முன்பு விரட்டப்பட்டனர், பின்பு வரவேற்கப்பட்டனர்
பெரு நாட்டில் உள்ள வில்காப்பாட்டா என்ற அழகிய நகரத்தில் சான்ட்யாகோவும் அவர் மனைவி லுர்டெஸும் சில வருடங்களுக்கு முன் குடியேறினார்கள். நம்பிக்கையூட்டும் பைபிள் செய்தியை அங்குள்ளவர்களிடம் சொல்வதற்காகவே அங்கு குடியேறினார்கள். ஆனால் கொஞ்ச காலத்திற்குள், குஸ்கோ நகரிலிருந்து கத்தோலிக்க பாதிரி ஒருவர் அங்கு வந்தார். வில்காப்பாட்டா நகரவாசிகளை ஒன்றாகக் கூட்டி, ‘யெகோவாவின் சாட்சிகள் உங்களோடு இருந்தால் உங்களுக்குப் பயங்கரமான கொள்ளை நோய் வரும், கனத்த பனிமழை பெய்து உங்கள் கால்நடைகளும் பயிர்களும் அழிந்துவிடும்’ என்று எச்சரித்தார்.
அநேகர் அவருடைய “தீர்க்கதரிசனத்தை” நம்பினார்கள்; அதனால், கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல், சாட்சிகளாகிய சான்ட்யாகோ, லுர்டெஸ் தம்பதியினரோடு பைபிளைப் படிக்க அந்நகரத்தார் யாருமே முன்வரவில்லை. அந்நகர துணைநிலை ஆளுநரான மிகெல், அந்தத் தம்பதியர் மீது கற்களை எறிந்து, தெருவில் ஓட ஓட விரட்டினார். ஆனாலும் அவர்கள் எப்போதுமே சமாதானத்தோடும், கிறிஸ்தவ நற்குணங்களோடும் நடந்துகொண்டார்கள்.
காலப்போக்கில், அந்நகரவாசிகளில் சிலர் பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டார்கள். சொல்லப்போனால், மிகெலும்கூட தன் மனப்பான்மையை மாற்றிக்கொண்டார். அவர் சான்ட்யாகோவுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்ததோடு, அளவுக்கு அதிகமாய்க் குடிப்பதையும் நிறுத்திவிட்டார். அதுமட்டுமல்ல, எல்லாருடனும் சமாதானமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். கடைசியில் அவரும் அவருடைய மனைவியும் அவர்களுடைய இரண்டு மகள்களும் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
இன்று, அதே நகரத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபை இருக்கிறது, அச்சபை முன்னேறிக்கொண்டும் வருகிறது. சான்ட்யாகோ மற்றும் லுர்டெஸ்மீது எறிந்த கற்களில் பெரும்பாலானவை குறிதப்பியதை நினைத்து இப்போது மிகெல் சந்தோஷப்படுகிறார். அதோடு, மற்றவர்களுடன் சமாதானமாக இருப்பதில் அருமையான முன்மாதிரியாய்த் திகழ்ந்த அந்தத் தம்பதியினருக்கு மிகெல் ஆழ்ந்த நன்றியுள்ளவராக இருக்கிறார்.
[பக்கம் 32-ன் படங்கள்]
சான்ட்யாகோவும் லுர்டெஸும் (மேலே) சமாதானமாக நடந்துகொண்டதால் மிகெலின் (வலது) மனம் மாறியது