‘அறுப்புக்கு விளைந்திருக்கிற’ வயல்
தென் அமெரிக்காவின் வடமுனையில் க்வாஹீரா தீபகற்பம் உள்ளது. இது வட கொலம்பியாவிலும் வடமேற்கு வெனிசுவேலாவிலும் அமைந்திருக்கிறது. வெயில் சுட்டுப் பொசுக்குவதாலும், மழை சுமாராகவே பெய்வதாலும் இது ஓரளவு பாலைவனத்தைப் போல இருக்கிறது; இங்கு தட்பவெப்பநிலை 43 டிகிரி செல்ஷியஸை எட்டுகிறது. இப்படிப்பட்ட வானிலை நிலவுகிறபோதிலும் இங்குள்ள மக்கள் சுறுசுறுப்பாக உழைத்து, பெருமளவு சாகுபடி செய்யும் விவசாயிகளாக இருக்கிறார்கள். சதா வீசுகிற கடல் காற்றும் வடகிழக்கிலிருந்து வீசும் குளிர் பருவக் காற்றும் வெப்பத்தைச் சமாளித்து வாழ்வதற்கு வழிசெய்திருக்கின்றன; கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கை வனப்பையும் நெஞ்சைக் கொள்ளைகொள்ளும் அழகிய கடற்கரைகளையும் கண்டுகளிக்க சுற்றுலாப் பயணிகள் வருவதற்கும் வழிசெய்திருக்கின்றன.
நல்வரவு. வையூ இந்தியர்களின் பூமிக்கு. இந்த இனத்தவர்கள் சுமார் 3,05,000 பேர் இருக்கிறார்கள். இவர்களில் 1,35,000 பேர் கொலம்பியாவில் குடியிருக்கிறார்கள். இவர்கள் ஸ்பானிய குடியேற்றத்திற்கு வெகு காலம் முன்பிருந்தே இங்கு வசித்து வருகிறார்கள்.
இவர்களுடைய முக்கியத் தொழில் கால்நடை வளர்ப்பும் விவசாயமுமே. இவர்கள் மீன்பிடி தொழிலிலும் அண்டை அயல் நாடுகளோடு வணிகத்திலும் ஈடுபடுகிறார்கள். கண்ணைப் பறிக்கும் வண்ண வண்ண நிறங்களில் துணிகளை நெய்வதில் பெண்கள் சாமர்த்தியசாலிகள், இப்படி இவர்கள் தயாரிக்கும் துணிகள் சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
வையூக்கள் கள்ளம் கபடம் இல்லா வெள்ளை உள்ளம் படைத்தவர்கள், இருகரம் நீட்டி வரவேற்று உபசரிப்பதில் வல்லவர்கள் என்றெல்லாம் பெயரெடுத்திருக்கிறார்கள். எனினும், அவர்களும்கூட ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ வாழ்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1, NW) இவர்கள் சந்திக்கிற முக்கியப் பிரச்சினை வறுமை. இதன் கோரப் பிடியில் சிக்கித் தவிப்பதால் இவர்கள் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். இவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாகவும், மருத்துவ சிகிச்சை பெற வழியில்லாதவர்களாகவும், இங்குள்ள பச்சிளங்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவுபடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்; அதோடு, சில இடங்களில் தீயசெயல்களில் ஈடுபடுகிறவர்கள் பெருகி வருகிறார்கள்.
பல பத்தாண்டுகளாக, வையூக்களின் மத்தியில் குடியிருப்பதற்கு கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் மிஷனரிகளை அனுப்பியிருக்கின்றன. இதனால் பெரும்பாலான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் ஹாஸ்டல் வசதிகளைக் கொண்ட பள்ளிகளும் சர்ச்சின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. கிறிஸ்தவப் பழக்கவழக்கங்கள் என சொல்லப்படுகிற சிலை வழிபாடு, குழந்தை ஞானஸ்நானம் போன்றவற்றை வையூக்களில் அநேகர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனினும், அவர்களது புராணக்கதைகளிலும் மூடப் பழக்கவழக்கங்களிலும் வேரூன்றிய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் கெட்டியாய் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாகவே வையூக்கள் கடவுள் பக்தி உள்ளவர்கள்; யெகோவாவின் சாட்சிகள் பைபிள் சத்தியங்களைக் கற்பிக்கிறபோது ஆவலோடு கேட்கிறவர்கள். க்வாஹீராவில் 1980-களின் ஆரம்பத்தில், வையூக்களில் ஏழு பேர் மட்டுமே யெகோவாவின் சாட்சிகளாக இருந்தார்கள்; இவர்களில் மூவர் அதன் தலைநகரான ரியோயாசாவில் வசித்தார்கள். இந்த உள்ளூர் சாட்சிகளோடு சேர்ந்து இன்னும் 20 பிரஸ்தாபிகள் ஸ்பானிஷ் மொழியில் இங்கு ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள்.
