகுஅலோஃபாவில் 20 பிரஸ்தாபிகளுடன் ஒரு சபை உருவானது.
அன்றிலிருந்து ஏசாயா தீர்க்கதரிசனம், அதாவது “கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக” என்ற தீர்க்கதரிசனம் டோங்கா தீவுகளில் நிறைவேறி வருவதை நாம் காண முடிகிறது. (ஏசாயா 42:12) ராஜ்ய வேலை தொடர்ந்து தழைத்தோங்குவது அநேகர் யெகோவாவிடம் நல்ல உறவை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. 2003-ல் நுகுஅலோஃபா தலைநகரில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் உச்சநிலை எண்ணிக்கையாக 407 பேர் கலந்து கொண்டார்கள். ஐந்து பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள். 2004-ல் நடைபெற்ற நினைவு ஆசரிப்பிற்கு 621 பேர் வந்திருந்தார்கள், அந்நாட்டில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
எளிமையான வாழ்க்கை
தலைநகரைவிட்டு தூரத்திலுள்ள பகுதிகளில் ஊழியம் செய்ய இன்னும் அதிக ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். உதாரணமாக, ஹாபை தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த 16 தீவுகளில் வாழும் 8,500 பேர் பைபிள் சத்தியத்தைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பெருமளவு தாழ்நிலப் பகுதியாக உள்ள ஹாபை தீவுக் கூட்டம் முழுவதிலும் தென்னை போன்ற மரங்கள் நிறைந்திருக்கின்றன. அங்கு வெண்ணிற மணல் கொட்டிக் கிடக்கும் நீண்ட கடற்கரைகளும் உள்ளன. கிட்டத்தட்ட 30 மீட்டருக்கும் அப்பால் பார்க்க முடிகிற அளவுக்கு கடல் தண்ணீர் பளிங்குபோல தெளிவாக உள்ளது. பவளப் பாறைகளும் வெப்ப மண்டல பிரதேசத்திற்கே உரிய 100-க்கும் அதிகமான வண்ண வண்ண மீன் இனங்களும் காணப்படுகிற அந்தத் தண்ணீரில் நீச்சலடிப்பது ஓர் அசாதாரண அனுபவமே. கிராமங்கள் பொதுவாக குக்கிராமங்களாகவே உள்ளன. வீடுகள் எளிமையாக இருந்தாலும் வெப்ப மண்டல புயல்களைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு உறுதியாகக் கட்டப்பட்டுள்ளன.
ஈரப்பலா மரமும் மாமரமும் நிழலும் உணவும் தருகின்றன. அத்தீவு வாசிகள் உணவைச் சேகரிக்கவும் சமைக்கவுமே ஒரு நாளில் அதிகளவு நேரத்தைச் செலவிடுகிறார்கள். பன்றி இறைச்சி என்றால் அவர்களுக்கு உயிர். அதுமட்டுமல்ல, கடலில் கிடைக்கும் ஏராளமான உணவுகளையும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அவர்களுடைய தோட்டங்களில் உணவுக்கு உதவும் வேர்களையும் காய்கறிகளையும் விளைவிக்கிறார்கள். எலுமிச்சை போன்ற பழ மரங்கள் காடுகளில் வளர்கின்றன; தென்னை மரங்களும் வாழை மரங்களும் எக்கச்சக்கமாக இருக்கின்றன. மூலிகைச் செடிகள், இலைகள், மரப்பட்டைகள், வேர்கள் ஆகியவற்றைப் பற்றி உள்ளூர்வாசிகள் அறிந்திருப்பவற்றை தலைமுறை தலைமுறையாகத் தங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
சமாதான சூழலுக்கு ஏற்ற சிநேகப்பான்மையான மக்கள்தான் ஹாபையின் மதிப்புமிக்க சொத்து. இவர்கள் எளிமையாக வாழ்க்கை நடத்துகிறார்கள். பெண்களில் அநேகர் கூடை முடைதல், டாபா துணிகளை நெய்தல், பாய் பின்னுதல் போன்ற கைத்தொழில்களில் ஈடுபடுகிறார்கள். டோங்கா தீவுகளிலுள்ள பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து மரத்தடியில் உட்கார்ந்து, பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் வேலை செய்வார்கள். பெரும்பாலும் அவர்களுடைய பிள்ளைகள் அருகில் தூங்கிக் கொண்டோ விளையாடிக் கொண்டோ இருப்பார்கள். பொதுவாக பெண்கள்தான் கடல் அலைகள் உச்சளவில் உள்வாங்கும்போது சிப்பிகளையும் உணவுக்கு உதவும் பிற மீன் வகைகளையும் பிடிக்கிறார்கள். அதோடு ருசிமிக்க ஸாலட் செய்ய பயன்படும் கடற்பாசியையும் அவர்கள் சேகரிக்கிறார்கள், இது மெல்லுவதற்கு நறுக்நறுக்கென்று இருக்கும்.
