கிறிஸ்தவ சவ அடக்கம் கண்ணியமாய், எளிமையாய், கடவுளுக்குப் பிரியமாய் . . .
ஒப்பாரியும் ஓலமும் காற்றில் மிதந்து வருகிறது. ஒப்பாரி வைப்பவர்கள் கருப்பு உடையில் காட்சியளிக்கிறார்கள். தரையில் விழுந்து தலை தலையாக அடித்துக்கொண்டு அழுது புலம்புகிறார்கள். சிலர் தாரை தப்பட்டைக்கு ஆட்டம் போடுகிறார்கள். சிலர் மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு, குடித்து கும்மாளம் போடுகிறார்கள். இன்னும் சிலர், போதை தலைக்கேற கள் குடித்துவிட்டு தரையில் பிணமாய் விழுந்துகிடக்கிறார்கள். இதெல்லாம் எதற்காக? உலகின் சில பகுதிகளில், சவ அடக்க நிகழ்ச்சியின்போது இப்படித்தான் நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடி வந்து, இறந்துபோன “புண்ணியவானுக்குப்” பிரியாவிடை கொடுக்கிறார்கள்.
இன்று இறந்தவர்களைப் பற்றிய பயத்திலும் மூடநம்பிக்கைகளிலும் மூழ்கிக்கிடக்கிற நண்பர்கள், உறவினர்கள் மத்தியில்தான் யெகோவாவின் சாட்சிகள் பெரும்பாலோர் வாழ்கிறார்கள். செத்துப்போய் ஆவியாய் அலையும் மூதாதையரால் உயிரோடிருப்பவர்களுக்கு நன்மையோ தீமையோ செய்ய முடியும் என்று கோடானுகோடி மக்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை சவ அடக்கத்துடன் சம்பந்தப்பட்ட கணக்குவழக்கில்லாத சடங்காச்சாரங்களுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. காலமான ஒருவருக்காக கவலைப்படுவது இயற்கைதான். ஏன், இயேசுவும் அவருடைய சீடர்களும்கூட அன்பானவர்கள் இறந்தபோது அழுது புலம்பினார்களே. (யோவா. 11:33-35, 38; அப். 8:2; 9:39) ஆனால், அந்தக் காலத்து மக்களைப்போல் அவர்கள் அளவுக்குமீறி அழுது புலம்பவோ ஒப்பாரி வைத்து ஓலமிடவோ இல்லை. (லூக். 23:27, 28; 1 தெ. 4:13) ஏன்? ஒரு காரணம், இறந்தவருடைய நிலையை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.
“உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . . அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; . . . நீ போகிற பாதாளத்திலே [பிரேதக் குழியிலே] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே” என்று பைபிள் தெளிவாகக் கூறுகிறது. (பிர. 9:5, 6, 10) கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்ட இந்த வசனங்கள் இறந்தவருக்கு எந்த உணர்வும் இல்லை என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. அவரால் எதையும் சிந்திக்கவோ, உணரவோ, பேசவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. பைபிளிலுள்ள இந்த முக்கியமான உண்மையைத் தெரிந்துகொண்டபின் சவ அடக்க நிகழ்ச்சியை ஒரு கிறிஸ்தவர் எப்படி நடத்த வேண்டும்?
“அசுத்தமானதைத் தொடாதிருங்கள்”
முன்பு யெகோவாவின் சாட்சிகள் வெவ்வேறு இனத்தை அல்லது கலாச்சார பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம். ஆனால், சாட்சிகளான பிறகு, இறந்தவர்கள் ஆவியாய் வந்து நமக்கு நன்மையோ தீமையோ செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட எல்லா பழக்கவழக்கங்களையும் முற்றிலும் தவிர்க்கிறார்கள். இறந்தவரின் உடலைக் காவல் காப்பது, சவ அடக்க கொண்டாட்டங்களில் ஈடுபடுவது, இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவது, இறந்தவருக்காகப் படையல்கள் வைப்பது, விதவைக்கு சடங்குகள் செய்வது போன்ற எல்லா பழக்கங்களுமே அசுத்தமானவை, கடவுளுக்கு அருவருப்பானவை. ஏனென்றால், இவையெல்லாம் ஆத்துமா அழியாது என்ற போதனையுடன் சம்பந்தப்பட்டவை. ஆம், பைபிளுக்கு முரணான போதனையுடன், பேய்களின் போதனையுடன் சம்பந்தப்பட்டவை. (எசே. 18:4) உண்மை கிறிஸ்தவர்கள், “கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக் கூடாதே.” அதனால், அவர்கள் இப்படிப்பட்ட பழக்கவழக்கங்களில் ஈடுபடுவதில்லை. (1 கொ. 10:21) “நீங்கள் . . . பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள்” என்ற கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிகிறார்கள். (2 கொ. 6:17) ஆனால், அப்படிச் செய்வது எப்போதும் சுலபமானதல்ல.
