கடவுளை நாம் உண்மையிலேயே அறிந்துகொள்ள முடியுமா?
‘ஒன்றான மெய்த் தேவனை . . . அறிவதே நித்தியஜீவன்.’—யோவான் 17:3.
உணர்ச்சிப்பொங்க அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!” (ரோமர் 11:33) இந்த வார்த்தைகளிலிருந்து, கடவுளுடைய ஞானத்தையும் அறிவையும் கண்டுபிடிப்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்ற முடிவுக்கு நாம் வர வேண்டுமா? அப்படியென்றால், கடவுளைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் அறிந்துகொள்ளவே முடியாதா?
கடவுளைப் பற்றி அறிந்துகொள்ளவே முடியாது என்றுதான் மத சிந்தனையாளர்கள் சிலர் நம்புகிறார்கள். அப்படிச் சிந்திப்பதைக் குறித்து ஆங்கில மத கலைக்களஞ்சியம் இவ்வாறு சொல்கிறது: “கடவுளைப் பற்றி எவற்றையெல்லாம் அறிந்துகொள்ள முடியுமோ அவற்றிற்கெல்லாம் அவர் அப்பாற்பட்டவர். . . . கடவுளுக்குப் பெயரிட முடியாது அல்லது இப்படித்தான் என அவரை வரையறுக்கவும் முடியாது. அவருக்கு எந்தப் பெயரைச் சூட்டினாலும் அல்லது அவரை எப்படி வரையறுத்தாலும் அது வரம்புக்கு உட்பட்டது, அவர் எல்லையில்லா பரம்பொருள். . . . அவர் அறிவுக்கு எட்டாதவர், அதனால் அவரை அறிந்துகொள்ள முடியாது.”a
நியூஸ்வீக் பத்திரிகைப்படி, மதப்பற்றில்லாத சமுதாயங்களில் வாழும் பலர் “ஒரு வகை புதிய வைதீகத்தை” ஆதரிக்கிறார்கள்; அது என்னவெனில், “ஒரேவொரு சத்தியமே இருக்கிறது; சத்தியம் என்ற ஒன்று இல்லை என்பதே அந்தச் சத்தியம்” என நம்புகிறார்கள்.
இருப்பினும், அநேகர் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமல் இருக்கிறார்கள். வறுமை, வியாதி, வன்முறை போன்று மனவேதனை அளிக்கும் பிரச்சினைகள் இருப்பதை அவர்கள் கவனிக்கிறார்கள். வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை என்பது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கலாம். தங்களுடைய கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடிக்க அவர்கள் ஏங்கலாம், அவற்றைத் தெரிந்துகொள்ள முடியாதபோதோ, அவற்றிற்குப் பதில்களே கிடையாது என்ற முடிவுக்கு வரலாம். இதனால், அத்தகையவர்களில் பலர் தங்கள் மதங்களை விட்டு விலகியிருக்கிறார்கள்; அதன் பிறகும் அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தால்கூட, தங்களுக்குச் சரியென படும் விதத்தில் அவரை வணங்க முயற்சி செய்கிறார்கள்.
பைபிளின் கருத்து
பைபிளுக்கு மதிப்புக்கொடுத்து, இயேசு கிறிஸ்துவை கடவுளுடைய சார்பில் பேசுபவராக ஏற்றுக்கொள்ள மனமுள்ளவர்கள், பைபிளின் கருத்தை அறிந்துகொள்வதில் உண்மையிலேயே ஆர்வம் காட்டுவார்கள். ஒருசமயம் இயேசு இரண்டு வழிகளைப் பற்றி குறிப்பிட்டது ஒருவேளை உங்களுக்கு நினைவிருக்கலாம்; அதாவது, “கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது,” “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது” என்று அவர் சொன்னார். இந்த இரு வழிகளில் நடப்பவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்பதை அவர் இவ்வாறு விளக்கினார்: “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” அவை எத்தகைய கனிகள்? அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்து அல்ல, ஆனால் என்ன செய்கிறார்கள் என்பதை வைத்து அவர்களை அறிய முடியும். அதை இயேசு இவ்வாறு தெளிவுபடுத்தினார்: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.” கடவுளை நம்புவதாகச் சொன்னால் மட்டும் போதாது. நாம் அவருடைய சித்தத்தைச் செய்ய வேண்டும். அப்படியென்றால், முதலாவது நாம் கடவுளுடைய சித்தம் என்ன என்பதைத் திருத்தமாக அறிந்துகொள்வது அவசியம் என்பது நியாயமானதே.—மத்தேயு 7:13-23.
கடவுளைப் பற்றிய அறிவை மனிதர் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இயேசு வெளிப்படையாகவே இவ்வாறு சொன்னார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (யோவான் 17:3) கடவுள் வெளிப்படுத்துகிற ஞானத்தையும் அறிவையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது; ஆனால், அவற்றை நாம் பெரும் முயற்சி செய்தால் மட்டுமே பெற முடியும். எனினும், அவ்வாறு முயற்சி செய்பவர்களுக்கு அவர் அளிக்கும் பரிசு நித்திய ஜீவனாகும்; எனவே, இதற்காக எடுக்கும் எந்த முயற்சியும் உண்மையிலேயே தகுந்ததுதான்.
[அடிக்குறிப்பு]
a இந்து மதம், தாவோ மதம், புத்த மதம் போன்ற கிழக்கத்திய மத பாரம்பரியங்களிலும் இதே போன்ற கருத்துகள் நிலவுகின்றன.
[பக்கம் 4-ன் படம்]
இடுக்கமான வாசல் ஜீவனுக்குப் போகும் வாசல் என இயேசு சொன்னார்