ஆண்கள் அநேகர் தோட்ட வேலையிலும், மீன் பிடிப்பதிலும், சிற்பம் செதுக்குவதிலும், படகு கட்டுவதிலும், மீன் வலையைப் பழுதுபார்ப்பதிலும் காலத்தைக் கழிக்கிறார்கள். உறவினர்களைச் சந்திக்க, மருத்துவ சிகிச்சை பெற, வியாபாரம் செய்ய அல்லது பொருட்களை விற்க, ஆண்கள் பெண்கள் பிள்ளைகள் என்று அனைவரும் ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்குக் கூரைபோட்ட சிறிய மீன்பிடி படகுகளில் புறப்பட்டு விடுகிறார்கள்.
ஒதுக்குப்புறத்தையும் சென்றெட்டும் நற்செய்தி
அமைதி தவழும் இந்த இடத்தில்தான், 2002-ல் நடைபெற்ற நினைவு ஆசரிப்பின்போது இரண்டு பயனியர்களும் இரண்டு மிஷனரிகளும் வந்திறங்கினார்கள். இதற்கு முன்பு அவ்வப்போது இத்தீவுகளில் வாழும் மக்களுக்குப் பிரசங்கிக்கப்பட்டிருந்தது. ஹாபை தீவில் வசிப்பவர்களிடம் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. சொல்லப்போனால், அவர்களுக்கு பைபிள் படிப்பும் நடத்தப்பட்டிருக்கிறது.
அந்த நான்கு பைபிள் போதகர்களும் மூன்று குறிக்கோள்களுடன் அங்கு வந்தார்கள்: பைபிள் பிரசுரங்களைக் கொடுக்க வேண்டும்; பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க வேண்டும்; ஆர்வமுள்ளவர்களை நினைவு ஆசரிப்புக்கு அழைக்க வேண்டும். அவர்களது மூன்று குறிக்கோள்களும் நிறைவேறின. இயேசுவின் இராப் போஜனத்திற்கு 97 பேர் வந்திருந்தார்கள். பலத்த மழையும் காற்றும் இருந்தபோதிலும் சிலர் கூரையில்லா படகுகளில் வந்திருந்தார்கள். மோசமான சீதோஷணத்தால் பலர் நினைவு ஆசரிப்புக்குப் பிறகு அங்கேயே இராத்தங்கி மறுநாள் காலை வீடு திரும்பினார்கள்.
நினைவு ஆசரிப்பு பேச்சாளரும்கூட நிறைய கஷ்டங்களை எதிர்ப்பட்டார். “அதே மாலையில் இரண்டு நினைவு ஆசரிப்பு பேச்சுக்களை வேற்று மொழிகளில் கொடுப்பது எவ்வளவு கடினம் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை” என்கிறார் பேச்சைக் கொடுத்த மிஷனரி சகோதரர். “நான் எந்தளவுக்குப் பயந்திருப்பேன் என்பதை உங்களாலும் எண்ணிப் பார்க்க முடியும். அந்தச் சமயத்தில் ஜெபம் எனக்கு எவ்வளவு உதவியாக இருந்தது தெரியுமா! நான் படித்ததாகவே ஞாபகத்தில் இல்லாத வார்த்தைகளும் வாக்கியங்களும் என் நினைவுக்கு வந்தன.”
ஹாபை தீவுகளில் ஏற்கெனவே அக்கறை காட்டிய ஆட்களின் ஆர்வத்தை இந்தப் பிரசங்கிப்பாளர்கள் தூண்டியதால் இரு தம்பதியர் முழுக்காட்டுதல் பெற்றார்கள். இவர்களில் ஒரு தம்பதியின் கணவர் சர்ச் பாதிரி ஆவதற்குப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார்; அந்தச் சமயத்தில்தான் சாட்சிகளுடைய பிரசுரங்களைப் படிக்க ஆரம்பித்தார்.
