“செவிடர் . . . கேட்பார்கள்”
‘செவிடர் கேட்பார்கள்’ என்ற வாக்குறுதியை வாசிக்கும்போது எப்படி இருக்கும்? அவர்கள் மனம் சந்தோஷத்தில் துள்ளும்! பறவைகளின் பாடல்களையும் பிள்ளைகளின் சிரிப்பொலிகளையும் கடலோரப் பாறைகள்மீது மோதுகிற அலைகளின் ஆக்ரோஷங்களையும் கேட்க முடியாதவர்களின் கஷ்டம் காது கேட்கிறவர்களுக்குப் புரியாது. என்றாலும், இன்று உலகில் கோடிக்கணக்கானோர் காதுகேளாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் செவி திறக்கப்படும் என்பதற்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? காது கேட்க முடியாத நிலையைப் பற்றியும் அந்நிலை நீக்கப்படுவது பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
செவிட்டுத்தன்மை என்பது ஓரளவு அல்லது முழுமையாக காது கேளாத நிலை. இது பெரும்பாலும் வியாதி, விபத்து போன்ற ஏதாவது ஒரு காரணத்தினால் ஏற்படலாம். அல்லது திடீரென காதைக் கிழிக்கும் ஒரு சத்தத்தைக் கேட்பதாலோ இரைச்சலை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதாலோ காது கேளாமல் போகலாம். சிலர், பிறவிச் செவிடர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலர், பிசாசு பிடித்துக்கொள்வதால் செவிடர்களாகிறார்கள் என்று பைபிள் காட்டுகிறது. மாற்கு 9:25-29-ன்படி, ஒரு சிறுவனைப் பிடித்துக்கொண்ட பிசாசை, “ஊமையும் செவிடுமான ஆவி” என்று இயேசு அழைத்தார்.
ஏசாயா 35:5-ல் ‘செவிடர்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தையின் எபிரெய பதம் செரெஷ். இதன் மூல வார்த்தை, கேட்கிறவர் பங்கில் கேளாதிருப்பதைக் குறிக்கலாம், அல்லது பேச வேண்டியவர் பங்கில் மெளனமாக இருப்பதைக் குறிக்கலாம். சிலசமயம், ‘கேளாதவராய் இருத்தல் [அல்லது ஆகிவிடுதல்]’ என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, சங்கீதம் 28:1 இவ்வாறு சொல்கிறது: “என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்.” மற்ற சமயங்களிலோ, ‘மவுனமாயிருத்தல்’ என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, சங்கீதம் 35:22 இவ்வாறு சொல்கிறது: “கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்.”
காதைப் படைத்தவரே யெகோவாதான். “கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் [யெகோவா] உண்டாக்கினார்.” (நீதிமொழிகள் 20:12) செவிடர்களிடம் தயவாக நடந்துகொள்ளும்படி அவர் தம் மக்களாகிய இஸ்ரவேலருக்கு அறிவுரை கூறினார். செவிடர்களை நிந்தியாமல் இருக்கும்படி கட்டளையிட்டார், ஏனென்றால் அவர்களால் கேட்க முடியாத அப்படிப்பட்ட பேச்சுகளுக்கு அவர்களால் மறு உத்தரவு தரமுடியாதே. கடவுளுடைய சட்டம் இவ்வாறு அறிவுறுத்தியது: “‘செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.’”—லேவியராகமம் 19:14. ஒப்பிடுக: சங்கீதம் 38:13, 14.
யெகோவா எப்படி ‘செவிடனை உண்டாக்குகிறார்?’
யாத்திராகமம் 4:11-ல் நாம் இவ்வாறாக வாசிக்கிறோம்: “அப்பொழுது கர்த்தர் [அதாவது, யெகோவா] அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய [அதாவது, யெகோவாவாகிய] நான் அல்லவா?” ‘செவிடனை உண்டாக்கினவர் நானே’ என்று யெகோவா சொல்கிறபோது எல்லாச் சமயத்திலும் அவரே அதற்குக் காரணம் என்று அர்த்தப்படுத்தவில்லை. என்றாலும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவோ நோக்கத்திற்காகவோ ஒரு நபரை செவிடாக்க, ஊமையாக்க அல்லது குருடாக்க யெகோவாவால் முடியும். உதாரணத்திற்கு, முழுக்காட்டுபவரான யோவானுடைய தந்தை அவநம்பிக்கை காட்டியபோது கொஞ்ச காலத்திற்கு யெகோவா அவரை ஊமையாக்கினார்.—லூக்கா 1:18-22, 62-64.
