வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு எனக் கண்டுகொண்டேன்
காஸ்பர் மார்ட்டீனெஸ் சொன்னபடி
நாட்டுப்புறத்தில் பரம ஏழையாய் இருந்த பையன் நகர்ப்புறத்தில் பெரிய பணக்காரனாய் ஆன கதைதான் என் கதை. ஆனால் ஒரு வித்தியாசம்: நான் சம்பாதிக்க நினைத்த செல்வம் ஒன்று, கிடைத்த செல்வமோ வேறொன்று!
ஸ்பெயின் நாட்டின் வடபகுதியில், பொட்டல்காடாய் இருந்த ரியோஹா என்ற கிராமப்பகுதியிலே 1930-களில் வளர்ந்தேன். பத்து வயதிலேயே நான் பள்ளிக்கூடப் படிப்பை முடித்துக்கொள்ள வேண்டியிருந்தது; ஆனால், அதற்குள் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டேன். நாங்கள் மொத்தம் ஏழு பிள்ளைகள். வயல்காட்டில் ஆடு மேய்ப்பதிலும் எங்கள் சிறிய நிலத்தில் பயிர் செய்வதிலுமே நாட்கள் ஓடியது.
வறுமையில் வாடிய நாங்கள், பணமும் பொருளும்தான் வாழ்க்கை என்று நினைத்தோம். எங்களைவிட வசதியானவர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டோம். இந்நிலையில், தனக்குக் கீழிருந்த கிராமங்களிலேயே எங்கள் கிராமம்தான் மிகவும் தெய்வபக்தியுள்ளது என்பதாக சர்ச் பிஷப் ஒருமுறை குறிப்பிட்டார். ஆனால், அங்கு வசித்த அநேகர் கத்தோலிக்க மதத்திலிருந்து வெளியேறி விடுவார்கள் என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.
மேலான ஒன்றைத்தேடி. . .
என் கிராமத்தைச் சேர்ந்த மெர்ஸேதேஸ் என்ற பெண்ணை நான் கரம் பிடித்தேன். சீக்கிரத்திலேயே எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். 1957-ல் லோக்ரோன்யோ என்ற பக்கத்து நகருக்குக் குடிமாறிப் போனோம். கடைசியில், எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த எல்லாருமே அங்கு குடிமாறி வந்துவிட்டார்கள். எந்தத் தொழிலும் உருப்படியாகத் தெரியாத எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கப்போவதில்லை என்று சீக்கிரத்திலேயே புரிந்துவிட்டது. திக்குத் தெரியாமல் இருந்த என் வாழ்க்கையில், சரியான வழிநடத்துதல் எங்கே கிடைக்குமென்று தெரியாமல் திண்டாடினேன். பின்பு, உள்ளூரிலிருந்த நூல்நிலையத்திற்குப் போய்த் தேட ஆரம்பித்தேன். ஆனால் எந்தத் தலைப்பில் தேடுவது என்று தெரியவில்லை.
பிற்பாடு, ரேடியோ நிகழ்ச்சி ஒன்று அஞ்சல் வழியில் பைபிள் கல்வி புகட்டப்படுவதாக அறிவித்ததைப் பற்றிக் கேள்விப்பட்டு அதில் சேர்ந்தேன். சீக்கிரத்திலேயே அந்தக் கல்வியை முடித்தேன்; அதன்பிறகு இவாஞ்சலிக்கல் புராட்டஸ்டண்ட் தொகுதியினர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு ஓரிரண்டு முறை போனேன். அந்த சர்ச் பிரமுகர்களுக்கு இடையே போட்டி நிலவியதைக் கண்ணாரக் கண்டேன். அதன்பிறகு அங்கே போவதை நிறுத்திவிட்டேன். எல்லா மதங்களும் இப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்.
கண்களிலிருந்து செதில்கள் விழுந்தன
ஏயூகேன்யோ என்ற இளைஞர் 1964-ல் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவர் யெகோவாவின் சாட்சிகளுடைய மதத்தைச் சேர்ந்தவர்; இப்படி ஒரு மதம் இருக்கிறதென்றே எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், பைபிள் விஷயங்களைக் கேட்க ரொம்பவே ஆர்வமாக இருந்தேன். அதுவரை, பைபிளில் நான் கரைகண்டவன் என்றே நினைத்திருந்தேன். அதனால், அஞ்சல் வழி பைபிள் கல்வியில் நான் கற்றவற்றிலிருந்து சில வசனங்களைக் குறிப்பிட்டு அவரோடு பேசினேன். புராட்டஸ்டண்ட் மதக் கொள்கைகள் சிலவற்றை ஆதரித்துப் பேச நான் முயன்றபோதிலும், அவற்றை உண்மையில் நான் நம்பவில்லை.
