‘யெகோவாவுடைய பட்டயம், கிதியோனுடைய பட்டயம்’
வளமிக்க வயல்களைப் பாழாக்கும் வெட்டுக்கிளிகளைப் போல் அவர்கள் திரள் திரளாக இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில், இஸ்ரவேலில் நியாயாதிபதிகள் ஆளுகை செய்துவருகிறார்கள், இஸ்ரவேலரோ நம்பிக்கையிழந்து நிற்கிறார்கள். ஏன்? மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்தியரும் ஒட்டகத்தில் கூட்டம் கூட்டமாக வந்து ஏழாண்டு காலமாக தேசத்தை கொள்ளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கொள்ளைக்காரர்களுடைய மந்தைகள் நாலாபுறமும் சென்று பச்சைப் பசேலென காட்சியளிக்கும் அனைத்தையும் கபளீகரம் செய்கின்றன. ஆனால் இஸ்ரவேலரிடம் கழுதைகளோ ஆடு மாடுகளோ இல்லை. மீதியானியருடைய ஆட்சி அந்தளவுக்குப் படுபயங்கரமாக இருப்பதால், வறுமையில் வாடும் இஸ்ரவேலருக்கு மலைகளிலும் குகைகளிலும் அண்ட முடியாத இடங்களிலும் உணவுப் பொருட்களைப் பதுக்கி வைப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
ஏன் இத்தகைய துன்பம்? ஏனென்றால் விசுவாசதுரோக இஸ்ரவேலர் பொய் தெய்வங்களை வழிபடுகிறார்கள். அதனால், ஒடுக்குகிறவர்களிடம் யெகோவா அவர்களை ஒப்படைத்துவிடுகிறார். தாக்குப்பிடிக்க முடியாத கட்டத்தில் இஸ்ரவேலர் உதவிக்காக யெகோவாவை நோக்கி கூக்குரலிடுகிறார்கள். அவர் செவிகொடுத்துக் கேட்பாரா? இஸ்ரவேலருடைய அனுபவம் நமக்குப் புகட்டும் பாடம் என்ன?—நியாயாதிபதிகள் 6:1-6.
விழிப்பான விவசாயியா, ‘பராக்கிரமசாலியா’?
இஸ்ரவேல் விவசாயிகள் பொதுவாக எருதுகளைப் பூட்டி காற்றோட்டமான வெட்டவெளியில் கோதுமையை போரடிப்பார்கள். அப்போதுதான், கோதுமை மணிகளை முறத்தில் எடுத்துவிடும்போது பதர்களைக் காற்றடித்துச் செல்லும். ஆனால் தேசத்தைக் கொள்ளையிட்டுச் செல்லத் துடிக்கும் கொள்ளைக் கூட்டத்தாருடைய அச்சுறுத்தல் இருப்பதால் இந்த வேலைகளெல்லாம் அவர்களுடைய பார்வையில் பளிச்சென பட்டுவிடும். ஆகவே, மீதியானியருக்குத் தெரியாமல் மறைந்திருந்து ஒரு திராட்சை ஆலையில் கோதுமையை கிதியோன் போரடிக்கிறார்; இந்த ஆலை ஒரு பாறையில் குடையப்பட்ட பெரிய தொட்டிபோல் இருந்திருக்கலாம். (நியாயாதிபதிகள் 6:11) அங்கே கோதுமை மணிகளை சிறியளவில் மட்டுமே ஒரு தடியால் அடிக்க முடிந்திருக்கலாம். இத்தகைய சூழல்களில், கிடைக்கும் வாய்ப்பை கிதியோன் பயன்படுத்திக் கொள்கிறார்.
யெகோவாவுடைய தூதன் கிதியோனுக்குத் தரிசனமாகி, ‘பராக்கிரமசாலியே யெகோவா உன்னோடே இருக்கிறார்’ என்று சொல்கிறபோது அவருக்கு உண்டாகும் ஆச்சரியத்தை கற்பனை செய்து பாருங்கள். (நியாயாதிபதிகள் 6:12) திராட்சை ஆலையில் இரகசியமாக தானியங்களைப் போரடிக்கும் கிதியோன் நிச்சயமாகவே தன்னை ஒரு பராக்கிரமசாலியென நினைத்துக்கொள்வதில்லை. என்றாலும், இஸ்ரவேலில் வீரதீரமிக்க ஒரு தலைவராக கிதியோன் இருக்க முடியுமென்ற நம்பிக்கை கடவுளுக்கு இருந்ததை அந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. என்றாலும், கிதியோன் தனக்குத்தானே அதை உறுதி செய்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது.
