‘தீமையை சகித்திருங்கள்’
“கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், . . . தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும்.”—2 தீமோத்தேயு 2:24.
1. ஊழியம் செய்யும்போது கடுகடுப்பாக பேசுகிற ஆட்களை நாம் ஏன் சிலசமயங்களில் எதிர்ப்படுகிறோம்?
உங்களுக்கு அல்லது நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்கு மதிப்புக் காட்டாத ஆட்களை சந்திக்கும்போது நீங்கள் எப்படி பிரதிபலிக்கிறீர்கள்? கடைசி நாட்களைப் பற்றி விவரிக்கும்போது அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு முன்னறிவித்தார்: மனுஷர் “தூஷிக்கிறவர்களாயும் . . . அவதூறு செய்கிறவர்களாயும் இச்சையடக்கமில்லாதவர்களாயும் கொடுமையுள்ளவர்களாயும்” இருப்பார்கள். (2 தீமோத்தேயு 3:1-5, 12) இத்தகைய ஆட்களை ஊழியத்திலோ வேறு சந்தர்ப்பங்களிலோ நீங்கள் எதிர்ப்படலாம்.
2. நம்மிடம் கடுகடுப்பாக பேசுகிறவர்களிடம் ஞானமாக நடந்துகொள்ள எந்த வேதவசனங்கள் நமக்கு உதவும்?
2 கடுகடுப்பாக பேசுகிற எல்லாருக்குமே சரியானதை செய்வதில் அக்கறையில்லை என்று சொல்ல முடியாது. தங்களுக்கு நேரிட்ட பெரும் துன்பத்தின் காரணமாகவோ ஏமாற்றத்தின் காரணமாகவோ தங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீது சிலர் சீறி விழலாம். (பிரசங்கி 7:7) பெரும்பாலோர் இப்படி நடந்துகொள்வதற்குக் காரணம், எடுத்தெறிந்து பேசுவது சர்வசாதாரணமாக காணப்படும் ஒரு சூழலில் அவர்கள் வேலை செய்வதுதான். அதனால் கிறிஸ்தவர்களான நமக்கு இத்தகைய பேச்சு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக ஆகிவிடாது, ஆனால் மற்றவர்கள் ஏன் அப்படி பேசுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள இது நமக்கு உதவுகிறது. கடுகடுப்பாக பேசும்போது நாம் எப்படி பிரதிபலிக்க வேண்டும்? நீதிமொழிகள் 19:11 இவ்வாறு கூறுகிறது: “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்.” ரோமர் 12:17, 18 நமக்கு இவ்வாறு புத்திமதி அளிக்கிறது: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; . . . கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.”
3. நாம் பிரசங்கிக்கும் செய்தியில் எவ்வாறு சமாதானம் உட்பட்டுள்ளது?
3 நாம் உண்மையிலேயே சமாதானமாக இருந்தால், அது நம்முடைய மனோபாவத்தில் வெளிப்படும். நம்முடைய சொல்லும் செயலும் அதைப் பிரதிபலிக்கும், ஒருவேளை நம்முடைய முகபாவத்திலும் நம்முடைய தொனியிலும்கூட வெளிப்படும். (நீதிமொழிகள் 17:27) பிரசங்கிக்கும்படி இயேசு தமது சீஷர்களை அனுப்பியபோது இவ்வாறு அறிவுரை கூறினார்: “ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள் [“உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும் என்று சொல்லுங்கள்,” ஈஸி டூ ரீட் வர்ஷன்]. அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.” (மத்தேயு 10:12, 13) நாம் கொண்டு செல்லும் செய்தி ஒரு நற்செய்தி. அதை ‘சமாதானத்தின் சுவிசேஷம்’ என்றும் ‘தேவனுடைய கிருபையின் சுவிசேஷம்’ என்றும் “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம்” என்றும் பைபிள் அழைக்கிறது. (எபேசியர் 6:15; அப்போஸ்தலர் 20:24; மத்தேயு 24:14) மற்றவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றிக் குறைகூறுவதோ அவர்களுடைய கருத்துகளைப் பற்றி வாக்குவாதம் செய்வதோ நம்முடைய நோக்கம் அல்ல, ஆனால் கடவுளுடைய வார்த்தையிலிருந்து நற்செய்தியை அறிவிப்பதே நம்முடைய நோக்கம்.
4. நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்பதை சொல்வதற்கு முன்பே, “எனக்கு இஷ்டமில்லை” என்று சொல்லும்போது நீங்கள் என்ன சொல்லலாம்?
4 துளிகூட செவிகொடுத்துக் கேட்காமலேயே, “எனக்கு இஷ்டமில்லை” என வீட்டுக்காரர் வெடுக்கென்று சொல்லிவிடக்கூடும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், “பைபிளிலிருந்து ஒரேவொரு வசனத்தை உங்களுக்கு வாசித்துக் காட்ட விரும்புகிறேன்” என்று நாம் சொல்லலாம். இதற்கு ஒருவேளை அவர் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்க மாட்டார். வேறுசில சந்தர்ப்பங்களில், “எந்தவொரு அநீதியும் இல்லாத, எல்லா ஜனங்களும் ஒருவரையொருவர் நேசிக்கிற ஒரு காலத்தைப் பற்றிதான் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்” என்று சொல்வதும் பொருத்தமாக இருக்கலாம். கூடுதலாக அறிந்துகொள்ளும்படி வீட்டுக்காரரை இது தூண்டவில்லையென்றால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “ஆனால், இப்போது உங்களுக்கு நேரமில்லை என்று நினைக்கிறேன்.” வீட்டுக்காரருடைய பதில் சமாதானமாக இல்லையென்றாலும், அவர் ‘பாத்திரவானல்ல’ என்று முடிவு செய்துவிட வேண்டுமா? அவருடைய பிரதிபலிப்பு எப்படி இருந்தாலும்சரி, ‘எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவர்களாக இருங்கள், . . . தீமையை சகித்திருங்கள்’ என்ற பைபிள் அறிவுரையை நினைவில் வைத்திருங்கள்.—2 தீமோத்தேயு 2:24.
கொடுமை செய்தார் ஆனால் அறியாமையால்
5, 6. இயேசுவின் சீஷர்களை சவுல் எப்படி நடத்தினார், அதற்கு காரணம் என்ன?
5 முதல் நூற்றாண்டில், சவுல் என்ற மனிதர் அவமரியாதையாக பேசுவதற்கும், மூர்க்கத்தனமான நடத்தைக்கும்கூட பேர்போனவராக இருந்தார். ‘கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறினார்’ என அவரைப் பற்றி பைபிள் கூறுகிறது. (அப்போஸ்தலர் 9:1, 2) “தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்” என பிற்பாடு அவர் ஒத்துக்கொண்டார். (1 தீமோத்தேயு 1:13) அவருடைய உறவினர்களில் சிலர் ஏற்கெனவே கிறிஸ்தவர்களாக மாறியிருக்கலாம். என்றபோதிலும், கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள்மீது தனக்கிருந்த மனப்பான்மையைப் பற்றி அவர் இவ்வாறு கூறினார்: “அவர்கள்பேரில் மூர்க்கவெறி கொண்டவனாய் அந்நிய பட்டணங்கள் வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.” (அப்போஸ்தலர் 23:16; 26:11; ரோமர் 16:7, 11) சவுல் அப்படி நடந்துகொண்டபோதிலும் அவரோடு சீஷர்கள் தர்க்கித்ததாக எந்த அத்தாட்சியுமில்லை.
