கிறிஸ்தவக் குடும்பங்கள் ‘விழிப்புடனிருக்க’...
“நாம் . . . விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருக்க வேண்டும்.”—1 தெ. 5:6.
1, 2. ஒரு குடும்பம் ஆன்மீக ரீதியில் எப்போதும் விழிப்புடனிருக்க என்ன செய்வது அவசியம்?
‘யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாளை’ பற்றி தெசலோனிக்கேய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “சகோதரர்களே, நீங்கள் இருளில் இருப்பவர்கள் அல்ல; எனவே, வெளிச்சத்தில் திடீரென அகப்பட்டுக்கொள்கிற திருடர்களைப் போல் நீங்கள் அந்த நாளில் அகப்பட்டுக்கொள்ள மாட்டீர்கள். நீங்கள் எல்லாரும் ஒளியின் பிள்ளைகளாகவும் பகலின் பிள்ளைகளாகவும் இருக்கிறீர்கள்; நாம் இரவுக்கோ இருளுக்கோ உரியவர்கள் அல்ல. அப்படியானால், மற்றவர்கள் தூங்குவதுபோல் நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது; மாறாக, விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருக்க வேண்டும்.”—யோவே. 2:31; 1 தெ. 5:4-6.
2 தெசலோனிக்கேய கிறிஸ்தவர்களுக்கு பவுல் கொடுத்த அறிவுரை ‘முடிவு காலத்தில்’ வாழ்கிற நமக்கு முக்கியமாகப் பொருந்துகிறது. (தானி. 12:4) சாத்தானுடைய இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவு நெருங்க நெருங்க, எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரை உண்மை வழிபாட்டிலிருந்து விலக்க அவன் உறுதிபூண்டிருக்கிறான். ஆகவே, ஆன்மீக ரீதியில் விழிப்புடன் இருக்கும்படி பவுல் கொடுத்த அறிவுரையை நாம் மனதில் பதிப்பது முக்கியம். ஒரு கிறிஸ்தவக் குடும்பம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டுமென்றால், வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தங்களுக்குக் கடவுள் கொடுத்துள்ள பொறுப்பை நிறைவேற்றுவது அவசியம். அப்படியானால், குடும்பம் ‘விழிப்புடனிருக்க’ கணவன், மனைவி, பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும்?
கணவர்களே, ‘நல்ல மேய்ப்பனை’ பின்பற்றுங்கள்
3. ஒன்று தீமோத்தேயு 5:8 குறிப்பிடுகிறபடி, குடும்பத்தின் தலையான கணவனுக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கின்றன?
3 “ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தலையாக இருக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 11:3) அப்படியானால், குடும்பத்தின் தலையான கணவனுக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கின்றன? அவற்றில் ஒன்றைப் பற்றி பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஒருவன் தன்னை நம்பியிருப்பவர்களை, முக்கியமாகத் தன் குடும்ப அங்கத்தினர்களை, கவனிக்கவில்லை என்றால் அவன் விசுவாசத்தை நிராகரித்தவனாகவும் விசுவாசத்தில் இல்லாதவனைவிட மோசமானவனாகவும் இருப்பான்.” (1 தீ. 5:8) ஆம், ஒரு கணவன் தன்னுடைய குடும்பத்தினருக்கு உணவு, உடை போன்றவற்றை அளித்து அவர்களைக் கவனிக்க வேண்டும். இவ்விதத்தில் மட்டும் அவர்களைக் கவனித்தால் போதாது, ஆன்மீக ரீதியில் விழிப்புடனிருப்பதற்கும் அவர்களுக்கு உதவ வேண்டும். அவர் ஆன்மீக ரீதியில் தன் குடும்பத்தைக் கட்ட வேண்டும்; அதாவது, வீட்டார் எல்லாருமே கடவுளோடுள்ள தங்கள் பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள உதவ வேண்டும். (நீதி. 24:3, 4) அதை அவர் எப்படிச் செய்யலாம்?
4. ஒருவர் ஆன்மீக ரீதியில் தன் குடும்பத்தைக் கட்டுவதில் வெற்றிகாண என்ன செய்ய வேண்டும்?