‘இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்’ பொறுப்பை கிதியோனிடம் யெகோவா ஒப்படைக்கிறபோது, தாழ்மையுடன் இவ்வாறு கூறுகிறார்: “ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன்.” மீதியானியரை முறியடிக்கையில் கடவுள் தன்னுடன் இருப்பார் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள ஓர் அடையாளத்தை கிதியோன் கேட்கிறார்; அவருடைய நியாயமான வேண்டுகோளைப் பூர்த்திசெய்ய யெகோவா மனமுள்ளவராக இருக்கிறார். ஆகவே, விருந்தாளியாக வந்த தேவதூதருக்கு கிதியோன் உணவளிக்கிறார், அப்போது ஒரு பாறையிலிருந்து அக்கனி எழும்பி அதை பட்சிக்கிறது. கிதியோனின் பயத்தை யெகோவா தணித்தபின், அந்த இடத்தில் ஒரு பலிபீடத்தை கிதியோன் கட்டுகிறார்.—நியாயாதிபதிகள் 6:12-24.
‘பாகால் வழக்காடட்டும்’
இஸ்ரவேலருடைய மிகப் பெரிய பிரச்சினையே பாகால் வழிபாட்டிற்கு அடிமைப்பட்டுக் கிடப்பதுதான், மீதியானியருடைய ஒடுக்குதல் அல்ல. யெகோவா ‘எரிச்சலுள்ள தேவன்,’ பிற தெய்வங்களைப் பணிந்துகொண்டு அதேசமயத்தில் அவருக்குப் பிரியமான முறையில் சேவை செய்ய யாராலும் முடியாது. (யாத்திராகமம் 34:14) ஆகையால், தனது தகப்பன் கட்டிய பாகால் பலிபீடத்தை இடித்துப் போடுவதற்கும் பரிசுத்த கம்பத்தை வெட்டிப் போடுவதற்கும் கிதியோனுக்கு யெகோவா கட்டளையிடுகிறார். பகலில் இதைச் செய்தால் தன் தகப்பனும் மற்றவர்களும் இதற்கு எப்படி பிரதிபலிப்பார்களோ என பயந்து, பத்து வேலையாட்களுடன் கிதியோன் இரவில் இதைச் செய்கிறார்.
கிதியோன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நியாயமானதே, ஏனென்றால் அவர் செய்யும் “அவச்செயல்” வெளியில் தெரியவந்தால், அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி பாகால் வணக்கத்தார் சொல்வார்கள். என்றாலும், எந்தவித மறுப்புக்கும் இடமளிக்காத நியாயத்தோடு, பாகாலே தெய்வமென்றால் அதுவே தன்னைக் காத்துக்கொள்ள முடியுமென ஜனங்களிடம் கிதியோனுடைய தகப்பனான யோவாஸ் காரணங்காட்டிப் பேசுகிறார். அப்பொழுது, யோவாஸ் தன் மகனை யெருபாகால் என அழைப்பது பொருத்தமானதே; அதன் அர்த்தம் “பாகால் அவனோடே வழக்காடட்டும்” என்பதாகும்.—நியாயாதிபதிகள் 6:25-32.
மெய் வணக்கத்தின் சார்பாக தைரியமாய் நிற்கும் தமது ஊழியர்களை கடவுள் எப்பொழுதும் ஆசீர்வதிக்கிறார். மீதியானியரும் அவர்களுடைய நேசநாடுகளைச் சேர்ந்தவர்களும் இஸ்ரவேல் பிராந்தியத்திற்குள் மீண்டும் படையெடுத்து வருகையில், ‘யெகோவாவின் ஆவி கிதியோன் மீது இறங்குகிறது.’ (நியாயாதிபதிகள் 6:34, NW) கடவுளுடைய ஆவியின், அதாவது செயல் நடப்பிக்கும் சக்தியின், செல்வாக்கினால் மனாசே, ஆசேர், செபுலோன், நப்தலி கோத்திரங்களிலிருந்து படைகளை கிதியோன் ஒன்றுதிரட்டுகிறார்.—நியாயாதிபதிகள் 6:35.
