யெகோவாவின் சட்டத்தில் இன்பம் கண்டார்
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினரான ஆல்பர்ட் ஷ்ரோடர், மார்ச் 8, 2006 புதன்கிழமை அன்று தனது பூமிக்குரிய வாழ்க்கையை முடித்தார். அப்போது அவருக்கு 94 வயது; முழுநேர சேவையில் 73 ஆண்டுகளுக்கும் அதிகமாய் அர்ப்பணித்திருந்தார்.
1911-ம் ஆண்டு அமெரிக்காவில் மிச்சிகனிலுள்ள சாகநா என்ற ஊரில் சகோதரர் ஷ்ரோடர் பிறந்தார்.a சிறுவயதில் அவருடைய தாய்வழி பாட்டி பைபிளைப் பற்றி நிறைய விஷயங்களை அவருக்குக் கற்றுக்கொடுத்தார்; யெகோவாவின் வார்த்தையை ஆர்வத்துடன் வாசிக்கும் ஆசையை ஊட்டி வளர்த்தார். அவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து லத்தீன், ஜெர்மன் மொழிகளையும் மின் பொறியியலையும் கற்றார். என்றாலும், பைபிளிடம் அவருக்கு இருந்த பற்றுதல் அதிகரித்தபோது, தனது படிப்பை நிறுத்திவிட்டு முழுநேர பிரசங்க வேலையைத் தொடங்கினார். 1932-ல், நியு யார்க் புரூக்ளினிலுள்ள பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினராக ஆனார்.
1937-ல், தனது 26-ம் வயதில் சகோதரர் ஷ்ரோடர் பிரிட்டனில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை மேற்பார்வை செய்வதற்கு நியமிக்கப்பட்டார். பிரசங்க வேலையில் அவர் அதிக ஆர்வத்தோடு ஈடுபட்டார்; இதைப் பார்த்த அநேகர் முழுநேர சேவையில் பங்குகொள்ள ஊக்கம் பெற்றார்கள். லண்டன் பெத்தேலில் இருந்தபோது ஜான் ஈ. பார் என்ற இளைஞருடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார். பிற்காலத்தில், இவர்கள் இருவரும் ஆளும் குழுவில் பல வருடங்கள் ஒன்றாகச் சேர்ந்து சேவை செய்தார்கள்.
போர்க் காலங்களில், யெகோவாவின் சாட்சிகள் சார்பாக சகோதரர் ஷ்ரோடர் வேலை செய்தது மற்றவர்கள் கண்ணில்படாமல் போகவில்லை. 1942 ஆகஸ்ட் மாதத்தில், பிரிட்டனிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். போர்க் காலத்தில் அட்லாண்டிக் கடலில் மிகவும் கஷ்டமான கடற்பயணத்தை மேற்கொண்டு செப்டம்பரில் புரூக்ளின் வந்துசேர்ந்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப்பின் மாபெரும் வேலை செய்யப்பட வேண்டியிருக்கும் என்பதை அந்தச் சமயத்திலேயே யெகோவாவின் ஊழியர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். சகோதரர் ஷ்ரோடர் தன்னுடைய அடுத்த நியமிப்பைப் பெற்றபோது அவருக்கு ஒரே ஆச்சரியம், சந்தோஷமும்கூட. அது, உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் பாடத்திட்டத்தை வகுக்கும் பணியில் உதவி செய்வதாகும். அநேக ஆண்டுகள் அந்தப் பள்ளியில் போதனையாளராகச் சேவை செய்தார்; மிஷனரிகளைப் பயிற்றுவிப்பதற்கு உதவினார். கிலியடிலும் பிற்பாடு ராஜ்ய ஊழியப் பள்ளியிலும் அவர் நடத்திய வகுப்புகளில் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவை இனிய நினைவுகளாக இருக்கின்றன. கடவுளுடைய சட்டங்களை நேசிக்க வேண்டுமென்ற எண்ணத்தை மாணாக்கரின் மனதில் பதியவைப்பதில் மிகுந்த இன்பம் கண்டார், யெகோவாவைப் பற்றி மேன்மேலும் அறிவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
1956-ம் ஆண்டில், ஷார்லட் போவன் என்பவரை மணந்தார்; 1958-ல் அவருடைய மகன் ஜூடா பென் பிறந்தார். சகோதரர் ஷ்ரோடர் சிறந்த கிறிஸ்தவ கணவராகவும் தகப்பனாகவும் விளங்கினார். 1974-ல், ஆளும் குழுவில் சேவை செய்ய ஆரம்பித்தார்; அங்கே அவருடைய அறிவுக்கூர்மை பெரிதும் மதிக்கப்பட்டது. அவர் தயவானவராகவும் தாழ்மையானவராகவும் விளங்கினார்; எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளுடைய மகத்தான பெயரை மகிமைப்படுத்தவே எப்போதும் விரும்பினார். அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவரான சகோதரர் ஷ்ரோடர் தன்னுடைய பரலோக வெகுமதியைப் பெற்றுக்கொண்டார் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அவர் ‘யெகோவாவின் சட்டத்தில் இன்பம் கண்டார்’ என்பதில் சந்தேகமில்லை.—சங்கீதம் 1:2, NW.
[அடிக்குறிப்பு]
a சகோதரர் ஷ்ரோடருடைய வாழ்க்கை சரிதையை மார்ச் 1, 1988 காவற்கோபுர இதழில் காணலாம்.