ஆண்டிஸ் மலையில் நற்செய்தியை அறிவித்தோம்
அந்த அழுக்கான தரையில், நாங்கள் 18 பேரும் படுத்துத் தூங்குவதற்கென்று தயாரிக்கப்பட்டிருந்த பைகளில் நடுங்கிக்கொண்டே படுத்திருந்தோம். கொட்டோ கொட்டென்று கொட்டும் மழை, தகரக் கூரையின் மேல் விழுந்து ‘தடதடவெனத்’ தாளம் போட்டுக்கொண்டிருந்தது. அந்தச் சின்னஞ்சிறு கொட்டகையின் அவல நிலையைப் பார்த்தால், இதற்கு முன் இங்கு மனிதர்கள் யாருமே தங்கியிருக்கவில்லை என்று தோன்றியது.
நாங்கள் 18 பேரும் இந்தப் பகுதிக்கு ஏன் சென்றோம் தெரியுமா? “பூமியின் கடைசிபரியந்தமும்” நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி இயேசு கொடுத்திருந்த கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற ஆவலில்தான் இங்கே சென்றிருந்தோம். (அப். 1:8; மத். 24:14) ஆம், பொலிவியன் ஆண்டிஸ் மலையின் ஒதுக்குப்புறப் பகுதி ஒன்றில் பிரசங்கிக்கவே நாங்கள் சென்றிருந்தோம்.
மலையில் பயணம்
முதலில், இந்தப் பகுதிக்குச் செல்வதே பெரிய விஷயம். இதுபோன்ற ஒதுக்குப்புறமான பகுதிகளுக்குச் செல்லும் பொது வாகனங்கள் சரியான நேரத்தில் வருவதே கிடையாது என்று கேள்விப்பட்டிருந்தோம். எங்கள் பேருந்து வந்தபோதுதான், அது சாதாரண பேருந்தைவிட சற்று சிறியதாக இருந்ததைக் கவனித்தோம். அதனால், எங்களில் சிலர் உட்கார இடமில்லாமல் நின்றுகொண்டே பயணித்தோம். எப்படியோ, கடைசியில் நாங்கள் இறங்கிய வேண்டிய இடத்தை அடைந்தோம்.
பொலிவியன் ஆண்டிஸ் மலையில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்று பிரசங்கிக்க வேண்டுமென்பதே எங்கள் குறிக்கோள். பேருந்திலிருந்து இறங்கியதும், நாங்கள் எல்லாரும் பொருள்களை முதுகில் சுமந்தபடி, செங்குத்தான மலைப்பாதைகளில் வரிசையாக அடிமேல் அடியெடுத்து வைத்து கவனமாக நடக்க ஆரம்பித்தோம்.
பார்ப்பதற்கு கிராமங்கள் சிறியதாகத் தெரிந்தாலும், ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பவர்களைப் போய்ச் சந்திக்க பல மணிநேரம் எடுத்தது. வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடந்ததே இதற்குக் காரணம். எவ்வளவு தூரம் நடந்தாலும், கண்ணுக்கெட்டும் தொலைவில் மற்றொரு வீடு தென்படும். வயல்வெளிகளின் நடுவே குறுக்கு நெடுக்காகச் செல்லும் பாதைகளில் நடக்கும்போது வழி தெரியாமல் அடிக்கடி திண்டாடினோம்.
“நீங்கள் ஏன் முன்பே வரவில்லை?”
நாங்கள் இவ்வளவு தூரம் நடந்து வந்ததை அறிந்த ஒரு பெண் அசந்துவிட்டார். அதனால், தன்னுடைய சமையல் அறையைப் பயன்படுத்திக்கொள்ள எங்களை அனுமதித்ததோடு, தேவையான விறகுகளையும் தந்தார். இறந்தவர்களின் நிலையைப்பற்றி பைபிள் சொல்லும் விஷயங்களைத் தெரிந்துகொண்ட ஒருவர், “நீங்கள் ஏன் முன்பே வரவில்லை?” என்று கேட்டார். பைபிளைப்பற்றி அதிகம் கற்றுக்கொள்ள அவருக்கு ஒரே ஆசை. அதனால், நாங்கள் அங்கிருந்து கிளம்பியபோது, அவரும் எங்களோடு சேர்ந்து நடக்க ஆரம்பித்தார். வழியெங்கும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வந்தார். இன்னொருவர், யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி அப்போதுதான் முதன்முதலாகக் கேள்விப்பட்டதாகச் சொன்னார். நம்முடைய பிரசுரங்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். அங்கு வந்ததற்காக ஓயாமல் நன்றி சொல்லிக்கொண்டிருந்தார். தன்னுடைய கொட்டகை ஒன்றில் இரவு தங்கிக்கொள்ளும்படி சொல்லி, சாவியையும் கொடுத்தார்.