செயல்பட தயாராகுதல்
இப்பொழுது கிதியோனிடம் 32,000 ஆட்கள் கொண்ட ஒரு சேனை இருந்தபோதிலும், கடவுளிடம் ஓர் அடையாளத்தை அவர் கேட்கிறார். போரடிக்கும் களத்தில் போடப்பட்ட ரோமமுடைய தோல் பனியில் நனைந்து நிலமெல்லாம் வறண்டிருந்தால், தன் மூலம் இஸ்ரவேலை கடவுள் காப்பாற்றுவார் என்பதற்கு அது அடையாளமாக இருக்கும். இந்த அற்புதத்தை யெகோவா நடப்பிக்கிறார்; ஆனால் இப்பொழுது கிதியோன் மறுபடியும் ஓர் அடையாளத்தைக் கேட்கிறார். அதாவது வறண்ட நிலம் பனியில் நனைந்து ரோமமுடைய தோல் வறண்டு போகும்படி செய்யச் சொல்கிறார். கிதியோன் அளவுக்கு மீறி எச்சரிக்கையுடன் செயல்படுகிறாரா? இல்லை, ஏனென்றால் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர் கேட்கிற அடையாளத்தை யெகோவா அவருக்குக் கொடுக்கிறார். (நியாயாதிபதிகள் 6:36-40) இன்று இத்தகைய அற்புதங்களை நாம் எதிர்பார்ப்பதில்லை. என்றாலும், யெகோவாவின் வழிநடத்துதலையும் உறுதியையும் அவருடைய வார்த்தையிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளலாம்.
கிதியோனுடைய சேனை மிகப் பெரியதாக இருக்கிறதென கடவுள் இப்பொழுது கூறுகிறார். இவ்வளவு பெரிய படையினால் விரோதிகளை வென்றால், தாங்களே தங்களைக் காப்பாற்றிக் கொண்டதாக இஸ்ரவேலர் பெருமை பாராட்டக்கூடும். ஆனால் வெற்றி வாகை யெகோவாவுக்கே சூட்டப்பட வேண்டும். தீர்வு? மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஓர் ஏற்பாட்டின்படி, பயப்படுகிறவர்களைக் கிதியோன் திரும்பிப்போகும்படி சொல்ல வேண்டும். அப்பொழுது, 22,000 பேர் பின்வாங்கிவிடுகிறார்கள், 10,000 பேர் மாத்திரமே மீந்திருக்கிறார்கள்.—உபாகமம் 20:8; நியாயாதிபதிகள் 7:2, 3.
கடவுளுடைய கண்ணோட்டத்தில், இவர்களும்கூட நிறைய பேர் தான். ஆகவே, அவர்களைத் தண்ணீரண்டைக்கு அழைத்துச் செல்லும்படி கிதியோனுக்குச் சொல்லப்படுகிறது. வெயில் கொளுத்தும் நேரத்தில் நதியண்டைக்குப் படைவீரர்களை கிதியோன் அழைத்துச் செல்லும்படி கடவுள் செய்ததாக யூத சரித்திராசிரியர் ஜொசிஃபஸ் கூறுகிறார். அது எந்த நேரமாக இருந்திருந்தாலும் சரி, அவர்கள் எப்படி தண்ணீர் குடிக்கிறார்கள் என்பதை கிதியோன் கவனிக்கிறார். 300 பேர் மாத்திரமே ஒரு கையில் தண்ணீரை அள்ளி குடிக்கையில், விரோதிகள் வருகிறார்களா என எச்சரிக்கையுடன் கவனிக்கிறார்கள். விழிப்புள்ள அந்த 300 பேரே கிதியோனுடன் செல்கிறார்கள். (நியாயாதிபதிகள் 7:4-8) இப்பொழுது, அவர்களுடைய சூழ்நிலையில் உங்களை வைத்துப் பாருங்கள். விரோதிகள் 1,35,000 பேர் இருப்பதால், உங்களுடைய வல்லமையால் அல்ல ஆனால் யெகோவாவின் வல்லமையால் மாத்திரமே வெற்றிபெற முடியுமென்ற முடிவுக்கு நீங்கள் வந்தாக வேண்டும்!
