உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 2/15 பக். 3-4
  • நமக்கு ஒரு மேசியா தேவையா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நமக்கு ஒரு மேசியா தேவையா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • இதே தகவல்
  • மேசியா! மீட்புக்கான கடவுளின் வழி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • “மேசியாவைக் கண்டோம்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • “நாங்கள் மேசியாவைக் கண்டோம்”!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • மேசியா—ஒரு மெய்யான நம்பிக்கையா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 2/15 பக். 3-4

நமக்கு ஒரு மேசியா தேவையா?

“நமக்கு ஒரு மேசியா தேவையா?” என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம். ஒரு மேசியா உங்களுக்கு உண்மையிலேயே ஏதாவது செய்யப் போகிறாரா என நீங்கள் கேட்பது நியாயம்தான்.

மற்ற எல்லாருக்கும் ஒரு மேசியா எந்தளவு தேவையோ அந்தளவு கண்டிப்பாக உங்களுக்கும் அவர் தேவை என உங்கள் மரியாதைக்குப் பாத்திரமான சிலர் அடித்துச் சொல்வார்கள். முதல் நூற்றாண்டில் யூத சட்ட நிபுணராய் இருந்த ஒருவர் மேசியாவைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “தேவனுடைய வாக்குறுதிகள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ‘ஆம்’ என்றுள்ளது.” இப்படி எழுதுவதன் மூலம் பூமியிலுள்ள சகல ஜனங்களையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்ற நமது படைப்பாளருடைய நோக்கத்தில் மேசியா வகிக்கும் முக்கியப் பங்கை அவர் சிறப்பித்துக் காட்டினார். (2 கொரிந்தியர் 1:20, ஈஸி டு ரீட் வர்ஷன்) மேசியா வகிக்கும் பங்கு மிகவும் இன்றியமையாதது என்பதால்தான், அவர் பூமிக்கு வந்தது பைபிள் தீர்க்கதரிசனத்தின் மையப் பொருளாக இருக்கிறது; கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக, லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்படுகிற ஒரு கையேட்டில், ஹென்றி எச். ஹாலி என்பவர் அதை உறுதிப்படுத்தினார்: “[மேசியாவின்] வருகைமீது எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்கும், அதற்கான வழியை ஆயத்தம் செய்வதற்குமே பழைய ஏற்பாடு எழுதப்பட்டது.” ஆனால் அவரது வருகை அவசியமா? அதைக் குறித்து நீங்கள் ஏன் அக்கறைகொள்ள வேண்டும்?

“மேசியா” என்ற வார்த்தை “அபிஷேகம் செய்யப்பட்டவர்” எனப் பொருள்படுகிறது; இது, எல்லாருக்கும் நன்கு தெரிந்த “கிறிஸ்து” என்ற வார்த்தைக்கு இணையாக உள்ளது. அவரை “அதி உன்னத மீட்பர்” என என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்காவின் 1970-⁠ம் வருடப் பதிப்பு குறிப்பிடுகிறது; முதல் மானிட ஜோடியான ஆதாம் ஏவாள் அவபக்தியாக நடந்துகொண்டதன் காரணமாகவே மேசியா வர வேண்டியிருந்தது. ஆரம்பத்தில், ஆதாமும் ஏவாளும் பரிபூரணமாகப் படைக்கப்பட்டு, பரதீஸில் என்றென்றும் வாழும் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பைப் பெற்றிருந்தார்கள்; ஆனால் பிற்பாடு அந்த எதிர்பார்ப்பை அவர்கள் இழந்தார்கள். ஒரு கலகக்கார தேவதூதன்​—⁠பிற்பாடு பிசாசாகிய சாத்தான் என்றழைக்கப்பட்டவன்​—⁠கடவுள் ரொம்பவும் கெடுபிடியானவர் என்றும், நல்லது கெட்டதைத் தாங்களாகவே தீர்மானித்தால் இன்னும் சந்தோஷமாக அவர்களால் வாழ முடியும் என்றும் அவர்களிடம் மறைமுகமாகத் தெரிவித்தான்.​—⁠ஆதியாகமம் 3:1-5.

