“உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்!”
கடவுளுடைய ஏவுதலால் எழுதப்பட்ட செய்தியைக் குறித்த தன் உணர்ச்சிகளை 119-ம் சங்கீதத்தை இயற்றியவர் பாடலாக வடித்திருக்கிறார். “உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.” “உம் விதிமுறைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்.” “எந்நேரமும் உம் நீதிநெறிகளை முன்னிட்டு என் உள்ளம் ஏங்கி உருகுகின்றது.” ‘உம் நினைப்பூட்டுதல்கள் எனக்கு இன்பம் தருகின்றன.’ (NW) ‘உமது நியமங்களைப் பெரிதும் விரும்பினேன்.” உம் கட்டளைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்.’ ‘உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.’ ‘உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.’ என்றெல்லாம் அந்தச் சங்கீதக்காரன் பாடுகிறார்.—சங்கீதம் [திருப்பாடல்கள்] 119:11, 16, 20, 24, 40, 47, 48, 97; பொது மொழிபெயர்ப்பு.
கடவுள் தந்திருக்கும் வார்த்தையின்மீது சங்கீதக்காரனின் உள்ளங்கனிந்த நன்றியுணர்வைப் பாருங்கள்! கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைப் பற்றி நீங்களும் இப்படித்தான் உணருகிறீர்களா? அத்தகைய பிரியத்தை நீங்களும் வளர்த்துக்கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால், முதலாவதாக, பைபிளை தவறாமல் வாசிப்பதை, அதுவும் தினமும் வாசிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 4:4) இரண்டாவதாக, நீங்கள் வாசிப்பதைக் குறித்து தியானியுங்கள். கடவுளையும், அவருடைய குணங்கள், விருப்பம், நோக்கம் ஆகியவற்றையும் குறித்து ஆழ்ந்து சிந்தித்தால் பைபிள் மீது உங்களுடைய நன்றியுணர்வு பெருக்கெடுக்கும். (சங்கீதம் 143:5) மிக முக்கியமாக, அதிலுள்ள பொன்னான அறிவுரைகளை உங்கள் தினசரி வாழ்க்கையில் பொருத்துங்கள்.—லூக்கா 11:28; யோவான் 13:17.
பைபிளிலுள்ள விஷயங்களின் பேரில் பிரியத்தை வளர்த்துக் கொள்வது உங்களுக்கு எப்படிப் பயனளிக்கும்? “[கடவுளுடைய] நினைப்பூட்டுதல்களை கைக்கொள்கிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்” என சங்கீதம் 119:2 (NW) குறிப்பிடுகிறது. பைபிளில் காணப்படும் நினைப்பூட்டுதல்கள் உங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை வெற்றிகரமாகச் சமாளிக்க உதவும். (சங்கீதம் 1:1-3) ‘சகல பொல்லாத வழிகளுக்கும் உங்கள் கால்களை விலக்குவதற்கு’ உதவுகிற ஞானத்தையும் உட்பார்வையையும் புரிந்துகொள்ளுதலையும் நீங்கள் பெறுவீர்கள். (சங்கீதம் 119:98-101) கடவுளையும், பூமிக்கான அவருடைய நோக்கத்தையும் பற்றிய உண்மையை நீங்கள் அறிய வந்தால், அது உங்கள் வாழ்க்கையை அதிக அர்த்தம் பொதிந்ததாக்கும், அதோடு எதிர்காலத்திற்கான நம்பிக்கைச் சுடரையும் ஏற்றிடும்.—ஏசாயா 45:18; யோவான் 17:3; வெளிப்படுத்துதல் 21:3, 4.
பைபிளை நன்கு புரிந்துகொள்ளவும், அதிலுள்ள செய்தியில் பிரியத்தை வளர்த்துக் கொள்ளவும் மற்றவர்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். அவ்வாறு உங்களை வந்து சந்திப்பதற்கான பின்வரும் அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.