ஆவிக்குரிய விதத்தில் செவிடர்களாக இருப்பவர்களையும் கடவுளால் ‘உண்டாக்க’ முடியும். எப்படி? ஆவிக்குரிய விதத்தில் செவிடர்களாக இருக்க விரும்புகிற ஆட்களை அப்படியே இருக்கும்படி அனுமதிப்பதன் மூலம். விசுவாசமற்ற இஸ்ரவேலர்களிடம் போய், “நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள்” என்று சொல்லுமாறு ஏசாயாவை யெகோவா அனுப்பிவைத்தார். “இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு” என்று மேலுமாக ஏசாயாவுக்கு யெகோவா கட்டளையிட்டார்.—ஏசாயா 6:9, 10.
வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிற பொல்லாத ஜனங்களை, பாம்பாட்டிகளின் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைத்துக்கொள்கிற செவிட்டு விரியன் பாம்பிற்கு ஒப்பிட்டு சங்கீதக்காரன் பேசுகிறார். (சங்கீதம் 58:3-5) அதுபோலவே ஏசாயாவின் காலத்திலிருந்த இஸ்ரவேலர்கள் காதுகள் இருந்தும் கேளாதவர்கள்போல் இருந்தார்கள். அதாவது, அவர்கள் யெகோவாவின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, அதன்படி செயல்பட மறுத்தார்கள். “கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும், காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள்” என்று ஏசாயா மூலமாக யெகோவா சொன்னார். (ஏசாயா 43:8; 42:18-20) ஆனால், முன்னறிவிக்கப்பட்டபடி கடவுளுடைய மக்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தபிறகு ஆன்மீக ரீதியில் காதுகளை இனியும் பொத்திக்கொள்ளாமல் யெகோவாவின் வார்த்தையைக் கேட்பார்கள், அதாவது, கேட்டு நடப்பார்கள். இவ்விதமாக ஆன்மீக செவிகள் திறக்கப்படுவதைக் குறித்தே ஏசாயா மூலமாக யெகோவா இந்த வாக்குறுதியை அளித்தார்: “அக்காலத்திலே செவிடர் புஸ்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்; குருடரின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்துக்கும் நீங்கலாகிப் பார்வையடையும்.” (ஏசாயா 29:18; 35:5) அப்படியென்றால் எதிர்காலத்தில் ஆன்மீக செவிட்டுத்தன்மையிலிருந்து மட்டும்தான் விடுதலை பெற முடியுமா?
காது கேளாதோருக்கு ஒளி(லி)மயமான எதிர்காலம்
இயேசு பூமியில் இருந்தபோது அநேகரின் அறிவுக் காதுகளைத் திறந்து குணப்படுத்தினார். அவர்கள் தங்கள் காதுகளால் கேட்ட காரியங்களை வாழ்க்கையில் கடைப்பிடிக்க உதவினார். தம்முடைய சத்திய போதனைகளைக் கேட்டு கடைப்பிடித்தவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.” (மத்தேயு 13:16, 23) என்றாலும் இயேசு, ஆன்மீக ரீதியில் செவிடர்களாக இருந்தவர்களைக் குணப்படுத்துவதோடு நிறுத்திக்கொள்ளவில்லை.
இயேசு தம் ஊழிய காலத்தின்போது அற்புதங்களைச் செய்வதன் மூலம், குணப்படுத்தும் வல்லமை தமக்கு இருப்பதைக் காட்டினார். உதாரணத்திற்கு, அநேக சந்தர்ப்பங்களில் காது கேளாதவர்களைக் குணப்படுத்தினார். இயேசு செய்த அற்புதங்களையெல்லாம் முழுக்காட்டுபவரான யோவானின் சீஷர்கள் சிறையிலிருந்த அவரிடம் போய் இவ்வாறாக அறிக்கை செய்தார்கள்: “குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.” (மத்தேயு 11:5; லூக்கா 7:22) சில ஆட்கள் இயேசுவிடம் ஒரு செவிடனை அழைத்துவந்து அவனை குணப்படுத்தும்படி கேட்டார்கள். அப்போது இயேசு “திறக்கப்படுவாயாக” என்றபோது அந்த மனிதனின் ‘செவிகள் திறக்கப்பட்டன’ என்று சுவிசேஷப் பதிவிலிருந்து தெரிந்துகொள்கிறோம். அந்த ஆட்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! அதைப் பார்த்தவர்களின் பிரதிபலிப்பை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. “எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.”—மாற்கு 7:32-37.
இயேசு பிரசங்கித்த நற்செய்தி, கடவுள் வாக்குறுதியளித்த ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி; அந்த ராஜ்யம் எல்லா துன்பங்களையும் வேதனையையும் நீக்கிவிடும். எனவே இயேசு பூமியை ஆட்சி செய்யும்போது எல்லா வேதனைகளையும், ஏன், காது கேளாதவர்களின் வேதனையையும் நீக்கிவிடுவார் என்பது தெளிவாகத் தெரிகிறது.