ஒருநாள் இரவு கும்மிருட்டாக இருந்ததால், தெரியாத்தனமாக பெரிய பெரிய கறுப்பு எறும்புகளின் புற்று இருந்த இடத்தில் கூடாரத்தைப் போட்டுவிட்டோம். கோபத்தில் கொதித்தெழுந்த எறும்புகள் உடனே எங்களைக் கடித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க ஆரம்பித்தன. ஏற்கெனவே களைத்துப்போயிருந்த எங்களுக்கு நகரக்கூட தெம்பில்லை. நல்லவேளை, கொஞ்ச நேரத்தில் அந்த எறும்புகளும் எங்களைக் கண்டுகொள்ளாமல் தங்கள் வேலையில் மும்முரமாய் இறங்கிவிட்டன.
தரையில் படுத்துத் தூங்கியதால் முதலில் எங்கள் முதுகும் எலும்புகளும் ‘விண்விண்னென்று’ வலிக்க ஆரம்பித்தன. ஆனால், இரவு நேரத்தில் அந்த வலியோடு தூங்கப் பழகிக்கொண்டோம். காலையில் எழுந்து, மாசுமறுவற்ற அந்த மலைப் பள்ளத்தாக்குகளையும், மலைச்சரிவுகளைச் செல்லமாக உரசிச் செல்லும் மேகக் கூட்டங்களையும், பனிக்கிரீடம் அணிந்தாற்போல் அழகாகக் காட்சியளிக்கும் தூரத்து மலைச்சிகரங்களையும் பார்த்தபோது எங்கள் வலியெல்லாம் பஞ்சாய்ப் பறந்துவிட்டது. ஓடையின் சலசலப்பும், பறவைகளின் ‘கீச், கீச்’ ஒலியும் தவிர, வேறெந்த சத்தத்தையும் அங்கே கேட்க முடியவில்லை.
ஓடையில் சுகமாகக் குளித்துவிட்டு, தினவசனத்தைச் சேர்ந்து வாசித்தோம். காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு, தூரத்திலிருக்கும் மற்ற கிராமங்களுக்குச் செல்ல மெதுவாக மலையேற ஆரம்பித்தோம். கால் வலிக்க ஏறியதற்குப் பலன் இருக்கத்தான் செய்தது. கடவுளுடைய பெயர் யெகோவா என்பதை பைபிளில் பார்த்தபோது ஒரு மூதாட்டி உணர்ச்சிவசப்பட்டு, அழ ஆரம்பித்துவிட்டார். இனிமேல் அவரும் கடவுளுடைய பெயரைச் சொல்லி ஜெபம் செய்ய முடியும்!
‘கடவுளுக்கு என் நினைவு வந்துவிட்டது போலிருக்கிறது’ என்று ஒரு முதியவர் சொன்னார். தேவதூதர்கள்தான் எங்களை அங்கு அனுப்பி வைத்தார்கள் என்ற கருத்தைச் சொல்லும் பாடல் ஒன்றைத் திடீரென அவர் பாட ஆரம்பித்துவிட்டார். படுத்த படுக்கையாய்க் கிடந்த மற்றொருவர், தன் கிராமத்தார் யாரும் தன் வீட்டுப்பக்கம் எட்டிக்கூட பார்க்காததைச் சொல்லி வேதனைப்பட்டார். லா பாஸ் நகரத்தில் இருந்து இவ்வளவு தூரம் நாங்கள் வந்திருப்பது தெரிந்ததும் மலைத்துப்போனார். பிற மதத்தவர்கள் மணி அடித்து மக்களை சர்ச்சுக்கு வரும்படி அழைக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளோ வீட்டுக்குவீடு சென்று மக்களைச் சந்திக்கிறார்கள் என்று மற்றொருவர் வெகுவாகப் பாராட்டினார்.
அந்தப் பகுதியில் மின்சார வசதியே கிடையாது. ஆகையால், இருட்ட ஆரம்பித்ததுமே மக்கள் படுக்கைக்குப் போய் விடுகிறார்கள். சூரியன் வந்து எழுப்பியதும் கண் விழிக்கிறார்கள். ஆகவே, மக்களை வீட்டில் சந்தித்துப் பேச காலை ஆறு மணிக்கு நாங்கள் ஊழியத்தை ஆரம்பிக்க வேண்டியிருந்தது. இல்லாவிட்டால், பெரும்பாலோர் வயலுக்குச் சென்றுவிடுவார்கள். பிற்பாடு, வேலை செய்துகொண்டிருந்த சிலரிடம் கடவுளுடைய வார்த்தையிலிருந்து பேசியபோது வேலையை நிறுத்திவிட்டு, நாங்கள் சொன்ன செய்தியைக் கேட்டார்கள். இப்படி எங்களுடன் அவர்கள் நேரம் செலவிட்ட வேளையில், உழுதுகொண்டிருந்த எருதுகள் சற்று ஓய்வெடுத்தன. வீட்டில் இருந்த பலர், செம்மறியாட்டுத் தோலை விரித்து எங்களை உட்கார வைத்தார்கள், குடும்பத்திலிருந்த மற்றவர்களையும் கூப்பிட்டு நாங்கள் சொல்வதைக் கேட்கும்படிச் சொன்னார்கள். விவசாயிகள் சிலர் நாங்கள் கொடுத்த பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாக பெரிய பைகளில் சோளத்தை நிரப்பித் தந்தார்கள்.
