யெகோவாவை உங்கள் கடவுளாக்கிக் கொள்ளுதல்
பைபிள் காலங்களில், சில நபர்கள் யெகோவா தேவனுடன் மிக நெருக்கமான உறவு வைத்திருந்தார்கள்; ஆகவே அவர்களுடைய தேவன் என யெகோவா அழைக்கப்பட்டார். உதாரணமாக, ‘ஆபிரகாமின் தேவன்,’ ‘தாவீதின் தேவன்,’ ‘எலியாவின் தேவன்’ என்றெல்லாம் யெகோவா பைபிளில் விவரிக்கப்பட்டிருக்கிறார்.—ஆதியாகமம் 31:42; 2 இராஜாக்கள் 2:14; 20:5.
இவர்கள் ஒவ்வொருவரும் யெகோவாவுடன் நெருக்கமான உறவை எவ்வாறு வளர்த்துக் கொண்டார்கள்? அவருடன் நாமும்கூட பலமான உறவை வளர்த்துக்கொண்டு அதைக் காத்துக்கொள்வதற்கு, அவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?
ஆபிரகாம் ‘யெகோவாவை விசுவாசித்தார்’
யெகோவாவை விசுவாசித்தார் என்று பைபிள் குறிப்பிடும் முதல் நபர் ஆபிரகாம் தான். விசுவாசமே ஆபிரகாமின் தலைசிறந்த பண்பாக இருந்தது; இதனால் கடவுளுடைய அங்கீகாரத்தை அவர் பெற்றார். யெகோவாவின் தயவை ஆபிரகாம் அந்தளவுக்குப் பெற்றிருந்ததால், ‘ஆபிரகாமின் தேவன்’ என்றும் ஆபிரகாமின் மகன் ஈசாக்கு மற்றும் பேரன் யாக்கோபு ஆகியோரின் தேவன் என்றும் மோசேயிடம் யெகோவா தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.—ஆதியாகமம் 15:6; யாத்திராகமம் 3:6.
கடவுள் மீது இப்பேர்ப்பட்ட விசுவாசத்தை ஆபிரகாம் எப்படி வளர்த்துக் கொண்டார்? முதலாவது, ஆபிரகாம் தன் விசுவாசத்தை ஒரு பலமான அஸ்திவாரத்தின் மீது கட்டியிருந்தார். கடவுளுடைய இரட்சிப்பின் செயல்களை கண்ணாரக் கண்ட சாட்சியான நோவாவின் குமாரனாகிய சேம் யெகோவாவின் வழிகளைக் குறித்து ஆபிரகாமிற்கு போதித்திருக்கலாம். யெகோவா ‘பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணினார்’ என்பதற்கு சேம் ஓர் உயிருள்ள அத்தாட்சியாக இருந்தார். (2 பேதுரு 2:5) யெகோவா எதையாவது வாக்கு கொடுத்தால் அது நிச்சயமாக நிறைவேறும் என்பதை சேமிடமிருந்து ஆபிரகாம் கற்றிருக்கலாம். எப்படியிருந்தாலும், ஆபிரகாம் யெகோவாவிடமிருந்து ஒரு வாக்குறுதியைப் பெற்றுக்கொண்ட பிறகு, அதைக் குறித்து சந்தோஷப்பட்டார். அதோடு, அந்த வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தனது வாழ்க்கையை அமைத்தார்.
பலமான அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்டிருந்த ஆபிரகாமின் விசுவாசம் கிரியைகளால் வலுப்படுத்தப்பட்டது. “விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப் போனான்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபிரெயர் 11:8) இவ்வாறு கீழ்ப்படிதலைக் காட்டியது ஆபிரகாமின் விசுவாசத்தைப் பலப்படுத்தியது. அதைக் குறித்து சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.”—யாக்கோபு 2:22.
அதுமட்டுமல்ல, ஆபிரகாமின் விசுவாசத்தை யெகோவா சோதித்துப் பார்த்து, அதை இன்னும் உறுதியாக்கினார். பவுல் இவ்வாறு கூறினார்: “விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக் கொடுத்தான்.” இப்படிப்பட்ட சோதனை, விசுவாசத்தைப் புடமிட்டு, பலப்படுத்தி, ‘பொன்னைவிட அதிக விலையேறப் பெற்றதாக’ ஆக்குகிறது.—எபிரெயர் 11:17; 1 பேதுரு 1:7.
