உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 10/15 பக். 8-11
  • கினியில் ஆன்மீகப் பொக்கிஷங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கினியில் ஆன்மீகப் பொக்கிஷங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • துணை தலைப்புகள்
  • ஆன்மீகப் பொக்கிஷங்கள்
  • இறக்குமதியான ஆன்மீகப் பொக்கிஷங்கள்
  • விரும்பப்பட்டவர்கள் தேவையான மாற்றங்களைச் செய்தார்கள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 10/15 பக். 8-11

கினியில் ஆன்மீகப் பொக்கிஷங்கள்

நூற்றாண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து, கைகால்களைப் பறிகொடுத்து பொக்கிஷங்களையும் ஆஸ்திகளையும் தேடியெடுத்தார்கள். அஞ்சா நெஞ்சம் படைத்த வீரர்களாக மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள கினியில் கால் பதித்த ஆராய்ச்சியாளர்கள் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட இரண்டு பொக்கிஷங்களைக் கண்டுபிடித்தார்கள். ஒன்று, இயற்கை பொக்கிஷம், மற்றொன்று ஆன்மீகப் பொக்கிஷம். வைரம், தங்கம், இரும்பு தாது, உயர் ரக பாக்ஸைட் (அலுமினியம் எடுக்கப்படும் களிமண் வகை) ஆகிய இயற்கை சொத்துக்கள் நிரம்பி வழியும் இம்மண்ணில் 90 லட்சத்திற்கும் அதிகமான கினியர்கள் குடியிருக்கிறார்கள்.

இந்நாட்டில் கிறிஸ்தவமண்டல மதங்களின் செல்வாக்கு அதிகமாக இல்லை. என்றாலும், பொதுவாக இங்குள்ள மக்கள் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், ஆன்மீகப் பொக்கிஷங்களை அநேகர் பெரிதும் போற்றுகிறார்கள். ஆன்மீகப் பொக்கிஷங்கள் எனப்படுவது எதைக் குறிக்கிறது? யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களே இந்த ஆன்மீகப் பொக்கிஷங்கள். ஆகாய் 2:7, NW, “சகல தேசங்களிலுமுள்ள விரும்பப்பட்டவைகள்” என்று அவர்களை அழைக்கிறது.

ஆன்மீகப் பொக்கிஷங்கள்

பூமியின் மிக ஆழத்திற்குச் சென்று பொக்கிஷங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு அதீத முயற்சி தேவைப்படுகிறது. அதேவிதமாக, கிறிஸ்தவ ஊழியத்திலும் ஆன்மீக பொக்கிஷங்களைத் தேடி கண்டுபிடிப்பதற்கு அயராத முயற்சி தேவைப்படுகிறது. கினியில் ராஜ்ய பிரசங்கிப்பு வேலை 1950-களின் ஆரம்பத்தில் நாட்டின் மையப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. 1960-களின் ஆரம்பம்வரை அது தலைநகரமான கோனாக்ரீயை எட்டவில்லை. இப்போதோ, அந்நாட்டில் 21 கிறிஸ்தவ சபைகளும் தொகுதிகளும் உள்ளன, அவற்றில் சுமார் 900 யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள்.

1987-⁠ல் மிஷனரிகள் அந்நாட்டிற்கு வந்து கோனாக்ரீயில் இருந்த ஒரே சபையுடன் சேர்ந்து சேவை செய்தார்கள். இப்போது அந்தத் தலைநகரத்திலும் உள்நாட்டு பகுதியிலும் 20-⁠க்கும் அதிகமான மிஷனரிகள் இருக்கிறார்கள். அவர்கள் சுறுசுறுப்பாக சபைகளைப் பலப்படுத்துவதோடு உள்ளூர் சகோதரர்களுடன் சேர்ந்து ஊழியத்திலும் ஈடுபடுகிறார்கள்.