6 ஏன் சவுல் இப்படி நடந்துகொண்டார்? பல வருடங்களுக்குப் பின் அவர் இவ்வாறு எழுதினார்: ‘நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தேன்.’ (1 தீமோத்தேயு 1:13) அவர் ஒரு பரிசேயராக, ‘முன்னோர்களுடைய வேதப் பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டவராக’ இருந்தார். (அப்போஸ்தலர் 22:3) சவுலினுடைய ஆசானாகிய கமாலியேல் ஓரளவு பரந்த மனப்பான்மையுள்ளவராக இருந்தார். என்றாலும், சவுல் கூட்டுறவு வைத்திருந்த பிரதான ஆசாரியனான காய்பாவோ கொள்கை வெறியராக இருந்தார். இயேசு கிறிஸ்துவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுவதில் காய்பாதான் தலைமை வகித்தார். (மத்தேயு 26:3, 4, 63-66; அப்போஸ்தலர் 5:34-39) அதற்குப்பின், இயேசுவின் அப்போஸ்தலர்களை சவுக்கால் அடிக்கும்படி செய்தார்; இயேசுவின் நாமத்தில் பிரசங்கிப்பதை விட்டுவிடும்படி அவர்களுக்கு உறுதியாக ஆணையிட்டார். ஸ்தேவானை வெளியே இழுத்துச் சென்று கல்லெறிந்து கொலை செய்வதற்கு கொதித்தெழுந்த நியாயசங்க கூட்டத்திற்கு காய்பாவே தலைமை தாங்கினார். (அப்போஸ்தலர் 5:27, 28, 40; 7:1-60) ஸ்தேவான் கல்லெறிந்து கொலை செய்யப்படுகையில் சவுல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார், தமஸ்குவிலிருந்த இயேசுவின் சீஷர்களை இன்னும் ஒடுக்குவதற்கு மேற்கொண்ட முயற்சியை நிறைவேற்ற காய்பாவே இவருக்கு அதிகாரம் அளித்தார். (அப்போஸ்தலர் 8:1; 9:1, 2) இந்தச் செல்வாக்கு காரணமாக, கடவுள் மீது தனக்கு பக்தி வைராக்கியம் இருப்பதாகவும் அதைத் தன் செயல்கள் காட்டுவதாகவும் சவுல் நினைத்தார், ஆனால் அவருக்கு உண்மையான விசுவாசம் இருக்கவில்லை. (அப்போஸ்தலர் 22:3-5) அதனால், இயேசுவே உண்மையான மேசியா என்பதை சவுல் உணரத் தவறினார். ஆனால், தமஸ்குவிற்குச் செல்லும் வழியில், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு அற்புதமான முறையில் அவரிடம் பேசியபோது அவருக்குப் புத்தி தெளிந்தது.—அப்போஸ்தலர் 9:3-6.
7. சவுல் தமஸ்குவிற்குச் செல்லும் வழியில் இயேசுவை கண்டதால் ஏற்பட்ட விளைவு என்ன?
7 சில நாட்களுக்குப்பின், சவுலுக்கு சாட்சி கொடுப்பதற்கு அனனியா என்ற சீஷன் அனுப்பப்பட்டார். நீங்கள் போய் சவுலுக்கு சாட்சி கொடுக்க ஆவலாக இருந்திருப்பீர்களா? அனனியா பயந்தார், ஆனால் சவுலிடம் அன்பான முறையில் பேசினார். தமஸ்குவிற்குச் செல்லும் பாதையில் இயேசுவை அற்புதமாக சந்தித்தது சவுலின் மனோபாவத்தை மாற்றியிருந்தது. (அப்போஸ்தலர் 9:10-22) அவர் பின்னர் அப்போஸ்தலன் பவுல் என அறியப்பட்டார்; வைராக்கியமாக பிரசங்கிக்கும் ஒரு கிறிஸ்தவ மிஷனரியாக மாறினார்.
சாந்தமுள்ளவர் ஆனால் தைரியமிக்கவர்
8. கெட்ட காரியங்களைச் செய்திருந்த ஆட்களிடம் இயேசு எவ்வாறு தமது பிதாவின் மனப்பான்மையை காட்டினார்?