4 ‘கிறிஸ்து சபைக்குத் தலையாக இருப்பதுபோல், கணவனும் மனைவிக்குத் தலையாக இருப்பதால்’ இயேசு சபையைக் கவனித்துக்கொள்ளும் விதத்தை மணமான ஓர் ஆண் ஆராய்ந்து பார்த்து அதைப் பின்பற்ற வேண்டும். (எபே. 5:23) தமக்கும் தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கும் இடையே இருந்த பிணைப்பை இயேசு எப்படி விவரித்தார் என்பதைக் கவனியுங்கள். (யோவான் 10:14, 15-ஐ வாசியுங்கள்.) ஒருவர் ஆன்மீக ரீதியில் தன் குடும்பத்தைக் கட்டுவதில் வெற்றிகாண என்ன செய்வது முக்கியம்? ‘நல்ல மேய்ப்பனான’ இயேசு சொன்னவற்றையும் செய்தவற்றையும் ஆழ்ந்து படிக்க வேண்டும், ‘அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்ற’ வேண்டும்.—1 பே. 2:21.
5. நல்ல மேய்ப்பன் சபையிலுள்ளவர்களை எந்தளவு அறிந்திருக்கிறார்?
5 பொதுவாக, ஒரு மேய்ப்பனுக்கும் மந்தைக்கும் இடையே பந்தம் ஏற்படுவதற்கு அறிவும் நம்பிக்கையுமே அடிப்படை. அந்த மேய்ப்பன் தன்னுடைய ஆடுகளை நன்கு அறிந்திருக்கிறார், ஆடுகளும் அவரை அறிந்திருப்பதோடு அவர்மேல் நம்பிக்கை வைக்கின்றன. அவை அவருடைய குரலை அடையாளம் கண்டுகொண்டு அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன. “நான் என்னுடைய ஆடுகளை அறிந்திருக்கிறேன், என்னுடைய ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன” என்று இயேசு சொன்னார். சபையிலுள்ளவர்களைப் பற்றி அவர் மேலோட்டமாக மட்டுமே அறிந்திருக்கவில்லை. ‘அறிந்திருப்பது’ என்பதற்கான கிரேக்க வார்த்தை “அன்னியோன்னியமாக, மிக நன்றாக அறிந்திருப்பதை” குறிக்கிறது. ஆம், நல்ல மேய்ப்பன் தம்முடைய ஆடுகள் ஒவ்வொன்றையும் மிக நன்றாக அறிந்திருக்கிறார். அவை ஒவ்வொன்றின் தேவைகளை, பலங்களை, பலவீனங்களை அறிந்திருக்கிறார். தம் ஆடுகளைப் பற்றிய எந்தவொரு விஷயமும் இந்த மேய்ப்பனின் கண்ணைத் தப்பாது. ஆடுகளும் மேய்ப்பனை நன்கு அறிந்து, அவருடைய வழிநடத்துதலில் நம்பிக்கை வைக்கின்றன.
6. ஒரு கணவன் எப்படி நல்ல மேய்ப்பனைப் பின்பற்றலாம்?
6 ஒரு கணவன் கிறிஸ்துவைப் போல தலைமை வகிப்பதற்கு, தன்னை ஒரு மேய்ப்பனாகவும் வீட்டாரை ஆடுகளாகவும் கருத கற்றுக்கொள்ள வேண்டும். அவர் தன் வீட்டாரைப் பற்றி மிக நன்றாக அறிந்துகொள்ள முயல வேண்டும். ஒரு கணவனால் அப்படி அறிந்துகொள்ள முடியுமா? ஆம், குடும்பத்தார் எல்லாரோடும் நன்கு உரையாடினால்... அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்து கேட்டால்... குடும்பத்தை முன்நின்று வழிநடத்தினால்... குடும்ப வழிபாடு, கூட்டங்கள், வெளி ஊழியம், பொழுதுபோக்கு போன்றவை சம்பந்தமாகத் தீர்மானம் எடுக்கையில் குடும்பத்தினரின் சூழ்நிலைகளை மனதில் வைத்திருந்தால்... அறிந்துகொள்ள முடியும். ஒரு கிறிஸ்தவக் கணவன் கடவுளுடைய வார்த்தையை அறிந்திருப்பதோடு, தன் குடும்பத்தாரைப் பற்றியும் அறிந்துகொண்டு அவர்களை வழிநடத்துகையில், அவர்கள் எல்லாருமே அவருடைய தலைமை வகிப்பின்மீது நம்பிக்கை வைப்பார்கள்; அவர்கள் ஒற்றுமையாய் கடவுளை வழிபடுவதைப் பார்த்து அவரும் திருப்தி அடைவார்.