கோனாக்ரீயில் வசிக்கும் லூயெக், இளம் மருத்துவராக இருந்த ஆல்பெர்ட்டுடன் பைபிளைப் படித்து மகிழ்ந்தார். இந்த ஆல்பெர்ட் என்பவர் உண்மையான மதத்தைத் தேடி பல சர்ச்சுகள் ஏறி இறங்கியவர், ஆவியுலகத்தோடு தொடர்புகொள்ளும் பழக்கங்களில் ஈடுபட்டவர். அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று சொல்லி ஆவியுலக மத்தியஸ்தர் ஒருவர் மந்திரித்துக் கொடுத்த மோதிரத்தை அவர் அணிந்திருந்தார். உண்மையான மதத்தைத் தேடித் தேடி அதைக் கண்டுபிடிக்க முடியாத ஏமாற்றத்தில் ஆல்பெர்ட் தன்னிடமிருந்த அந்த மோதிரத்தை வீசி எறிந்துவிட்டு இவ்வாறு ஜெபித்தார்: “கடவுளே, உண்மையிலேயே நீர் இருந்தால், உம்மை அறிந்துகொண்டு உம்மை சேவிக்க எனக்கு உதவும். இல்லையென்றால், என் இஷ்டப்படி வாழ்ந்துவிட்டுப் போகிறேன்.” அதன் பிறகு ஆல்பெர்ட் தன் அக்கா வீட்டிற்குச் சென்றிருந்தபோது அங்கு தன் அக்கா மகளுடன் யெகோவாவின் சாட்சியான ஒரு சகோதரி பைபிள் படித்துக்கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டார். சீக்கிரத்தில் லூயெக் என்ற சகோதரருடன் அவர் பைபிளைப் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆல்பெர்ட்டுக்கு பைபிள் படிப்பு நடத்துவதற்காக போய்வர, ஒவ்வொரு வாரமும் 10 கிலோமீட்டருக்கும் அதிகமாக லூயெக் சலிக்காமல் நடந்தார். லூயெக் குறைவாகவே படித்திருந்தார், ஆல்பெர்ட்டோ பட்டதாரி. இருந்தாலும் வேத வசனங்களில் லூயெக்கிற்கு இருந்த உறுதியான விசுவாசத்தையும் அவற்றை நடைமுறையில் பொருத்தியதையும் பார்த்து ஆல்பெர்ட் மெய்சிலிர்த்துப் போனார். மனிதர்களின் கஷ்டங்களுக்கு கடவுள் காரணரல்ல என்பதையும் எல்லா கஷ்டங்களையும் நீக்கி பூமியை பூங்காவன பரதீஸாக மாற்றுவதே யெகோவாவுடைய நோக்கம் என்பதையும் அவர் கற்றபோது அளவிலா ஆனந்தம் அடைந்தார். (சங்கீதம் 37:9-11) பைபிள் சத்தியமும் சபையில் எல்லாருடைய நல்ல நடத்தையும் அவருடைய மனதைக் கவர்ந்தது.

மெருகூட்டப்படாத வைரக்கல்லை ஜொலிக்க வைப்பதற்கு திறமையான ஒரு கலைஞன் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. அதேபோல், ஆல்பெர்ட்டும்கூட கடவுளுடைய நீதியான தராதரங்களின்படி வாழ்வதற்கு இந்த உலகத்தின் பல கெட்ட பழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக தன்னிடமிருந்து அகற்ற வேண்டியிருந்தது. அவர், ஆவியுலகத்தோடு தொடர்புகொள்ளும் பழக்கத்தை நிறுத்தினார், குடியை விட்டுவிட்டார், சூதாட்டத்திலிருந்தும் விலகினார். ஆனால், புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவது மட்டும் அவருக்கு பெரும் போராட்டமாக இருந்தது. கடைசியாக அவர் யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபம் செய்து அதையும் விட்டொழித்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு தன் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்தார். அவருடைய மனைவியும் பைபிளைப் படிக்கத் தொடங்கினார். இப்போது அவர்கள் இருவருமே யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட ஊழியர்கள்.