8 ஆர்வமிக்க ராஜ்ய அறிவிப்பாளரான இயேசுவோ சாந்தமானவராக அதேசமயத்தில் தைரியமிக்கவராக இருந்தார். (மத்தேயு 11:29) பொல்லாதவர்கள் தங்களுடைய கெட்ட வழிகளைவிட்டு விலகும்படி உந்துவிப்பதில் தமது பரலோக பிதாவின் மனப்பான்மையை வெளிக்காட்டினர். (ஏசாயா 55:6, 7) பாவிகளிடம் இயேசு பழகுகையில், அவர்களிடம் காணப்பட்ட மாற்றத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டார், அத்தகைய ஆட்களை உற்சாகப்படுத்தினார். (லூக்கா 7:37-50; 19:2-10) வெளித் தோற்றத்தை வைத்து மற்றவர்களை எடைபோடுவதற்குப் பதிலாக, அவர்கள் மனந்திரும்ப வேண்டுமென்ற எண்ணத்தில் அவர்களிடம் அன்பையும் சகிப்புத்தன்மையையும் நீடிய பொறுமையையும் காட்டினார்; இவ்விஷயத்திலும் அவர் தம் பிதாவைப் பின்பற்றினார். (ரோமர் 2:4) எல்லா மக்களும் மனந்திரும்பி இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே யெகோவாவின் சித்தமாகும்.—1 தீமோத்தேயு 2:3, 4.
9. ஏசாயா 42:1-4 இயேசுவில் நிறைவேற்றமடைந்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
9 இயேசு கிறிஸ்துவை யெகோவா எவ்வாறு நோக்கினார் என்பதைக் குறிப்பிட்டு, சுவிசேஷ எழுத்தாளரான மத்தேயு பின்வரும் தீர்க்கதரிசன வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார்: “இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப் பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார். வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை. அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப் பண்ணுகிற வரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள்.” (மத்தேயு 12:17-21; ஏசாயா 42:1-4) அந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு இசைவாக, இயேசு கத்திப்பேசி வாக்குவாதம் செய்யவில்லை. இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோதிலும்கூட, நேர்மை இருதயம் படைத்தவர்களைக் கவரும் விதத்திலேயே சத்தியத்தைப் பேசினார்.—யோவான் 7:32, 40, 45, 46.
10, 11. (அ) பரிசேயர்கள் வெளிப்படையாக எதிர்த்துப் பேசியபோதிலும், அவர்களில் சிலருக்கு இயேசு ஏன் சாட்சி கொடுத்தார்? (ஆ) எதிர்ப்பவர்களுக்கு எத்தகைய பதில்களை இயேசு சில சந்தர்ப்பங்களில் கொடுத்தார், ஆனால் அவர் என்ன செய்யவில்லை?
10 இயேசு ஊழியம் செய்தபோது பரிசேயர்கள் பலரிடம் பேசினார். அவருடைய பேச்சிலேயே அவரை சிக்க வைக்க அவர்களில் சிலர் முயன்றனர், என்றாலும் அவர்கள் எல்லாருமே கெட்ட உள்நோக்கமுள்ளவர்கள் என இயேசு முடிவு கட்டிவிடவில்லை. ஓரளவு குறைகாணும் பரிசேயனாகிய சீமோன், இயேசுவைப் பற்றி நன்றாக அறிந்துகொள்ள விரும்பி விருந்துக்காக அவரை அழைத்தார். இயேசு அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, அங்கே வந்திருந்தவர்களுக்கு சாட்சி கொடுத்தார். (லூக்கா 7:36-50) மற்றொரு சந்தர்ப்பத்தில், நிக்கொதேமு என்ற பிரபல பரிசேயர் ஒருவர் இராத்திரி நேரத்தில் இயேசுவைப் பார்க்க வந்தார். இருட்டும் வரை காத்திருந்ததற்காக இயேசு அவரை கடிந்துகொள்ளவில்லை. மாறாக, விசுவாசம் காட்டுவோருக்கு இரட்சிப்புக்கான வழியைத் திறக்க கடவுள் தமது குமாரனை அனுப்பி தமது அன்பைக் காண்பித்ததைப் பற்றி நிக்கொதேமுவுக்கு சாட்சி கொடுத்தார். கடவுளுடைய ஏற்பாட்டிற்குக் கீழ்ப்படிவதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் இயேசு தயவாக சுட்டிக் காட்டினார். (யோவான் 3:1-21) பிற்பாடு, இயேசுவைப் பற்றிய நல்ல அறிக்கைகளை பிற பரிசேயர்கள் மதிப்புக் குறைவாக சொன்னபோது, இயேசுவின் சார்பாக நிக்கொதேமு பேசினார்.—யோவான் 7:46-51.