ஏதாவது சடங்கு செய்தால்தான் செத்துப்போய் ஆவியாயிருக்கும் மூதாதையரைச் சாந்தப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஆப்பிரிக்காவிலும் மற்ற இடங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. அப்படிச் செய்யாவிட்டால் அது மகா பாவம், முழு சமுதாயத்திற்கும் சாபம், துரதிர்ஷ்டம் என்றெல்லாம் கருதப்படுகிறது. பைபிள் போதனைக்கு எதிரான இப்படிப்பட்ட சவ அடக்க சடங்குகளில் யெகோவாவின் சாட்சிகள் பங்குகொள்வதில்லை. அதனால், அவர்களுடைய கிராமத்தவரோ உறவினரோ அவர்களை ஏளனம் செய்திருக்கிறார்கள், அவமானப்படுத்தியிருக்கிறார்கள், ஏன், ஒதுக்கியும் வைத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், சமூக விரோதிகள், இறந்தவர்களை அவமதிக்கிறவர்கள் என்றும்கூட அவர்களைக் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். சில சமயங்களில், ஒரு கிறிஸ்தவரின் சவ அடக்க நிகழ்ச்சியை சத்தியத்தில் இல்லாதவர்கள் பலவந்தமாக வந்து தங்கள் இஷ்டப்படி நடத்தியிருக்கிறார்கள். ஆகவே, கடவுளுக்குப் பிரியமில்லாத சவ அடக்க சடங்குகளைச் செய்ய வேண்டுமென்று வற்புறுத்துகிறவர்களோடு பிரச்சினை ஏற்படுவதை நாம் எப்படித் தடுக்கலாம்? அதைவிட முக்கியமாக, யெகோவாவோடு நமது உறவை பாதிக்கும் அசுத்தமான சடங்குகளிலிருந்தும் பழக்கவழக்கங்களிலிருந்தும் நாம் எப்படி விலகியிருக்கலாம்?
உங்கள் தீர்மானங்களைத் தெளிவாகச் சொல்லிவிடுங்கள்
சில நாடுகளில், குடும்ப அங்கத்தினர் மட்டுமல்லாமல் குடும்பத்திலுள்ள பெரியவர்களும் உறவினர்களும் சவ அடக்க நிகழ்ச்சிகளைப் பற்றி தீர்மானிப்பது சம்பிரதாயம். ஆகவே, பைபிள் நியமங்களுக்கு இசைவாக யெகோவாவின் சாட்சிகள் தன்னை அடக்கம் செய்ய வேண்டுமென உண்மையுள்ள ஒரு கிறிஸ்தவர் முன்கூட்டியே தெளிவாகக் குறிப்பிடுவது அவசியம். (2 கொ. 6:14-16) ஒரு கிறிஸ்தவரின் சவ அடக்கத்தின்போது நடக்கும் எதுவுமே சக கிறிஸ்தவர்களின் மனசாட்சியை நெருடவும் கூடாது, இறந்தவர்களைப் பற்றிய நம்முடைய நம்பிக்கைகளையும் போதனைகளையும் அறிந்தவர்களை இடறலடையச் செய்யவும் கூடாது.
