சத்தியத்திற்கு இருக்கும் சக்தியைப் பார்த்திருக்கிறேன்
வீடோ ஃபிராயேஸ் சொன்னபடி
டிரென்டினாரா. இந்தப் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள். இது இத்தாலி நாட்டிலுள்ள நேபிள்ஸ் நகரின் தெற்கே இருக்கும் ஒரு சிறிய ஊர். என்னுடைய பெற்றோரும் அண்ணன் ஆன்ஜலோவும் இங்குதான் பிறந்தார்கள். ஆன்ஜலோ பிறந்த பிறகு என்னுடைய பெற்றோர் அமெரிக்காவுக்கு மாறிச்சென்று, நியு யார்க்கிலுள்ள ராகஸ்டர் நகரில் குடியேறினார்கள்; அங்கு 1926-ல் நான் பிறந்தேன். 1922-ல் அப்பா முதன்முதலில் பைபிள் மாணாக்கர்களைச் சந்தித்தார்; யெகோவாவின் சாட்சிகள் அப்போது அவ்வாறே அழைக்கப்பட்டார்கள். சீக்கிரத்தில், அப்பாவும் அம்மாவும் பைபிள் மாணாக்கரானார்கள்.
அப்பா ரொம்ப அமைதியானவர், எப்போதும் யோசனையில் ஆழ்ந்திருப்பவர்; ஆனாலும் அநியாயத்தைக் கண்டால் அவருக்குச் சுருக்கென்று கோபம் வந்துவிடும். பைபிள் சத்தியத்தை மக்களுக்கு பாதிரிமார்கள் கற்பிக்காததைக் கண்டு அவர் கொதிப்படைந்தார்; அதனால், தனக்குக் கிடைத்த எல்லாச் சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி மக்களுக்கு பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொடுத்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் முழுநேர ஊழியத்தில் இறங்கினார். சுகவீனத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் வரையில் விடாமல் ஊழியம் செய்தார்; ஆனால், கடுங்குளிர் உடலைப் பதம் பார்த்ததால் 74-ஆம் வயதில் முழுநேர ஊழியத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்படியிருந்தும் ஊழியம் செய்வதை அவர் நிறுத்திவிடவில்லை; 90 வயதைத் தாண்டிய பிறகும் 40 முதல் 60 மணிநேரம் ஊழியத்தில் செலவிட்டார். அப்பா வைத்த முன்மாதிரி என்னை ரொம்பவே கவர்ந்தது. அவர் அவ்வப்போது ‘ஜோக்’ அடித்தாலும் காரியத்தில் கண்ணாய் இருப்பார். “சத்தியத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று அவர் அடிக்கடி சொல்வார்.
பிள்ளைகளான எங்கள் ஐந்து பேருக்கும் கடவுளுடைய வார்த்தையைக் கற்றுத்தர அப்பாவும் அம்மாவும் அரும்பாடு பட்டார்கள். ஆகஸ்ட் 23, 1943-ல் நான் ஞானஸ்நானம் பெற்றேன்; ஜூன் 1944-ல் பயனியரானேன். என் அக்கா கார்மெலா, நியு யார்க்கிலுள்ள ஜெனிவாவில் பயனியராகச் சேவை செய்தார்; அவருடைய பார்ட்னரான ஃபர்ன், ரொம்ப கலகலப்பானவர். நான் ஃபர்னைத்தான் கரம் பிடிக்கப்போகிறேன் என்பதை அப்போது கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆகஸ்ட் 1946-ல் நாங்கள் இருவரும் இல்லற வாழ்வில் இணைந்தோம்.
மிஷனரி ஊழியம்
திருமணத்திற்குப் பின் முதன்முதலில் நியு யார்க்கிலுள்ள ஜெனிவா, நார்விச் ஆகிய இடங்களில் நாங்கள் விசேஷப் பயனியராக நியமிக்கப்பட்டோம். ஆகஸ்ட் 1948-ல் 12-வது கிலியட் பள்ளியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றோம். பட்டம் பெற்ற பிறகு, இத்தாலியிலுள்ள நேபிள்ஸ் நகருக்கு அனுப்பப்பட்டோம்; எங்களோடுகூட கார்ல், ஜோன் ரிட்ஜ்வே என்ற தம்பதியரும் மிஷனரிகளாக அனுப்பப்பட்டார்கள். போரினால் சின்னாபின்னமாகியிருந்த நேபிள்ஸ் நகரம் அதிலிருந்து மீண்டுவர போராடிக்கொண்டிருந்த சமயம் அது. அங்கு வீடு கிடைப்பது பெரும்பாடாக இருந்தது; அதனால், சில மாதங்களுக்கு இரண்டு அறைகள் கொண்ட ஒரு சின்னஞ்சிறிய வீட்டில் குடியிருந்தோம்.
