மேசியா! மீட்புக்கான கடவுளின் வழி
“ஆதாமினால் எல்லாரும் சாகிறதுபோல், கிறிஸ்துவினால் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.”—1 கொ. 15:22.
1, 2. (அ) இயேசுவைக் கண்டபின் அந்திரேயாவும் பிலிப்புவும் என்ன சொன்னார்கள்? (ஆ) இயேசுதான் மேசியா என்பதற்கான அத்தாட்சி அன்றைய சீடர்களிடம் இருந்ததைவிட இன்று நம்மிடம் ஏராளமாக இருக்கிறதென நாம் ஏன் சொல்கிறோம்?
“நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்.” இப்படிச் சொன்னவர் அந்திரேயா. யாரிடம் சொன்னார்? தன் அண்ணன் பேதுருவிடம் சொன்னார். நாசரேத்தூர் இயேசுதான் கடவுளால் நியமிக்கப்பட்டவர் என்பதை அவர் உறுதியாக நம்பினார். அதேபோல் உறுதியாக நம்பியவர், பிலிப்பு; அவர் தன் நண்பர் நாத்தான்வேலைத் தேடிச்சென்று, “தீர்க்கதரிசிகளும், திருச்சட்டத்தில் மோசேயும் யாரைப் பற்றி எழுதினார்களோ அவரை நாங்கள் கண்டுகொண்டோம்; யோசேப்பின் மகனும் நாசரேத்தைச் சேர்ந்தவருமான இயேசுவே அவர்” என்று சொன்னார்.—யோவா. 1:40, 41, 45.
2 இயேசுதான் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா, யெகோவாவினால் நியமிக்கப்பட்ட “மீட்பின் அதிபதி” என நீங்களும் முழுமையாக நம்புகிறீர்களா? (எபி. 2:10) இயேசுதான் மேசியா என்பதற்கான ஆதாரங்கள் அன்றைய சீடர்களிடம் இருந்ததைவிட இன்று நம்மிடம் ஏராளமாக இருக்கின்றன. இயேசுவின் பிறப்புமுதல் உயிர்த்தெழுதல்வரை அவரைப் பற்றி பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள அத்தனை விஷயங்களும் இயேசுதான் கிறிஸ்து என்பதற்கு மறுக்கமுடியாத அத்தாட்சியை அளிக்கின்றன. (யோவான் 20:30, 31-ஐ வாசியுங்கள்.) பரலோகத்திற்குச் சென்ற பிறகும் மேசியாவாகத் தம் பொறுப்பை அவர் தொடர்ந்து நிறைவேற்றுவார் என்று பைபிள் சொல்கிறது. (யோ. 6:40; 1 கொரிந்தியர் 15:22-ஐ வாசியுங்கள்.) எனவே, பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களின் அடிப்படையில், “மேசியாவைக் கண்டுகொண்டோம்” என நீங்களும்கூடச் சொல்ல முடியும். ஆனால், முதல் நூற்றாண்டு சீடர்கள் எப்படி மேசியாவைக் கண்டுகொண்டார்கள் என்று முதலில் கவனிப்போம்.
“பரிசுத்த ரகசியம்” படிப்படியாக வெளிப்படுத்தப்படுகிறது
3, 4. (அ) முதல் நூற்றாண்டு சீடர்களால் எப்படி ‘மேசியாவைக் கண்டுகொள்ள’ முடிந்தது? (ஆ) மேசியாவைப் பற்றிய எல்லாத் தீர்க்கதரிசனங்களும் இயேசுவில் மட்டுமே நிறைவேறியதென்று நீங்கள் எப்படிச் சொல்வீர்கள்?