சவ அடக்க நிகழ்ச்சியை நடத்தும்படி கிறிஸ்தவ சபை மூப்பர்களிடம் கேட்கப்பட்டால், அவர்கள் தேவையான ஆலோசனைகள் அளிக்கலாம். அதோடு, சவ அடக்க ஏற்பாடுகள் அனைத்தும் பைபிள் நியமங்களுக்கு இசைவாய் செய்யப்படுவதற்காக ஆன்மீக ரீதியில் தகுந்த உதவி அளிக்கலாம். சாட்சியாக இல்லாதவர்கள் அசுத்தமான பழக்கவழக்கங்களைச் சவ அடக்க நிகழ்ச்சியில் திணிக்க முயன்றால் என்ன செய்வது? அப்போது நாம் உறுதியாக நிற்பது அவசியம், ஒரு கிறிஸ்தவராக நம்முடைய தீர்மானம் என்ன என்பதை தைரியத்தோடு, அதேசமயத்தில் தயவோடும் மரியாதையோடும் எடுத்துச்சொல்ல வேண்டும். (1 பே. 3:15) அப்படிச் சொன்ன பிறகும் அசுத்தமான சடங்குகளை நுழைப்பதில் மற்றவர்கள் விடாப்பிடியாய் இருந்தால் என்ன செய்வது? அப்போது, சத்தியத்திலுள்ள அந்தக் குடும்பத்தினர் சவ அடக்க நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட தீர்மானிக்கலாம். (1 கொ. 10:20) இப்படித் தீர்மானம் எடுத்தபின், இறந்தவரை நினைத்து உண்மையிலேயே வருத்தப்படுகிறவர்களுக்கு ‘தேவவசனத்திலிருந்து ஆறுதல்’ அளிக்க ராஜ்ய மன்றத்திலோ பொருத்தமான வேறொரு இடத்திலோ எளிமையான முறையில் சவ அடக்க பேச்சு கொடுக்கலாம். (ரோ. 15:4) இறந்தவரின் உடல் அங்கே இல்லையென்றாலும், இப்படிச் செய்வது மரியாதைக்குரியது, ஏற்றுக்கொள்ளத்தக்கது. (உபா. 34:5, 6, 8) சத்தியத்தில் இல்லாதவர்கள் அன்பற்ற முறையில் சவ அடக்க ஏற்பாடுகளில் தலையிடுகையில், ஏற்கெனவே சோகத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தாருக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருக்கும். என்றாலும், சரியானதைச் செய்வதற்கு நாம் எடுக்கும் தீர்மானத்தைக் கடவுள் கவனிக்கிறார் என்பதில் ஆறுதல் அடையலாம். அவரால் மட்டுமே, “இயல்புக்கு மிஞ்சிய சக்தியை” நமக்குக் கொடுக்க முடியும்.—2 கொ. 4:7, NW.
உங்கள் தீர்மானத்தை எழுதி வையுங்கள்
தான் இறந்துபோனால் தனக்கு எப்படி சவ அடக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை அந்த நபரே எழுதி வைத்தால் சத்தியத்தில் இல்லாத குடும்ப அங்கத்தினரோடு பேசுவது சுலபமாக இருக்கும். ஏனென்றால், இறந்தவரின் விருப்பத்திற்கு அவர்கள் பெரும்பாலும் மரியாதை காட்டுவார்கள். எங்கே, எப்படி, யார் சவ அடக்க நிகழ்ச்சியை நடத்த வேண்டும் போன்ற முக்கியமான விவரங்களைக் கட்டாயம் எழுதி வைக்க வேண்டும். (ஆதி. 50:5) அந்த ஆவணத்தில், அந்த நபரும் சாட்சிகளும் கையெழுத்து போட்டிருந்தால் அது மிகவும் வலிமையுள்ளதாக இருக்கும். பைபிள் நியமங்கள் அடிப்படையில் எதிர்காலத்திற்காக ஞானத்தோடும் விவேகத்தோடும் திட்டமிடுகிறவர்கள், தங்களுக்கு வயதான பிறகு அல்லது குணப்படுத்த முடியாத வியாதி வந்த பிறகு அவ்வாறு எழுதி வைக்கலாம் என்று காத்திருக்க மாட்டார்கள்.—நீதி. 22:3; பிர. 9:12.
