உகாண்டாவின் பலதரப்பட்ட மக்கள் மத்தியில் வளர்ச்சி
கொள்ளை அழகுமிக்க உகாண்டா, கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள மகா பிளவு பள்ளத்தாக்கின் கிழக்கு மேற்கு கிளைகளுக்கு மத்தியில் அமர்ந்திருக்கிறது. இந்நாட்டின் குறுக்காக பூமத்தியரேகை செல்கிறது. இங்கு பலவிதமான நில அமைப்புகளும், பச்சைப்பசேலென்ற செடிகொடிகளும், துள்ளித்திரியும் மிருகங்களும் உள்ளன. உகாண்டா, ஆப்பிரிக்காவின் உயர்ந்த பீடபூமியில் இருப்பதால் இங்கு மிதமான சீதோஷ்ணம் நிலவுகிறது; குன்றுகள் நிறைந்த ரம்மியமான இந்நிலப்பகுதி பல நூறு கிலோமீட்டர் வரை நீண்டு கிடக்கிறது.
உகாண்டாவில், பனிப் பிரதேசங்களும் உள்ளன, வெப்பமண்டலப் பிரதேசங்களும் உள்ளன. இந்தச் சிறிய இடத்திற்குள் காணப்படுகிற இத்தனை வேறுபாடுகளை அநேக நாடுகளில் காண முடிவதில்லை. மேற்கில், (நிலவின் மலைகள் என்றும் அழைக்கப்படும்) பனிபோர்த்திய ருவென்ஜோரி மலைச் சிகரங்கள்முதல், கிழக்கிலிருக்கும் ஓரளவு வறண்டுபோன நிலப்பகுதிவரை அதன் எல்லை நீளுகிறது. அதன் சமவெளிகளில் யானைகளும், காட்டெருமைகளும், சிங்கங்களும் வலம் வருகின்றன. அதன் மலைகளிலும் அடர்ந்த காடுகளிலும் கொரில்லாக்களும் சிம்பான்சிகளும் 1,000-த்திற்கும் அதிகமான பறவையினங்களும் வாழ்கின்றன. ஆப்பிரிக்க கண்டத்தின் பெரும்பாலான நாடுகள் வறட்சியிலும் பஞ்சத்திலும் சிக்கித் தவிக்கையில் உகாண்டாவிலோ, உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியான விக்டோரியா ஏரி உள்ளது. அதுதவிர பிற ஏரிகளும் ஆறுகளும் ஏராளம் உள்ளன. விக்டோரியா ஏரியின் வடக்கு முனை நைல் நதியோடு இணைகிறது. இதையெல்லாம் பார்த்துத்தானோ என்னவோ, பிரிட்டிஷ் அரசியல் மேதையான வின்ஸ்டன் சர்ச்சில் உகாண்டாவை “ஆப்பிரிக்காவின் முத்து” என்று அழைத்தார்.
இந்த “முத்து” இன்றும் பளபளக்கிறது
உகாண்டாவில் இயற்கை அழகு கொட்டிக் கிடந்தாலும் அதன் மக்களே அதன் மிக முக்கிய சொத்து. காரணம், அவர்கள் சிநேகப்பான்மையானவர்கள், உபசரிப்பவர்கள், பலதரப்பட்டவர்கள். “கிறிஸ்தவ” நாடு என்று அழைக்கப்படும் இதில் பல்வேறு இனங்களையும் கலாச்சாரங்களையும் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அவர்களுடைய பாரம்பரிய பழக்கங்களையும் உடையையும் வைத்து இன்றுகூட அவர்களை வித்தியாசம் கண்டுவிடலாம்.
பூமியில் சமாதானம் நிரந்தரமாக குடிகொள்ளப்போகிறது என்ற பைபிளின் நற்செய்தி இங்கு பிரசங்கிக்கப்பட்டுவருகிறது. சமீப காலங்களில் உகாண்டாவாசிகள் அநேகர் அச்செய்தியை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். (சங்கீதம் 37:11; வெளிப்படுத்துதல் 21:4) என்றாலும், ஏறக்குறைய கிரேட் பிரிட்டன் அளவுக்கு பெரிதான இந்நாட்டில் இந்தச் செய்தியை அனைவருக்கும் பிரசங்கிப்பது ஒரு சவால்தான்.