நேபிள்ஸ்வாசிகள் பேசும் இத்தாலியன் பாஷையை வீட்டில் அம்மாவும் அப்பாவும் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்; அதனால், என்னுடைய இத்தாலியன் பாஷையை மக்களால் புரிந்துகொள்ள முடிந்தது, அதில் கொஞ்சம் அமெரிக்க வாடை இருந்தாலும்கூட. ஃபர்னுக்கு அந்தப் பாஷையைக் கற்றுக்கொள்வது கஷ்டமாக இருந்தது. ஆனால், அவளும் சீக்கிரத்தில் தேறி, என்னையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு முன்னேறிவிட்டாள்.
நேபிள்ஸ் நகரில் எங்களுடைய செய்திக்கு முதன்முதலில் ஆர்வம் காட்டியது நான்கு பேர்கொண்ட ஒரு குடும்பத்தினர்தான். அவர்கள் சட்டவிரோதமாக சிகரெட்டுகளை விற்று வந்தார்கள். அவர்களில் ஒருவரான டெரஸா ஒவ்வொரு நாளும் தோற்றத்தில் விசித்திரமாக மாறிவிடுவார். காலையில், தன்னுடைய பாவாடையிலுள்ள அத்தனை பாக்கெட்டுகளிலும் சிகரெட்டுகளைத் திணித்து வைத்து, பார்ப்பதற்குக் குண்டுப் பூசணி போல் தெரிவார். மாலையில் வத்தலும் தொத்தலுமாக ஒடுங்கிப்போய் விடுவார். ஆனால், அந்தக் குடும்பத்தினரைச் சத்தியம் அடியோடு மாற்றியது. கடைசியில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் சாட்சிகளானார்கள். இப்போது, நேபிள்ஸ் நகரில் கிட்டத்தட்ட 3,700 சாட்சிகள் இருக்கிறார்கள்.
பிரசங்க வேலைக்கு வந்த பிரச்சினை
அந்த நகரில் ஒன்பது மாதங்கள் மட்டுமே சேவை செய்தோம்; அதற்குள் அதிகாரிகள் எங்கள் நான்கு பேரையும் அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார்கள். நாங்கள் சுவிட்சர்லாந்துக்குச் சென்று அங்கு சுமார் ஒரு மாதம் தங்கியிருந்தோம்; பிறகு, பயணிகளுக்கான விசா வாங்கிக்கொண்டு மீண்டும் இத்தாலிக்குத் திரும்பினோம். நானும் ஃபர்னும் ட்யூரின் நகரில் நியமிக்கப்பட்டோம். முதலில், ஒரு பெண் தன்னுடைய வீட்டில் ஓர் அறையை வாடகைக்குக் கொடுத்தார்; அவருடைய குளியலறையையும் சமையலறையையும் பயன்படுத்திக்கொண்டோம். ரிட்ஜ்வே தம்பதியரும் ட்யூரினுக்கு வந்தபோது, நாங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். பிற்பாடு, அதே வீட்டில் ஐந்து மிஷனரி தம்பதியர் குடியிருந்தார்கள்.
1955-ல் அதிகாரிகளுடைய வற்புறுத்தலால் நாங்கள் ட்யூரினை விட்டு வெளியேறியபோது அங்கு நான்கு புதிய சபைகள் இருந்தன. அந்த ஊர் சகோதரர்கள் சபைகளைக் கவனித்துக்கொள்ளும் அளவுக்குத் தகுதி பெற்றிருந்தார்கள். “அமெரிக்கரான நீங்கள் இங்கு சாதித்தவை எல்லாம் நீங்கள் இங்கிருந்து போன பிறகு ஒன்றுமில்லாமல் போய்விடும்; இது உறுதி” என்று அதிகாரிகள் எங்களிடம் சொன்னார்கள். ஆனால், அதன் பிறகு ஏற்பட்ட அதிகரிப்பு, இந்த வேலைக்கு பின்னால் இருப்பது கடவுள்தான் என்பதைக் காட்டியது. இன்று, ட்யூரினிலுள்ள 56 சபைகளில் 4,600-க்கும் அதிகமான சாட்சிகள் இருக்கிறார்கள்.