கடவுள் வாக்கு கொடுத்திருந்த அனைத்தும் நிறைவேறுவதைப் பார்ப்பதற்கு ஆபிரகாம் உயிரோடு இல்லாதபோதிலும், தன் முன்மாதிரியை மற்றவர்கள் பின்பற்றுவதைப் பார்க்கும் சந்தோஷம் அவருக்குக் கிடைத்தது. அவருடைய மனைவி சாராளையும் பிற குடும்ப அங்கத்தினர்களான ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு ஆகியோரையும்கூட அவர்களுடைய தனிச்சிறப்பான விசுவாசத்திற்காக பைபிள் மெச்சிப் பேசுகிறது.—எபிரெயர் 11:11, 20-22.
ஆபிரகாமைப் போன்ற விசுவாசம்—இன்று
யெகோவாவைத் தங்கள் கடவுளாகக் கொண்டிருக்க விரும்பும் அனைவருக்கும் விசுவாசம் மிக முக்கியம். “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்” என பவுல் எழுதினார். (எபிரெயர் 11:6) இன்று கடவுளுடைய ஊழியராக இருக்கும் ஒருவர் ஆபிரகாமுக்கு இருந்ததைப் போன்ற பலமான விசுவாசத்தை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
ஆபிரகாமின் விசுவாசத்தைப் போலவே, நம்முடைய விசுவாசமும் ஒரு பலமான அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்க வேண்டும். பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் தவறாமல் வாசிப்பதே அதைச் செய்வதற்கான மிகச் சிறந்த வழி. பைபிளை வாசித்து, அதில் வாசிப்பவற்றை தியானிக்கும்போது கடவுளுடைய வாக்குறுதிகள் உண்மையில் நிறைவேறும் என்ற உறுதி நமக்குக் கிடைக்கிறது. அப்போது அந்த உறுதியான எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள நாம் தூண்டப்படுவோம். ஊழியத்தில் பங்கெடுப்பது, கிறிஸ்தவ கூட்டங்களில் ஆஜராவது போன்ற கீழ்ப்படிதலை வெளிக்காட்டும் செயல்கள் மூலம் நம்முடைய விசுவாசம் இன்னும் அதிகமாக பலப்படுத்தப்படும்.—மத்தேயு 24:14; 28:19, 20; எபிரெயர் 10:24, 25.
எதிர்ப்பு, உடல்நலக் குறைபாடு, அன்பானவரின் இறப்பு அல்லது வேறு ஏதாவது காரணத்தால் நம்முடைய விசுவாசம் கண்டிப்பாக சோதிக்கப்படும். சோதனையின் கீழ் யெகோவாவுக்கு உண்மையோடு நிலைத்திருக்கையில் அது நம் விசுவாசத்தை பலப்படுத்தி, பொன்னைவிட அதிக விலையேறப் பெற்றதாக ஆக்குகிறது. கடவுளுடைய எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுவதைப் பார்ப்பதற்கு நாம் உயிரோடு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, விசுவாசம் நம்மை யெகோவாவிடம் நெருங்கி வரச் செய்யும். கூடுதலாக, நம் முன்மாதிரியைப் பார்த்து மற்றவர்களும் நம் விசுவாசத்தைப் பின்பற்ற தூண்டுவிக்கப்படலாம். (எபிரெயர் 13:7) தனது பெற்றோரின் விசுவாசத்தை கவனித்து அதைப் பின்பற்றிய ரால்ஃப்பின் விஷயத்தில் இதுவே உண்மையாக இருந்தது. அவர் இவ்வாறு விளக்குகிறார்:
“நான் வீட்டிலிருந்த சமயத்தில், அம்மாவும் அப்பாவும் எங்கள் எல்லாரையும் அதிகாலையில் எழுப்பி விடுவார்கள். நாங்கள் பைபிளை ஒன்றுசேர்ந்து படிப்போம். இப்படியாக நாங்கள் முழு பைபிளையும் படித்தோம்.” ரால்ஃப் இப்போதும் தினமும் காலையில் பைபிள் படிக்கிறார். அந்த நாளை நல்ல முறையில் துவங்க இது அவருக்கு உதவுகிறது. ரால்ஃப் தனது தகப்பனோடு ஒவ்வொரு வாரமும் பிரசங்க ஊழியத்தில் கலந்து கொள்வது வழக்கம். “அப்போதுதான் மறுசந்திப்புகளை செய்யவும், பைபிள் படிப்புகளை நடத்தவும் நான் கற்றுக் கொண்டேன்” என அவர் சொல்கிறார். இப்போது அவர் ஐரோப்பாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள் ஒன்றில் தொண்டராக சேவை செய்கிறார். அவருடைய பெற்றோரின் விசுவாசத்திற்கு எப்பேர்ப்பட்ட நல்ல வெகுமதி!