முதன்முதலில் இந்த நாட்டைச் சேர்ந்த ஒருவர் யெகோவாவின் சாட்சியாக ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் பெற்றது 1955-ல்தான். இது, விக்டோரியா ஏரியில் நடைபெற்றது. அன்று ‘சின்னவனாக’ இருந்த எண்ணிக்கை 1992-ல் உண்மையில் ஆயிரமானது. அப்போதிலிருந்து வளர்ச்சி தொடர்கிறது. ‘யெகோவாவாகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்’ என்று கடவுள் உறுதியளித்ததற்கு இசைவாகவே இது இருக்கிறது.—ஏசாயா 60:22.
மொழி தடைகளைத் தாண்டுதல்
உகாண்டாவின் ஆட்சி மொழி ஆங்கிலமே. அது முக்கியமாக, கல்வித்துறையில் மிகவும் பரவலாக உபயோகிக்கப்படுகிறது. என்றாலும், பெரும்பாலான உகாண்டாவாசிகளின் தாய்மொழி ஆங்கிலமல்ல. ஆகவே, நற்செய்தியை அனைவருக்கும் பிரசங்கிப்பதற்காக அங்கு பேசப்படும் முக்கிய மொழிகளையும் யெகோவாவின் சாட்சிகள் உபயோகித்திருக்கிறார்கள். இது அவசியமாக இருந்திருக்கிறது; ஏனெனில், நாட்டின் 2.5 கோடி மக்களில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் கிராமங்களில் அல்லது சிறிய டவுன்களில் வசிக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தங்கள் தாய்மொழியில்தான் அன்றாடம் பேசுகிறார்கள். இந்த மொழியினரிடம் பிரசங்கிப்பதற்கும் அவர்களுடைய ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அதிக முயற்சி தேவைப்படுகிறது.
என்றாலும், இந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்ய யெகோவாவின் சாட்சிகள் முயன்றிருக்கிறார்கள். ஜனங்கள் பேசும் மொழியிலேயே அவர்களிடம் பிரசங்கிப்பதன் மூலமும் பல்வேறு மொழிகளில் பைபிள் சார்ந்த புத்தகங்களை அச்சடிப்பதன் மூலமும் அதைச் செய்திருக்கிறார்கள். தலைநகரான கம்பாலாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் உள்ளது. அங்குள்ள மொழிபெயர்ப்பு குழுவினர், ஆக்கோலி, லூகோன்ஷோ, லுகாண்டா, ரூன்யான்கோரே ஆகிய நான்கு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்கிறார்கள். அதோடு, நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் மாநாடுகளை யெகோவாவின் சாட்சிகள் ஏற்பாடு செய்கிறார்கள். உகாண்டாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கிற்கும் அதிகமானோர் அந்த மாநாடுகளுக்கு வருகிறார்கள். பல்வேறு மொழிகளைச் சேர்ந்தவர்கள் சத்தியத்தை அறிந்துகொள்வதற்காக எடுக்கப்பட்ட அத்தகைய முயற்சிகளே அங்கு ஆன்மீக ரீதியில் அதிக வளர்ச்சி ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால், வளர்ச்சிக்கு இதுமட்டுமே காரணமல்ல.
பயனியர்கள்—முன்னணியில்
வருடத்திற்கு ஒருமுறை தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பிரசங்கிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. சுமார் மூன்று மாத காலத்திற்கு செய்யப்படும் இந்த ஏற்பாட்டை சபையிலுள்ளவர்கள் சந்தோஷமாக ஆதரிக்கிறார்கள். (அப்போஸ்தலர் 16:9) அதிகமதிகமான, பக்திவைராக்கியமிக்க இளம் பயனியர்கள், அதாவது முழுநேர பிரசங்கிப்பாளர்கள் இந்த வேலையில் முன்னணி வகிக்கிறார்கள். அவர்கள் தொலைதூர பகுதிகளுக்குச் சென்று பிரசங்கிக்கிறார்கள்; அவற்றில் சில அதுவரை நற்செய்தி சென்றெட்டாத பகுதிகளாகும்.