தாய்மொழியில் செய்தி
ரியோயாசாவில் வசிக்கும் வையூக்களில் பெரும்பாலோர் அவர்களுடைய தாய்மொழியான வையூனைக்கி தவிர ஓரளவு ஸ்பானிஷ் மொழியும் பேசுகிறார்கள். ஆரம்பத்தில், ராஜ்ய செய்தியைப் பிரசங்கிக்கும்போது அநேகர் காதுகொடுத்துக் கேட்கவில்லை. தங்கள் இனத்தாரைத் தவிர மற்றவர்களை அவர்கள் தவிர்த்தார்கள்; மற்றவர்களை ஆரிஹூனாஸ் என அழைத்தார்கள். யெகோவாவின் சாட்சிகள் வையூக்களை வீடுகளில் சந்திக்கச் சென்றபோது பெரும்பாலோர் தங்கள் தாய்மொழியிலேயே பதில் அளித்தார்கள், ஸ்பானிஷ் மொழியில் அல்ல. இதனால் சாட்சிகள் பேசாமல் அடுத்த வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள்.
எனினும், 1994-ன் முடிவில் விசேஷ பயனியர்கள், அதாவது முழுநேர பைபிள் போதகர்கள் அடங்கிய ஒரு தொகுதியை ரியோயாசா சபையில் ஊழியம் செய்வதற்கு யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் அனுப்பியது. இந்த பயனியர்கள், வையூ சாட்சிகளிடம் வையூனைக்கி மொழியைக் கற்றுத்தரும்படி கேட்டார்கள். பைபிள் செய்தியை எளிய வார்த்தைகளில் அறிவிப்பதற்கு மனப்பாடம் செய்த பிறகு இந்தச் சாட்சிகள் ஊழியத்திற்குச் சென்றார்கள், சொல்கிற செய்தியைக் கேட்கிற விஷயத்தில் ஜனங்களிடம் பெரும் மாற்றத்தை உடனடியாகப் பார்த்தார்கள். இந்த பைபிள் போதகர்கள் தப்பும் தவறுமாக வையூனைக்கியைப் பேசியபோதிலும், வீட்டுக்காரர்கள் ஆச்சரியத்தில் கண்கள் விரியப் பார்த்தார்கள், சொல்வதைக் கேட்க மனமுள்ளவர்களாய் இருந்தார்கள்; சில சமயங்களில் ஓரளவே தாங்கள் அறிந்து வைத்திருக்கிற ஸ்பானிஷ் மொழியில் வீட்டுக்காரர்கள் உற்சாகத்தோடு உரையாடலில் இறங்கினார்கள்!
‘அறுப்புக்கு விளைந்திருக்கிறது’
கிறிஸ்தவர்களின் சீஷராக்கும் வேலையை அப்போஸ்தலன் பவுல் வயலில் பயிர் செய்வதற்கு ஒப்பிட்டார்; இந்த ஒப்புவமையை விவசாயிகளான வையூக்கள் சட்டென புரிந்துகொள்கிறார்கள். (1 கொரிந்தியர் 3:5-9) அடையாள அர்த்தத்தில், வையூக்களின் வயல் உண்மையிலேயே ‘அறுப்புக்கு விளைந்திருக்கிறது’ எனலாம்.—யோவான் 4:35.