இவரும் இவருடைய மனைவியும் ஏழையாக இருந்தபோதிலும், சர்ச்சில் நடைபெற்ற வருடாந்தர நிதி திரட்டும் கூட்டத்தில் இவர்களுடைய பெயர் வாசிக்கப்படும்போது ஒரு பெரிய தொகையை நன்கொடையாக அளிப்பார்கள். முன்பு ஒருசமயம் இத்தீவிற்கு வந்திருந்த யெகோவாவின் சாட்சி ஒருவர் 1 தீமோத்தேயு 5:8-ஐப் படிக்கும்படி அவரிடம் சொல்லியிருந்தார். இதில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதியிருந்தார்: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” இந்த பைபிள் நியமம் அவருடைய மனதைத் தொட்டது. சர்ச்சுக்கு ஏகப்பட்ட பணத்தைக் கொடுக்கும்போது தன் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளைக்கூட கவனிக்காமல் போவதை உணர்ந்தார். அடுத்த ஆண்டின் வருடாந்தர நிதி திரட்டும் கூட்டத்தில் அவருடைய பாக்கெட்டில் பணம் இருந்தபோதிலும் 1 தீமோத்தேயு 5:8 அவருடைய நினைவுக்கு வந்தது. அவருடைய பெயர் வாசிக்கப்பட்டபோது அவர் பாதிரியிடம் சென்று குடும்பத்தாரின் தேவைகளைக் கவனிப்பதே தனக்கு முக்கியம் என்று தைரியமாகச் சொன்னார். விளைவு? எல்லாருக்கும் முன்பு அந்தத் தம்பதியினரை சர்ச் பாதிரிமார்கள் கேவலப்படுத்தி, தாறுமாறாக பேசிவிட்டார்கள்.
யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்து முடித்தப் பிறகு அவரும் அவரது மனைவியும் ராஜ்ய பிரஸ்தாபிகள் ஆனார்கள். “பைபிள் சத்தியம் என்னை அடியோடு மாற்றிவிட்டது. இப்போதெல்லாம் முன்பு மாதிரி நான் குடும்பத்தாரிடம் முரட்டுத்தனமாக, கொடூரமாக நடந்துகொள்வதில்லை. அளவுக்கதிகமாகக் குடிப்பதுமில்லை. சத்தியம் என் வாழ்க்கையை மாற்றியிருப்பதை என் கிராமத்தார் பார்க்கிறார்கள். என்னைப் போலவே அவர்களும் ஒருநாள் சத்தியத்தை நேசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறுகிறார்.
தேடலில் உதவிய க்வெஸ்ட்
2002-ல் நினைவு ஆசரிப்பு முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு ஒதுக்குப்புற ஹாபைக்கு, விலைமதிப்புள்ள இன்னும் சில பொருட்கள் மற்றொரு கப்பலில் வந்திறங்கின. 18 மீட்டர் நீளமான க்வெஸ்ட் என்னும் உல்லாசப் படகு டோங்கா தீவுகளில் சவாரி செய்ய நியுஜிலாந்திலிருந்து வந்தது. அதில் காரி மற்றும் ஹெட்டி தம்பதியினரும் அவர்களது மகள் கேட்டியும் இருந்தார்கள். டோங்காவைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் ஒன்பது பேரும் இரண்டு மிஷனரிகளும் இரண்டு பயணங்களில் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். தண்ணீருக்கு அடியிலுள்ள பாறைகளில் மோதாமல் படகை திறமையாகச் செலுத்துவதற்கு, அந்த ஊரிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் உதவினார்கள். இவை உல்லாச பயணங்கள் அல்ல. படகில் இருந்தவர்கள் பைபிள் சத்தியத்தைப் போதிக்கவே வந்திருந்தார்கள். அவர்கள் 14 தீவுகளைச் சந்தித்து சமுத்திரத்தின் ஒரு பெரிய பாகத்தில் பிரசங்கித்து முடித்தார்கள். அந்தத் தீவுகள் சிலவற்றில் இதற்கு முன்பு ராஜ்ய நற்செய்தி பிரசங்கிக்கப்படவே இல்லை.