மேற்கு உகாண்டாவிலுள்ள பூஷென்யீ என்ற சிறிய டவுனில் மூன்று மாதங்களுக்கு விசேஷ பயனியர்களாக சேவிக்க இரண்டு சாட்சிகள் நியமிக்கப்பட்டார்கள். அந்தப் பகுதியில் ஒரேயொரு யெகோவாவின் சாட்சிதான் இருந்தார். இவர்களும் அவரோடு சேர்ந்து பிரசங்கித்து, கிறிஸ்தவ கூட்டங்களை நடத்தினார்கள். ஒரே மாதத்திற்குள் இந்த இரண்டு பயனியர்களும் 40 பேருக்கு பைபிள் படிப்புகளை தவறாமல் நடத்தினார்கள். அவர்களில் 17 பேர் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்கள். அந்தப் பயனியர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: “கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?a என்ற சிற்றேட்டை சிலருக்குக் கொடுத்திருந்தோம். கொஞ்ச நாள் கழித்து அவர்களில் சிலர் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். சிற்றேட்டிலுள்ள கேள்விகளுக்கான பதில்களை பேப்பர்களில் எழுதிக் கொண்டுவந்தார்கள். அவர்கள் எழுதியது சரியா என்று தெரிந்துகொள்ள விரும்பினார்கள்.” இன்று அந்த டவுனில் ஒரு சபை இருக்கிறது, அவர்களுக்கு சொந்தமான ராஜ்ய மன்றமும் இருக்கிறது.
இரண்டு பயனியர்கள், மேற்கு உகாண்டாவிலுள்ள மற்றொரு பகுதிக்கு சென்றார்கள். அங்கும்கூட அதற்கு முன்பு நற்செய்தி பிரசங்கிக்கப்படவே இல்லை. அவர்கள் இவ்வாறு எழுதினார்கள்: “பைபிள் சத்தியத்திற்காக ஜனங்கள் உண்மையில் ஏங்குகிறார்கள். அங்கிருந்த மூன்று மாதங்களில் 86 பைபிள் படிப்புகளை ஆரம்பித்து நடத்தினோம்.” சீக்கிரத்திலேயே, அந்தப் பகுதியில் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு தொகுதி உருவாக்கப்பட்டது.
பக்திவைராக்கியமுள்ள மற்ற ஊழியர்களும் களத்தில் இறங்குகிறார்கள்
இந்த பக்திவைராக்கியமிக்க பயனியர்களில் சிலர் பல வருடங்களாக சேவைசெய்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பாட்ரிக். இவர், யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு முன்பு உகாண்டாவின் ஆட்சியாளரான இடி அமீனின் விமானப் படை இசைக் குழுவில் புல்லாங்குழல் போன்ற கிளாரினெட்டை இசைப்பவராக இருந்தார். பாட்ரிக் 1983-ல் முழுக்காட்டுதல் பெற்று ஆறு மாதங்கள் கழித்து முழுநேர ஊழியரானார். இன்று அவர் பயணக் கண்காணியாக இருக்கிறார்; சபைகளைச் சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.
மார்கரெட் 1962-ல் முழுக்காட்டுதல் பெற்றவர். அவருக்கு ஏறக்குறைய 80 வயது, அதோடு இடுப்பு பிரச்சினையும் இருப்பதால் அவரால் சரியாக நடக்கக்கூட முடியாது. என்றாலும், பைபிள் தரும் நம்பிக்கையைப் பற்றி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் ஒவ்வொரு மாதமும் சுமார் 70 மணிநேரம் பேசுகிறார். வீட்டிற்கு வெளியே ஒரு பெஞ்ச் போட்டு அதில் பிரசுரங்களைப் பார்வைக்கு வைக்கிறார். அவ்வழியே செல்கிறவர்கள் யாரேனும் பைபிள் சத்தியத்தைக் கேட்பதற்கு விருப்பம் காட்டினால் அவர்களிடம் சமாதானமான புதிய உலகத்தைப் பற்றிய நற்செய்தியைச் சொல்கிறார்.
சைமன் என்பவர் கிழக்கு உகாண்டாவில் வசிக்கும் ஒரு விவசாயி. அவர் 16 வருடங்களாக சத்தியத்தைத் தேடிக் கொண்டிருந்தார். யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட சில பிரசுரங்கள் 1995-ல் அவருக்கு கிடைத்தன. படித்த விஷயங்கள் அவருடைய ஆர்வத்தை தட்டியெழுப்பின. ஆகவே, கடவுளுடைய அரசாங்கத்தையும் அவர் பூமியைப் படைத்ததற்கான நோக்கத்தையும் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினார். அவர் வாழ்ந்த காமூலி என்ற ஊரில் யெகோவாவின் சாட்சிகள் ஒருவர்கூட இல்லை. ஆகவே, அவர்களைத் தேடி ஏறக்குறைய 140 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கம்பாலாவிற்குச் சென்றார். இன்று, அவருடைய கிராமத்திலேயே ஒரு சபை உள்ளது.