3 இயேசுதான் மேசியா என்று முதல் நூற்றாண்டு சீடர்களால் எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடிந்தது? வரவிருந்த மேசியாவைப் பற்றிய அடையாளங்களை யெகோவா தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் படிப்படியாக வெளிப்படுத்தியிருந்தார். இதை, ஒரு பளிங்குச் சிலையின் வெவ்வேறு பாகங்களை இணைக்கிற செயலுக்கு ஒப்பிட்டுப் பேசினார் ஒரு பைபிள் அறிஞர். முன்பின் அறிமுகமில்லாத ஆட்கள், பளிங்குச் சிலை ஒன்றின் வெவ்வேறு பாகத்தை உருவாக்குவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவரவர் உருவாக்கிய பாகத்தைக் கொண்டுவந்து அதை ஒன்றோடொன்று இணைக்கிறார்கள்; கச்சிதமான ஒரு சிலை உருவாகிறது. இதைப் பார்க்கும்போது, நீங்கள் என்ன முடிவுக்கு வருவீர்கள்? யாரோ ஒருவர் அந்தச் சிலைக்கான மாதிரி வரைபடத்தை உருவாக்கியிருக்க வேண்டும்; பின்பு, ஒவ்வொருவரும் உருவாக்க வேண்டிய பாகத்தின் வரைபடத்தை அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். அந்தச் சிலையின் ஒவ்வொரு பாகத்தைப் போலவே மேசியாவைப் பற்றிய ஒவ்வொரு தீர்க்கதரிசனமும் அவரைக் குறித்து ஒரு முக்கியமான தகவலை அளிக்கிறது.
4 அப்படியானால், மேசியாவைப் பற்றிய எல்லாத் தீர்க்கதரிசனங்களும் ஒரு நபரில் தற்செயலாக நிறைவேறின என்று சொல்ல முடியுமா? மேசியாவைப் பற்றிய எல்லாத் தீர்க்கதரிசனங்களும் ஒரு நபரில் தற்செயலாக நிறைவேறுவதற்கான “வாய்ப்பு மிகமிகக் குறைவு” என்பதால் அப்பேச்சுக்கே இடமில்லை என்று ஓர் அறிஞர் சொன்னார். “இயேசுவில், ஆம் சரித்திரத்திலேயே இயேசுவில் மட்டும்தான், அந்தத் தீர்க்கதரிசனங்களெல்லாம் நிறைவேறியிருக்கின்றன” என்றும் அவர் சொன்னார்.
5, 6. (அ) சாத்தானுக்கு எதிரான தண்டனைத்தீர்ப்பு எவ்வாறு நிறைவேற்றப்படும்? (ஆ) வாக்குப்பண்ணப்பட்ட சந்ததி வரவிருந்த வம்சத்தைக் கடவுள் எப்படிப் படிப்படியாக வெளிப்படுத்தினார்?
5 மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் “பரிசுத்த ரகசியத்தை” சுற்றியே பின்னப்பட்டிருக்கின்றன; சர்வலோக முக்கியத்துவம் வாய்ந்த பல அம்சங்கள் அதில் அடங்கியுள்ளன. (கொலோ. 1:26, 27; ஆதி. 3:15) மனிதகுலத்தைப் பாவத்திலும் மரணத்திலும் தள்ளிய “பழைய பாம்பாகிய” சாத்தானுக்கு எதிரான தண்டனைத்தீர்ப்பு அந்த ரகசியத்தில் உட்பட்டுள்ளது. (வெளி. 12:9) அந்தத் தண்டனைத்தீர்ப்பு எவ்வாறு நிறைவேற்றப்படும்? ஒரு “ஸ்திரீ” ஒரு ‘வித்துவை,’ அதாவது சந்ததியை, உண்டாக்குவாள் எனவும், அந்தச் சந்ததி சாத்தானுடைய தலையை நசுக்குவார் எனவும் யெகோவா முன்னுரைத்தார். ஆம், கலகத்திற்கும் வியாதிக்கும் மரணத்திற்கும் காரணமான சாத்தானை அந்தச் சந்ததி ஒழித்துக்கட்டுவார். என்றாலும், தம்முடைய அனுமதியின்பேரில் அந்த ஸ்திரீயின் சந்ததிக்குச் சாத்தான் ‘குதிங்கால்’ காயத்தை உண்டாக்குவான் எனவும் யெகோவா முன்னுரைத்தார்.
6 வாக்குப்பண்ணப்பட்ட அந்தச் சந்ததி யாரென்பதை யெகோவா படிப்படியாக வெளிப்படுத்தினார். “உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்” என ஆபிரகாமிடம் அவர் ஆணையிட்டுச் சொன்னார். (ஆதி. 22:18) அந்தச் சந்ததி ‘ஒரு தீர்க்கதரிசியாக’ இருப்பார் என மோசே முன்னுரைத்தார், ஆனால் அவர் மோசேயைவிட உயர்ந்தவராக இருப்பார். (உபா. 18:18, 19) தாவீதின் வம்சத்தில்தான் மேசியா தோன்றுவார் எனவும், அவரது சிம்மாசனத்தில் அமர்ந்து என்றென்றும் ஆட்சி செய்வார் எனவும் தாவீதிடம் யெகோவா சொன்னார்; தீர்க்கதரிசிகளிடமும் பிற்பாடு உறுதியளித்தார்.—2 சா. 7:12, 16; எரே. 23:5, 6.