11 தம்மை கண்ணியில் சிக்கவைக்க முயன்றவர்களுடைய மாய்மாலத்தை இயேசு அறியாதவராக இல்லை. எதிர்ப்பவர்கள் தம்மை வீணான வாக்குவாதங்களில் ஈடுபடுத்த அவர் அனுமதிக்கவில்லை. என்றாலும், பொருத்தமான சந்தர்ப்பத்தில், ஒரு நியமத்தையோ ஓர் உதாரணத்தையோ சொல்வதன் மூலம் அல்லது வேதவசனத்தை மேற்கோள் காட்டுவதன் மூலம் சுருக்கமான அதேசமயத்தில் வலிமைமிக்க பதில்களைக் கொடுத்தார். (மத்தேயு 12:38-42; 15:1-9; 16:1-4) பிற சந்தர்ப்பங்களில், எந்த பலனுமிருக்காது என்பது நன்றாகத் தெரியும்போது அவர் பதிலளிக்காமல் விட்டுவிட்டார்.—மாற்கு 15:2-5; லூக்கா 22:67-70.
12. இயேசுவை நோக்கி கூப்பாடு போட்டபோதும், எப்படி அவரால் மக்களுக்கு உதவ முடிந்தது?
12 சில சந்தர்ப்பங்களில், அசுத்த ஆவிகள் பிடித்திருந்த ஆட்கள் இயேசுவை நோக்கி கூப்பாடு போட்டார்கள். அப்போதெல்லாம் அவர் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டார், கடவுள் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு உதவியும் செய்தார். (மாற்கு 1:23-28; 5:2-8, 15) ஊழியம் செய்யும்போது சிலர் கோபப்பட்டு நம்மிடம் கத்திப் பேசினால், நாமும் இதுபோல நம்மை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்; அதோடு, அத்தகைய சூழ்நிலையை அன்பாகவும் சாமர்த்தியமாகவும் கையாளுவதற்கு முயல வேண்டும்.—கொலோசெயர் 4:6.
குடும்ப வட்டாரத்தில்
13. யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்க ஆரம்பிக்கிற ஒருவரை குடும்ப அங்கத்தினர்கள் ஏன் சிலசமயங்களில் எதிர்க்கின்றனர்?
13 இயேசுவைப் பின்பற்றுவோர் குடும்ப வட்டாரத்திற்குள் தங்களை கட்டுப்படுத்திக்கொள்வது மிக அவசியம். பைபிள் சத்தியத்தால் பெரிதும் கவரப்படுகிற ஒருவர் தனது குடும்பத்தாரும் இதேபோல் இருக்க வேண்டுமென ஏங்குகிறார். ஆனால் இயேசு சொன்னபடி, குடும்ப அங்கத்தினர்கள் எதிர்க்கலாம். (மத்தேயு 10:32-37; யோவான் 15:20, 21) இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உதாரணமாக, நேர்மையானவராக, பொறுப்பானவராக, மரியாதையானவராக நடந்துகொள்வதற்கு பைபிள் போதனை நமக்கு உதவி செய்கிறது. அதேசமயத்தில், எந்தவொரு சூழ்நிலையிலும் நமது படைப்பாளருக்குக் கீழ்ப்படிவதே முக்கியம் என்பதையும் பைபிள் கற்பிக்கிறது. (பிரசங்கி 12:1, 13; அப்போஸ்தலர் 5:29) நாம் யெகோவாவுக்கு விசுவாசமுள்ளவராக இருப்பதால் குடும்பத்தில் தனது அதிகாரம் குறைந்துவிட்டதாக குடும்ப அங்கத்தினர் ஒருவர் உணர்ந்து கோபமடையலாம். இத்தகைய சூழ்நிலையைக் கையாளுகையில், இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வது எவ்வளவு முக்கியம்!—1 பேதுரு 2:21-23; 3:1, 2.
14-16. முன்பு தங்களுடைய குடும்ப அங்கத்தினர்களை எதிர்த்தவர்கள் சிலர் ஏன் மாற்றங்களைச் செய்தார்கள்?
