கிறிஸ்தவர்கள் கோதுமையைப்போல் புடைக்கப்படுகையில் . . .
இயேசு மரிப்பதற்குச் சற்று முன்பு தமது சீஷர்களுக்குப் பின்வரும் எச்சரிப்பை விடுத்தார்: “இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.” (லூக்கா 22:31) இப்படிச் சொல்கையில் அவர் எதை அர்த்தப்படுத்தினார்?
இயேசுவின் காலத்தில், கோதுமை அறுவடை அதிக நேரத்தையும் முயற்சியையும் உட்படுத்திய வேலையாக இருந்தது. அறுவடை செய்பவர்கள், முதலாவதாக வயலிலிருந்து கோதுமை கதிர்களை அறுத்து அவற்றைக் கட்டுக்கட்டாகச் சேர்ப்பார்கள். பின்னர், கோதுமை மணிகள் உதிரும் வகையில் அந்தக் கதிர்கட்டுகளை போரடிக்கும் களத்தில் அடிப்பார்கள் அல்லது விலங்குகளால் இழுத்து செல்லப்படும் ஒருவகை போரடிக்கும் கருவியை அந்தக் கதிர்கள்மீது ஓட்டுவார்கள். இப்படிச் செய்கையில், கதிர்களிலிருந்து கோதுமை மணிகளும் உமியும் பிரிந்துவிடுகின்றன. பின்னர், கோதுமையும் கதிரும் உமியுமாக இருக்கும் இந்தக் கலவையை அந்த விவசாயிகள் காற்றில் அள்ளி வீசுவார்கள். இப்படி வீசும்போது, பதரைக் காற்று அடித்துச் செல்லும், முழு முழு கோதுமை மணிகளோ போரடிக்கும் களத்திற்கே வந்து விழுந்துவிடும். இத்தனையையும் செய்த பிறகு, இன்னும் வேண்டாதவை ஏதாவது எஞ்சியிருந்தால் அவற்றையும் நீக்கி, கோதுமை மணிகளை மட்டும் சேர்ப்பதற்காகக் கடைசியில் அவற்றைக் கவனமாகப் புடைத்து எடுப்பார்கள்.
இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைவாகவே, அன்று அவருடைய சீஷர்களை சாத்தான் விடாமல் தாக்கினான், இன்று நம்மையும் தாக்கி வருகிறான். (எபே. 6:11) வாழ்க்கையில் நாம் எதிர்ப்படும் ஒவ்வொரு பிரச்சினையும் சாத்தானால் நேரடியாக வருகிறதில்லை என்பது உண்மைதான். (பிர. 9:11) ஆனாலும், நம் உத்தமத்தைக் குலைப்பதற்காக தனக்குக் கிடைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் சாதகமாக்கிக்கொள்ள சாத்தான் வழி தேடுகிறான். உதாரணமாக, பொருளாசைமிக்க வாழ்க்கை பாணியைப் பின்பற்றவோ, மோசமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கவோ, பாலியல் ரீதியில் ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடவோ அவன் நமக்கு ஆசை காட்டலாம். படிப்பிலும் தொழில் முன்னேற்றத்திலும் இந்த உலகம் வாரி வழங்கும் அத்தனை வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி நம்மை வற்புறுத்த பள்ளி தோழர்களையோ நம்மோடு வேலை செய்கிறவர்களையோ சாட்சிகளாயிராத உறவினர்களையோ அவன் பயன்படுத்தலாம். இவை போதாதென்று, கடவுளிடம் நாம் உத்தமமாய் நடப்பதைக் கெடுப்பதற்காக அவன் நேரடியான துன்புறுத்தலையும் தரலாம். சுளகினால் கோதுமையைப் புடைப்பதுபோல் சாத்தான் நம்மைப் புடைப்பதற்கு இன்னும் அநேக வழிகளைப் பயன்படுத்துவான் என்பதில் சந்தேகமில்லை.
சக்திவாய்ந்த இந்தச் சத்துருவை நாம் எதிர்த்து நிற்பது எப்படி? இதை நம் சொந்த பலத்தால் சாதிக்க முடியாது. சாத்தான் நம்மைவிட பலசாலிதான்; ஆனால், சாத்தானைவிடவும் யெகோவா, அளவிலா பலம் படைத்தவர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். நாம் யெகோவாவை முழுவதுமாக நம்பி, சகித்திருப்பதற்காக ஞானத்தையும் தைரியத்தையும் தரும்படி அவரிடம் ஊக்கமாக ஜெபம் செய்து, அவருடைய வழிநடத்துதலை முழுமையாகச் சார்ந்திருந்தால் சாத்தானின் தாக்குதல்களை எதிர்த்து நிற்பதற்குத் தேவையான பலத்தை அவர் தருவார்.—சங். 25:4, 5.
சோதனையை எதிர்ப்படுகையில் ‘நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியும்’ திறமை நமக்கு அவசியம்; அப்போதுதான் சாத்தானின் சூழ்ச்சிகளில் சிக்காமல் இருக்க முடியும். (எபி. 5:13, 14) அந்தத் திறமையை வளர்ப்பதற்கு யெகோவா நமக்கு உதவி செய்வார். என்ன நடந்தாலும் சரி, சரியான பாதையிலிருந்து வழிவிலகாமல் நாம் இருக்க வேண்டும். யெகோவாவின் வழிநடத்துதலைப் பின்பற்றினோமானால், சரியானதையே செய்ய வேண்டுமென்று நாம் தைரியமாக எடுத்திருக்கும் தீர்மானத்தை அவர் நிச்சயம் ஆதரிப்பார்.—எபே. 6:10.
சாத்தான் நம்மை கோதுமையைப்போல் புடைத்தெடுக்கலாம். ஆனால், விசுவாசத்தில் உறுதியாக இருந்து, யெகோவா தரும் பலத்தின் ஒத்தாசையுடன் அவனை நம்மால் எதிர்த்து நிற்க முடியும். (1 பே. 5:9) ஆம், யெகோவாவின் வார்த்தை நமக்கு இந்த உறுதியை அளிக்கிறது: “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.”—யாக். 4:7.