யெகோவாவின் இருதயத்திற்கு ஏற்ற மனுஷன்
ஆபிரகாமின் காலத்திற்கு 900 ஆண்டுகளுக்குப் பிறகு தாவீது பிறந்தார், இவர் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள யெகோவாவின் ஊழியர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர். வருங்கால அரசனாக தாவீதை யெகோவா தேர்ந்தெடுத்ததைக் குறித்து தீர்க்கதரிசியாகிய சாமுவேல் இவ்வாறு கூறினார்: ‘யெகோவா தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடுவார்.’ யெகோவாவுக்கும் தாவீதுக்கும் இடையே அதிக நெருக்கம் இருந்ததால், ஏசாயா தீர்க்கதரிசி அரசராகிய எசேக்கியாவிடம் பேசும்போது, ‘உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற யெகோவா’ என்று கூறினார்.—1 சாமுவேல் 13:14; 2 இராஜாக்கள் 20:5; ஏசாயா 38:5.
யெகோவாவின் இருதயத்திற்கு தாவீது ஏற்றவராக இருந்தபோதிலும், சில சந்தர்ப்பங்களில் தனது சொந்த இச்சைகளுக்கு இடமளித்து விட்டார். மூன்று முறை மோசமான பாவங்களைச் செய்தார்; உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குத் தகாத முறையில் கொண்டுவரச் செய்தார். பத்சேபாளுடன் விபச்சாரம் செய்து, அவளுடைய கணவன் உரியாவை திட்டம்போட்டு கொலை செய்தார். யெகோவாவின் கட்டளைக்கு விரோதமாக இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் தொகையை கணக்கெடுத்தார். இந்த எல்லா சந்தர்ப்பத்திலும், யெகோவாவின் சட்டத்தை தாவீது மீறினார்.—2 சாமுவேல் 6:2-10; 2 சாமுவேல் 11:2-27; 2 சாமுவேல் 24:1-9.
தாவீது செய்த பாவங்கள் அவருடைய கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, அதற்கு தானே குற்றவாளி என்பதை அவர் ஒத்துக்கொண்டார். பழியை வேறு யார் மீதும் போடவில்லை. உடன்படிக்கைப் பெட்டியை சுமக்க சரியான முறையில் ஏற்பாடு செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்டு, ‘யெகோவாவை நியாயமானபடி தேடாதே போனோம்’ என்று அவர் சொன்னார். தாவீது செய்த விபசாரத்தை நாத்தான் தீர்க்கதரிசி வெட்ட வெளிச்சமாக்கியபோது, “நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன்” என தாவீது ஒப்புக்கொண்டார். ஜனங்களை தொகை பார்த்த மடத்தனமான செயலை உணர்ந்தபோது, “நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ் செய்தேன்” என சொல்லி வருந்தினார். தாவீது தன்னுடைய பாவத்திலிருந்து மனந்திரும்பி, யெகோவாவிடம் தொடர்ந்து நெருக்கமாக இருந்தார்.—1 நாளாகமம் 15:13; 2 சாமுவேல் 12:13; 2 சாமுவேல் 24:10.