ஆன்மீக வைரக்கற்களில் மார்டின் என்பவரும் ஒருவர். இவர் 15 வயதாக இருந்தபோது கெக்கேடு என்ற நகரத்தில் பைபிளைப் படிக்கத் தொடங்கினார். கத்தோலிக்கர்களாக இருந்த இவருடைய பெற்றோர் யெகோவாவின் சாட்சிகளின் கூட்டங்களுக்குப் போக இவரை அனுமதிக்கவில்லை. இவரிடமிருந்த பைபிள் சார்ந்த பிரசுரங்களை அழித்தார்கள், இவரை அடித்தார்கள், வீட்டிலிருந்தே துரத்தினார்கள். கார்பன் மிக அதிகமான அழுத்தத்திற்கு உள்ளாகையில் எப்படி வைரம் கிடைக்கிறதோ அதேபோல எதிர்ப்புகள் அதிகமாக வந்தபோது மார்டின் பைபிள் சத்தியங்களை மிக அதிகமாக நேசிக்கத் தொடங்கினார். காலப்போக்கில், அவருடைய பெற்றோரின் கோபம் தணிந்த பிறகு வீடு திரும்பினார். எது அவருடைய பெற்றோரின் மனதை மாற்றியது? மார்டினுக்கும் அவருடைய மூன்று தம்பிகள் மற்றும் ஒரு தங்கைக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருப்பதை அவர்கள் கவனித்தார்கள். அவர்கள் முரட்டுகுணம் படைத்தவர்களாய் வளர்ந்து, ஒழுக்கங்கெட்ட காரியங்களில் ஈடுபட்டார்கள். மார்டினின் புதிய மதம் அவருக்கு நன்மையையே செய்திருக்கிறது என்பதை அவருடைய அப்பா புரிந்துகொண்டார். அதனால் சபையிலிருந்த சகோதர சகோதரிகளை வீட்டில் வரவேற்றார். அவர்கள் தன் மகனுக்கு செய்த எல்லா உதவிக்காகவும் மார்டினின் தாய் பலமுறை அவர்களுக்கு நன்றி சொல்லியிருக்கிறார். மார்டின் 18 வயதில் முழுக்காட்டுதல் பெற்றார், பிறகு ஊழியப் பயிற்சிப் பள்ளியில் கலந்துகொண்டார், இப்போது விசேஷப் பயனியராக சேவை செய்து வருகிறார்.

இறக்குமதியான ஆன்மீகப் பொக்கிஷங்கள்

கினியின் இயற்கை வளங்களில் பல, ஏற்றுமதி செய்யப்படுகையில் அதன் ஆன்மீகப் பொக்கிஷங்களில் சில “இறக்குமதி” செய்யப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும், பொருளாதார நெருக்கடி காரணமாக ஆப்பிரிக்காவின் மற்ற நாடுகளிலிருந்து பலர் கினியில் குடியேறியிருக்கிறார்கள். இன்னும் சிலர், பல வருடங்களாக படுபயங்கரமான போர் நடந்துக்கொண்டிருக்கும் இடங்களிலிருந்து தப்பி கினியில் வந்து குடியேறியிருக்கிறார்கள்.