ஆனால், இப்படிப்பட்ட விஷயங்களை முன்கூட்டியே எழுதிவைக்க சிலர் சங்கடப்பட்டிருக்கிறார்கள். என்றாலும், ஒருவர் அவ்வாறு எழுதி வைக்கும்போது அவர் முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர் என்பதையும் மற்றவர்கள்மீது அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார் என்பதையும் காட்டும். (பிலி. 2:4) சவ அடக்க ஏற்பாடுகளைத் தீர்மானிக்கும் பொறுப்பை சோகத்தில் மூழ்கிய குடும்ப அங்கத்தினர்களிடம் விட்டுவிடாமல் அவரே முன்கூட்டி தீர்மானிப்பது நல்லது. ஏனென்றால், அவருடைய நம்பிக்கைக்கு விரோதமான அல்லது விருப்பத்திற்கு எதிரான சடங்குகளைச் செய்ய வேண்டிய நெருக்கடி குடும்ப அங்கத்தினருக்குப் பிற்பாடு ஏற்படலாம்.
சவ அடக்கம் எளிமையாக இருக்கட்டும்
ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில், மூதாதையரின் ஆவிகளைக் கோபமூட்டாதிருக்க சவ அடக்க நிகழ்ச்சிகளை ஊரைக் கூட்டி பிரமாண்டமாய் நடத்த வேண்டுமென்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது. இன்னும் சிலர் தங்களுடைய சமூக, பொருளாதார அந்தஸ்தைப் ‘பகட்டாய் காட்டுவதற்காக’ சவ அடக்க நிகழ்ச்சிகளை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். (1 யோ. 2:16, NW) இறந்தவருக்கு “நல்லடக்கம்” செய்ய வேண்டும் என்பதற்காக நேரத்தையும் பணத்தையும் சக்தியையும் விரயம் செய்கிறார்கள். எக்கச்சக்கமான ஆட்களை அழைப்பதற்காக இறந்தவரின் படம் போட்ட பெரிய போஸ்டர்களை அடிக்கிறார்கள்; இவ்வாறு சவ அடக்க நிகழ்ச்சியை ஊருக்கெல்லாம் அறிவிக்கிறார்கள். அதோடு, இழவு வீட்டுக்கு வருவோருக்கு இறந்தவரின் உருவப்படம் போட்ட டி-ஷர்ட்டுகளைத் தயாரித்து கொடுக்கிறார்கள். காண்போரைக் கவருவதற்காக அலங்காரமும் வேலைப்பாடுகளும் நிறைந்த, விலையுயர்ந்த சவப் பெட்டிகளைத் தயாரிக்கிறார்கள். ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு நாட்டில், சிலர் தங்களுடைய செல்வச் சிறப்பையும் அந்தஸ்தையும் காட்டுவதற்காக சவப் பெட்டிகளை கார், பிளேன், படகு வடிவில் தயாரிக்கிறார்கள்! இறந்தவரின் உடலைச் சவப் பெட்டியிலிருந்து எடுத்து அவருக்கென்றே அலங்காரம் செய்யப்பட்ட விசேஷ படுக்கையில் பார்வைக்காக வைக்கிறார்கள். இறந்தவர் ஒரு பெண்ணாக இருந்தால், அவருக்கு வெள்ளை நிற திருமண ஆடை உடுத்தி, ஏராளமான ஆபரணங்களும் பாசிகளும் முகப்பூச்சும் போட்டு அலங்காரம் செய்கிறார்கள். கடவுளுடைய மக்கள் இதுபோன்ற காரியங்களைச் செய்வது பொருத்தமாக இருக்குமா?