ஜனங்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்? அவர்கள் விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் உடையவர்கள், உபசரிக்கும் குணம் படைத்தவர்கள்; அதனால் யெகோவாவின் சாட்சிகளைத் தங்கள் வீடுகளுக்கு வரவேற்றார்கள். அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்கள். தீவுகளில் வசிக்கும் மக்கள் கடவுளுடைய வார்த்தையை மதித்தார்கள் என்பதும் அவர்கள் தங்களுடைய ஆன்மீக தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருந்தார்கள் என்பதும் அங்கு சென்றிருந்த சாட்சிகளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.—மத்தேயு 5:3, NW.
பல சமயங்களில், அங்குச் சென்ற யெகோவாவின் சாட்சிகள் வெப்ப மண்டல மரங்களின் நிழலில் உட்கார்ந்து கொள்வார்கள். பலரும் அங்கு வந்து பைபிளைப் பற்றி அநேக கேள்விகளைக் கேட்டுக்கொண்டு சாட்சிகளைச் சுற்றி உட்கார்ந்து கொள்வார்கள். பொழுது சாய்ந்த பிறகு அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று பைபிள் கலந்தாலோசிப்புகளைத் தொடர்ந்து நடத்துவார்கள். சாட்சிகள் புறப்படுகையில், “போகாதீர்கள்! நீங்கள் போனால் எங்களுடைய கேள்விகளுக்கெல்லாம் யார் பதில் சொல்வது?” என்று ஒரு தீவிலிருந்த ஆட்கள் கெஞ்சினார்கள். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “சத்தியத்தை அறிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கும் செம்மறியாடு போன்ற அத்தனை பேரையும் விட்டுவிட்டு வருவது எங்களுக்கு எப்போதுமே கஷ்டமாகத்தான் இருந்தது. சத்தியத்தின் விதைகள் ஏராளமாய் அவ்விடத்தில் விதைக்கப்பட்டிருக்கின்றன.” க்வெஸ்ட் ஒரு தீவை சென்றடைந்தபோது, அங்கிருந்த எல்லாரும் துக்கம் கொண்டாடும் விதத்தில் உடுத்தியிருந்ததைச் சாட்சிகள் பார்த்தார்கள். அந்த டவுன் அதிகாரியின் மனைவி அப்போதுதான் இறந்திருந்தாள். பைபிளிலிருந்து ஆறுதல் செய்தியை அறிவித்ததற்கு அந்த டவுன் அதிகாரியே சாட்சிகளிடம் தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
சில தீவுகளுக்குச் செல்வது அவ்வளவு சுலபமல்ல. “ஒரு தீவில் கரை சேர ஏற்ற இடமே இருக்கவில்லை. ஒரு மீட்டர் அல்லது அதற்கும் அதிக உயரமுள்ள செங்குத்துப் பாறைகள் மட்டும்தான் நீருக்கு மேலே நீட்டிக்கொண்டிருந்தன. கரையை அடைய எங்களுடைய சிறிய ரப்பர் படகில் செல்வதுதான் ஒரே வழி. முதலாவதாக கரையில் எங்கள் பைகளைப் பிடித்துக்கொள்ள தயாராக இருந்தவர்களிடம் பைகளைத் தூக்கி வீசினோம். எங்களுடைய சிறிய ரப்பர் படகு, பாறையின் விளிம்பிலேறி, மறுபடியும் வெள்ளத்தில் விழுவதற்கு முன் நாங்கள் குதிக்க வேண்டியிருந்தது” என்று ஹெட்டி விளக்குகிறார்.
என்றாலும், கப்பலில் பயணித்த எல்லாருமே அஞ்சா நெஞ்சம் படைத்த பயணிகள் அல்ல. இரண்டு வார கப்பற்பயணத்திற்குப் பிறகு முக்கிய தீவான டோங்காடபு தீவுக்குத் திரும்பும் பயணத்தைக் குறித்து கப்பல் தலைவர் இவ்வாறு எழுதியிருந்தார்: “நாம் இன்னும் 18 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். ஆனால் கடல் பயணத்தின் போது யாருக்காவது குமட்டல் ஏற்பட்டால் கப்பலை எங்காவது இடையில் நிறுத்தாமல் போக முடியாது. நம் வீட்டிற்குப் போவதில் நமக்குச் சந்தோஷம்தான்; ஆனால் ராஜ்ய செய்தியை இப்போது கேட்ட அத்தனை பேரையும் விட்டுவிட்டுப் போவது மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. எனினும் நாம் அவர்களை யெகோவாவின் கரங்களில் விட்டுவிடுவோம். அவர் தமது ஆவியின் மூலமாகவும் தேவதூதர்கள் மூலமாகவும் ஆன்மீக ரீதியில் அவர்கள் முன்னேற உதவுவார்.”