வையூ இந்தியரான நீல் என்பவர் மானாயூரே என்ற இடத்தில் வசித்தார்; பிறந்ததிலிருந்தே உடல் குறைபாட்டால் கஷ்டப்பட்டார். இதற்கெல்லாம் கடவுள்தான் காரணமென அவர் நினைத்தார், தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனச்சோர்வுற்றார். தன்னுடைய வேலை காரணமாக பல்வேறு நகரங்களுக்குச் சென்ற யெகோவாவின் சாட்சி ஒருவர் நீல்லை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்தித்தார்; அவரிடம் யெகோவாவின் ராஜ்யத்தைக் குறித்துப் பேசினார். அப்போது நீல்லுக்கு 14 வயது. நீல்லுக்கு ஆர்வம் இருப்பதை அறிந்த அந்தச் சாட்சி அவருக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தார். யெகோவா அன்பானவர் என்பதைக் கற்றறிந்தபோது நீல் சந்தோஷப்பட்டார், தன் கஷ்டத்திற்கெல்லாம் கடவுள் காரணர் அல்ல என்ற முடிவுக்கும் வந்தார். பூமியில் பூங்கா போன்ற பரதீஸை கடவுள் உருவாக்கப்போகிறார் என்பதையும் அங்கு வியாதிப்பட்டவர்களே இருக்க மாட்டார்கள் என்பதையும் வாசித்தபோது அவர் நெஞ்சம் நெகிழ்ந்தார்!—ஏசாயா 33:24; மத்தேயு 6:9, 10.
அந்தச் சமயத்தில் நீல்லுடைய குடும்பத்திற்கும் மற்றொரு குடும்பத்திற்கும் இடையே சண்டை சச்சரவு ஏற்பட்டது. எந்தத் தீங்கும் நேர்ந்துவிடாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீல்லின் உறவினர்கள் குலமரபு சார்ந்த விசேஷ சடங்குகளை நடத்தினார்கள். அதைப்பற்றி நீல் சொல்கிறார்: “ஆரம்பத்தில் என்னுடைய புதிய மத நம்பிக்கைகளைப்பற்றி என் குடும்பத்தாரிடம் முக்கியமாக, குடும்பத்திலுள்ள பெரியவர்களிடம் பேசுவதற்குப் பயந்தேன்; ஏனெனில் அவர்களுக்கு நாங்கள் அதிக மதிப்புமரியாதை கொடுத்துவந்தோம்.” பைபிளுக்கு முரணான நம்பிக்கைகளை நீல் ஏற்றுக்கொள்ளவோ, ஆவியுலகத்தொடர்பு பழக்கவழக்கங்களில் ஈடுபடவோ மாட்டார் என்பதை அவருடைய பெற்றோர் அறிந்தபோது கோபத்தில் கொதித்தெழுந்தார்கள். பிறகு ரியோயாசாவுக்கு வந்து அங்கிருந்த சபையாரோடு நீல் கூட்டுறவு வைத்திருந்தார். அதன் பின் முழுக்காட்டுதல் பெற்றார். 1993-ல் உதவி ஊழியராகவும், அதற்கு மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒழுங்கான பயனியராகவும் நியமிக்கப்பட்டார். 1997-ல் மூப்பராக நியமிக்கப்பட்டார். 2000-ஆம் வருடம் விசேஷ பயனியரானபோது இன்னும் அதிகளவு ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.
டரீஸா என்பவரின் உதாரணத்தையும் கவனியுங்கள். இவரும் வையூ இனத்தைச் சேர்ந்தவர், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தவர். இவர் திருமணம் செய்துகொள்ளாமலேயே டானியல் என்பவருடன் வாழ்ந்து வந்தார். டரீஸா பைபிள் படிப்பில் கலந்துகொள்வதைப் பார்த்து டானியல் கேலிசெய்ததோடு நிற்காமல் அவரையும் அவர்களுடைய மூன்று பிள்ளைகளையும் அடிக்கவும் செய்தார். டரீஸாவுடன் சேர்ந்து பைபிள் படிப்பு படிக்க அவர் பின்னர் ஒப்புக்கொண்டாலும், அடிக்கடி தன் நண்பர்களுடன் சேர்ந்து எக்கச்சக்கமாகக் குடிப்பதில் இறங்கினார்; சில சமயங்களில் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குச் சேர்ந்தாற்போல் குடித்து கும்மாளமடிப்பார். குடும்பமோ வறுமையில் வாடியது. விசுவாசமிக்க டரீஸா பைபிள் படிப்பிலும் கிறிஸ்தவ கூட்டங்களிலும் தவறாமல் கலந்துகொண்டார். இது, பைபிள் படிப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள டானியலுக்கு உதவியது. ஒருநாள் அவர்களுடைய மகன் கொதித்துக்கொண்டிருந்த நீரில் தவறி விழுந்து, பலத்த காயமடைந்து இறந்துபோனான். ஒருபுறம் மகனைப் பறிகொடுத்த வேதனையைச் சமாளிக்கையில், மறுபுறம் டரீஸாவின் நண்பர்களும் உற்றார் உறவினர்களும் பைபிளுக்கு முரணான சவ அடக்க பழக்கவழக்கங்களைப் பின்பற்றும்படி அவருக்குத் தொல்லை கொடுத்தார்கள்; இதையும் டரீஸா சமாளிக்க வேண்டியிருந்தது.
