வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
சிறையிலடைக்கப்பட்ட பேதுரு கதவருகில் வந்ததைக் கேட்டு, ‘அவருடைய தூதன்’ என சீஷர்கள் ஏன் சொன்னார்கள்?—அப்போஸ்தலர் 12:15.
பேதுருவின் பிரதிநிதியாக ஒரு தேவதூதர்தான் கதவருகில் வந்து நின்றதாக சீஷர்கள் தவறாக நினைத்திருக்கலாம். இந்த வசனத்தின் சூழமைவை கவனியுங்கள்.
பேதுருவை ஏரோது கைது செய்திருந்தார், இவர்தான் யாக்கோபுவை கொலை செய்தவர். ஆகவே பேதுருவுக்கும் இதேபோன்ற முடிவுதான் ஏற்படுமென அந்தச் சீஷர்கள் நினைப்பதற்கு நல்ல காரணம் இருந்தது. சிறைச்சாலையில் பேதுரு சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தார், ஒவ்வொரு ஷிஃப்டிலும் நான்கு படைவீரர்கள் என நான்கு ஷிஃப்டில் அவரை காவல் காத்தார்கள். அப்பொழுது, ஒருநாள் இரவில், அவர் அற்புதகரமாக விடுதலை செய்யப்பட்டு, அந்தச் சிறைச்சாலையிலிருந்து தேவதூதனால் வெளியே கொண்டுவரப்பட்டார். என்ன நடந்தது என்பதை பேதுரு கடைசியில் உணர்ந்தபோதோ, “ஏரோதின் கைக்கு . . . என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன்” என கூறினார்.—அப்போஸ்தலர் 12:1-11.
உடனடியாக மாற்கு எனப்பட்ட யோவானின் தாயான மரியாளின் வீட்டிற்குப் பேதுரு சென்றார்; அங்குதான் சீஷர்களில் பலர் கூடியிருந்தார்கள். வாயிற்கதவை அவர் தட்டியபோது, ரோதை என்ற வேலைக்காரி கதவைத் திறப்பதற்காகச் சென்றாள். பேதுருவின் சத்தத்தைக் கேட்டு, அவரை உள்ளேகூட வரவழைக்காமல் மற்றவர்களிடம் சொல்ல விரைந்தோடினாள்! பேதுருதான் வந்திருந்தார் என்பதை முதலில் சீஷர்கள் நம்பவில்லை. மாறாக, ‘அவருடைய தூதன்’ என தவறாக நினைத்துக் கொண்டார்கள்.—அப்போஸ்தலர் 12:12-15.
பேதுரு ஏற்கெனவே கொலை செய்யப்பட்டிருப்பார், அவருடைய ஆவிதான் கதவருகே வந்திருக்கும் என சீஷர்கள் நம்பினார்களா? நிச்சயமாகவே அப்படி நம்பியிருக்க மாட்டார்கள், ஏனென்றால் இறந்தோரைப் பற்றிய வேதப்பூர்வ சத்தியத்தை இயேசுவின் சீஷர்கள் அறிந்திருந்தார்கள், அதாவது “மரித்தோர் ஒன்றும் அறியார்கள்” என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். (பிரசங்கி 9:5, 10) அப்படியானால், ‘அவருடைய தூதன்’ என சொன்னபோது அந்தச் சீஷர்கள் எதை அர்த்தப்படுத்தியிருக்கலாம்?
பண்டைய காலத்திலெல்லாம் தேவதூதர்கள் கடவுளுடைய ஜனங்களுக்கு உதவி செய்திருப்பதை இயேசுவின் சீஷர்கள் அறிந்திருந்தார்கள். உதாரணமாக, ‘எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனைப்’ பற்றி யாக்கோபு கூறினார். (ஆதியாகமம் 48:16) அவர்கள் மத்தியில் நிறுத்திய ஒரு சிறு பிள்ளையைப் பற்றி இயேசு தமது சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரம பிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மத்தேயு 18:10.
யங் பரிசுத்த வேதாகமத்தின் சொல்லர்த்தமான மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்), ஆஜெலோஸ் (“தேவதூதன்”) என்ற கிரேக்க வார்த்தையை “தூதுவர்” என மொழிபெயர்க்கிறது. கடவுளுடைய ஊழியர் ஒவ்வொருவருக்கும் ஒரு தேவதூதன்—அதாவது “காவல் தூதன்” இருந்தார் என்ற நம்பிக்கை யூதர்கள் சிலரது மத்தியில் நிலவியதாக தெரிகிறது. ஆனால் இந்தக் கருத்தை கடவுளுடைய வார்த்தை நேரடியாகப் போதிப்பதில்லை. என்றாலும், ‘அவருடைய தூதன்’ என்று சீஷர்கள் சொன்னபோது, பேதுருவின் பிரதிநிதியாக ஒரு தேவதூதன் வாசலருகே நின்றதாக அவர்கள் நினைத்திருக்கலாம்.