கடவுளுடைய நியமங்களைப் பற்றி அறியாத, கொஞ்சமும் கவலைப்படாத ஜனங்களைப் போல இப்படி விமரிசையாக சவ அடக்க நிகழ்ச்சியை நடத்தாமல் இருப்பதே ஞானமான செயல் என்பதை முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஒழுக்கமற்ற, வேதப்பூர்வமற்ற சடங்குகளும் பழக்கவழக்கங்களும் ‘பிதாவினால் உண்டானவைகளல்ல,’ அவை ஒழிந்துபோகிற ‘உலகத்தினால் உண்டானவைகள்.’ (1 யோ. 2:15-17) நாம் மிகவும் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், போட்டி மனப்பான்மை வந்துவிடலாம், மற்றவர்களைவிட பிரமாதமாய் செய்ய வேண்டுமென்ற எண்ணம் வந்துவிடலாம். (கலா. 5:26) இறந்தவரைப் பற்றிய பயம் உள்ளூர் கலாச்சாரத்திலும் சமூக வாழ்க்கையிலும் புரையோடிக் கிடப்பதால், சவ அடக்க நிகழ்ச்சிகள் டாம்பீகமாய் நடத்தப்படுகின்றன. அதனால் கூட்டத்தைக் கண்காணிப்பது பெரும் சவாலாகிவிடுகிறது, அது கட்டுக்கடங்காமலும் போய்விடுகிறது. சத்தியத்தில் இல்லாதவர்கள் இறந்தவர்களைப் பூஜிப்பதால் வெகு சுலபமாக அசுத்தமான காரியங்களில் ஈடுபட்டுவிடுகிறார்கள். உதாரணத்திற்கு, அப்படிப்பட்ட சவ அடக்கத்தில் பயங்கர ஒப்பாரியும் ஓலமும் இருக்கலாம்; சிலர் இறந்தவரின் உடலை அடிக்கடி கட்டிப்பிடித்துக் கதறலாம், இறந்தவர் உயிரோடு இருப்பதுபோல நேரடியாகவே அவரிடம் பேசலாம், பிணத்தோடு பணத்தை அல்லது மற்ற பொருட்களைக் கட்டி வைக்கலாம். ஒரு கிறிஸ்தவரின் சவ அடக்கத்தில் இப்படிப்பட்ட காரியங்கள் நடந்தால், அவை யெகோவாவின் பெயருக்கும் அவருடைய மக்களுக்கும் பெருத்த அவமதிப்பைக் கொண்டுவரும்.—1 பே. 1:14-16.
இறந்தவரின் உண்மையான நிலையை நாம் அறிந்திருப்பதால், நம்முடைய சவ அடக்க நிகழ்ச்சிகளில் உலக மக்களின் பழக்கவழக்கங்களைத் தைரியமாய் தவிர்க்க வேண்டும். (எபே. 4:17-19) பூமியில் வாழ்ந்தவர்களிலேயே இயேசு மாமனிதராக திகழ்ந்தபோதிலும், அவரது சவ அடக்கம் மிகவும் அமைதியாக, எளிமையாக நடந்தது. (யோவா. 19:40-42) “கிறிஸ்துவின் சிந்தை” உடையவர்கள் அப்படிப்பட்ட சவ அடக்கத்தை கௌரவக் குறைச்சலாகக் கருதமாட்டார்கள். (1 கொ. 2:16) ஒரு கிறிஸ்தவரின் சவ அடக்கத்தை எளிமையாகவும் சாதாரணமாகவும் நடத்துவதே, வேதப்பூர்வமற்ற காரியங்களைத் தவிர்ப்பதற்குச் சிறந்த வழி. இது அமைதியான சூழலுக்கு வழிவகுக்கும்; அதுவே கடவுளை நேசிப்போருக்குக் கண்ணியமானது, தகுந்தது, மதிப்புக்குரியது.
கொண்டாட்டம் தேவையா?
உடலை அடக்கம் செய்தபின், நண்பர்களும் உறவினர்களும் மற்றவர்களும் ஒன்றுகூடி விருந்து செய்து, ஆடிப்பாடிக் கொண்டாடுகிறார்கள். இப்படிப்பட்ட சமயங்களில் குடித்துக் கூத்தடிப்பதும் ஒழுக்கயீனமாக நடப்பதும் சர்வசாதாரணம். இதெல்லாம் துக்கத்தைப் போக்க உதவுவதாக சிலர் நியாயப்படுத்தலாம். இன்னும் சிலரோ, தங்கள் கலாச்சாரமே இப்படித்தான் என்று கூறலாம். ஆனால் உண்மையில், இப்படிச் செய்தால்தான் இறந்தவரைக் கௌரவித்துக் கனப்படுத்த முடியும்; இறந்தவரின் ஆத்துமா முன்னோர்களுடைய ஆத்துமாக்களோடு சேர்ந்துகொள்ளும் என்று அநேகர் நம்புகிறார்கள்.
“நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முக துக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்” என்று பைபிள் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். (பிர. 7:3) அதோடு, நமது வாழ்நாள் எவ்வளவு குறுகியது, உயிர்த்தெழுதல் நம்பிக்கை எவ்வளவு அருமையானது என்பதை அமைதியாக சிந்தித்துப் பார்ப்பதே மிகவும் நல்லது என்பதையும் அறிந்திருக்கிறார்கள். யெகோவாவுடன் நெருக்கமான உறவை அனுபவிப்போருக்கு, ‘ஜநந நாளைப் பார்க்கிலும் மரணநாள் நல்லது.’ (பிர. 7:1) ஆகவே, சவ அடக்க நிகழ்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பழக்கங்களெல்லாம் தவறான நம்பிக்கைகளோடும் ஒழுக்கங்கெட்ட நடத்தையோடும் தொடர்புடையவையாக இருப்பதால், அவற்றை ஏற்பாடு செய்வது, ஏன், அவற்றில் கலந்துகொள்வதும்கூட கிறிஸ்தவர்களுக்குத் தகுந்ததல்ல. சவ அடக்க கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறவர்களோடு சேர்ந்திருந்தால், நாம் கடவுளையும் அவமதிக்கிறோம், சக கிறிஸ்தவர்களின் மனசாட்சியையும் அவமதிக்கிறோம்.
மற்றவர்களுக்கு வித்தியாசம் தெரியட்டும்
ஆன்மீக இருளில் இருப்போரிடம் இறந்தவர்களைப் பற்றிய பயம் பரவலாகக் காணப்படுகிறது, ஆனால் இதிலிருந்து நாம் விடுதலை பெற்றிருப்பதால் கடவுளுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! (யோவா. 8:32) நாம் “வெளிச்சத்தின் பிள்ளைகளாய்” இருப்பதால், துக்கமாய் இருக்கும்போதும்கூட, நமக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும்; ஆம், ஆன்மீக அறிவொளி பெற்றவர்களாய் அடக்கத்தோடும் மரியாதையோடும் உயிர்த்தெழுதலில் உறுதியான நம்பிக்கையோடும் நம் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். (எபே. 5:8; யோவா. 5:28, 29) “நம்பிக்கையற்ற” ஜனங்களைப் போல அளவுக்கதிகமாய் துக்கப்படாதிருக்க, தலைதலையாக அடித்துக்கொண்டு, அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்யாதிருக்க இத்தகைய நம்பிக்கை நமக்கு கைகொடுக்கும். (1 தெ. 4:13) இது, மெய் வணக்கத்தில் உறுதியாய் நிலைத்திருக்க தேவையான தைரியத்தைக் கொடுக்கும், மனித பயத்திற்கு இடங்கொடுத்துவிடாமல் இருக்கவும் உதவும்.—1 பே. 3:13, 14.
பைபிள் நியமங்களை நாம் உண்மையோடு கடைப்பிடித்தால், ‘தேவனுக்கு ஊழியம் செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியம் செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை’ ஜனங்களுக்குக் காட்டுவோம். (மல். 3:18) சீக்கிரத்தில் மரணமே இல்லாத காலம் வரும். (வெளி. 21:4) அந்த மகத்தான வாக்குறுதி நிறைவேற காத்திருக்கையில் நாம் யெகோவாவுக்கு முன்பு கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய் இருந்து, இந்தப் பொல்லாத உலகிலிருந்தும் கடவுளை அவமதிக்கிற அதன் பழக்கவழக்கங்களிலிருந்தும் முற்றிலும் விலகியிருப்போமாக.—2 பே. 3:14.
[பக்கம் 30-ன் படம்]
சவ அடக்க ஏற்பாடுகளைப் பற்றிய நம் விருப்பங்களை எழுதி வைப்பதே ஞானமான செயல்
[பக்கம் 31-ன் படம்]
ஒரு கிறிஸ்தவரின் சவ அடக்கம் எளியதாக, மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும்