நீங்கள் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறீர்களா?
‘நான் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறேனா?’ என்று உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ளக்கூடும். இக்கேள்விக்கு நீங்கள் அல்லது மற்றவர்கள் தரும் பதிலை அறிய சமூக அறிவியலாளர்கள் கடும் முயற்சிசெய்து வருகிறார்கள், ஆனால் அதை அறிவது சுலபமானது அல்ல. கணவனுக்கு மனைவியிடம் எந்தளவு அன்பு இருக்கிறது என்பதையோ குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டதால் எந்தளவு வேதனை ஏற்படுகிறது என்பதையோ அளவிடுவது சுலபமா? அப்படித்தான் இதுவும் இருக்கிறது. ஆம், உணர்ச்சிகளைத் துல்லியமாக அளவிட்டுச் சொல்வது எளிதே அல்ல. என்றாலும், சந்தோஷமாய் இருக்கும் திறன் எல்லா மனிதருக்கும் உள்ளது என்ற அடிப்படை உண்மையை சமூக அறிவியலாளர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
இந்தத் திறனுடன் மனிதர்கள் பிறந்திருந்தாலும், பெரிய பெரிய பிரச்சினைகள் சரமாரியாகத் தாக்குவதால் இன்றைக்குச் சந்தோஷம் அடியோடு மறைந்துவிட்டது. இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: சில நகரங்களில், எய்ட்ஸ் நோய் அநேகரை வாரிக்கொண்டு போவதால் கல்லறைகள் நிரம்பி வழிகின்றன. தற்போது இறப்பவர்களைப் புதைக்க இடம் இல்லாததால் ஏற்கெனவே இருக்கும் கல்லறைகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி தரப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், சவப்பெட்டி செய்வது முக்கிய தொழிலாகிவிட்டது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும்சரி, பயங்கரமான வியாதியால் அவதியுறுகிறவர்களின் முகத்திலும் உறவினர்களையும் நண்பர்களையும் பறிகொடுத்தவர்களின் முகத்திலும் சோக ரேகை படர்ந்திருப்பதை கவனித்திருப்பீர்கள்.
செல்வச்செழிப்பில் மிதக்கும் நாடுகளைப் பற்றியென்ன? எதிர்பாராத சம்பவங்கள் உஷாராக இல்லாதவர்களின் பணம் எனும் பாதுகாப்புக் கோட்டையைத் தகர்த்துவிடுகின்றன. அமெரிக்காவில், பலருக்கு ஓய்வூதிய சலுகைகள் கிடைக்காததால் அவர்கள் மீண்டும் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவ செலவு ஒரு குடும்பத்தின் சேமிப்பு முழுவதையுமே விழுங்கிவிடுவதுபோல் தெரிகிறது. “பெரும் பண நெருக்கடிகளுடனும் உடல்நல பிரச்சினைகளுடனும் வருகிற ஆட்களைப் பார்க்கும்போது இருதயம் நொறுங்கிவிடுகிறது” என சட்ட ஆலோசகர் ஒருவர் கூறுகிறார். “‘உங்க வீட்டை விற்பதைத் தவிர வேறு வழியே இல்லை’ என்று பல சந்தர்ப்பங்களில் சொல்ல வேண்டியிருக்கிறது.” ஆனால் பணப் பிரச்சினையே இல்லாதவர்களைப் பற்றியென்ன? அவர்களுடைய சந்தோஷத்தை ஏதாவது பறித்துவிடுமா?
சிலர், ரிச்சர்ட் ராஜர்ஸ் என்ற புகழ்பெற்ற இசையமைப்பாளரைப் போல் இருக்கிறார்கள். அவரைப் பற்றி இவ்வாறு சொல்லப்பட்டது: “அவரைப் போல் எண்ணற்றவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியவர்கள் வெகு சிலரே.” அவருடைய பாடல்கள் மற்றவர்களுக்குச் சந்தோஷத்தைத் தந்தபோதிலும், அவரோ தீராத மனச்சோர்வினால் அவதிப்பட்டார். அநேகர் அடைய ஏங்கும் இரு இலட்சியங்களை, அதாவது பணத்தையும் புகழையும் அவர் அடைந்தார், ஆனால் சந்தோஷத்தை அடைந்தாரா? வாழ்க்கை சரிதை எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “[ராஜர்ஸ்] தனது பணியில் அபார வெற்றி கண்டார், குபேரனாக வாழ்ந்தார், இரு முறை புலிட்ஸர் பரிசுகளைப் பெற்றார். என்றாலும், அவர் பெரும்பாலான சமயங்களில் சோர்வே உருவானவராக இருந்தார்.”
ஆனால், செல்வம் சந்தோஷத்தைத் தருமென நம்பினால் பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சும் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். “தனிமையும் வெறுமையும்” செல்வந்தர்கள் பலரை வாட்டி வதைப்பதாக முதலீட்டு நிருபர் ஒருவர் கனடாவிலுள்ள டோரான்டோவில் வெளியாகும் த குளோப் அண்ட் மெயில் செய்தித்தாளில் விவரித்தார். பணக்கார பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்குப் பணத்தையும் பொருள்களையும் வாரிக்கொடுக்கும்போது, “துன்பத்திற்கே வித்திடுகிறார்கள்” என நிதி ஆலோசகர் ஒருவர் கூறினார்.
சந்தோஷத்திற்குப் பலமான ஆதாரம் உண்டா?
ஒரு பூச்செடி நன்கு பூத்துக் குலுங்குவதற்கு வளமான மண்ணும் போதுமான நீரும் தகுந்த சீதோஷ்ணமும் தேவை. அதைப் போலவே, சந்தோஷத்திற்கு சில காரியங்கள் தேவைப்படுவதை ஆய்வாளர்கள் அறிந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, உடல் ஆரோக்கியம், நல்ல வேலை, போதிய உணவும் உடையும் உறைவிடமும், புதுமை படைக்கும் ஆசைகளைத் திருப்தி செய்தல், உண்மையான நட்புறவுகள் ஆகியவை தேவையென அறிந்திருக்கிறார்கள்.
இவையெல்லாம் இருப்பதோ இல்லாதிருப்பதோ நம் சந்தோஷத்தைப் பாதிக்கும் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். ஆனால் இவை எல்லாவற்றையும்விட முக்கியமான ஒன்று இருக்கிறது. அதுதான், ‘நித்தியானந்த தேவன்’ அதாவது, சந்தோஷமுள்ள கடவுள் என அழைக்கப்படும் யெகோவா தேவனைப் பற்றிய அறிவு. (1 தீமோத்தேயு 1:11) அவரைப் பற்றிய அறிவு எப்படிச் சந்தோஷம் தரும்? யெகோவாதான் நம்மைப் படைத்திருக்கிறார்; சந்தோஷமாக இருப்பதற்குரிய திறமையை நமக்குக் கொடுத்திருப்பதே அவர்தான். ஆகவே, எது உண்மையிலேயே நமக்குச் சந்தோஷத்தைத் தரும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். எந்த இடத்தில் இருந்தாலும்சரி எந்தச் சூழ்நிலையில் வாழ்ந்தாலும்சரி, நிரந்தர சந்தோஷத்திற்குரிய வழிகளை அவர் நமக்குக் காட்டுகிறார். எப்படி என்பதை அடுத்துவரும் கட்டுரை விவரிக்கிறது.
[பக்கம் 4-ன் படம்]
ஒரு பூச்செடியைப் போலவே, சந்தோஷத்திற்கும் பொருத்தமான காரியங்கள் தேவை
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
© Gideon Mendel/CORBIS