7, 8. நல்ல மேய்ப்பனைப் போல் ஒரு கணவன் தன் குடும்பத்தாரிடம் எப்படிப் பாசம் காட்டலாம்?
7 ஒரு நல்ல மேய்ப்பனுக்குத் தன் ஆடுகள்மீது பாசமும் இருக்கும். இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய சுவிசேஷப் பதிவுகளை வாசிக்கும்போது, தம் சீடர்களிடம் அவர் பொழிந்த பாசத்தைப் பார்த்து நாமும் சந்தோஷத்தில் நெகிழ்ந்துவிடுகிறோம். அவர் தமது ‘ஆடுகளுக்காக உயிரையும் கொடுத்தாரே’! இயேசுவைப் போல கணவர்களும் தங்களுடைய குடும்பத்தாரிடம் பாசம் காட்ட வேண்டும். கடவுளுடைய தயவைப் பெற ஆசைப்படுகிற ஒரு கணவன், அதட்டி மிரட்டி தன் மனைவிமீது அதிகாரம் செய்ய மாட்டார்; மாறாக, ‘கிறிஸ்து சபைமீது அன்பு காட்டியதுபோல்’ அவள்மீது எப்போதும் அன்பு காட்டுவார். (எபே. 5:25) அவள் மதிப்பைப் பெற தகுதியுள்ளவள் என்பதால், அவளிடம் அவர் கனிவாக, கரிசனையாகப் பேச வேண்டும்.—1 பே. 3:7.
8 இளம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கையில், குடும்பத் தலைவர் பைபிள் நியமங்களை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதற்காக, அவர்களிடம் பாசம் காட்டாமல் இருந்துவிடக் கூடாது. அவர்களைக் கண்டிக்கும்போதுகூட அதை அன்போடு செய்ய வேண்டும். தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பிள்ளைகள் சிலரால் உடனடியாகப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். அப்போது, ஒரு தகப்பன் மிகுந்த பொறுமை காட்டுவது அவசியம். தகப்பன்மார் ஒவ்வொரு விஷயத்திலும் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றினால், வீடு பத்திரமான, பாதுகாப்பான இடமாகத் திகழும். அப்போது, சங்கீதக்காரன் பாடிய விதமான ஆன்மீகப் பாதுகாப்பை அவர்களுடைய குடும்பங்கள் அனுபவித்து மகிழும்.—சங்கீதம் 23:1-6-ஐ வாசியுங்கள்.
9. முற்பிதாவான நோவாவைப் போல கிறிஸ்தவக் கணவர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது, அதைச் செய்ய எது அவர்களுக்கு உதவும்?
9 கிறிஸ்தவக் கணவர்களுக்கு உதாரணமாகத் திகழும் இன்னொருவர் நோவா. முற்பிதாவான அவர் அன்றைய உலகின் முடிவு காலத்தில் வாழ்ந்து வந்தார். ஆனால் யெகோவா, “நீதியைப் பிரசங்கித்தவராகிய நோவா உட்பட எட்டுப் பேரை மட்டும் காப்பாற்றி, தேவபக்தியற்றவர்கள் நிறைந்த அந்த உலகத்தின் மீது ஜலப்பிரளயத்தைக் கொண்டுவந்தார்.” (2 பே. 2:5) அந்தப் பெருவெள்ளத்திலிருந்து தன் குடும்பத்தாரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நோவாவுக்கு இருந்தது. இந்தக் கடைசி காலத்தில் வாழ்கிற கிறிஸ்தவக் குடும்பத் தலைவர்களுக்கும் இதே பொறுப்பு இருக்கிறது. (மத். 24:37) அப்படியானால், “நல்ல மேய்ப்பன்” வைத்த முன்மாதிரியை ஆராய்ந்து பார்த்து அதைப் பின்பற்ற முயல்வது எவ்வளவு முக்கியம்!