துணைக்கு ஒருவனை அழைத்துக் கொண்டுபோய் மீதியானியருடைய பாளயத்தை வேவு பார்க்கும்படி கிதியோனிடம் கடவுள் சொல்கிறார். அங்கே இருக்கும்போது, ஒருவன் தான் கண்ட கனவைப் பற்றி தனது நண்பனிடம் சொல்லிக் கொண்டிருப்பதை கிதியோன் ஒட்டுக்கேட்கிறார். மீதியானியரை கிதியோனுடைய கையில் கடவுள் ஒப்புக்கொடுக்கத் தீர்மானித்திருக்கிறார் என்பதே அதன் அர்த்தமென உடனடியாக அவன் விளக்கம் தருகிறான். ஆம், கிதியோனுக்கு என்ன தேவையோ அது கிடைத்துவிட்டது! தனக்கும் தன்னுடைய 300 ஆட்களுக்கும் மீதியானியர் மீது யெகோவா வெற்றி தருவாரென அவர் உறுதியாக நம்புகிறார்.—நியாயாதிபதிகள் 7:9-15.
போர் தந்திரம்
அந்த 300 பேரும் 100 பேரடங்கிய மூன்று படைகளாக பிரிக்கப்படுகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஓர் எக்காளமும் ஒரு பெரிய மண்பானையும் கொடுக்கப்படுகிறது. அந்த மண்பானையில் ஒரு தீப்பந்தம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இதுவே கிதியோனுடைய முதல் ஆணை: ‘நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். நான் எக்காளம் ஊதும்போது, நீங்களும் எக்காளங்களை ஊதி, யெகோவாவுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்பீர்களாக.’—நியாயாதிபதிகள் 7:16-18, 20.
அந்த 300 போர் வீரர்களும் விரோதியினுடைய பாளயத்தின் ஓரம்வரை பதுங்கிச் செல்கிறார்கள். அப்பொழுது இரவு சுமார் பத்து மணி—காவலர் மாறிச் சென்றதற்கு சற்று பிறகு. இதுவே தாக்குவதற்கு ஏற்ற சமயமாக தோன்றுகிறது, ஏனென்றால் மாற்று காவலர்களுடைய கண்கள் இருட்டிற்குப் பழக்கப்படுவதற்கு சற்று நேரமெடுக்கும்.
இப்பொழுது மீதியானியருக்கு எப்பேர்ப்பட்ட திகில் ஏற்படுகிறது! திடீரென 300 மண்பானைகளும் உடைய, 300 எக்காளங்களும் முழங்க, 300 ஆட்களும் ஆரவாரம் செய்ய நிசப்தமான அந்த இரவின் அமைதி குலைகிறது. முக்கியமாக, ‘யெகோவாவுடைய பட்டயம், கிதியோனுடைய பட்டயம்’ என்ற சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, மீதியானியர் கூக்குரலிட ஆரம்பிக்கிறார்கள். அந்தக் குழப்பத்தில், யார் விரோதி யார் நண்பன் என அவர்களால் அடையாளம் கண்டுபிடிப்பது அசாத்தியமே. விரோதிகள் தங்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் பட்டயத்தால் வெட்டி சாய்க்கும்படி கடவுள் செய்கையில் அந்த 300 பேரும் தங்களுடைய இடத்திலேயே ஆடாமல் அசையாமல் நிற்கிறார்கள். பாளயத்தில் இருந்தவர்கள் முறியடிக்கப்படுகிறார்கள், தப்பிச்செல்வது தடுக்கப்படுகிறது, மீதமுள்ளோர் பிடிக்கப்படுகிறார்கள். இதனால் மீதியானியருடைய அச்சுறுத்தல் நிரந்தரமாக நீக்கப்படுகிறது. வெகு காலமாக இருந்துவந்த கொடூர ஆக்கிரமிப்பு கடைசியில் ஒரு முடிவுக்கு வருகிறது.—நியாயாதிபதிகள் 7:19-25; 8:10-12, 28.
இந்த வெற்றிக்குப் பின்பும்கூட, கிதியோன் தாழ்மையாகவே நடந்துகொள்கிறார். சண்டைக்கு அழைக்காததால் புண்பட்டதாக உணர்ந்த எப்பிராயீம் மனுஷர் கிதியோனுடன் சண்டை செய்ய வருகிறார்கள்; அப்போது அவர்களுக்கு சாந்தமாகவே பதிலளிக்கிறார். அவருடைய சாந்தமான பதில் எப்பிராயீம் மனுஷருடைய கோபத்தைத் தணித்து அவர்களை அமைதிப்படுத்துகிறது.—நியாயாதிபதிகள் 8:1-3; நீதிமொழிகள் 15:1.