வாய்ப்புகள் நிறைந்த தீவுகள்
க்வெஸ்ட் கப்பல் அங்கிருந்து சென்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு ஹாபை தீவுக்கூட்டங்களில் பிரசங்கிக்க ஸ்டீவன், மாலாகீ என்ற இரண்டு விசேஷ பயனியர் சகோதரர்கள் நியமிக்கப்பட்டார்கள். அங்கு சமீபத்தில் முழுக்காட்டப்பட்ட இரண்டு தம்பதியினருடன் இவர்களும் சேர்ந்துகொண்டு பைபிளைப் போதிக்கிறார்கள். பைபிள் கோட்பாடு சம்பந்தப்பட்ட சுவாரஸ்யமான கலந்தாலோசிப்புகள் நடைபெறுகின்றன. பிரஸ்தாபிகளும் பைபிளை நன்றாகப் பயன்படுத்துகிறார்கள்.
டிசம்பர் 1, 2003-ல் ஹாபையில் ஒரு சபை உருவானது. இது டோங்கா தீவுகளில் ஆரம்பிக்கப்பட்ட ஐந்தாவது சபை ஆகும். இச்சபைக்கு வருகிறவர்களில் சிறு பிள்ளைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் கவனமாகச் செவிகொடுக்க கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அமைதியாக உட்கார்ந்து கேள்வி-பதில் கலந்தாலோசிப்புகளில் பதில் சொல்ல ஆர்வமாக இருக்கிறார்கள். பிள்ளைகளைக் குறித்து வட்டாரக் கண்காணி இவ்வாறு சொன்னார்: “என்னுடைய பைபிள் கதை புத்தகத்தைப் பற்றி அவர்கள் தெரிந்து வைத்திருப்பதைப் பார்க்கும்போது, பைபிள் சத்தியத்தைப் பிள்ளைகளின் மனதில் பதிய வைக்க பெற்றோர் எந்தளவு பொறுப்போடு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.” யெகோவாவின் சிநேகிதர்களை மிகுதியாக அறுவடை செய்ய வாய்ப்புகள் நிறைந்த இடங்களாகவே அத்தீவுகள் இருக்கின்றன.
மரித்தோர் எங்கு இருக்கிறார்கள் என்ற சிற்றேட்டை 70-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பு டோங்காவில் சார்ல்ஸ் விடி மொழிபெயர்த்த சமயத்தில் ராஜ்ய விதை இந்தளவுக்குத் தன் ஊர்க்காரர்களின் மனதில் வேரூன்றி பலன் கொடுக்குமென அவர் நினைத்திருக்க மாட்டார். அப்போது முதற்கொண்டு நற்செய்தியைப் பிரசங்கிக்கும் இவ்வேலையை உலகின் இந்தக் கோடியிலும் யெகோவா தொடர்ந்து ஆசீர்வதித்திருக்கிறார். சொல்லப்போனால், யெகோவாவை நோக்கி வரும் கடலின் ஒதுங்கிய தீவுகளில் டோங்கா தீவும் ஒன்று என்று நாம் நிச்சயமாகச் சொல்ல முடியும். (சங்கீதம் 97:1; ஏசாயா 51:5) “சிநேகத் தீவுகள்” இன்று யெகோவாவின் சிநேகிதர்கள் அநேகரது வீடாக திகழ்கிறது.
[பக்கம் 8-ன் படம்]
1983-ல் சார்ல்ஸ் விடி
[பக்கம் 9-ன் படம்]
டாபா துணிகளை நெய்தல்
[பக்கம் 10-ன் படம்]
டோங்காவில் நற்செய்தியைப் பிரசங்கிக்க “க்வெஸ்ட்” பயன்படுத்தப்பட்டது
[பக்கம் 11-ன் படம்]
நுகுஅலோஃபா மொழி மொழிபெயர்ப்புக் குழு
[பக்கம் 9-ன் படங்களுக்கான நன்றி]
டாபா துணிகளை நெய்தல்: © Jack Fields/CORBIS; 8-வது 9-வது பக்கங்களின் பின்னணி மற்றும் மீன் பிடித்தல்: © Fred J. Eckert