“என்னை மறக்காமல் வந்து பார்க்கிறீர்களே”
மக்கள் பைபிளைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள இப்படி ஒருமுறை சந்தித்தால் மட்டும் போதாது, அல்லவா? திரும்பவும் வந்து இன்னுமதிகமான விஷயங்களைத் தங்களுக்குச் சொல்லித்தரும்படி அநேகர் எங்களிடம் கெஞ்சிக் கேட்டார்கள். இதனால், பொலிவியாவின் இந்தப் பகுதிக்கு நாங்கள் பலமுறை சென்றோம்.
இவ்வாறு நாங்கள் மறுபடியும் போய்ச் சந்தித்தபோது, ஒரு மூதாட்டி எங்களைப் பார்த்ததும், “நீங்கள் எல்லாம் எனக்குப் பிள்ளைகள் மாதிரி. என்னை மறக்காமல் வந்து பார்க்கிறீர்களே” என்று சொல்லி சந்தோஷப்பட்டார். மற்றொருவர் எங்கள் ஊழியத்தை வெகுவாகப் பாராட்டிவிட்டு, அடுத்தமுறை வரும்போது தன்னுடைய வீட்டில் தங்கிக்கொள்ளச் சொன்னார். அங்கு நாங்கள் பிரசங்கித்த நற்செய்தியைக் கேள்விப்பட்ட ஒரு பெண், அதன் பிறகு நகரத்திற்குக் குடிமாறிச் சென்று, இப்போது அங்கே பிரசங்கித்து வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டதும் பூரித்துப் போனோம். நாங்கள் பாடுபட்டதற்குக் கிடைத்த மிகப் பெரிய பலன் இது.
முதன்முறை நாங்கள் இங்கே பிரசங்கிக்கச் சென்றிருந்தபோது, புறப்பட வேண்டிய கடைசி நாளில் மண்ணெண்ணை தீர்ந்துவிட்டது, சமைப்பதற்குக் கொண்டுசென்றிருந்த பொருள்களும் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன. கொஞ்சம் சுள்ளிகளைச் சேகரித்து நெருப்பு மூட்டி, மிச்சம்மீதி இருந்த பொருள்களை வைத்து உணவு சமைத்தோம். பிறகு நடக்க ஆரம்பித்தோம். பேருந்தைப் பிடிப்பதற்கு நாங்கள் பல கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது. எப்படியோ, இருட்டிய பிறகு அங்கு போய்ச் சேர்ந்தோம்.
வீடு திரும்பினோம்
வீடு திரும்பும் வழியில் நாங்கள் பயணித்த பேருந்து பழுதடைந்ததால், கொஞ்சம் பிரச்சினையாகிவிட்டது. சிறிது நேரம் கழித்து, மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த ஒரு ட்ரக்கில் எப்படியோ ஏறிக்கொண்டோம். ‘இவர்கள் எதற்கு இங்கே வந்தார்கள்?’ என்று எங்களைக் கேள்விக்குறியோடு பார்த்த சக பயணிகளிடம் நற்செய்தியைச் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. அந்த மக்கள் பொதுவாக யாரிடமும் அதிகம் பேசமாட்டார்கள். இருந்தாலும், மற்றவர்களிடம் கனிவாக, கரிசனையாக நடந்துகொள்கிறார்கள்.
ட்ரக்கில் ஒன்பது மணிநேரம் பயணித்த பிறகு, நனைந்து, குளிரில் நடுங்கியபடி வீடு போய்ச் சேர்ந்தோம். இருந்தாலும், அந்தப் பயணம் பயன் தந்தது. வரும் வழியில், நகரத்தில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்த ஏற்பாடு செய்துவிட்டுத்தான் வந்தோம்.
இதுபோன்ற ஒதுக்குப்புறமான பகுதியில் வசிப்போருக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பது உண்மையில் அரும்பெரும் பாக்கியம்தான். நான்கு கிராமங்களிலும் எண்ணற்ற குக்கிராமங்களிலும் நாங்கள் பிரசங்கித்திருந்தோம். ‘சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்துகிற . . . சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன’ என்ற வார்த்தைகள் எங்கள் மனதில் எதிரொலித்தன.—ஏசா. 52:7; ரோ. 10:15.
[பக்கம் 17-ன் படம்]
நற்செய்தியைப் பிரசங்கிக்கத் தயார்