எர்னஸ்டின் என்ற பெண்மணி 12 வருடங்களுக்கு முன்பு கேமருனிலிருந்து வந்து கினியில் குடியேறினார். அவர் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்து கூட்டங்களுக்கு வரத் தொடங்கினார். இப்படிப் பல வருடங்கள் கூட்டங்களுக்கு மட்டுமே வந்தாரே தவிர முழுக்காட்டுதல் எடுக்கவில்லை. 2003-⁠ல் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய வட்டார மாநாட்டின்போது சகோதர சகோதரிகள் முழுக்காட்டுதல் எடுத்ததைப் பார்த்தபோது துக்கம் தாளாமல் கண் கலங்கினார். குற்ற உணர்வில் அவர் மனம் நொந்துப்போய் யெகோவாவிடம் இவ்வாறு ஜெபித்தார்: “எனக்கு இப்போது 51 வயதாகிறது. இதுவரை ஒரு நல்ல காரியத்தையும் உங்களுக்காக நான் செய்ததில்லை. உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.” இவ்வாறு ஜெபித்தபிறகு, தன் ஜெபத்திற்கு இசைய செயல்பட்டார். சட்டப்படி திருமணம் செய்துகொண்டால் மட்டுமே தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியும் என்பதை தன்னுடன் வாழ்ந்துவந்த நபரிடம் எடுத்துச்சொன்னார். அதற்கு அவரும் ஒத்துக்கொண்டார். 2004 நவம்பரில் முழுக்காட்டுதல் பெற்றபோது எர்னஸ்டின் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

1990-களின் தொடக்கத்திலிருந்து லைபீரியா, சியர்ரா லியோன் ஆகிய நாடுகளிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் உட்பட ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு கினி, தஞ்சம் அளித்திருக்கிறது. அகதி முகாமிற்கு வந்து சேர்ந்தவுடன் கூட்டங்கள் தவறாமல் நடைபெறுவதற்கு சகோதரர்கள் ஏற்பாடு செய்கிறார்கள், பிரசங்க வேலையையும் ஒழுங்கமைக்கிறார்கள், ஒரு ராஜ்ய மன்றத்தையும் கட்டிவிடுகிறார்கள். சிலர் முகாமிலேயே யெகோவாவின் சாட்சிகளாக ஆகியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஐசக் என்பவர். இவர் முழுக்காட்டுதல் எடுத்த பிறகு, முன்பு அவர் வேலை செய்துவந்த லைபீரிய நாட்டு கம்பெனியில் மறுபடியும் வேலை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் லெனே அகதி முகாமிலேயே ஒழுங்கான பயனியராக இருந்துவிட தீர்மானித்தார். அவர் சொல்வதாவது: “இப்போதெல்லாம் கூட்டங்களுக்கோ மாநாட்டிற்கோ செல்வதற்கு நான் எந்த அதிகாரியையும் உத்தரவு கேட்க வேண்டியதில்லை. யெகோவாவுக்குச் சேவை செய்ய எனக்கு எல்லா சுதந்திரமும் இங்கு இருக்கிறது.” 30,000 அகதிகளில் 150 யெகோவாவின் சாட்சிகள் இருந்தார்கள், இவர்களுக்காக 2003 டிசம்பரில், ஒதுக்குப்புறத்திலிருந்த இந்த முகாமில் மாவட்ட மாநாடு நடத்தப்பட்டது. அதில் 591 பேர் கலந்துகொண்டு மகிழ்ந்தார்கள். அவர்களில் காது கேளாதவர்களாக இருந்த ஒன்பது பேரும் சைகை மொழி நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தார்கள். மொத்தம் 12 பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள். முகாமிலிருந்த சகோதரர்கள் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஆன்மீக உணவிற்காக மிகவும் நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள்.

விரும்பப்பட்டவர்கள் தேவையான மாற்றங்களைச் செய்தார்கள்

பொன்னையும் வைரங்களையும் தேடுபவர்களுக்கு எந்தத் தடங்கலும் பெரிதாகத் தெரிவதில்லை. என்றாலும், புதியவர்கள் யெகோவாவுக்கு சேவை செய்வதற்காக எல்லா தடைகளையும் ஜெயிப்பதற்கு எடுக்கிற முயற்சிகளைப் பார்க்கையில் மகிழ்ச்சி பொங்குகிறது. ஸாயினாபின் உதாரணத்தைக் கவனியுங்கள்.