“நாங்கள் இங்குதான் இருக்கப்போகிறோம்”
வணக்கத்திற்காக கூடிவர ஒரு மதத் தொகுதியினருக்கு தகுந்த இடம் இருக்க வேண்டுமென உகாண்டா மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அங்கு மட்டுமல்ல ஆப்பிரிக்காவின் மற்ற இடங்களிலும் இதுவே உண்மை. என்றாலும், யெகோவாவின் சாட்சிகளுடைய சில சபைகளுக்கு இது தீர்க்க முடியாத பிரச்சினையாகவே தோன்றியது. ஏனெனில், ஒரு நல்ல ராஜ்ய மன்றத்தைக் கட்டுவதற்கு தேவையான பண வசதி அவர்களிடம் இல்லை. ஆனால், 1999-ன் பிற்பகுதியில் அந்தச் சகோதரர்கள் பெற்ற சந்தோஷத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது! காரணம், உலகமுழுவதிலும் துரிதமாக ராஜ்ய மன்றங்களைக் கட்டும் ஒரு திட்டம் அப்போது ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த ஐந்து வருடங்களில், உகாண்டாவில் 40 புதிய ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டன. இன்று அநேகமாக எல்லா சபைகளுக்குமே சொந்தமான, அம்சமான, எளிய ராஜ்ய மன்றங்கள் உள்ளன. இந்தக் கட்டுமான வேலையைப் பார்க்கும் உள்ளூர்காரர்கள், “நாங்கள் இங்குதான் இருக்கப்போகிறோம்” என்று யெகோவாவின் சாட்சிகள் சொல்லாமல் சொல்வதைப் புரிந்துகொள்கிறார்கள். இதுவும்கூட வளர்ச்சிக்கு ஒரு காரணம்.
உகாண்டாவின் வடக்கு பகுதியிலுள்ள ஒரு சிறிய சபை, அடர்ந்த மாமரங்களின் நிழலில் கூட்டங்களை நடத்தி வந்தது. அங்கு ஒரு நிலம் வாங்கப்பட்டவுடன் ராஜ்ய மன்றத்தைக் கட்டுவதற்கான வேலை மும்முரமாக நடந்தது. கட்டுமான குழுவிலுள்ள சகோதரர்கள் உள்ளூர் சகோதரர்களின் உதவியோடு ஒரு ராஜ்ய மன்றத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள். அந்தப் பகுதியில் முன்பு பிரபல அரசியல்வாதியாக இருந்த ஒருவர், கட்டுமான வேலையைப் பார்த்து அசந்துவிட்டார். ராஜ்ய மன்றம் கட்டி முடிக்கப்படும் வரை தனது கராஜில் கூட்டங்களை நடத்திக்கொள்ள அனுமதியளித்தார். கட்டுமான குழுவிலுள்ள ஒருவரோடு பைபிளைப் படிக்கவும் ஆரம்பித்தார். இப்போது அவரும் முழுக்காட்டுதல் பெற்ற, பக்திவைராக்கியமுள்ள பிரஸ்தாபியாக இருக்கிறார்! அந்த அழகிய, புதிய ராஜ்ய மன்றத்தில் சந்தோஷத்தோடு யெகோவாவை வணங்கி வருகிறார்.
நாட்டின் தென்கிழக்கு பகுதியில் ஒரு ராஜ்ய மன்றம் கட்டப்படுவதை ஒரு கொத்தனார் பார்த்தார். சகோதரர்கள் மத்தியில் நிலவிய நட்பும், அன்பும், ஒத்துழைப்பும் அவரை மிகவும் கவர்ந்ததால் தானாகவே முன்வந்து வேலையில் சேர்ந்துகொண்டார். வேலை முடியப்போகிற சமயத்தில் அவர் ஓர் இரவு முழுவதும் வேலை செய்தார். எதற்காக? அடுத்த நாள் காலை நடக்கவிருந்த பிரதிஷ்டைக்கு ராஜ்ய மன்றத்தை தயார்செய்து கொடுப்பதற்காக. “நீங்கள் மட்டும்தான் உண்மையிலேயே ஒருவரையொருவர் நேசிக்கிறீர்கள், வெறும் வார்த்தைகளில் அல்ல அதைச் செயலில் காட்டுகிறீர்கள்” என்று அவர் கூறினார்.