மனைவிகளே, ‘உங்கள் வீட்டைக் கட்டுங்கள்’
10. ஒரு மனைவி தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது என்றால் என்ன?
10 “மனைவிகளே, நம்முடைய எஜமானருக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதுபோல், உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபே. 5:22) இது, அவள் மட்டமான ஸ்தானத்தில் இருப்பதைக் குறிப்பதில்லை. முதல் மனுஷியாகிய ஏவாளைப் படைப்பதற்கு முன் கடவுள் இவ்வாறு அறிவித்தார்: “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்.” (ஆதி. 2:18) கணவனுக்கு ‘ஏற்ற துணையாய்’ இருப்பது, அதாவது குடும்பப் பொறுப்புகளைக் கவனிப்பதில் அவருக்கு உறுதுணையாய் இருப்பது, உண்மையில் மதிப்புக்குரிய ஒன்றே.
11. முன்னுதாரணமாய்த் திகழும் ஒரு மனைவி எப்படி தன் ‘வீட்டைக் கட்டுகிறாள்’?
11 முன்னுதாரணமாய்த் திகழும் ஒரு மனைவி தன் குடும்பத்தினரின் நலனுக்காக உழைக்கிறாள். (நீதிமொழிகள் 14:1-ஐ வாசியுங்கள்.) புத்தியில்லாத பெண் தன் கணவனுடைய தலைமை ஸ்தானத்தை அவமதிக்கிறாள்; புத்தியுள்ள பெண்ணோ அந்த ஸ்தானத்திற்கு ஆழ்ந்த மரியாதை காட்டுகிறாள். இந்த உலகத்தாரைப் போல அடங்காதவளாக, இஷ்டப்படி நடக்கிறவளாக இல்லாமல் தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறாள். (எபே. 2:2) புத்தியில்லாத மனைவி தன் கணவனைப் பற்றி மோசமாகப் பேசத் தயங்க மாட்டாள்; புத்தியுள்ள பெண்ணோ, பிள்ளைகளும் மற்றவர்களும் தன் கணவன்மீது இன்னுமதிக மதிப்புமரியாதை வைக்க பாடுபடுவாள். அப்படிப்பட்ட மனைவி தன் கணவனுடைய தலைமை ஸ்தானத்தைக் குலைத்துப்போடும் விதத்தில் எப்போதும் நச்சரித்துக்கொண்டோ ஏட்டிக்குப் போட்டியாக பேசிக்கொண்டோ இருக்க மாட்டாள். பண விஷயத்திலும் ஒரு மனைவிக்குப் பங்கு உண்டு. புத்தியில்லாத ஒரு பெண் தன் கணவன் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசையெல்லாம் கரியாக்கிவிடுவாள். கணவனுக்கு ஆதரவாய் இருக்கிற மனைவியோ அப்படிச் செய்ய மாட்டாள். பண விஷயத்தில் தன் கணவனுக்குப் பக்கதுணையாய் இருப்பாள். எப்போதும் ஞானமாயும் சிக்கனமாயும் செலவு செய்வாள். ‘ஓவர்டைம்’ செய்யும்படி தன் கணவனை வற்புறுத்த மாட்டாள்.
12. குடும்பத்தார் ‘விழிப்புடனிருக்க’ ஒரு மனைவி எப்படி உதவலாம்?
12 எடுத்துக்காட்டாய்த் திகழும் ஒரு மனைவி தன் குடும்பத்தார் ‘விழிப்புடனிருக்க’ உதவுகிறாள்; பிள்ளைகளுக்கு ஆன்மீகக் கல்வி புகட்ட தன் கணவனோடு சேர்ந்து ஒத்துழைக்கிறாள். (நீதி. 1:8) குடும்ப வழிபாட்டைத் தவறாமல் நடத்த முழு ஆதரவு தருகிறாள். அதுமட்டுமல்ல, பிள்ளைகளுக்கு அறிவுரை கொடுக்கையில், அவர்களைக் கண்டிக்கையில் தன் கணவனுக்கு உறுதுணையாய் இருக்கிறாள். ஒரு மனைவி இந்த விஷயத்தில் கணவனோடு ஒத்துப்போகாவிட்டால் அவளுடைய பிள்ளைகளின் வாழ்க்கை மட்டுமல்ல ஆன்மீகமும் பாதிக்கப்படுகிறது. ஒத்துழைக்காத மனைவிக்கும் ஒத்துழைக்கிற மனைவிக்கும் இடையே எவ்வளவு வித்தியாசம்!