இத்தகைய இக்கட்டான சமயத்தில் அந்தத் தம்பதியர் அருகிலுள்ள சபையாரிடமிருந்து நம்பிக்கையூட்டும் விதத்தில் உதவியையும் ஆறுதலையும் பெற்றார்கள். சவ அடக்கத்திற்குப் பிறகு அங்கிருந்த வையூ சபையைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி போய் இந்தத் தம்பதியரைப் பார்த்து ஆறுதல் அளித்து வந்தார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய அன்பைச் செயலில் பார்த்தபோது ஆன்மீக முன்னேற்றம் செய்யுமளவுக்கு டானியல் தூண்டுதலைப் பெற்றார். குடிப்பழக்கத்திற்கு முழுக்குப்போட்டார், டரீஸாவை மோசமாக நடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். டானியலும் டரீஸாவும் திருமணம் செய்துகொண்டார்கள், குடும்பத்தைப் பராமரிக்க டானியல் கஷ்டப்பட்டு வேலை செய்ய ஆரம்பித்தார். இருவரும் ஆன்மீக ரீதியில் முன்னேற்றம் செய்தார்கள், 2003-ல் முழுக்காட்டுதல் பெற்றார்கள். இருவரும் அநேகருக்கு பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள். டரீஸா தன் குடும்பத்தாருக்கு அருமையாய் சாட்சிகொடுத்ததன் காரணமாக, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் யெகோவாவின் சாட்சிகள் அவருடைய உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும்போது சாட்சிகள் சொல்வதைக் கேட்க அவர்கள் மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். டானியலின் அக்கா மகன் ஒருவர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆகியிருக்கிறார், அவருடைய அக்கா மகள் ஒருத்தியும் அண்ணன் மகள் ஒருத்தியும் பைபிள் படிப்பில் கலந்துகொள்கிறார்கள், கூட்டங்களுக்கும் வருகிறார்கள். டரீஸாவின் நாத்தனாரும்கூட ஒரு மகனை விபத்தில் பறிகொடுத்தவர்; இவரும் இவருடைய குடும்பத்தாரும் பைபிள் படிப்பில் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள்.
வையூனைக்கி மொழியில் ஆன்மீக உணவு
1998-ல் பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!a என்ற சிற்றேடு வையூனைக்கி மொழியில் வெளியிடப்பட்டது. வையூ மக்களில் அநேகருக்குச் சத்தியத்தைச் சொல்லவும் அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்தவும் இது அருமையான சிற்றேடாக இருக்கிறது. 2003-ல், யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களை வையூனைக்கியில் மொழிபெயர்ப்பதற்காக அநேக சகோதரர்களுக்குப் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ரியோயாசாவில் உள்ள மொழிபெயர்ப்புத் தொகுதியிலுள்ளவர்களின் அயராத உழைப்பின் காரணமாக, இன்னும் அநேக சிற்றேடுகள் இம்மொழியில் கிடைப்பதற்கும், வையூனைக்கி மொழி பேசும் அநேகர் ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கும் வழி திறக்கப்பட்டிருக்கிறது.
