உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 1/1 பக். 31
  • தியானிப்பதை இன்பமாக்குங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தியானிப்பதை இன்பமாக்குங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 1/1 பக். 31

தியானிப்பதை இன்பமாக்குங்கள்

தியானிப்பது பற்றிய எண்ணமே சிலரைத் திணறடிக்க வைக்கலாம். சிந்தையை ஒருமுகப்படுத்த வேண்டிய படுகஷ்டமான ஒரு வேலையாக அவர்கள் அதைக் கருதலாம். அதுமட்டுமல்ல, தியானம் செய்யாதிருப்பதை நினைத்து அவர்களுடைய மனம் குறுகுறுக்கலாம்; அதுவும் தியானிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி வாசிக்கும்போது! (பிலிப்பியர் 4:8) என்றாலும், யெகோவாவைப் பற்றி நாம் கற்றுக்கொண்டுள்ள சத்தியங்கள், அருமையான அவரது குணங்கள், பிரமிப்பூட்டுகிற அவரது சாதனைகள், அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியங்கள், மகத்தான அவரது நோக்கங்கள் ஆகியவற்றைப் பற்றி அமைதலாக மனதில் அசைபோட்டுப் பார்க்க நேரம் செலவிடுவது வெகு இன்பமாக இருக்கலாம், இருக்கவும் வேண்டும். ஏன்?

யெகோவா தேவன் இந்தப் பிரபஞ்சத்தின் உன்னதப் பேரரசராகத் திகழ்கிறார், தம்முடைய மாபெரும் நோக்கத்தை நிறைவேற்ற மும்முரமாய் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். (யோவான் 5:17) என்றாலும், தம்மை வணங்குகிற ஒவ்வொரு நபருடைய மனதிலும் ஓடிக்கொண்டிருக்கிற யோசனைகளையெல்லாம் அவர் மிக உன்னிப்பாகக் கவனிக்கிறார். இதை அறிந்திருந்த சங்கீதக்காரனான தாவீது, கடவுளால் ஏவப்பட்டு இவ்வாறு எழுதினார்: ‘யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.’​—⁠சங்கீதம் 139:1, 2.

சங்கீதக்காரனின் இந்த வார்த்தைகளை வாசிக்கும் ஒருவர், ஆரம்பத்தில் தவறாகப் புரிந்துகொள்ளலாம். ‘கடவுள் “தூரத்திலிருந்”தாலும் என்னுடைய மனதிற்குள் வருகிற ஒவ்வொரு கெட்ட நினைவையும் கவனிக்கிறார்’ என அந்த நபர் ஒருவேளை நினைக்கலாம். சொல்லப்போனால், இதை நாம் உணர்ந்திருப்பது நமக்கு நன்மையையே அளிக்கும். ஏனெனில், கெட்ட யோசனைகள் வராதபடி போராடுவதற்கு அது உதவலாம்; அப்படியே வந்தாலும், இயேசுவுடைய மீட்கும்பலியின் மீதுள்ள விசுவாசத்தின் அடிப்படையில் கடவுள் நம்மை மன்னிப்பார் என்ற நம்பிக்கையோடு அவற்றை அவரிடம் அறிக்கையிடுவதற்கும் அது உதவலாம். (1 யோவான் 1:8, 9; 2:1, 2) என்றாலும், யெகோவா தம்முடைய வணக்கத்தாரிடம் உள்ள நல்ல விஷயங்களைப் பார்க்கிறார் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். அவரைப் பற்றி நன்றி உணர்வோடு தியானிக்கும்போது அவர் நம்மைக் கூர்ந்து கவனிக்கிறார்.

“தம்மை வணங்குகிற லட்சோபலட்சம் மக்களின் மனதிலுள்ள ஒவ்வொரு நல்யோசனையையும் யெகோவா உண்மையிலேயே கவனிக்கிறாரா?” என நீங்கள் கேட்கலாம். ஆம், அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. யெகோவா சின்னஞ்சிறு குருவிகளைக்கூட கவனிக்கிறார் என்று இயேசு சொன்னபோது, யெகோவாவுக்கு நம்மீது அக்கறை இருக்கிறது என்பதை வலியுறுத்திக் காட்டினார்; அதன் பிறகு, “சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்” என்றும் அவர் கூறினார். (லூக்கா 12:6, 7, பொது மொழிபெயர்ப்பு) சிட்டுக்குருவிகளால் யெகோவாவைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க முடியாது. அப்படியிருந்தும் அவற்றின் மீது அவர் அக்கறை காட்டுகிறார் என்றால், நம்மீது அவர் இன்னும் எந்தளவுக்கு அக்கறை காட்டுவார், நாம் ஒவ்வொருவரும் அவரைப் பற்றி சிந்திக்கும்போது இன்னும் எந்தளவுக்கு மனமகிழ்வார்! ஆம், தாவீதைப் போலவே நம்பிக்கையோடு நாம் இவ்வாறு ஜெபிக்கலாம்: ‘என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, . . . என் இருதயத்தின் தியானம் உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக [அதாவது, இன்பமாயிருப்பதாக].’​—⁠சங்கீதம் 19:14.

தமது உத்தம வணக்கத்தார் தியானிக்கிற விஷயங்களை யெகோவா மிக உன்னிப்பாகக் கவனிக்கிறார் என்பதற்கான கூடுதல் அத்தாட்சி மல்கியா தீர்க்கதரிசியின் ஏவப்பட்ட வார்த்தைகளில் காணப்படுகிறது. நம்முடைய நாளைக் குறித்து அவர் இவ்வாறு முன்னறிவித்தார்: ‘அப்பொழுது யெகோவாவுக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: யெகோவா கவனித்துக் கேட்பார்; யெகோவாவுக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.’ (மல்கியா 3:16) நாம் யெகோவாவைப் பற்றித் தியானிக்கும்போது அவர் நம்மைக் கூர்ந்து ‘கவனிக்கிறார்’ என்பதை நமக்கு நாமே நினைப்பூட்டிக்கொள்ள வேண்டும்; அப்படிச் செய்யும்போது அவரைப் பற்றி தியானிப்பது நமக்கு இன்பமாயிருக்கும். எனவே, “உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்” என்று சொன்ன சங்கீதக்காரனின் வார்த்தைகளை நாமும் சேர்ந்து எதிரொலிப்போமாக!​—⁠சங்கீதம் 77:⁠12.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்