13. சபை, அமைப்பு சம்பந்தப்பட்ட காரியங்களில் முழு மூச்சோடு ஈடுபடுகிற கணவனுக்கு ஒரு மனைவி தோள்கொடுப்பது ஏன் முக்கியம்?
13 தோள்கொடுக்கும் ஒரு மனைவி, சபைக் காரியங்களில் தன் கணவன் மும்முரமாய் ஈடுபடுவதைப் பார்க்கையில் எப்படி உணருவாள்? அவளுடைய சந்தோஷத்திற்கு அளவே இருக்காது! தன்னுடைய கணவன் உதவி ஊழியராக, மூப்பராக, மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவின் அல்லது மண்டல கட்டுமான குழுவின் உறுப்பினராக என விசேஷித்த எந்தவொரு சேவையைச் செய்தாலும் சரி, அதைக் குறித்துச் சந்தோஷப்படுவாள். சொல்லாலும் செயலாலும் தன் கணவனுக்கு முழு ஆதரவு கொடுக்க அவள் நிறையத் தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும். என்றாலும் சபை, அமைப்பு சம்பந்தப்பட்ட காரியங்களில் தன் கணவன் முழு மூச்சோடு ஈடுபடுவதால், தன் குடும்பம் ஆன்மீக ரீதியில் நிச்சயம் விழிப்புடன் இருக்க முடியும் என்பதை அவள் அறிந்திருக்கிறாள்.
14. (அ) தோள்கொடுக்கும் ஒரு மனைவிக்கு எது கஷ்டமாக இருக்கலாம், அதை அவள் எப்படிச் சமாளிக்கலாம்? (ஆ) குடும்பம் வளம் பெற ஒரு மனைவி எப்படி உதவுகிறாள்?
14 தனக்குப் பிடிக்காத ஒரு தீர்மானத்தைக் கணவன் எடுக்கும்போது, அவருடன் ஒத்துப்போவது ஒரு மனைவிக்குக் கஷ்டமாக இருக்கலாம். அப்போதும்கூட, எடுத்துக்காட்டாய்த் திகழும் ஒரு மனைவி ‘அமைதியாக, சாந்தமாக’ இருந்து அவருடைய தீர்மானத்தைச் செயல்படுத்த கைகொடுக்கிறாள். (1 பே. 3:4) அதோடு ஒரு நல்ல மனைவி, முற்காலத்தில் தேவ பயத்தோடு வாழ்ந்த சாராள், ரூத், அபிகாயில், இயேசுவின் தாயான மரியாள் போன்றோரின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுகிறாள். (1 பே. 3:5, 6) நம் காலத்தில் “பயபக்தியுடன் நடக்கிற” முதிர் வயதுள்ள பெண்களின் முன்மாதிரியையும் பின்பற்றுகிறாள். (தீத். 2:3, 4) லட்சியப் பெண்ணாக விளங்கும் ஒரு மனைவி தன் கணவனுக்கு அன்பும் மரியாதையும் காட்டும்போது அவர்களுடைய மணவாழ்வில் என்றும் வசந்தம் வீசும், குடும்பமும் வளம் பெறும். அவளுடைய இல்லம் ஆறுதலும் அரவணைப்பும் கிடைக்கிற புகலிடமாக விளங்கும். தேவ பயமுள்ள ஒரு கணவனுக்கு வலதுகையாய் இருக்கிற மனைவி ஒரு மாணிக்கமே!—நீதி. 12:4.
பிள்ளைகளே, ‘காணப்படாதவற்றின் மீது உங்கள் கண்களைப் பதிய வையுங்கள்’
15. குடும்பம் ‘விழிப்புடனிருக்க’ இளம் பிள்ளைகள் எப்படிப் பெற்றோருடன் ஒத்துழைக்கலாம்?