ஃபிளாரன்ஸ்—பிரமாதமான நகரம்
அடுத்து, நாங்கள் ஃபிளாரன்ஸ் நகரில் நியமிக்கப்பட்டோம். என்னுடைய அக்கா கார்மெலாவும் அவருடைய கணவர் மெர்லின் ஹார்ட்ஸ்வரும் அங்கு மிஷனரிகளாக நியமிக்கப்பட்டிருந்ததால், அந்நகரைப் பற்றி நிறைய முறை கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனாலும், அங்கு சென்று வாழ்வது ஒரு தனி அனுபவம்தான்! பியாட்ஸா டெல்லா ஸின்யோரியா, போன்டே வெக்யோ, பியாட்சாலே மிக்கலான்ஜலோ, பாலாட்ஸோ பிட்டி போன்ற இடங்கள் அந்நகரைப் பிரமாதமான நகரமாக்கின. அங்குள்ள மக்கள் சிலர் நற்செய்தியை ஏற்றுக்கொண்ட விதத்தைப் பார்த்ததும்கூட மகிழ்ச்சியாக இருந்தது.
நாங்கள் ஒரு குடும்பத்திற்கு பைபிள் படிப்பு நடத்தினோம்; அந்தக் குடும்பத்தில் அப்பாவும் அம்மாவும் ஞானஸ்நானம் எடுத்தார்கள். என்றாலும், அந்த அப்பாவுக்குப் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. புகைபிடிப்பது அசுத்தமான பழக்கம் என்பதால் அதை விட்டுவிடும்படி 1973-ல் வெளிவந்த காவற்கோபுரம் வாசகர்களை அறிவுறுத்தியது. அதனால், புகைபிடிப்பதை நிறுத்தும்படி மூத்த பிள்ளைகள் இருவரும் அப்பாவைக் கெஞ்சினார்கள். அதற்கு அவர் சம்மதித்தாலும், நிறுத்தவில்லை. ஒருநாள் இரவு அவருடைய மனைவி ஜெபம் செய்யாமலேயே தன்னுடைய ஒன்பது வயது இரட்டை பிள்ளைகளைப் படுக்கை அறைக்கு அனுப்பிவிட்டார். அது அவரது மனதுக்குக் கஷ்டமாக இருந்ததால், அவர்களுடைய அறைக்குச் சென்றார். அதற்குள் அவர்களாகவே ஜெபம் செய்திருந்தார்கள். “நீங்க ஜெபத்தில் என்ன கேட்டீங்க?” என்று அவர் கேட்டார். “அப்பா சிகரெட் குடிக்கிறத நிறுத்துவதற்கு எப்படியாவது உதவி செய்யுங்க, யெகோவா தேவனே” என்று கேட்டதாகச் சொன்னார்கள். உடனே தன் கணவரைக் கூப்பிட்டு, “உங்க பிள்ளைங்க என்ன ஜெபம் செய்தாங்கனு கொஞ்சம் கேளுங்க” என்றார். அதைக் கேட்டபோது, அவரால் அழுகையை அடக்க முடியவில்லை; “இனிமே சிகரெட் குடிக்கவே மாட்டேன்!” என்று சொன்னார். அவர் சொன்ன வாக்கைக் காப்பாற்றினார்; இப்போது, அவருடைய குடும்பத்தில் 15-க்கும் அதிகமானோர் சாட்சிகளாக இருக்கிறார்கள்.
ஆப்பிரிக்காவில் சேவை
1959-ல், நாங்களும் எங்களோடுகூட ஆர்டூரோ லெவரிஸும் என் அண்ணன் ஆன்ஜலோவும் சோமாலியாவிலுள்ள மொகடிஸ்ஸூ நகருக்கு மாற்றப்பட்டோம். நாங்கள் அங்கு சென்ற சமயத்தில் அரசியல் நிலவரம் படுமோசமாக இருந்தது. ஐ.நா.-வின் ஆணைப்படி இத்தாலி நாட்டு அரசாங்கம் சோமாலியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத்தர முயன்றும் நிலைமை கைமீறிப் போனது. எங்களோடு பைபிள் படித்த இத்தாலியர்கள் சிலர் நாட்டைவிட்டு போய்விட்டார்கள்; அங்கு ஒரு சபையை உருவாக்குவதும் கடினமாக இருந்தது.