இயேசுவே மேசியா என்பதற்கான சான்றுகள்
7. கடவுளுடைய மனைவி போன்ற அமைப்பிலிருந்து இயேசு எப்படி வந்தார்?
7 தேவதூதர்கள் அடங்கிய தமது பரலோக அமைப்பிலிருந்து, அதாவது தம் மனைவி போன்ற பரலோக அமைப்பிலிருந்து, கடவுள் தம்முடைய ஒரே மகனை வாக்குப்பண்ணப்பட்ட சந்ததியாகப் பூமிக்கு அனுப்பினார். அந்த மகன் பரலோகத்தில் “தமக்கிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு” பரிபூரண மனிதனாகப் பிறக்க வேண்டியிருந்தது. (பிலி. 2:5-7; யோவா. 1:14) கடவுளுடைய பரிசுத்தமான சக்தி மரியாள்மீது ‘தங்கியதால்,’ அவளுக்குப் பிறக்கும் குழந்தை ‘பரிசுத்தமானது என்றும், கடவுளுடைய மகன் என்றும் அழைக்கப்படுவது’ மிகச் சரியே.—லூக். 1:35.
8. இயேசு ஞானஸ்நானம் பெற வந்தபோது, மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை எப்படி நிறைவேற்றினார்?
8 மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள், இயேசு எங்கே பிறப்பார், எப்போது மேசியா ஆவார் என்றெல்லாம் சுட்டிக்காட்டின. முன்னறிவிக்கப்பட்டபடியே அவர் பெத்லகேமில் பிறந்தார். (மீ. 5:2) முதல் நூற்றாண்டில், மேசியாவுக்காக யூதர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதனால், “இவர்தான் கிறிஸ்துவாக இருப்பாரோ?” என்று யோவான் ஸ்நானகரைக் குறித்துச் சிலர் பேசிக்கொண்டார்கள். அதற்கு யோவான், “என்னைவிட வல்லவர் ஒருவர் வரப்போகிறார்” என்று சொன்னார். (லூக். 3:15, 16) பொ.ச. 29 இலையுதிர் காலத்தில், அதாவது இயேசுவுக்கு 30 வயதாக இருந்தபோது, அவர் யோவானிடம் வந்து ஞானஸ்நானம் பெற்றார்; ஆம், தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அதே சமயத்தில் இயேசு மேசியாவானார்! (தானி. 9:25) அதன்பின், பிரசித்திபெற்ற தம் ஊழியத்தை அவர் தொடங்கினார். “குறித்த காலம் வந்துவிட்டது, கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரம் வரப்போகிறது” என்று அறிவிக்கத் தொடங்கினார்.—மாற். 1:14, 15.
9. இயேசுவின் சீடர்களுக்கு எல்லா விவரங்களும் தெரிந்திருக்காவிட்டாலும், அவர்கள் எதை உறுதியாக நம்பினார்கள்?
9 என்றாலும், மக்கள் மேசியாவைப் பற்றிய தங்கள் எதிர்பார்ப்பை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. இயேசுவை அவர்கள் ராஜாவாகப் போற்றிப் புகழ்ந்தாலும், அவர் எதிர்காலத்தில் ஆட்சி செய்வார், அதுவும் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வார் என்பதை அப்போது புரிந்துகொள்ளவில்லை. (யோவா. 12:12-16; 16:12, 13; அப். 2:32-36) இயேசு தம் சீடர்களைப் பார்த்து, “நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” எனக் கேட்டபோதோ, “நீங்கள் கிறிஸ்து, உயிருள்ள கடவுளுடைய மகன்” என சீமோன் பேதுரு சட்டென்று பதில் சொன்னார். (மத். 16:13-16) இயேசுவின் ஒரு போதனையைக் கேட்டு நிறையப் பேர் அவரிடமிருந்து விலகிச் சென்ற சமயத்திலும் பேதுரு அவ்வாறே சொன்னார்.—யோவான் 6:68, 69-ஐ வாசியுங்கள்.