15 இளம் பிள்ளைகளே, உங்களுடைய குடும்பம் ஆன்மீக ரீதியில் ‘விழிப்புடனிருக்க’ பெற்றோருடன் நீங்கள் எப்படி ஒத்துழைக்கலாம்? யெகோவா உங்களுக்குக் கொடுக்கப்போகும் பரிசைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். பூஞ்சோலை பூமியில் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைச் சித்தரிக்கிற படங்களைச் சின்ன வயதிலிருந்தே உங்கள் பெற்றோர் உங்களுக்குக் காட்டியிருக்கலாம். நீங்கள் வளர்ந்த பிறகு, புதிய உலகில் முடிவில்லா வாழ்வை எப்படியெல்லாம் அனுபவித்து மகிழலாம் என்பதை உங்கள் மனத்திரையில் காண பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். கடவுளுடைய சேவையை இலக்காக வைத்து, அதற்கேற்ப வாழும்போது நீங்கள் ‘விழிப்புடனிருக்க’ முடியும்.
16, 17. வாழ்வுக்கான ஓட்டப் பந்தயத்தில் வெற்றிபெற இளம் பிள்ளைகள் என்ன செய்யலாம்?
16 அப்போஸ்தலன் பவுல் 1 கொரிந்தியர் 9:24-ல் (வாசியுங்கள்.) சொல்வதைக் கவனியுங்கள். வாழ்வுக்கான ஓட்டப் பந்தயத்தில் எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஓடுங்கள். முடிவில்லா வாழ்வு எனும் பரிசைப் பெற உதவும் பாதையைத் தேர்ந்தெடுங்கள். பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டுமென்ற எண்ணத்தால் அநேகர் பரிசின் மீதிருந்து தங்கள் கண்களை விலக்கியிருக்கிறார்கள். அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! சொத்துபத்துகளைச் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தால் உண்மையான சந்தோஷம் கிடைக்காது. பணத்தால் பெற முடிந்ததெல்லாம் நிலையானது அல்ல. ஆகவே, ‘காணப்படாதவற்றின் மீது உங்கள் கண்களைப் பதிய வையுங்கள்.’ ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், ‘காணப்படாதவை என்றென்றும் நிலைத்திருக்கும்.’—2 கொ. 4:18.
17 கடவுளுடைய அரசாங்கம் பொழியும் ஆசீர்வாதங்களும் ‘காணப்படாதவற்றில்’ அடங்கும். அவற்றை அடையும் இலக்கோடு வாழுங்கள். யெகோவாவுடைய சேவையில் முழுமையாய் ஈடுபடும்போதுதான் உண்மையான சந்தோஷம் கிடைக்கும். குறுகியகால இலக்குகளையும் நீண்டகால இலக்குகளையும் அடைய அந்தச் சேவை வாய்ப்பளிக்கிறது.a உங்களால் எட்ட முடிந்த ஆன்மீக இலக்குகளை வைக்கும்போது, முடிவில்லா வாழ்வு எனும் பரிசைப் பெறும் நோக்கத்தோடு கடவுளுக்குச் சேவை செய்வதிலேயே கவனமாய் இருக்க முடியும்.—1 யோ. 2:17.
18, 19. கடவுளோடு தனக்குப் பந்தம் இருக்கிறதா என்பதை ஓர் இளம் பிள்ளை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?
18 இளம் பிள்ளைகளே, வாழ்வுக்கான பாதையில் அடியெடுத்து வைக்க முதலாவது நீங்கள் கடவுளோடு பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்தப் படியை எடுத்துவிட்டீர்களா? உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஆன்மீகக் காரியங்களில் விருப்பத்தோடு ஈடுபடுகிறேனா அல்லது அம்மா அப்பாவுக்காக ஈடுபடுகிறேனா? கடவுளுக்குப் பிடித்த குணங்களை வளர்த்துக்கொள்கிறேனா? தவறாமல் ஜெபம் செய்வது, ஆழ்ந்து படிப்பது, கூட்டங்களிலும் ஊழியத்திலும் கலந்துகொள்வது போன்ற உண்மை வழிபாடு சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதைப் பழக்கமாக்கிக்கொள்ள முயலுகிறேனா? கடவுளோடு பந்தத்தை வளர்த்துக்கொண்டு அவரிடம் நெருங்கி வருகிறேனா?’—யாக். 4:8.