அந்தச் சமயத்தில், மண்டலக் கண்காணி தனக்கு உதவியாளராக இருக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார். ஆக, நாங்கள் அண்டை நாடுகளைச் சந்திக்க ஆரம்பித்தோம். எங்களோடு பைபிள் படித்த சிலர் முன்னேற்றம் செய்திருந்தாலும், எதிர்ப்பு காரணமாகத் தங்களுடைய சொந்த ஊரைவிட்டு போக வேண்டியதாயிற்று. மற்றவர்களோ, கஷ்டத்தைச் சகித்துக்கொண்டு அங்கேயே இருந்தார்கள்.a யெகோவாமீது அவர்களுக்கு இருந்த அன்பையும் உண்மையோடு நிலைத்திருப்பதற்கு அவர்கள் சகித்தவற்றையும் நினைத்துப் பார்க்கும்போது இப்போதும் எங்கள் கண்கள் குளமாகின்றன.
சோமாலியாவிலும் சரி எரிட்ரியாவிலும் சரி, உஷ்ணமும் புழுக்கமும் எப்போதும் கடுமையாக இருக்கும். அந்த ஊர் சாப்பாடு வேறு காட்டமாக இருந்ததால் எங்கள் உடல் இன்னும் சூடானது. முதன்முறையாக அந்த ஊர் உணவை பைபிள் மாணாக்கர் ஒருவருடைய வீட்டில் நாங்கள் சாப்பிட்டபோது, தன் காதுகள் இரண்டும் சிகப்பு டிராஃபிக் லைட் போல எரிய ஆரம்பித்ததாக என் மனைவி ‘ஜோக்’ அடித்தாள்.
ஆன்ஜலோவுக்கும் ஆர்டூரோவுக்கும் வேறொரு நியமிப்பு கிடைத்தபோது, நாங்கள் தனியே விடப்பட்டோம். எங்களுக்குத் தெம்பளிக்க யாருமில்லை, ரொம்ப கஷ்டமாக இருந்தது. என்றாலும், யெகோவாவிடம் நெருங்கிச் செல்வதற்கும் அவர்மீது முழு நம்பிக்கை வைப்பதற்கும் இது எங்களுக்கு உதவியது. ஊழியத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நாடுகளுக்கு விஜயம் செய்தது எங்களுக்கு உற்சாக டானிக் போல இருந்தது.
சோமாலியாவில் பலவிதமான பிரச்சினைகளை எதிர்ப்பட்டோம். எங்களிடம் ஃபிரிட்ஜ் இல்லை; அதனால், அந்தந்த நாளுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை மட்டும் வாங்கினோம். சுறாமீன் துண்டுகளானாலும் சரி மாம்பழம், பப்பாளி, திராட்சை, தேங்காய், வாழைப்பழம் போன்றவையாக இருந்தாலும் சரி, அன்றன்றைக்குத் தேவையானதை மட்டும் வாங்கினோம். பூச்சி தொல்லையையும் சமாளிக்க வேண்டியிருந்தது. பைபிள் படிப்புகளை நடத்தும்போது சில நேரங்களில் அவை எங்களுடைய தோளில் வந்து உட்கார்ந்துவிடும். எங்களிடம் ஸ்கூட்டராவது இருந்ததால், கொளுத்தும் வெயிலில் பல மணிநேரம் நடக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
மீண்டும் இத்தாலிக்கு
நண்பர்கள் தயவு காட்டியதால், 1961-ல் ட்யூரின் நகரில் நடக்கவிருந்த சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வாழைப்பழங்களை ஏற்றிச்செல்லும் கப்பலில் இத்தாலிக்குப் பயணித்தோம். எங்களுக்கு இத்தாலியிலேயே மீண்டும் நியமிப்பு கிடைக்கும் என்பதைக் கேள்விப்பட்டோம். செப்டம்பர் 1962-ல் நாங்கள் இத்தாலிக்குத் திரும்பிச் சென்றோம்; அங்கு நான் வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்ய ஆரம்பித்தேன். நாங்கள் ஒரு சிறிய கார் வாங்கினோம்; ஐந்து வருடங்களுக்கு அதில் பயணித்தே இரண்டு வட்டாரங்களில் சேவை செய்தோம்.