14 இப்போது யெகோவாவுக்கு சேவை செய்துவருகிற அநேகர், பைபிளைப் படிக்க ஆரம்பித்த புதிதில் மாற்றங்கள் செய்ததை அவர்களுடைய மணத் துணைவரோ அல்லது குடும்ப அங்கத்தினரோ எதிர்த்தனர். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி மோசமான செய்திகளைக் கேள்விப்பட்டதால் அவ்வாறு எதிர்த்திருக்கலாம்; இதனால் குடும்பத்திற்குள் வேண்டாத பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என நினைத்தும்கூட அவர்கள் பயந்திருக்கலாம். ஆனால் அவர்களுடைய அந்த மனப்பான்மையை எது மாற்றியது? பெரும்பாலான சந்தர்ப்பங்களில், விசுவாசியாக இருப்பவரின் சிறந்த முன்மாதிரியே முக்கிய காரணமாக இருந்தது. சில சந்தர்ப்பங்களில், அவர் பைபிள் அறிவுரையை உறுதியாகப் பின்பற்றியதே—கிறிஸ்தவ கூட்டங்களுக்குத் தவறாமல் ஆஜரானது, ஊழியத்தில் கலந்துகொண்டது, அதேசமயத்தில் குடும்ப பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டது, திட்டும்போதெல்லாம் பொறுமையுடன் சகித்திருந்தது ஆகியவையே—குடும்பத்தாரின் எதிர்ப்பு தணிய காரணமாக இருந்தது.—1 பேதுரு 2:12.
15 எதிர்ப்பவர் ஒருவேளை தப்பெண்ணத்தின் காரணமாகவோ தற்பெருமையின் காரணமாகவோ, பைபிளிலிருந்து கொடுக்கும் எந்தவொரு விளக்கத்தையும் செவிகொடுத்துக் கேட்க மறுத்திருக்கலாம். ஐக்கிய மாகாணங்களில் உள்ள ஒருவரின் விஷயத்தில் இது உண்மையாக இருந்தது; தான் தேசப்பற்று மிக்கவர் என்று அவர் கூறினார். ஒரு சமயம், அவருடைய மனைவி மாநாட்டிற்குச் சென்றிருந்த சமயத்தில் தன்னுடைய எல்லா துணிமணிகளையும் எடுத்துக்கொண்டு அவர் வெளியேறிவிட்டார். மற்றொரு சந்தர்ப்பத்தில், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டிவிட்டு வீட்டைவிட்டுச் சென்றுவிட்டார். தன்னுடைய நியாயமற்ற நடத்தைக்கு அவளுடைய மதமே காரணமென குற்றம் சாட்டினார். ஆனாலும், அவள் தொடர்ந்து பைபிள் அறிவுரைகளைப் பின்பற்ற முயன்றாள். அவள் ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறி இருபது வருடங்களுக்குப் பிற்பாடு அவரும் ஒரு சாட்சியாக மாறினார். அல்பேனியாவிலுள்ள ஒரு பெண்மணி தன்னுடைய மகள் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படித்து முழுக்காட்டுதல் பெற்றதால் கோபமடைந்தாள். அந்தத் தாய் 12 தடவை தன் மகளுடைய பைபிளைக் கிழித்துப் போட்டாள். பின்பு ஒருநாள் தனது மகள் மேஜையில் வைத்துவிட்டுச் சென்றிருந்த புதிய பைபிளைத் திறந்து பார்த்தாள். எதேச்சையாக மத்தேயு 10:36 அவளுடைய கண்ணில் பட்டது, அந்த வசனம் தனக்குப் பொருந்துவதை அந்தத் தாய் உணர்ந்தாள். என்றாலும், தன் மகளுடைய நலனைக் குறித்து அக்கறையாக இருந்ததால், இத்தாலியில் நடைபெற்ற மாநாட்டிற்கு மற்ற சாட்சிகளுடன் தன்னுடைய மகள் சென்றபோது அவளைப் படகில் ஏற்றி வழியனுப்புவதற்கு அந்தத் தாயும் சென்றாள். அந்தத் தொகுதியினருடைய அன்பையும் அணைப்பையும் சந்தோஷமான சிரிப்பொலிகளையும் கேட்டபோது, அவளுடைய உணர்ச்சிகள் மாற ஆரம்பித்தன. அதற்குப் பிறகு சீக்கிரத்தில், அவளும் பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டாள். இன்றோ, ஆரம்பத்தில் எதிர்க்கிற மற்றவர்களுக்கு அவள் உதவி செய்து வருகிறாள்.