மேசியாவுக்குச் செவிகொடுங்கள்
10. தம்முடைய மகனுக்குச் செவிகொடுக்க வேண்டுமென யெகோவா ஏன் சொன்னார்?
10 கடவுளுடைய ஒரே மகன் பரலோகத்தில் வல்லமைமிக்கவராக இருந்தார். பூமியில், “தகப்பனுடைய பிரதிநிதியாக” செயல்பட்டார். (யோவா. 16:27, 28) “என் போதனை என்னுடையதல்ல, என்னை அனுப்பியவருடையது” என்று அவரே சொன்னார். (யோவா. 7:16) இயேசுவின் தோற்றம் மாறிய சமயத்தில், அவர்தான் மேசியா என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, “இவருக்குச் செவிகொடுங்கள்” என யெகோவாவே சொன்னார். (லூக். 9:35) எனவே, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேசியாவுக்கு நாம் செவிகொடுக்க வேண்டும், அதாவது கீழ்ப்படிய வேண்டும். அதற்கு விசுவாசமும் நற்செயல்களும் அவசியம். ஆம், கடவுளைப் பிரியப்படுத்துவதற்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கும் இவை இரண்டுமே அவசியம்!—யோவா. 3:16, 35, 36.
11, 12. (அ) முதல் நூற்றாண்டு யூதர்கள் இயேசுவை ஏன் மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை? (ஆ) இயேசுவை யார் ஏற்றுக்கொண்டார்கள்?
11 இயேசுதான் மேசியா என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருந்தும், முதல் நூற்றாண்டு யூதர்களில் பெரும்பாலோர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன்? ஏனென்றால், மேசியா ஓர் அரசியல் தலைவராக இருப்பார், ரோமர்களின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து தங்களை விடுவிப்பார் என்றெல்லாம் அவர்கள் எதிர்பார்த்தார்கள். (யோவான் 12:34-ஐ வாசியுங்கள்.) ஆனால், மேசியா அசட்டை பண்ணப்படுவார், மனிதர்களால் புறக்கணிக்கப்படுவார், வேதனைகளை அனுபவிப்பார், நோய்களோடு நன்கு பரிச்சயமாவார், கடைசியில் கொல்லப்படுவார் என்ற தீர்க்கதரிசனங்களெல்லாம் இயேசுவில் நிறைவேறின; அதனால்தான், அவர்களால் அவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (ஏசா. 53:3, 5) ரோமர்களின் ஆதிக்கத்திலிருந்து இயேசு தங்களை விடுவிக்க மாட்டார் என்பதை அறிந்தபோது அவருடைய உத்தம சீடர்கள் சிலரும் ஏமாற்றமடைந்தார்கள். ஆனாலும் அவரிடமிருந்து அவர்கள் விலகிச் செல்லவில்லை; காலப்போக்கில், மேசியாவைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றுக்கொண்டார்கள்.—லூக். 24:21.
12 மக்கள் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாததற்கு மற்றொரு காரணம் அவருடைய போதனைகளே; பலரால் அவற்றை ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. ஒருவர் கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போவதற்கு, ‘தன்னையே அர்ப்பணம் செய்ய வேண்டுமென்றும்,’ ‘தம்முடைய சதையைச் சாப்பிட்டுத் தம் இரத்தத்தைக் குடிக்க வேண்டுமென்றும்,’ ‘மறுபடியும் பிறக்க வேண்டுமென்றும்,’ ‘இந்த உலகத்தின் பாகமாக இல்லாதிருக்க வேண்டுமென்றும்’ அவர் கற்பித்தார். (மாற். 8:34; யோவா. 3:3; 6:53; 17:14, 16) இதையெல்லாம் செய்யவே முடியாதென்று கர்வமுள்ளவர்களும், பணக்காரர்களும், வெளிவேஷக்காரர்களும் நினைத்தார்கள். மனத்தாழ்மையுள்ள யூதர்களோ இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொண்டார்கள்; சமாரியர்கள் சிலரும், “அவர்தான் இந்த உலகத்தின் மீட்பர்” என்று சொல்லி அவரை ஏற்றுக்கொண்டார்கள்.—யோவா. 4:25, 26, 41, 42; 7:31.