ஆப்பிரிக்காவில் கொளுத்தும் வெயிலில் வாடிய நாங்கள் இப்போது உறைய வைக்கும் குளிரில் தவிக்க வேண்டியதாயிற்று. நாங்கள் அங்கு சென்ற அந்த வருடத்தில் குளிர்காலத்தின்போது, ஆல்ப்ஸ் மலையடிவாரத்திலுள்ள ஒரு சபையைச் சந்தித்தோம்; அங்கு, ஹீட்டர் வசதி இல்லாத ஓர் அறையில் வைக்கோல் பரண்மீது தூங்கினோம். குளிரில் ஆடிப்போனதால், கோட்டுகளைப் போட்டுக்கொண்டு படுத்தோம். அன்று இரவு, கடுங்குளிர் காரணமாகச் சுற்றுவட்டாரத்தில் நான்கு கோழிகளும் இரண்டு நாய்களும் இறந்துவிட்டன!
சில காலத்திற்குப் பிறகு, நான் மாவட்டக் கண்காணியாகவும் சேவை செய்தேன். அந்தக் காலப்பகுதியில், இத்தாலியையே ஒரு சுற்று சுற்றிவிட்டோம். காலாபிரியா, சிசிலி போன்ற சில இடங்களுக்குப் பல முறை சென்றோம். ஆன்மீக முன்னேற்றம் செய்வதற்கு இளைஞர்களை ஊக்குவித்தோம்; சபைக் கண்காணிகளாக... பயணக் கண்காணிகளாக... பெத்தேல் ஊழியர்களாக... சேவை செய்வதற்கு இலக்கு வைக்கும்படியும் அவர்களை ஊக்குவித்தோம்.
யெகோவாவை முழு இருதயத்தோடு சேவை செய்த எங்கள் நண்பர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். யெகோவாவிடம் அவர்கள் காட்டிய முழுமையான பக்தி, சகோதரர்களிடம் காட்டிய தாராள குணம், அன்பு, ஒத்துப்போகும் மனப்பான்மை, சுயதியாக மனப்பான்மை போன்ற குணங்கள் எங்கள் மனதை ரொம்பவே கவர்ந்தன. ராஜ்ய மன்றத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம்; மத ஊழியர்கள் என்ற சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றிருந்த சாட்சிகள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். முன்பெல்லாம் சகோதரர்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்படவில்லை. ஒருகாலத்தில் வீட்டு சமையலறையில் அல்லது மரப்பலகைகளில் உட்கார்ந்துதான் ட்யூரினில் கூட்டங்களை நடத்தினார்கள்; அந்தக் காலமெல்லாம் இப்போது மலையேறி விட்டது. இப்போதோ, யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் அழகிய ராஜ்ய மன்றங்களில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வசதிகளற்ற கொட்டகைகளில் நடத்தப்பட்ட மாநாடுகள் இப்போது பெரிய மாநாட்டு மன்றங்களில் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமா, பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையும் 2,43,000-ஆக அதிகரித்திருக்கிறதே! நாங்கள் இத்தாலிக்கு வந்த சமயத்தில் 490 பிரஸ்தாபிகளே இருந்தார்கள்.
நாங்கள் சரியான தீர்மானங்களை எடுத்திருந்தோம்
இன்பங்களோடு சில துன்பங்களையும் சந்தித்தோம்; ஆம், சில சமயங்களில் வீட்டு ஞாபகமும் சுகவீனமும் மனதுக்குச் சோர்வூட்டின. கடலைப் பார்க்கும்போதெல்லாம் ஃபர்னுக்கு வீட்டு ஞாபகம் வந்துவிடும். அவளுக்கு மூன்று பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. ஒருமுறை, பைபிள் படிப்பு நடத்துவதற்காகப் போய்க்கொண்டிருந்த சமயத்தில், பிரசங்க வேலையை எதிர்த்த ஒருவன், வைக்கோல் அள்ளுவதற்குப் பயன்படுத்தும் கவர்க்கோலால் அவளை அடித்தான். இதன் காரணமாகவும் அவளை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது.
