நல்ல பேச்சுத்தொடர்பு இருக்கிறதா?
சில ஆண்டுகளுக்கு முன்பு, கடிதம் எழுதும் போட்டி ஒன்றை ஜப்பானிலுள்ள ஒரு வங்கி நடத்தியது; “60 வயதுக்காரரின் காதல் கடிதம்” என்பதே அப்போட்டியின் தலைப்பு. 50-களிலும் 60-களிலும் உள்ள ஜப்பானியர் தங்களுடைய மணத்துணையின் மீது வைத்திருக்கும் “உள்ளப்பூர்வமான உணர்ச்சிகளை” வெளிப்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் தனது மனைவிக்கு இவ்வாறு எழுதினார்: “நான் சொல்வதைக் கேட்டு நீ சிரிக்கலாம், ஆனால் அதை சொல்லாவிட்டால் என் மனம் அடித்துக்கொண்டே இருக்கும். இதோ, என் மனதிலுள்ளதை வெளிப்படுத்திவிடுகிறேன்: என்னை கல்யாணம் செய்துகொண்டதற்காக ரொம்ப நன்றி.”
சில கீழை நாடுகளிலும் பிற நாடுகளிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில், உணர்ச்சிகளைத் தாராளமாக வெளிப்படுத்தும் பழக்கம் இல்லை. இருந்தாலும், 15,000-க்கும் அதிகமானோர் அந்தக் காதல் கடிதப் போட்டியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். அது அமோக வரவேற்பை பெற்றதால் அந்தப் போட்டி மறுபடியும் நடத்தப்பட்டது; அந்தக் கடிதங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகங்களும் பிரபலமாயின. நேசத்திற்குரிய துணையைப் பற்றி தங்கள் மனதில் புதைந்து கிடக்கும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வேண்டுமென்ற வாஞ்சை பலருக்கு இருப்பதை இது காட்டுகிறது. ஆனால் எல்லாருமே இப்படிச் செய்வதில்லை. ஏன்? ஏனென்றால் உணர்ச்சிகளைப் பிறரிடம் வெளிப்படுத்துவதற்கு—உதாரணமாக, துணையிடம் வெளிப்படுத்துவதற்கு—ஓரளவு முயற்சியும் திறமையும் தேவைப்படலாம்.
ஜப்பானில் வசிக்கும் வயதான மனைவிமார் பலர், தங்கள் கணவர்மாரிடமிருந்து விவாகரத்து பெற வழக்கு தொடுத்திருக்கிறார்கள்; வருடக்கணக்காக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வேரூன்றிய மனக்கசப்புகளே இதற்குக் காரணமென ஓய்வு பற்றிய தனது நூலில் ஹிட்டோஷி காட்டோ கூறுகிறார். “சிக்கல்கள் ஏற்பட்ட சமயத்தில் தம்பதியர் அவற்றைப் பேசித் தீர்க்காததால் வந்த விளைவுதான் இதெல்லாம்” என்று அவர் கூறுகிறார்.
வேலையிலிருந்து ஓய்வுபெறும் சமயத்தில், விவாகரத்து நோட்டீஸை மனைவி கொடுக்கும்போது கணவர் அதிர்ச்சி அடையலாம். அந்தத் தம்பதியர் தங்கள் மனதில் உள்ளதை ஒருவருக்கொருவர் பல வருடங்களாக மனம்விட்டுப் பேசாதிருந்திருக்கலாம். கணவனும் மனைவியும் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கலாம், ஆனால் அந்த உரையாடலை இனிமையாகத் தொடர முடியாமல் இருந்திருக்கலாம். நெருங்கிய பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வதற்குப் பதிலாக, வாக்குவாதம் எனும் நீர்ச்சுழற்சிக்குள் மீண்டும் மீண்டும் சிக்கியிருக்கலாம்.
கணவனும் மனைவியும் தங்களுடைய கருத்துவேறுபாடுகளைத் தீர்த்துக்கொண்டு உணர்ச்சிகளை இனிய முறையில் வெளிப்படுத்துவது எப்படி? திருமண ஆலோசகரால் எழுதப்பட்ட ஒரு நவீன புத்தகத்தில் அல்ல, ஆனால் காலங்காலமாய் பொக்கிஷமாய் போற்றப்பட்டு வரும் பண்டைக்கால புத்தகமான பைபிளில் மிகவும் நடைமுறையான ஆலோசனைகளை நீங்கள் காணலாம்.