ஏயூகேன்யோவோடு நான் நெடுநேரம் பேசிய இரண்டு சந்தர்ப்பங்களிலும், அவர் கடவுளுடைய வார்த்தையைப் படு திறமையாகப் பயன்படுத்தினார். அவர் என்னை விடவும் குறைவாகவே படித்திருந்தபோதிலும், பைபிள் வசனங்களை டக்-டக் என்று எடுத்துக் காட்டி அவற்றிலுள்ள நியாயங்களைப் பொருத்திக் காண்பித்தார்; நான் மலைத்துப்போனேன். நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோமென்றும், கடவுளுடைய அரசாங்கம் வெகு சீக்கிரத்தில் இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றுமென்றும் பைபிளிலிருந்தே அவர் எடுத்துக் காட்டினார். எனக்குள் ஆர்வம் பொங்கியெழுந்தது.—சங். 37:11, 29; ஏசா. 9:6, 7; மத். 6:9, 10.
உடனே பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டேன். கற்றுக்கொண்ட எல்லா விஷயங்களும் எனக்குப் புதிதாக இருந்தன, அவை அனைத்தும் என் நெஞ்சத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்துவிட்டன. எனக்குமுன் ஒளிமயமான எதிர்காலம் இருப்பது தெரிந்தது; அதற்காக என்ன தியாகம் செய்தாலும் பரவாயில்லை என்று தோன்றியது. ஆக, எனது தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது. சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தோடு வாழ்வதற்காக நான் எடுத்துவந்த முயற்சிகளெல்லாம் வீண் என்று புரிந்தது. வேலை பற்றிய பிரச்சினையெல்லாம் எனக்கு இரண்டாம்பட்சமானது. வியாதியையும் மரணத்தையுமே வென்றுவிடலாம் என்றால் மற்ற பிரச்சினைகளெல்லாம் எம்மாத்திரம் என்று புரிந்தது.—ஏசா. 33:24; 35:5, 6; வெளி. 21:4.
பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை உடனடியாக என் உறவினர்களுக்குச் சொல்ல ஆரம்பித்தேன். பூஞ்சோலையான பூமியைக் கடவுள் சீக்கிரத்தில் உருவாக்கி அதில் உண்மையுள்ள மனிதர்களை என்றென்றும் வாழ வைக்கப் போகிறாரென்று உற்சாகம் பொங்க விளக்கினேன்.
குடும்பத்தார் சத்தியத்தை மனதார ஏற்றுக்கொண்டார்கள்
சீக்கிரத்திலேயே, எங்கள் குடும்பத்தில் சுமார் பன்னிரண்டு பேர், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மதியம் என் சித்தப்பா வீட்டில் கூடி பைபிள் விஷயங்களைக் குறித்துப் பேசத் தீர்மானித்தோம். அதன்படி, கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணிநேரம் கலந்துபேசினோம். இந்த விஷயம் ஏயூகேன்யோவுக்குத் தெரிய வந்ததும், என் உறவினர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பைபிள் படிப்பு நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்தார்.
நாங்கள் வசித்த இடத்திலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டியூரங்கோ என்ற சிறிய ஊரிலும் என் உறவினர் நிறையப் பேர் இருந்தார்கள், அந்த ஊரில் யெகோவாவின் சாட்சிகள் யாரும் இருக்கவில்லை. அதனால், மூன்று மாதங்களுக்குப் பிறகு, இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு அந்த உறவினர்களிடம் சென்று பைபிள் சத்தியங்களைப் பற்றிப் பேசினேன். அப்போது, தினமும் சாயங்கால வேளையில் சுமார் பத்துப் பேர் ஒன்றாகக் கூடினார்கள், அவர்களிடம் விடிய விடிய சத்தியத்தைப் பற்றிப் பேசினேன். அவர்கள் அனைவருமே ஆர்வம்பொங்க கேட்டார்கள். அந்த இரண்டு நாட்கள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை; அவர்களிடம் பைபிள்களையும் பைபிள் பிரசுரங்கள் சிலவற்றையும் கொடுத்தேன். அதன்பின் தவறாமல் அவர்களோடு தொடர்பு வைத்திருந்தேன்.
டியூரங்கோவுக்கு யெகோவாவின் சாட்சிகள் சென்றபோது, பைபிள் படிப்புக்காக 18 பேர் ஆவலோடு காத்திருந்தார்கள்; அதற்கு முன்பு அங்கே யாரும் வெளி ஊழியம் செய்ததில்லை! ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக பைபிள் படிப்பு ஆரம்பிக்க அந்தச் சாட்சிகள் ஏற்பாடு செய்தார்கள்.
என் மனைவி அதுவரை சத்தியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பவில்லை. அவளுக்கு ஆர்வமிருந்தபோதிலும் மனித பயம் அவளைத் தடுத்தது. அப்போது ஸ்பெயினில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்குத் தடையுத்தரவு போடப்பட்டிருந்ததால், எங்கள் இரண்டு பிள்ளைகளும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும், தங்களை ஊரைவிட்டே விலக்கி வைத்துவிடுவார்கள் என்றும் பயந்தாள். ஆனால், குடும்பத்தார் எல்லாருமே பைபிள் சத்தியத்தை ஆவலோடு ஏற்றுக்கொண்டதைப் பார்த்தபோது அவளும் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டாள்.
இரண்டே வருடங்களுக்குள், என் குடும்பத்தாரில் 40 பேர் ஞானஸ்நானம் பெற்று சாட்சிகளானார்கள். வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது என்று என்னைப் போலவே என் குடும்பத்தாரும் புரிந்துகொண்டார்கள். பெரிதாக ஒன்றைச் சாதித்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. அதோடு, ஆன்மீகச் செல்வங்களை அளவில்லாமல் பெற்ற சந்தோஷம் கிடைத்தது.
வயதும் ஏறியது வாழ்வும் வளமானது
அடுத்த 20 வருடங்களில் எங்கள் இரண்டு மகன்களையும் கண்ணும் கருத்துமாய் வளர்ப்பதில் நான் கவனம் செலுத்தினேன், அதேசமயம் உள்ளூர் சபையிலும் மும்முரமாய் உதவினேன். சுமார் ஒரு லட்சம் பேர் வசித்துவந்த லோக்ரோன்யோவில் நானும் மெர்ஸேதேஸும் குடியேறியபோது, ஏறத்தாழ 20 சாட்சிகள்தான் இருந்தார்கள். சீக்கிரத்திலேயே சபையில் எனக்குப் பல பொறுப்புகள் கொடுக்கப்பட்டன.
எனக்கு 56 வயதாக இருந்தபோது, நான் வேலை பார்த்துவந்த தொழிற்சாலை எதிர்பாராத விதத்தில் இழுத்து மூடப்பட்டது; என் வேலை பறிபோனது. முழுநேர ஊழியம் செய்ய வாய்ப்பு கிடைக்காதா எனக் காத்திருந்த எனக்கு இந்தச் சூழ்நிலை சாதகமாக அமைந்தது. எனக்குக் கிடைத்த ஓய்வூதியம் வெகு சொற்பமானதாய் இருந்ததால் அதை வைத்து வாழ்க்கையை ஓட்டுவது கஷ்டமாக இருந்தது. அதை ஈடுகட்டுவதற்காக என் மனைவி பகுதிநேர வேலை செய்தாள். அதனால் ஓரளவுக்கு வாழ்க்கையை ஓட்ட முடிந்தது; ஆனால், அத்தியாவசியப் பொருள்கள் இல்லாமல் நாங்கள் ஒருநாளும் தவித்ததில்லை. இப்போதும் நான் ஒரு பயனியராகவே இருக்கிறேன். மெர்ஸேதேஸ் அவ்வப்போது துணைப் பயனியர் ஊழியம் செய்கிறாள். பிரசங்க வேலையில் அவள் அனுபவிக்கிற சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது.
சில வருடங்களுக்கு முன்பு, மெர்க்கே என்ற இளம் பெண்ணிடம் மெர்ஸேதேஸ் தவறாமல் பத்திரிகைகளைக் கொடுத்துவந்தாள். அந்தப் பெண் சிறு பிள்ளையாக இருந்தபோது அவளுக்கு பைபிள் படிப்பு நடத்தப்பட்டிருந்தது. நம் பிரசுரங்களை அவள் ஆர்வத்தோடு வாசித்திருந்ததால், பைபிள் சத்தியத்தின் மீது அவளுக்கு இன்னும் தணியாத தாகமிருந்ததை மெர்ஸேதேஸ் கவனித்தாள். கடைசியாக, மெர்க்கே பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டாள், கிடுகிடுவென முன்னேறினாள். ஆனால், அவளுடைய கணவன் பிதேன்ட்டே குடிகாரராய் இருந்தார்; அதன் காரணமாக, அவரால் எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க முடியவில்லை. இதனால், வீட்டைக் கவனித்துக்கொள்ள மெர்க்கேவுக்குப் பணம் எதுவும் கொடுக்க மாட்டார். அந்தக் குடிப்பழக்கத்தால் அவர்களுடைய திருமணமே முறிகிற நிலையில் இருந்தது.