16 ஒரு சந்தர்ப்பத்தில், கணவன் தன் கையில் கத்தியுடன், ராஜ்ய மன்றத்தை நெருங்கிக் கொண்டிருந்த தன் மனைவியை மறித்து கன்னாபின்னாவென்று கத்தினார். அவள் அமைதியுடன் இவ்வாறு பதிலளித்தாள்: “ராஜ்ய மன்றத்திற்குள் வந்து நீங்களே பாருங்கள்.” அவர் வந்தார், காலப்போக்கில் ஒரு கிறிஸ்தவ மூப்பராக மாறினார்.
17. ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் சிலசமயங்களில் சச்சரவுகள் ஏற்பட்டால், எந்த வேதப்பூர்வ அறிவுரை உதவி செய்யும்?
17 வீட்டில் எல்லாருமே கிறிஸ்தவர்களாக இருந்தாலும், சிலசமயங்களில் சச்சரவுகள் ஏற்படலாம், அபூரணத்தின் காரணமாக அப்பொழுது கடும் வார்த்தைகள் கொப்பளிக்கலாம். பூர்வ எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கொடுக்கப்பட்டது கவனிக்கத்தக்கது: “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.” (எபேசியர் 4:31) எபேசு கிறிஸ்தவர்கள் மீது அவர்களைச் சுற்றியிருந்த சூழ்நிலையும், அவர்களுடைய அபூரணமும், சிலருடைய விஷயத்தில், அவர்களுடைய முன்னாள் வாழ்க்கையும் செல்வாக்குச் செலுத்தியது. மாற்றம் செய்வதற்கு எது அவர்களுக்கு உதவும்? அவர்கள் ‘உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாக’ வேண்டும். (எபேசியர் 4:23) அவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் படித்து, அது தங்களுடைய வாழ்க்கையில் எப்படி செல்வாக்கு செலுத்த வேண்டுமென தியானித்து, சக கிறிஸ்தவர்களுடன் கூட்டுறவு கொண்டு, ஊக்கமாய் ஜெபம் செய்தால், அப்பொழுது கடவுளுடைய ஆவியின் கனி அவர்களுடைய வாழ்வில் இன்னும் முழுமையாக வெளிப்பட ஆரம்பிக்கும். ‘ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் [அவர்களுக்கு] மன்னித்தது போல், அவர்களும் ஒருவருக்கொருவர் மன்னிக்க’ கற்றுக்கொள்வார்கள். (எபேசியர் 4:32) மற்றவர்கள் என்ன செய்தாலும்சரி, நாம் எப்போதும் பொறுமையுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் இரக்கமுள்ளவர்களாகவும் மன்னிக்கிறவர்களாகவும் நடந்துகொள்ள வேண்டும். சொல்லப்போனால், ‘ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாமலிருக்க’ வேண்டும். (ரோமர் 12:17, 18) கடவுளைப் பின்பற்றி உள்ளப்பூர்வ அன்பு காட்டுவதே எப்பொழுதும் சரியான காரியமாகும்.—1 யோவான் 4:8.
எல்லா கிறிஸ்தவர்களுக்கும் ஏற்ற அறிவுரை
18. இரண்டு தீமோத்தேயு 2:24-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரை ஏன் பூர்வ எபேசுவிலிருந்த ஒரு மூப்பருக்கு பொருத்தமாக இருந்தது, அது எவ்வாறு எல்லா கிறிஸ்தவர்களுக்கும் பயனளிக்கிறது?
18 ‘தீமையைச் சகிக்கிறவனாயிருக்க வேண்டும்’ என்ற அறிவுரை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பொருந்துகிறது. (2 தீமோத்தேயு 2:24) ஆனால் இது முதலில் தீமோத்தேயுவுக்குச் சொல்லப்பட்டது, எபேசுவில் மூப்பராக சேவை செய்தபோது அவருக்கு இந்த குணம் தேவைப்பட்டது. சபையில் இருந்தவர்களில் சிலர் தங்களுடைய கருத்துகளை காரசாரமாக வெளிப்படுத்தினார்கள், தவறான கோட்பாட்டையும் கற்பித்தார்கள். நியாயப்பிரமாணத்தின் நோக்கத்தை முழுமையாக பகுத்துணராததால், விசுவாசம், அன்பு, நல்மனசாட்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளத் தவறினார்கள். அவர்கள் வாக்குவாதம் செய்தபோது தற்பெருமை சண்டையை மூட்டிவிட்டது, அதேசமயத்தில் கிறிஸ்துவினுடைய போதனைகளின் சாராம்சத்தையும் தேவ பக்தியின் முக்கியத்துவத்தையும் விட்டுவிட்டார்கள். இந்தச் சூழ்நிலையை கையாளுவதற்கு, வேதாகமத்தின் சத்தியத்தில் தீமோத்தேயு உறுதியாயிருக்கவும், அதேசமயத்தில் தன்னுடைய சகோதரர்களை மென்மையாக நடத்தவும் வேண்டியிருந்தது. தற்கால மூப்பர்களைப் போல, மந்தை தனக்கு சொந்தமல்ல என்பதையும், கிறிஸ்தவ அன்பையும் ஐக்கியத்தையும் முன்னேற்றுவிக்கும் விதத்தில் மற்றவர்களை தான் நடத்த வேண்டும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.—எபேசியர் 4:1-3; 1 தீமோத்தேயு 1:3-11; 5:1, 2; 6:3-5.
19. நாம் அனைவரும் ‘சாந்த குணத்தை நாடுவது’ ஏன் முக்கியம்?
19 ‘சாந்த குணத்தை நாடும்படி’ தமது மக்களை கடவுள் உந்துவிக்கிறார். (செப்பனியா 2:3, NW) ‘சாந்தகுணம்’ என்பதற்குரிய எபிரெய வார்த்தை, எரிச்சலடையாமலும் பழிக்குப்பழி வாங்காமலும் ஒருவர் பொறுமையுடன் சகித்திருக்க உதவுகிற மனநிலையைக் குறிக்கிறது. கடினமான சூழ்நிலைகள் மத்தியிலும், நம்மைப் பொறுமையுடன் கட்டுப்படுத்திக் கொள்வதற்கும் யெகோவாவை தகுந்த முறையில் பிரதிநிதித்துவம் செய்வதற்கும் உதவிக்காக நாம் யெகோவாவிடம் ஊக்கமாய் வேண்டுதல் செய்வோமாக.
நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• ஒருவர் அவமரியாதையுடன் உங்களைப் பற்றி பேசும்போது, என்ன வேதவசனங்கள் உங்களுக்கு உதவும்?
• சவுல் ஏன் கொடுமை செய்கிறவராக நடந்துகொண்டார்?
• எல்லா ஆட்களையும் தகுந்த முறையில் நடத்துவதற்கு இயேசுவின் முன்மாதிரி நமக்கு எவ்வாறு உதவும்?
• வீட்டில் நாம் பொறுமையுடன் பேசும்போது என்ன நன்மைகள் கிடைக்கும்?
[பக்கம் 26-ன் படம்]
சவுல் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்திருந்தபோதிலும் அனனியா அவரை தயவுடன் நடத்தினார்
[பக்கம் 29-ன் படம்]
கிறிஸ்தவர் ஒருவர் பொறுப்புகளை உண்மையுடன் கவனித்துக்கொள்வது குடும்பத்திலிருந்து வரும் எதிர்ப்பை தணிக்கலாம்
[பக்கம் 30-ன் படம்]
கிறிஸ்தவர்கள் அன்பையும் ஐக்கியத்தையும் முன்னேற்றுவிக்கிறார்கள்