நாம் தவறு செய்கையில்
யெகோவாவை நம் கடவுளாகக் கொண்டிருக்க முயலுகையில், தாவீதின் உதாரணம் உற்சாகமூட்டுவதாக இருக்கிறது. யெகோவாவின் இருதயத்திற்கு மிகவும் ஏற்றவராக இருந்தவரே இத்தகைய மோசமான பாவங்களை செய்தாரென்றால், நாம் மிகச் சிறந்த முயற்சி எடுக்கிறபோதிலும் தவறோ வினைமையான பாவமோ செய்துவிட்டால் மனந்தளர வேண்டியதில்லை என புரிந்துகொள்கிறோம். (பிரசங்கி 7:20) தாவீது மனந்திரும்பியபோது அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்ற உண்மை நமக்கு ஆறுதலைத் தரலாம். சில வருடங்களுக்கு முன்னால் ஊவெa என்பவருக்கு அதுதான் சம்பவித்தது.
ஊவெ யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் ஒரு மூப்பராக சேவை செய்து வந்தார். ஒரு சமயத்தில், அவர் தவறான ஆசைகளுக்கு இடமளித்து ஒழுக்கக்கேடாக நடந்துவிட்டார். முதலில், தாவீது ராஜாவைப் போல் இந்த விஷயத்தை இரகசியமாக வைத்துக்கொள்ள நினைத்தார். யெகோவா தனது பாவத்தை கண்டும் காணாமல் விட்டுவிடுவார் என்று நம்பினார். நாளடைவில், ஊவெயின் மனசாட்சி அவரை மிகவும் உறுத்த ஆரம்பித்ததால், சக மூப்பர் ஒருவரிடம் அதை அறிக்கையிட்டார். ஆவிக்குரிய சேதத்திலிருந்து அவரை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஊவெ தன்னுடைய பாவத்திலிருந்து மனந்திரும்பி, யெகோவாவுடனும் சபையுடனும் தொடர்ந்து நெருக்கமாக இருந்தார். தனக்கு கிடைத்த உதவிக்காக அவர் அதிக நன்றியுள்ளவராக இருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு அவர்கள் அளித்த உதவிக்கு இருதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தார். “யெகோவாவுடைய பெயருக்கு ஏற்பட்ட நிந்தையை நீக்க நீங்கள் எனக்கு உதவி செய்தீர்கள்” என்று அவர் எழுதினார். யெகோவாவுடன் கொண்டிருந்த உறவை ஊவெயால் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. காலப்போக்கில் அதே சபையில் ஓர் ஊழியராக மறுபடியும் நியமிக்கப்பட்டார்.
‘நம்மைப் போல உணர்வுகளுள்ள ஒரு மனுஷன்’
தாவீது வாழ்ந்த காலத்திற்குப் பின் வந்த நூற்றாண்டில் வாழ்ந்த எலியா, இஸ்ரவேலின் முக்கிய தீர்க்கதரிசிகளில் ஒருவர். ஊழலும் ஒழுக்கக்கேடும் புரையோடிக் கிடந்த காலப்பகுதியில் மெய் வணக்கத்தை ஆதரித்தவர். யெகோவா மீது தான் வைத்திருந்த பக்தியில் சிறிதும் தடுமாறாதவர். அவருக்குப் பின்வந்த எலிசா ஒருமுறை யெகோவாவை ‘எலியாவின் தேவன்’ என அழைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை!—2 இராஜாக்கள் 2:14.
என்றாலும், எலியா ஓர் அசாதாரண மனிதரல்ல. ‘எலியா என்பவன் நம்மைப் போலப் பாடுள்ள [“உணர்வுகளுள்ள,” NW] மனுஷன்’ என யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 5:17) உதாரணமாக, இஸ்ரவேலில் இருந்த பாகால் வணக்கத்தாரை அவர் தோற்கடித்த பிறகு, யேசபேல் ராணி அவரைக் கொல்லப்போவதாக மிரட்டினாள். அவர் எப்படி பிரதிபலித்தார்? அவர் பயந்துபோய் வனாந்தரத்திற்கு ஓடிப்போனார். அங்கே ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து கொண்டு, “போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல” என்று புலம்பினார். இனியும் ஒரு தீர்க்கதரிசியாக சேவை செய்ய விரும்பாமல், சாகவே விரும்பினார்.—1 இராஜாக்கள் 19:4.