ஸாயினாப் 13 வயதாக இருந்தபோது சிறார் அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்டாள். மேற்கு ஆப்பிரிக்காவின் மற்றொரு நாட்டில் வசித்துவந்த அவள் கினிக்கு அடிமையாக அழைத்துச் செல்லப்பட்டாள். அவளுக்கு 20 வயதானபோது பைபிள் செய்தி கிடைத்தது. தான் படித்தவற்றை நடைமுறைப்படுத்த விரும்பினாள்.

கூட்டங்களுக்கு போவது ஸாயினாபிற்கு பெரும் சவாலாக இருந்தது. ஆனால், கூட்டங்களை அவள் அதிகமாக மதித்ததால் அவற்றை தவறவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். (எபிரெயர் 10:24, 25) கூட்டங்களுக்குத் தேவையான புத்தகங்களை வெளியே எங்கேயாவது ஒளித்துவைத்துவிட்டு போகும் வழியில் அவற்றை எடுத்துச் செல்வாள். அவளை அடிமைப்படுத்தி வைத்திருந்தவர்கள், அவள் ஆன்மீகக் கூட்டங்களுக்குச் சென்றதால் பல முறை அவளை ஈவிரக்கமின்றி அடித்திருக்கிறார்கள்.

சூழ்நிலை அப்படியே இருந்துவிடவில்லை. ஸாயினாப் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டாள். அவள் உடனடியாக சபையின் எல்லா கூட்டங்களுக்கும் போகத் தொடங்கினாள், சீக்கிரத்தில் ஆன்மீக ரீதியில் அவள் முன்னேற அந்தக் கூட்டங்கள் அவளுக்கு உதவின. அதிக சம்பளம் கிடைக்கும் ஒரு வேலை அவளுக்குக் கிடைத்தது; ஆனால், கிறிஸ்தவ அறிவுரைகளைப் பெற கூட்டங்களுக்குப் போக முடியாமல் அது தடைசெய்துவிடும் என்பதால் அந்த வேலையை அவள் மறுத்துவிட்டாள். அவள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்துகொண்டு முழுக்காட்டப்படாத ராஜ்ய பிரஸ்தாபியாக ஆனாள். யெகோவாவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்ததைக் காட்டும் விதத்தில் பிறகு முழுக்காட்டுதல் எடுத்தாள். உடனே, துணைப் பயனியர் சேவையிலும் ஈடுபட்டாள். ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒழுங்கான பயனியர் சேவைக்காக விண்ணப்பித்தாள்.

சத்தியத்தில் ஆர்வம் காட்டின ஒரு நபர், சில கூட்டங்களுக்கு வந்த பிறகு இவ்வாறு சொன்னார்: “நான் இங்கிருக்கும்போது ஏழையாக என்னை நினைப்பதில்லை.” அநேகர் கினியின் பொருள் வளங்களில் மாத்திரமே ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், யெகோவாவை நேசிக்கிறவர்களோ ஆன்மீக பொக்கிஷங்களைத் தேடுகிறார்கள். ஆம், ‘சகல தேசங்களிலுமுள்ள விரும்பப்பட்டவைகளான’ நல்மனம் படைத்தோர் யெகோவாவின் உண்மை வழிபாட்டிடம் இன்று திரும்புகிறார்கள்!

[பக்கம் 8-ன் பெட்டி]

கினி​—⁠2005

சாட்சிகளின் உச்சநிலை எண்ணிக்கை: 883

பைபிள் படிப்புகள்: 1,710

நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தோர்: 3,255

[பக்கம் 8-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

கினி

கோனாக்ரீ

சியர்ரா லியோன்

லைபீரியா

[பக்கம் 9-ன் படம்]

ஆல்பெர்ட்டும் லூயெக்கும்

[பக்கம் 9-ன் படம்]

கோனாக்ரீயில் ராஜ்ய மன்றம்

[பக்கம் 10-ன் படம்]

எர்னஸ்டின்

[பக்கம் 10-ன் படம்]

மார்டின்

[பக்கம் 10-ன் படம்]

ஸாயினாப்

[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]

USAID

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்