பிதேன்ட்டேவை என்னிடம் பேசச் சொல்லி மெர்க்கேவுக்கு என் மனைவி ஆலோசனை கூறினாள். கடைசியில் பிதேன்ட்டேவும் அதற்குச் சம்மதித்தார். பலமுறை அவரிடம் பேசிய பிறகு அவர் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார். படிப்படியாக மாற்றங்களைச் செய்தார். சேர்ந்தாற்போல் சில நாட்களுக்குக் குடிக்காமலே இருந்தார். இப்படியே ஒரு வாரத்திற்கும் மேலாகக் குடிக்காமல் இருந்தார். கடைசியில் குடிப்பழக்கத்தை அறவே நிறுத்திவிட்டார். அவருடைய தோற்றத்தில் புதுப் பொலிவு தெரிந்தது; கனிவாக நடந்துகொள்ள ஆரம்பித்தார்; குடும்பத்தில் ஒற்றுமை நிலவியது. தற்போது கானரி தீவுகளில் குடும்பமாக வசிக்கிறார். மனைவி மகள் உட்பட அவருடைய குடும்பத்தார் அனைவருமே அங்குள்ள சிறிய சபைக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்.
அர்த்தமுள்ள என் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கையில். . .
பைபிள் சத்தியங்களைப் படித்திருந்த என் உறவினர்களில் சிலர் இப்போது உயிரோடு இல்லை; என்றாலும் எங்கள் குடும்பம் விரிவடைந்துகொண்டே வந்திருக்கிறது; கடவுள் எங்களை அபரிமிதமாக ஆசீர்வதித்திருக்கிறார். (நீதி. 10:22) 40 வருடங்களுக்கு முன்பு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்ட என் குடும்பத்தார், இன்றுவரை அவர்களுடைய பிள்ளைகளோடும் பேரப் பிள்ளைகளோடும் சேர்ந்து யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்துவருவதைப் பார்ப்பது எனக்கு எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி!
என் உறவினர்களில் ஏராளமானோர் இப்போது யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறார்கள். அவர்களில் அநேகர் மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் பயனியர்களாகவும் சேவை செய்கிறார்கள். என் மூத்த மகனும் அவனுடைய மனைவியும் ஸ்பெயினிலுள்ள மாட்ரிட் நகரிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சேவை செய்கிறார்கள். நான் சத்தியத்திற்கு வந்தபோது ஸ்பெயினில் சுமார் 3,000 சாட்சிகள் மட்டுமே இருந்தார்கள். இப்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கிறார்கள். முழுநேர ஊழியத்தில் நான் அளவில்லா ஆனந்தம் அடைகிறேன். அந்த ஊழியத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சி காணும்படி செய்த கடவுளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நான் பள்ளிக்கூடம் சென்று படித்த படிப்பு என்னவோ வெகு குறைவுதான்; என்றாலும், துணை வட்டாரக் கண்காணியாக அவ்வப்போது சேவை செய்யும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன்.
நான் வளர்ந்த கிராமம் கிட்டத்தட்ட ஆள் அரவமற்ற இடமாகவே ஆகிவிட்டதைச் சில வருடங்களுக்கு முன் அறிந்துகொண்டேன். வறுமை காரணமாக அங்கு வசித்த எல்லாருமே தங்களுடைய வீடுகளையும் வயல்களையும் விட்டுவிட்டுப் பிழைப்பிற்காக வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டார்கள். அவர்களில் அநேகர் என்னைப் போலவே ஆன்மீகச் செல்வங்களைக் கண்டடைந்திருப்பது சந்தோஷமான விஷயம். ஆம், வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது என்பதை நாங்கள் கண்டுகொண்டோம்! யெகோவாவுக்குச் சேவை செய்வதில் கிடைக்கிற சந்தோஷத்துக்கு நிகர் வேறெதுவுமே இல்லை என்பதையும் கண்டுகொண்டோம்!!
[பக்கம் 32-ன் படம்]
சகோதரர் மார்ட்டீனெஸ் குடும்பத்தாரில் சத்தியத்திலுள்ள கிட்டத்தட்ட எல்லாரும்