13. இயேசு அடையாள அர்த்தத்தில் குதிங்கால் காயத்திற்கு எப்படி ஆளானார்?
13 பிரதான குருமார்கள் தமக்குக் கண்டனத்தீர்ப்பு வழங்குவார்கள் என்றும், புறதேசத்தார் தம்மைக் கழுமரத்தில் அறைவார்கள் என்றும், மூன்றாம் நாள் தம்மைக் கடவுள் உயிர்த்தெழுப்புவார் என்றும் இயேசு முன்னுரைத்தார். (மத். 20:17-19) தாமே “கடவுளின் மகனாகிய கிறிஸ்து” என்று நியாயசங்கத்தார்முன் அவர் உறுதிப்படுத்தியபோது, தெய்வநிந்தனை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார். (மத். 26:63-66) “மரண தண்டனைக்குரிய எந்தக் குற்றத்தையும் இவன் செய்யவில்லை” என்று பிலாத்து சொன்னார்; ஆனால், இயேசு தேசத்துரோகம் செய்ததாகவும் யூதர்கள் குற்றம்சாட்டியதால் அவரை “அவர்களுடைய விருப்பப்படி செய்ய விட்டுவிட்டார்.” (லூக். 23:13-15, 25) இயேசுதான் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருந்தபோதிலும் அந்த யூதர்கள் ‘வாழ்வின் அதிபதியாகிய’ அவரை ‘நிராகரித்தார்கள்,’ அவரைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டினார்கள். (அப். 3:13-15) முன்னுரைக்கப்பட்டபடியே மேசியா ‘சங்கரிக்கப்பட்டார்’; ஆம், பொ.ச. 33 பஸ்கா தினத்தன்று கழுமரத்தில் அறையப்பட்டார். (தானி. 9:26, 27; அப். 2:22, 23) இப்படிக் கொடூரமாகக் கொல்லப்பட்டதால், ஆதியாகமம் 3:15-ல் முன்னுரைக்கப்பட்டிருந்த ‘குதிங்கால்’ காயத்திற்கு ஆளானார்.
மேசியா சாவதற்கான காரணம்
14, 15. (அ) இயேசு சாகும்படி யெகோவா அனுமதித்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் யாவை? (ஆ) உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு இயேசு என்ன செய்தார்?
14 இயேசு சாகும்படி யெகோவா ஏன் அனுமதித்தார் என்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒரு காரணம், சாகும்வரை இயேசு காட்டிய உண்மைத்தன்மை ‘பரிசுத்த ரகசியத்தின்’ ஒரு முக்கியமான அம்சத்தைத் தெளிவுபடுத்தியது. அவர் சாத்தானின் கடும் சோதனைகளுக்கு ஆளானாலும் பரிபூரண மனிதனால் தொடர்ந்து ‘தேவபக்தியை’ வெளிக்காட்ட முடியும் என்பதற்கும், கடவுளுடைய பேரரசாட்சியை ஆதரிக்க முடியும் என்பதற்கும் மிகச் சிறந்த அத்தாட்சி அளித்தார். (1 தீ. 3:16) இன்னொரு காரணத்தை இயேசுவே சொன்னார்: ‘மனிதகுமாரன் அநேகருக்காகத் தம்முடைய உயிரை மீட்புவிலையாய்க் கொடுப்பதற்கு வந்தார்.’ (மத். 20:28) இயேசு அளித்த ‘சரிசமமான மீட்புவிலை,’ ஆதாமினால் வந்த பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதர்களை விடுவிப்பதற்காகச் செலுத்தப்பட்ட விலையாய் இருந்தது. அதோடு, இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்ட எல்லாரையும் முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்தியது.—1 தீ. 2:5, 6.