19 மோசேயின் உதாரணத்தை எண்ணிப் பாருங்கள். அந்நிய நாட்டில் வாழ வேண்டியிருந்தபோதிலும், பார்வோனுடைய மகளின் மகன் என அழைக்கப்படுவதை அவர் விரும்பவில்லை; மாறாக யெகோவாவை வழிபடுபவர் என அறியப்படவே விரும்பினார். (எபிரெயர் 11:24-27-ஐ வாசியுங்கள்.) கிறிஸ்தவ இளைஞர்களே, நீங்களும்கூட யெகோவாவை உண்மையோடு சேவிக்க தீர்மானமாய் இருக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது நிஜ சந்தோஷத்தை அடைவீர்கள்; இப்போதே மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்வீர்கள்; ‘உண்மையான வாழ்வைக் கண்டிப்பாக’ அடையும் நம்பிக்கையோடு இருப்பீர்கள்.—1 தீ. 6:19.
20. வாழ்வுக்கான ஓட்டப் பந்தயத்தில் பரிசைப் பெறுபவர் யார்?
20 முற்காலத்தில் நடந்த ஓட்டப் பந்தயத்தில் ஒருவர் மட்டுமே பரிசைப் பெற்றார். வாழ்வுக்கான ஓட்டப் பந்தயம் அப்படிப்பட்டதல்ல. “பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும்” கடவுளுடைய சித்தம். (1 தீ. 2:3, 4) உங்களுக்கு முன்பே நிறையப் பேர் இந்தப் பந்தயத்தில் ஓடி வெற்றி பெற்றிருக்கிறார்கள், உங்களோடு சேர்ந்து இன்னும் நிறையப் பேர் ஓடிக்கொண்டும் இருக்கிறார்கள். (எபி. 12:1, 2) கடைசிவரை ஓடுகிற அனைவருக்கும் பரிசு நிச்சயம். ஆகவே, வெற்றிபெற வேண்டும் என்பதில் குறியாய் இருங்கள்!
21. அடுத்த கட்டுரையில் எதைச் சிந்திப்போம்?
21 ‘யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள்’ நிச்சயம் வரும். (மல். 4:5) எதிர்பாராத நேரத்தில் அந்த நாள் வரும்போது கிறிஸ்தவக் குடும்பங்கள் ஆபத்தில் சிக்கிவிடக் கூடாது. ஆகவே, குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் கடவுள் தங்களுக்குக் கொடுத்துள்ள பொறுப்பை செவ்வனே செய்வது மிக முக்கியம். ஆன்மீக ரீதியில் விழித்திருக்க... கடவுளோடுள்ள பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள... நீங்கள் இன்னும் செய்ய வேண்டியவை யாவை? முழு குடும்பத்தின் ஆன்மீக நலனைப் பாதுகாக்கும் மூன்று விஷயங்களை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
[அடிக்குறிப்பு]
a காவற்கோபுரம் நவம்பர் 15, 2010, பக்கங்கள் 12-16-ஐயும் ஜூலை 15, 2004, பக்கங்கள் 21-23-ஐயும் பாருங்கள்.
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• கிறிஸ்தவக் குடும்பங்கள் ‘விழிப்புடனிருப்பது’ ஏன் முக்கியம்?
• ஒரு கணவன் எப்படி நல்ல மேய்ப்பனைப் பின்பற்றலாம்?
• எடுத்துக்காட்டாய்த் திகழும் ஒரு மனைவி தன் கணவனுக்கு ஒத்தாசையாய் இருக்க என்ன செய்யலாம்?
• குடும்பம் ஆன்மீக ரீதியில் விழிப்புடனிருக்க இளம் பிள்ளைகள் எப்படி உதவலாம்?
[பக்கம் 9-ன் படம்]
தேவ பயமுள்ள ஒரு கணவனுக்கு வலதுகையாய் இருக்கிற மனைவி ஒரு மாணிக்கமே!