2001 முதல், மாவட்ட மாநாடுகளில் கொடுக்கப்படும் சில பேச்சுகள் வையூனைக்கியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. பைபிள் படிப்பவர்கள், தங்களுடைய தாய்மொழியில் நிகழ்ச்சிகளைக் கேட்கும்போது ஊக்கமும் பெறுகிறார்கள். வையூனைக்கி மொழியில் பைபிள் நாடகங்களையும் பார்க்க இவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
பெரும் மகசூலை அள்ளித்தரும் வயல்
யூரிபியா என்ற நகரம் ரியோயாசாவுக்கு வடகிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. யூரிபியா வையூ சபையில் 16 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள்; இவர்களில் பலர் நாட்டுப்புறத்தில் உள்ள வையூ இந்தியர்களிடம் போய் பிரசங்கிப்பதற்கு அதிக முயற்சி எடுக்கிறார்கள். அப்படிப் பிரசங்கிப்பதற்குச் சென்ற ஒரு பயணத்தைப்பற்றி சபை மூப்பர்களில் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “சுற்றிலும் வேலி அமைக்கப்பட்ட ஒரு பண்ணைக்குச் சென்றோம்; அங்கு தாழ்வான கூரைகளோடும் சிறிய சன்னல்களோடும் கட்டப்பட்டிருந்த பத்துப் பன்னிரண்டு வீடுகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டின் முன்புறமும் யோடோஹோலோவினால் ஆன, அதாவது கள்ளிச் செடியின் கெட்டியான உட்புறத்தால் ஆன, சமதள கூரை வேயப்பட்டிருந்தது. இதனால், குடும்பத்தாரும் வீட்டுக்கு வருபவர்களும் சூரியனின் சுட்டெரிக்கும் சூட்டிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். இங்கு அநேகர் ஆர்வம் காட்டியதைப் பார்த்து நாங்கள் சந்தோஷப்பட்டோம்; எனவே, மீண்டும் போய் அவர்களைச் சந்தித்து பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்தோம். மீண்டும் நாங்கள் போனபோது அவர்களில் பலருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது என்பதைக் கவனித்தோம். அங்கு ஒரு பள்ளி இருந்ததாகவும் போதுமான பணம் இல்லாததால் அது மூடப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் எங்களிடம் சொன்னார்கள். படிப்பறிவு வகுப்புகளையும் பைபிள் படிப்புகளையும் நடத்துவதற்காக வகுப்பறை ஒன்றைப் பயன்படுத்திக்கொள்ளும்படி அதன் உரிமையாளர் எங்களுக்கு அன்போடு அனுமதி அளித்தார். அவர்களில் ஆறு பேர் படிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்று வருகிறார்கள், பைபிள் படிப்பிலும் நல்ல முன்னேற்றம் செய்து வருகிறார்கள். அவர்கள் காட்டிய அக்கறையும் ஆர்வமும் எங்கள் நெஞ்சைத் தொட்டன, எனவே அந்தப் பண்ணையில் கூட்டங்களை நடத்த திட்டமிடுகிறோம்.”
வையூ இனத்தாராக இல்லாத யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் வையூனைக்கி மொழியைக் கற்றிருக்கிறார்கள்; அவர்கள் அளிக்கும் உதவி பெரிதும் மதிக்கப்படுகிறது. க்வாஹீரா தீபகற்பத்தில் தற்போது எட்டு சபைகளும் இரண்டு தொகுதிகளும் இந்த மொழியைப் பயன்படுத்துகின்றன.
இந்த முயற்சிகள் அனைத்தையும் யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பது பளிச்செனத் தெரிகிறது. இந்த வையூக்களின் மத்தியில் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பணியில் இன்னும் அதிக பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தங்களுடைய ஆன்மீகத் தேவையை உணர்ந்தவர்கள் கிறிஸ்தவ சீஷர்களாக ஆகும்போது நல்ல பலன்களை எதிர்பார்க்க முடிகிறது. ‘அறுப்புக்கு விளைந்திருக்கிற’ இந்த வயலில் மேலும் பயிர் செய்வதற்கு இன்னும் அநேக ஊழியர்களை யெகோவா அனுப்புவாராக.—மத்தேயு 9:37, 38.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 16-ன் தேசப்படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
வெனிசுவேலா
கொலம்பியா
லா க்வாஹீரா
மானாயூரே
ரியோயாசா
யூரிபியா
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
கீழே வையூ குடியிருப்பு: Victor Englebert