இப்பொழுது சமாதானம் நிலைநாட்டப்படுகிறது, ராஜாவாக ஆகும்படி கிதியோனை இஸ்ரவேலர் தூண்டுகிறார்கள். எப்பேர்ப்பட்ட ஒரு சோதனை! ஆனால் அதற்கு கிதியோன் மறுத்துவிடுகிறார். மீதியானியரை உண்மையிலேயே வென்றது யார் என்பதை அவர் மறந்துவிடவில்லை. “நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக” என்று அவர் கூறுகிறார்.—நியாயாதிபதிகள் 8:23.
என்றாலும், அபூரணராக இருப்பதால் கிதியோன் எடுக்கிற தீர்மானங்கள் எப்போதுமே நியாயமானதாக இல்லை. உதாரணமாக, போரில் கொள்ளையிட்ட பொருட்களால் ஓர் ஏபோத்தை உண்டாக்கி, அதை தனது பட்டணத்தில் வைக்கிறார்; ஆனால் இதற்குரிய காரணத்தை பைபிள் குறிப்பிடுவதில்லை. இஸ்ரவேலர் எல்லாரும் அந்த ஏபோத்துடன் ‘ஒழுக்கங்கெட்ட உறவுகொள்ள’ ஆரம்பிக்கிறார்கள். அதை வழிபடுகிறார்கள், அது கிதியோனுக்கும் அவருடைய வீட்டாருக்கும்கூட கண்ணியாக அமைந்துவிடுகிறது. இருந்தாலும், முழுக்க முழுக்க விக்கிரக ஆராதனைக்காரராகவே அவர் மாறிவிடுவதில்லை. ஏனென்றால், யெகோவா மீது விசுவாசம் வைத்த மனிதராகவே அவரை வேதாகமம் விவரிக்கிறது.—நியாயாதிபதிகள் 8:27, NW; எபிரெயர் 11:32-34.
நமக்குப் பாடங்கள்
கிதியோனின் கதை எச்சரிப்பூட்டும் மற்றும் உற்சாகமூட்டும் பாடங்களையும் நமக்குப் புகட்டுகின்றன. நம்முடைய மோசமான நடத்தையின் நிமித்தம் யெகோவா நம்மிடமிருந்து அவருடைய ஆவியையும் ஆசீர்வாதத்தையும் நீக்கிவிட்டால், வெட்டுக்கிளிகள் நாசமாக்கிய தேசத்திலே வறுமையில் வாழ்ந்த குடிமக்களைப் போலத்தான் நம்முடைய ஆன்மீக நிலையும் இருக்குமென இது நம்மை எச்சரிக்கிறது. நாம் கொடிய காலங்களில் வாழ்கிறோம், யெகோவாவின் ஆசீர்வாதமே “ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. (நீதிமொழிகள் 10:22) நாம் கடவுளுடைய ஆசீர்வாதத்தை அனுபவிக்கிறோம், ஏனென்றால் நாம் அவரை ‘உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவிக்கிறோம்.’ இல்லையென்றால், அவர் நம்மைப் புறக்கணித்துவிடுவார்.—1 நாளாகமம் 28:9.
கிதியோனைப் பற்றிய விவரப்பதிவிலிருந்து நாம் உற்சாகத்தைப் பெறலாம்; ஏனென்றால் பலவீனமானவர்கள் அல்லது உதவியற்றவர்கள் போல் தோன்றுகிறவர்களைப் பயன்படுத்தியும்கூட எந்தவொரு அச்சுறுத்தலிலிருந்தும் யெகோவா தமது ஜனங்களை விடுவிக்க முடியும். கிதியோனும் அவருடைய 300 ஆட்களும் 1,35,000 மீதியானியரை வெல்ல முடிந்தது, இது கடவுளுடைய எல்லையற்ற வல்லமையை நிரூபிக்கிறது. நாம் நம்பிக்கையிழந்த நிலையில் இருக்கலாம், நம்முடைய விரோதிகள் நம்மைவிட எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால் நாம் நிராதரவாய் இருப்பது போல் தோன்றலாம். என்றாலும், கிதியோனைப் பற்றிய பைபிள் பதிவு யெகோவா மீது நம்பிக்கை வைக்கும்படி நம்மை உற்சாகப்படுத்துகிறது, அவர் மீது நம்பிக்கை வைப்பவர்கள் அனைவரையும் அவர் ஆசீர்வதித்துக் காப்பார்.