சில நேரங்களில் நாங்கள் சோர்ந்து போனபோதிலும், புலம்பல் 3:24-ல் சொல்லப்பட்டுள்ளபடி ‘யெகோவாமீது நம்பிக்கையாயிருந்தோம்.’ அவர் ஆறுதல் அளிப்பவர். அப்படி ஒருமுறை சோர்வாக இருந்த சமயத்தில் ஃபர்னுக்கு சகோதரர் நேதன் நாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், பென்ஸில்வேனியா டச் பெண்கள் ஃபர்னைப் போல் துணிவும் மனவுறுதியும் கொண்டவர்கள் என்பது தனக்குத் தெரியுமென அவர் எழுதியிருந்தார்; ஏனென்றால் பென்ஸில்வேனியாவிலுள்ள பெத்லெகேமுக்கு அருகில்தான் அவர் பிறந்தார், ஃபர்ன் முதன்முதலில் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்ததும் அங்குதான். அவர் சொன்னது சரியே. பின்வந்த வருடங்களில் பல வழிகளிலும் பலரிடமிருந்தும் உற்சாகம் பெற்றோம்.
பல கஷ்டங்களின் மத்தியிலும், ஊழியத்தில் எங்களுடைய பக்திவைராக்கியம் குறைந்துவிடாமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். பக்திவைராக்கியத்தை லாம்ப்ரூஸ்கோ என்ற இத்தாலிய மதுபானத்தில் ‘புஸ்ஸென்று’ பொங்கியெழும் நுரையோடு ஒப்பிட்டு ஃபர்ன் இப்படி ‘ஜோக்’ அடித்தாள்: “நம் பக்திவைராக்கியம் எப்போதும் ‘புஸ்ஸென்று’ பொங்கியெழ வேண்டும்.” வட்டார ஊழியத்திலும் மாவட்ட ஊழியத்திலும் 40 வருடங்கள் செலவிட்ட பிறகு, எங்களுக்கு ஒரு புதிய நியமிப்பு கிடைத்தது; இத்தாலியன் மொழி அல்லாத பிற மொழித் தொகுதிகளையும் சபைகளையும் சந்திப்பதும் ஒழுங்குபடுத்துவதுமே அந்த நியமிப்பு. அந்தத் தொகுதியிலுள்ள பிரஸ்தாபிகள் இலங்கை, எத்தியோப்பியா, எரிட்ரியா, கானா, சீனா, நைஜீரியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளையும் பிற நாடுகளையும் சேர்ந்த மக்களுக்குப் பிரசங்கிக்கிறார்கள். யெகோவாவின் இரக்கத்தை ருசித்த அநேகருடைய வாழ்க்கையை அவரது வார்த்தை எப்படியெல்லாம் அற்புதமாய் மாற்றியிருக்கிறது என்பதை ஒரு புத்தகத்தில் எழுதினால்கூட தீராது.—மீ. 7:18, 19.
ஊழியம் செய்வதற்குத் தேவையான மன பலத்தையும் உடல் பலத்தையும் தொடர்ந்து தரும்படி நாங்கள் தினமும் யெகோவாவிடம் ஜெபிக்கிறோம். ஆண்டவருக்குள் மனமகிழ்ச்சியாய் இருப்பதே எங்கள் பலம். இது எங்கள் கண்களுக்கு ஒளியூட்டுகிறது; சத்தியத்தைப் பரப்புவதற்கு நாங்கள் எடுத்த தீர்மானங்கள் சரியானவையே என்பதையும் உறுதிப்படுத்துகிறது.—எபே. 3:7; கொலோ. 1:29.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 1992-ல் (ஆங்கிலம்) பக்கம் 95-184-ஐப் பாருங்கள்.
[பக்கம் 27-29-ன் அட்டவணை/ படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
நியு யார்க், ராகஸ்டரில் என் பெற்றோர்
1948
சௌத் லான்சிங்கில் 12-வது கிலியட் வகுப்பின்போது
1949
நானும் ஃபர்னும் இத்தாலிக்குக் கிளம்புவதற்கு முன்பு
இத்தாலியிலுள்ள காப்ரியில்
1952
ட்யூரினிலும் நேபிள்ஸிலும் மற்ற மிஷனரிகளுடன்
1963
ஃபர்ன், அவளுடைய பைபிள் மாணாக்கர் சிலருடன்
“நம் பக்திவைராக்கியம் எப்போதும் ‘புஸ்ஸென்று’ பொங்கியெழ வேண்டும்”