பிரச்சினைகள் மத்தியிலும் வளர்ச்சி சாத்தியம்
உகாண்டாவில் புதிய பகுதிகளிலும் ராஜ்ய செய்தி அறிவிக்கப்படுவதால் சாட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. ஆர்வம் காட்டுகிற அநேக புதியவர்கள் சபை கூட்டங்களுக்கு வருகிறார்கள். என்றாலும், ஓர் அவசர தேவை உள்ளது. அதாவது, உகாண்டாவிற்குள் தஞ்சம் புகுந்திருக்கும் ஏராளமான அகதிகளைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அக்கம்பக்கத்து தேசங்களில் நடக்கும் உள்நாட்டு போரால் யெகோவாவின் ஜனங்களும்கூட பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அகதிகள் முகாம்களில் வசிக்கிற சாட்சிகள் யெகோவாமீது அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிக்காட்டியிருக்கிறார்கள். பக்கத்து தேசத்தில் உயர் அதிகாரியாயிருந்த ஒருவர், முன்பு தான் சொகுசான வாழ்க்கை வாழ்ந்ததாக கூறுகிறார். அவருடைய நாட்டில் யெகோவாவின் சாட்சிகளின் வேலை தடைசெய்யப்பட்டிருந்தபோது அவர்களை அவர் துன்பப்படுத்தியிருக்கிறார். அவர் அகதிகளின் முகாமில் இருக்கையில் பைபிளைப் படித்து யெகோவாவின் சாட்சியாக ஆனார். இப்போது அவர் சொல்கிறார்: “இந்த உலகத்தில் நமக்கு பண வசதியும் உயர் பதவியும் இருப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இப்போது நான் ஏழையாகவும் வியாதிப்பட்டும் இருக்கிறேன், என்றாலும் இப்போது அதிக சந்தோஷமாக இருக்கிறேன். காரணம், இன்று நான் யெகோவாவை அறிந்திருக்கிறேன், ஜெபம் என்ற சிலாக்கியத்திற்காக நன்றியோடு இருக்கிறேன். எதிர்காலத்தைப் பற்றிய உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது, அதேசமயம் இன்று ஏன் கஷ்டங்களை சகிக்க வேண்டியிருக்கிறது என்பதையும் அறிந்திருக்கிறேன். ஆகவே, இதற்கு முன் ஒருபோதும் இல்லாதிருந்த மன சமாதானம் இப்போது எனக்கு இருக்கிறது.”
உகாண்டாவின் செழிப்பான நிலத்திலே மாலையில் ஒரு குச்சியை நட்டு வைத்தால் காலையில் அது வேர் பிடித்துவிடும் என்ற ஒரு பழமொழி உண்டு. இந்நாடு ஆன்மீக ரீதியிலும் மிகவும் செழிப்பான நிலம் என்பதை அதன் ஆன்மீக வளர்ச்சி காட்டுகிறது. உகாண்டாவிலுள்ள பலதரப்பட்ட மக்களில் இன்னும் அநேகர் தமது அரசாங்கத்தைப் பற்றி அறிந்துகொள்ள காலம் அனுமதித்திருப்பதற்காக யெகோவா தேவனுக்கு நாம் நன்றி தெரிவிக்கலாம்! அந்த அரசாங்கத்தின் மதிப்பை ‘விலையுயர்ந்த ஒரு முத்திற்கு’ இயேசு ஒப்பிட்டார். உகாண்டாவிலுள்ள அதிகமதிகமானோர் அதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.—மத்தேயு 13:45, 46.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 8-ன் தேசப்படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
சூடான்
உகாண்டா
நைல் நதி
காமூலி
டோரோரோ
கம்பாலா
பூஷென்யீ
விக்டோரியா ஏரி
கென்யா
டான்ஜானியா
ருவாண்டா
[பக்கம் 9-ன் படம்]
பக்திவைராக்கியமிக்க பயனியர்களில் மூவர்
[பக்கம் 10-ன் படம்]
பாட்ரிக்
[பக்கம் 10-ன் படம்]
மார்கரெட்
[பக்கம் 10-ன் படம்]
சைமன்
[பக்கம் 10-ன் படம்]
டோரோரோவில் மாவட்ட மாநாடு
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
பின்னணி: © Uganda Tourist Board