15 அவர் மூன்று நாள் கல்லறையில் இருந்தபின் உயிர்த்தெழுப்பப்பட்டார்; தாம் உயிரோடு இருப்பதை நிரூபிப்பதற்காகவும் கூடுதலான அறிவுரைகளைக் கொடுப்பதற்காகவும் 40 நாட்களுக்குத் தம் சீடர்கள்முன் அவ்வப்போது தோன்றினார். (அப். 1:3-5) அதன்பிறகு, தமது விலையேறப்பெற்ற பலியின் மதிப்பை யெகோவாவிடம் சமர்ப்பிப்பதற்காகப் பரலோகத்திற்குச் சென்றார்; பின்பு, யெகோவாவினால் நியமிக்கப்பட்ட ராஜாவாகத் தம்முடைய பிரசன்னம் ஆரம்பிப்பதற்காகக் காத்திருந்தார். அந்தச் சமயத்தில், அவர் நிறையக் காரியங்களைச் செய்ய வேண்டியிருந்தது.
மேசியாவாகத் தம் பொறுப்பை நிறைவேற்றி முடிக்கிறார்
16, 17. பரலோகத்திற்குச் சென்ற பிறகு இயேசு மேசியாவாகச் செய்திருக்கிற, செய்யப்போகிற காரியங்களைக் குறிப்பிடுங்கள்.
16 இயேசு, தாம் உயிர்த்தெழுப்பப்பட்டது முதற்கொண்டு, கிறிஸ்தவ சபையின் ராஜாவாக அதில் நடைபெறுகிற வேலைகளையெல்லாம் உண்மையோடு மேற்பார்வை செய்துவந்திருக்கிறார். (கொலோ. 1:13) குறித்த காலத்தில், கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக அவர் தமது அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கினார். ஆம், 1914-ல் அவர் ராஜாவாகப் பிரசன்னமானார் என்பதையும், ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டம்’ ஆரம்பித்துவிட்டது என்பதையும் பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிரூபிக்கின்றன, உலகச் சம்பவங்களும் உறுதிப்படுத்துகின்றன. (மத். 24:3; வெளி. 11:15) அவர் ராஜாவான பின்பு, சீக்கிரத்திலேயே தம்முடைய பரிசுத்த தூதர்களோடு சேர்ந்து சாத்தானையும் அவனுடைய பேய்களையும் பரலோகத்திலிருந்து கீழே தள்ளினார்.—வெளி. 12:7-10.
17 பொ.ச. 29-ல் இயேசு ஆரம்பித்து வைத்த பிரசங்க வேலை இப்போது அதன் மகத்தான உச்சக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. சீக்கிரத்தில் பூமியிலுள்ள எல்லாரையுமே அவர் நியாயந்தீர்ப்பார். தம்மை மீட்பராக ஏற்றுக்கொள்கிற செம்மறியாடு போன்ற ஆட்களிடம், “உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்” என்று சொல்வார். (மத். 25:31-34, 41) அவரை ராஜாவாக ஏற்க மறுக்கிற பொல்லாதவர்களைப் பரலோகப் படைவீரர்களோடு சேர்ந்து நடத்தும் போரில் அழித்துவிடுவார். பின்பு, அவர் சாத்தானைக் கட்டிப்போட்டு, அவனையும் அவனுடைய பேய்களையும் “அதலபாதாளத்திற்குள்” தள்ளியடைப்பார்.—வெளி. 19:11-14; 20:1-3.
18, 19. மேசியாவாகிய இயேசு என்னென்ன காரியங்களை நிறைவேற்றுகிறார், கீழ்ப்படிகிற மனிதர்கள் என்ன ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்?
18 தம்முடைய ஆயிர வருட அரசாட்சியில், “ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு” போன்ற பட்டப் பெயர்களுக்கு இசைவாக இயேசு முழுமையாய்ச் செயல்படுவார். (ஏசா. 9:6, 7) அந்தச் சமயத்தில் உயிர்த்தெழுப்பப்படுபவர்கள் உட்பட எல்லாருமே பரிபூரணர் ஆவார்கள். (யோவா. 5:26-29) கீழ்ப்படிகிற மனிதர்களை “வாழ்வளிக்கும் நீரூற்றுகளிடம்” அவர் வழிநடத்துவார்; இதன் மூலம் யெகோவாவோடு அவர்கள் சுமூகமான பந்தத்தை அனுபவிப்பார்கள். (வெளிப்படுத்துதல் 7:16, 17-ஐ வாசியுங்கள்.) கடைசி சோதனைக்குப் பின்பு, சாத்தானும் அவனுடைய பேய்களும் கலகக்காரர்களும் ‘அக்கினிக் கடலில் தள்ளப்படுவார்கள்.’ அது பழைய ‘பாம்பின்’ தலையில் விழுகிற மரண அடியாக இருக்கும்.—வெளி. 20:10.