அந்தப் பொய்யை ஏவாள் நம்பி, மோசம்போனாள். பிசாசினால் தூண்டப்பட்ட கலகத்திற்கு ஆதாமும் உடந்தையானான்; தன்னைப் படைத்த கடவுளுக்கு உத்தமமாய் இருப்பதைவிட தன் மனைவியின் தோழமையை அனுபவிப்பதையே அவன் உயர்வாகக் கருதினான்போலும். (ஆதியாகமம் 3:6; 1 தீமோத்தேயு 2:14) இவ்வாறு ஆதாமும் ஏவாளும், பரதீஸ் பூமியில் நித்தியமாக வாழும் எதிர்பார்ப்பை இழந்தார்கள், தங்கள் வருங்கால சந்ததியாரும் அதை இழந்துபோகக் காரணமானார்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், தங்களுடைய சந்ததியாருக்கு, பாவத்தையும் அதனால் விளைந்த மரணத்தையும் சொத்தாக விட்டுச்சென்றார்கள்.​—⁠ரோமர் 5:12.

அந்தக் கலகத்தினால் சங்கிலித் தொடர்போல் வர ஆரம்பித்த தீய பாதிப்புகளைச் சரிசெய்யும் வழியை நமது படைப்பாளரான யெகோவா உடனடியாய்த் தீர்மானித்தார். ஆம், ஈடுக்கு ஈடு என்ற நியமத்தின் அடிப்படையில் மனிதரோடு சமரசமாவதற்குத் தீர்மானித்தார்; பிற்பாடு அது, ஒரு சட்டப்பூர்வ நியமமாக மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இடம்பெறவிருந்தது. (உபாகமம் 19:21; 1 யோவான் 3:8) அந்தச் சட்டப்பூர்வ நியமத்திற்கேற்ப நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மனித குடும்பத்திற்காக படைப்பாளர் வைத்திருந்த ஆரம்ப நோக்கத்தின்படி, ஆதாம் ஏவாளின் துர்பாக்கிய சந்ததியினர் எவருக்கும் பரதீஸ் பூமியில் முடிவில்லா வாழ்வு கிடைக்கும். அதனால்தான், மேசியா வருவது அவசியமானது.

பிசாசுக்குத் தண்டனைத் தீர்ப்பை வழங்கியபோது, யெகோவா தேவன் இவ்வாறு சொன்னார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதியாகமம் 3:15) இதுவே, பைபிளில் பதிவாகியுள்ள முதல் தீர்க்கதரிசனம். பைபிள் அறிஞர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “பைபிளில் மேசியாவைப் பற்றிக் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளுக்கெல்லாம் [இந்த] வசனமே ஆரம்பம்.” மற்றொரு அறிஞர் கூறுகிறபடி, “பாவத்தினால் விளைந்த தீய பாதிப்புகள் அனைத்தையும் சரிசெய்வதற்கும்,” அதேசமயத்தில் மனிதகுலத்திற்கு ஆசீர்வாதங்களைப் பொழிவதற்கும் கடவுளால் பயன்படுத்தப்படுபவரே மேசியா.​—⁠எபிரெயர் 2:14, 15.

ஆனால், மனிதகுலம் இன்று நிச்சயமாகவே அந்த ஆசீர்வாதங்களை அனுபவிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதற்குப் பதிலாக, நம்பிக்கை இழந்த நிலையில் அது தவித்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான், தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “ஏராளமான யூதர்கள் ஒரு மேசியாவுக்காக இன்னும் காத்திருக்கிறார்கள், . . . பொல்லாப்புகளைச் சரிசெய்யவும், ஜனங்களுடைய எதிரிகளைத் தோற்கடிக்கவும்” அவர் வருவார் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். என்றாலும், மேசியா ஏற்கெனவே வந்துவிட்டார் என்று பைபிள் சொல்கிறது. பைபிள் சொல்வதை நம்புவதற்குத் தகுந்த காரணம் இருக்கிறதா? அடுத்த கட்டுரை இதற்குப் பதில் அளிக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்