இருந்தாலும், எலியாவின் உணர்ச்சிகளை யெகோவா புரிந்துகொண்டார். அவர் தன்னந்தனியாக இல்லை என்பதையும், மெய் வணக்கத்திற்கு தொடர்ந்து உண்மைத்தன்மையை காட்டிய மற்றவர்களும் இருந்தார்கள் என்பதையும் அவருக்கு நினைவுபடுத்தி, அவரைப் பலப்படுத்தினார். அதோடு, யெகோவா தொடர்ந்து எலியாவின் மேல் நம்பிக்கை வைத்து அவருக்கு சில பணிகளை நியமித்தார்.—1 இராஜாக்கள் 19:5-18.
உணர்ச்சி ரீதியில் எலியாவுக்கு ஏற்பட்ட கலக்கம் அவர் கடவுளுடைய தயவை இழந்து விட்டார் என்பதற்கு அடையாளமாக இருக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் முன்பு இயேசு கிறிஸ்து மறுரூபமானபோது அவருடன் காட்சியளிக்க யாரை யெகோவா தேர்ந்தெடுத்தார்? மோசேயையும் எலியாவையுமே. (மத்தேயு 17:1-9) யெகோவா எலியாவை ஒரு முன்மாதிரியான தீர்க்கதரிசியாகக் கருதினார் என்பது தெளிவாக இருந்தது. எலியா ‘நம்மைப் போல உணர்வுகளையுடைய மனுஷனாக’ இருந்தபோதிலும், மெய் வணக்கத்தை திரும்ப நிலைநாட்டுவதற்கும், யெகோவாவின் பெயரை பரிசுத்தப்படுத்துவதற்கும் கடுமையாக உழைத்தார்; இதை யெகோவா மதித்து பாராட்டினார்.
நம்முடைய உணர்ச்சிப்பூர்வ போராட்டம்
இன்று, யெகோவாவின் ஊழியர்கள் சிலசமயங்களில் மனந்தளரலாம் அல்லது கவலைப்படலாம். எலியாவுக்கும் அப்படிப்பட்ட உணர்ச்சிகள் இருந்ததை அறிவது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! எலியாவின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டது போலவே நம்முடைய உணர்ச்சிப் போராட்டத்தையும் யெகோவா புரிந்துகொள்கிறார் என்பதை அறிவது எவ்வளவு உற்சாகமூட்டுவதாக இருக்கிறது.—சங்கீதம் 103:14.
ஒரு பக்கம், நாம் கடவுளையும் அயலாரையும் நேசிக்கிறோம், அவருடைய வேலையான ராஜ்ய நற்செய்தியை அறிவிக்க விரும்புகிறோம். ஆனால் மறு பக்கம், நம்முடைய பிரசங்கிப்பிற்கு நல்ல பிரதிபலிப்பு கிடைக்காதபோது நாம் ஏமாற்றமடைகிறோம், மெய் வணக்கத்தின் எதிரிகளிடமிருந்து வரும் மிரட்டல்களைக் கண்டு சிலசமயங்களில் பயப்படுகிறோம். என்றாலும், தொடர்ந்து சேவை செய்ய எலியாவுக்கு உதவியது போலவே, இன்றுள்ள தம் ஊழியர்களுக்கும் யெகோவா உதவுகிறார். ஹெர்பர்ட் மற்றும் கெர்ட்ரூட்டின் உதாரணத்தை கவனியுங்கள்.
ஹெர்பர்ட்டும் கெர்ட்ரூட்டும் 1952-ல் முன்னாள் ஜெர்மானிய ஜனநாயக குடியரசிலுள்ள லீப்ஜிக்கில் யெகோவாவின் சாட்சிகளாக முழுக்காட்டப்பட்டனர். பிரசங்க ஊழியம் தடை செய்யப்பட்டிருந்ததால், கடவுளுடைய ஊழியர்களுக்கு வாழ்க்கை மிகக் கடினமாக இருந்தது. வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பதைக் குறித்து ஹெர்பர்ட் எவ்வாறு உணர்ந்தார்?
