மனத்தாழ்மை—ஒரு சவால்
ம னத்தாழ்மையாக நடப்பதெல்லாம் இந்தக் காலத்துக்கு உதவாது என அநேகர் நினைக்கலாம். மற்றவர்கள் முன்பு பெரிய ஆளாக காட்டிக்கொள்ள விரும்புகிறவர்களும் வாழ்க்கையில் வெற்றி கொடி நாட்டியவர்களாகத் தெரிபவர்களும் மற்றவர்களைவிட ஒருபடி மேலே இருக்கவேண்டுமென்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்; ஆணவத்தோடு நடந்துகொள்கிறார்கள், தாங்கள் நினைத்ததை அடையத் துடிக்கிறார்கள். இன்றைய சமுதாயத்தில், சாந்தமாகவும் பணிவாகவும் இருப்பவர்களைப் பார்த்தல்ல, செல்வந்தராயும் பிரபலங்களாயும் திகழ்வோரின் வாழ்க்கைப்பாணியைப் பார்த்துதான் பெரும்பாலான மக்கள் பொறாமைப்படுகிறார்கள். வெற்றித் திலகங்களாக மின்னுபவர்கள், பொதுவாக தாங்கள் முன்னுக்கு வந்ததற்கு தங்கள் சொந்த முயற்சியே காரணம் என்பதாகத் தம்பட்டம் அடிக்க விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பணிவுடன் நடந்துகொள்வதற்குப் பதிலாக, வெற்றிப் பெருமிதத்துடன் தங்களுக்குத் தாங்களே புகழ்மாலை சூட்டிக்கொள்கிறார்கள்.
“‘என்னைவிட்டால் யாருமே இல்லை’ என்ற மனப்பான்மை [தன்னுடைய நாட்டில்] தலைதூக்குவதாக” கனடா நாட்டு ஆய்வாளர் ஒருவர் சொன்னார். பொறுப்போடு நடந்துகொள்வதைவிட ஜாலியாக வாழ்வதே முக்கியம் என நினைக்கும் ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்வதாக இன்னும் சிலர் நினைக்கிறார்கள்; இன்றைய உலகில் தங்களைப்பற்றி மட்டுமே நினைப்பவர்கள்தான் அதிகமாக இருப்பதையும் அவர்கள் கவனித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஓர் உலகில், மனத்தாழ்மை என்ற குணத்தை யாருமே இருகரம் நீட்டி வரவேற்பதாகத் தெரியவில்லை.
உண்மைதான், சாதுவான ஆட்களுடன் ஒத்துப்போவது எளிதாக இருப்பதால் மற்றவர்கள் மனத்தாழ்மையைக் காட்டுவது நல்லது என்ற கருத்தை யாருமே மறுக்க மாட்டார்கள். என்றாலும், போட்டாபோட்டி போடும் இந்த உலகில், பணிவைக் காட்டினால் எங்கே தங்களை கோழை என முத்திரை குத்திவிடுவார்களோ என்று சிலர் பயப்படுகிறார்கள்.
நம் காலத்தில் மக்கள் “வீம்புக்காரராயும் அகந்தையுள்ளவர்களாயும்” இருப்பார்கள் என கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் முன்னறிவித்தது. (2 தீமோத்தேயு 3:1, 2) இந்தத் தீர்க்கதரிசனம் அப்படியே நடந்துவருவதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்தானே? தாழ்மையோடு இருப்பதால் ஏதேனும் பயன் உண்டு என நினைக்கிறீர்களா? அல்லது பணிந்துபோகும் ஒருவரை மற்றவர்கள் கோழையாக நினைப்பார்கள், அவருடைய முதுகில் ஏறி சவாரி செய்வார்கள் என்று நினைக்கிறீர்களா?
உண்மையைச் சொன்னால், மனத்தாழ்மை என்ற குணத்தை உயர்வாய்க் கருதுவதற்கும் அதை வளர்த்துக்கொள்வதற்கும் தகுந்த காரணங்களை பைபிள் அளிக்கிறது. அக்குணத்தைப் பற்றிய சமநிலையான கருத்தைத் தருகிறது, அதை வளர்த்துக்கொள்ளும்படி சிபாரிசு செய்கிறது. அதோடு, அந்தக் குணம் பலவீனத்திற்கு அல்ல, ஆனால் பலத்திற்கு அடையாளம் எனவும் காட்டுகிறது. ஏன் அப்படிச் சொல்கிறோம் என்பதை அடுத்தக் கட்டுரை விளக்கும்.
[பக்கம் 3-ன் படம்]
நம் சாதனைகளை நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?