19 மேசியாவாகிய இயேசு எவ்வளவு அற்புதமாய், எவ்வளவு நேர்த்தியாய்த் தம்முடைய பொறுப்பை நிறைவேற்றி வருகிறார்! பூஞ்சோலைப் பூமி முழுவதிலும் மனிதர்கள் பூரண ஆரோக்கியத்தோடு சந்தோஷமாக வாழ்வார்கள். யெகோவாவின் புனிதப் பெயர்மீது சுமத்தப்பட்ட எல்லாக் களங்கமும் நீக்கப்பட்டிருக்கும்; அதோடு, அவருடைய பேரரசாட்சிதான் சரியானது என்று முழுமையாக நிரூபிக்கப்பட்டிருக்கும். ஆம், மேசியாவுக்குக் கீழ்ப்படிகிற எல்லாருக்கும் எத்தனை அருமையான ஆசீர்வாதங்கள்!
மேசியாவை நீங்கள் கண்டுகொண்டீர்களா?
20, 21. மேசியாவைப் பற்றி நீங்கள் ஏன் மற்றவர்களிடம் சொல்ல வேண்டும்?
20 கிறிஸ்துவின் பரோஸியா, அதாவது பிரசன்னம், 1914-லிருந்து தொடங்கியிருக்கிறது. கடவுளுடைய அரசாங்கத்தில் ராஜாவாக அவர் பிரசன்னமாகியிருப்பதை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும், தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் அதைத் தெளிவுபடுத்துகிறது. (வெளி. 6:2-8) என்றாலும், முதல் நூற்றாண்டு யூதர்களைப் போலவே இன்று பெரும்பாலான மக்கள் மேசியாவின் பிரசன்னத்திற்கான அத்தாட்சிகளை அசட்டை செய்கிறார்கள். தங்களுக்கு ஓர் அரசியல் தலைவர் வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்; அப்படி இல்லையென்றால், அரசியல் தலைவர்களைப் பயன்படுத்துகிற ஒரு மேசியா வேண்டுமென்று விரும்புகிறார்கள். நீங்களோ, கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு ஆட்சி செய்துவருகிறார் என்பதைத் தெரிந்துகொண்டீர்கள். அப்படித் தெரிந்துகொண்டபோது ஆனந்தப் பரவசம் அடைந்தீர்கள். முதல் நூற்றாண்டு சீடர்களைப் போலவே “நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்” என்று மனதாரச் சொன்னீர்கள்.
21 அப்படியானால், மற்றவர்களிடம் சத்தியத்தைக் குறித்துப் பேசும்போது, மேசியாவாக இயேசு வகிக்கிற பங்கைச் சிறப்பித்துக் காட்டுகிறீர்களா? அப்படிக் காட்டினீர்களென்றால், அவர் உங்களுக்காக இதுவரை செய்திருக்கும், இப்போது செய்துவரும், இனி செய்யப்போகும் காரியங்களுக்கான நன்றியுணர்வு உங்கள் மனதில் பெருக்கெடுக்கும். உண்மைதான், அந்திரேயாவையும் பிலிப்புவையும் போல, நீங்களும் மேசியாவைப் பற்றி உங்கள் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் ஏற்கெனவே பேசியிருப்பீர்கள். என்றாலும், இயேசு கிறிஸ்துதான் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா, மீட்புக்கான கடவுளின் வழி என்பதைப் புதிய உத்வேகத்துடன் அவர்களிடம் விளக்கலாம், அல்லவா?
விளக்க முடியுமா?
• முதல் நூற்றாண்டு சீடர்கள் மேசியாவை எவ்வாறு கண்டுகொண்டார்கள்?
• இயேசு சாகும்படி யெகோவா அனுமதித்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் யாவை?
• மேசியாவாக இயேசு எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யப்போகிறார்?
[பக்கம் 21-ன் படங்கள்]
இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்று முதல் நூற்றாண்டு மக்கள் எவ்வாறு கண்டுகொண்டார்கள்?
[பக்கம் 23-ன் படம்]
மற்றவர்களிடம் பேசும்போது மேசியாவாக இயேசு வகிக்கிற பங்கைச் சிறப்பித்துக் காட்டுகிறீர்களா?