“சில சமயம் நாங்கள் ரொம்ப கவலைப்பட்டோம். வீட்டுக்கு வீடு போகும்போது, அதிகாரிகள் எப்போது வந்து எங்களை கைது செய்வார்கள் என்றே தெரியாது” என அவர் சொல்கிறார். பயத்தை விட்டொழிக்க ஹெர்பர்ட்டுக்கும் மற்றவர்களுக்கும் எது உதவியது? “தனிப்பட்ட பைபிள் படிப்புக்காக அதிக நேரத்தைச் செலவிட்டோம். எங்களுடைய பிரசங்க வேலையைத் தொடர யெகோவா எங்களுக்கு பலம் அளித்தார்” என்று கூறுகிறார். பிரசங்க வேலையில் ஆர்வமூட்டும் பல அனுபவங்கள் ஹெர்பர்ட்டுக்குக் கிடைத்தன. அவை அவரைப் பலப்படுத்தின, அத்துடன் சிரிப்பும் மூட்டின.
பைபிளில் ஆர்வம் காட்டிய நடுத்தர வயது பெண்மணி ஒருவரை ஹெர்பர்ட் சந்தித்தார். சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண்மணியை மறுசந்திப்பு செய்தபோது, அங்கிருந்த இளைஞர் ஒருவரும் அந்தச் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த அறையின் மூலையில் இருந்த போலீஸ் தொப்பியைப் பார்த்ததும் ஹெர்பர்ட் அப்படியே கதிகலங்கி விட்டார். அது அந்த இளைஞனுடையது. அவர் ஒரு போலீஸ். ஹெர்பர்ட்டை எப்படியாவது கைது செய்துவிட வேண்டும் என்று அந்த போலீஸ் வகைபார்த்தார்.
“நீங்க யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தர் தானே! உங்க அடையாள அட்டையை கொஞ்சம் காட்டுங்க” என்றார் அந்தப் போலீஸ். ஹெர்பர்ட் தனது அடையாள அட்டையை அவரிடம் ஒப்படைத்தார். பிறகுதான் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அந்த வீட்டுக்காரப் பெண்மணி போலீஸ்காரரிடம் திரும்பி, “இந்தக் கடவுளுடைய மனுஷனுக்கு ஏதாவது ஆச்சுன்னா, இனிமே இந்த வீட்டுப் பக்கமே நீ தலை காட்ட முடியாது” என்று எச்சரித்தார்.
அந்தப் போலீஸ் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, அடையாள அட்டையை ஹெர்பர்ட்டிடம் திரும்ப கொடுத்துவிட்டு அவரை போக அனுமதித்தார். அந்தப் போலீஸ் அப்பெண்மணியின் மகளைத் திருமணம் செய்யும் நோக்கத்தில் அவளோடு பழகிக் கொண்டிருந்தார் என்பதை ஹெர்பர்ட் பிற்பாடு அறியவந்தார். ஹெர்பர்ட்டை கைது செய்து வம்பில் மாட்டிக்கொள்வதைவிட அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பழக வாய்ப்புக் கிடைத்தாலே போதும் என்று அவர் நினைத்தது தெளிவாக தெரிகிறது.
யெகோவாவை உங்கள் கடவுளாக்கிக் கொள்ளுங்கள்
இந்தச் சம்பவங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? ஆபிரகாமைப் போல, யெகோவாவின் வாக்குறுதிகளில் நமக்கு அசைக்க முடியாத விசுவாசம் இருக்க வேண்டும். தாவீதைப் போல, தவறு செய்யும் போதெல்லாம் நாம் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பி யெகோவாவிடம் நெருங்க வேண்டும். எலியாவைப் போல, கஷ்ட காலத்தில் பலத்திற்காக யெகோவாவைச் சார்ந்திருக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்கையில், இப்போதும் எப்போதும் யெகோவாவை நம்முடைய கடவுளாக்கிக் கொள்ளலாம். ஏனெனில் அவர் “எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்.”—1 தீமோத்தேயு 4:10.
[அடிக்குறிப்பு]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.
[பக்கம் 25-ன் படங்கள்]
கீழ்ப்படிதலுள்ள செயல்கள் ஆபிரகாமின் விசுவாசத்தை பலப்படுத்தின
[பக்கம் 26-ன் படம்]
தாவீதைப் போல நாமும் தவறு செய்துவிட்டால் மனந்திரும்ப வேண்டும்
[பக்கம் 28-ன் படம்]
எலியாவின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டது போலவே, நமது உணர்ச்சிகளையும் யெகோவா புரிந்துகொள்கிறார்