உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w17 பிப்ரவரி பக். 31-32
  • “எந்த பாதையும் கஷ்டமானதும் இல்ல, எந்த வழியும் நீளமானதும் இல்ல!”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “எந்த பாதையும் கஷ்டமானதும் இல்ல, எந்த வழியும் நீளமானதும் இல்ல!”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • துணை தலைப்புகள்
  • பயனியர்கள் வழி திறக்கிறார்கள்
  • சவால்களை சமாளித்தார்கள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
w17 பிப்ரவரி பக். 31-32
1933-ல் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், ஜார்ஜ் ரோல்ஸ்டன் மற்றும் ஆர்த்தர் வில்லிஸ், தங்களுடைய காரின் ரேடியேட்டரை நிரப்புகிறார்கள்

பயனியர்களான ஜார்ஜ் ரோல்ஸ்டன் மற்றும் ஆர்த்தர் வில்லிஸ், தங்களுடைய காரின் ரேடியேட்டரை நிரப்புவதற்காக காரை நிறுத்தியிருக்கிறார்கள்.—வடக்குப் பகுதி, 1933

நம் வரலாற்றுச் சுவடுகள்

“எந்த பாதையும் கஷ்டமானதும் இல்ல, எந்த வழியும் நீளமானதும் இல்ல!”

அது மார்ச் 26, 1937! பயணக் களைப்பில் இருந்த இரண்டு பேர், தங்களுடைய தூசி படிந்த டிரக்கை ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிட்னி என்ற நகரத்துக்குள் மெதுவாக ஓட்டிக்கொண்டு போகிறார்கள். ஒரு வருஷத்துக்கு முன்பு அவர்கள் சிட்னியை விட்டு கிளம்பியிருந்தார்கள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொலைதூர இடங்களிலும் கரடுமுரடான பகுதிகளிலும் அவர்கள் இதுவரை 19,300 கி.மீ. (12,000 மைல்) பயணம் செய்திருக்கிறார்கள். அவர்கள் ஆராய்ச்சியாளர்களும் அல்ல, சாதனையாளர்களும் அல்ல, வைராக்கியமான 2 பயனியர்கள்தான் அவர்கள்! ஆஸ்திரேலியாவின் பரந்து விரிந்த ஒதுக்குப்புறமான இடங்களில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும் என்று அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள். அவர்கள்தான் ஆர்த்தர் வில்லிஸ் மற்றும் பில் நியூலேண்ட்ஸ்.

ஆஸ்திரேலியாவில் இருந்த பைபிள் மாணாக்கர்கள்a கொஞ்சம் பேர், 1920-களின் கடைசி வரையில், பெரும்பாலும் கடற்கரையை ஒட்டியுள்ள நகரங்களிலும் ஊர்களிலும் பிரசங்கித்திருந்தார்கள். அதோடு, அவற்றைச் சுற்றியுள்ள இடங்களிலும் பிரசங்கித்திருந்தார்கள். ஆஸ்திரேலியாவின் உட்பகுதியில், கொஞ்சம் மக்களே குடியிருந்தார்கள். இந்த வறண்ட ஒதுக்குப்புறமான இடத்தின் நிலப்பரப்பு, அமெரிக்காவின் பாதி நிலப்பரப்புக்கும் அதிகமாக இருந்தது. இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள், ஆஸ்திரேலியாவின் தொலைதூர இடங்கள் உட்பட “பூமியின் எல்லைகள் வரையிலும்” அவரைப் பற்றி சாட்சி கொடுக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. இது அந்தச் சகோதரர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. (அப். 1:8) ஆனால், இந்தப் பிரமாண்டமான வேலையை அவர்களால் எப்படி செய்துமுடிக்க முடியும்? தங்களுடைய முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார் என்ற உறுதியான விசுவாசத்தோடு, தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.

பயனியர்கள் வழி திறக்கிறார்கள்

ஆஸ்திரேலியாவுக்குள் இருந்த எல்லா பகுதிகளிலும் பிரசங்கிக்க வேண்டும் என்பதற்காக, குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் இருந்த சபைகள் முடிவு செய்தன. அதற்காக, 1929-ல், வசதிகள் நிறைந்த வேன்கள் தயார் செய்யப்பட்டன. கடினமான சூழ்நிலைகளை சமாளிக்கத் தெரிந்த, வேனில் ஏற்படும் பழுதைச் சரிசெய்யத் தெரிந்த பயனியர்கள், அந்த வேன்களை ஓட்டினார்கள். அதுவரை சாட்சி கொடுக்கப்படாத நிறைய இடங்களுக்கு இந்தப் பயனியர்கள் போனார்கள்.

ஒரு வாகனத்தை வாங்கும் அளவுக்கு வசதி இல்லாத பயனியர்கள், ஆஸ்திரேலியாவின் அந்த ஒதுக்குப்புறமான இடங்களுக்கு சைக்கிளில் போனார்கள். உதாரணத்துக்கு, 1932-ல், 23 வயதான பென்னட் ப்ரிக்கெல் என்பவர், ஊழியம் செய்வதற்காக, குயின்ஸ்லாந்தில் இருக்கும் ராக்ஹாம்ப்டன் என்ற இடத்திலிருந்து புறப்பட்டு அந்த மாநிலத்தின் வடக்கிலிருந்த ஒதுக்குப்புறமான பகுதிகள் வழியாக 5 மாதங்கள் பயணம் செய்தார். போர், உடை, உணவு, மற்றும் ஏராளமான புத்தகங்கள் என எல்லாவற்றையும் பாரம் சுமக்கிற அவருடைய சைக்கிளில் எடுத்துக்கொண்டு போனார். சைக்கிளிலிருந்த டயர்கள் தேய்ந்துபோனபோதுகூட, யெகோவா வழிநடத்துவார் என்ற நம்பிக்கையோடு அவர் தொடர்ந்து பயணம் செய்தார். ஆட்கள் தாகம் தாங்க முடியாமல் முன்பு இறந்துபோயிருந்த சில பகுதிகள் வழியாகவும், அதே சைக்கிளில், கடைசியாக 320 கி.மீ. (200 மைல்) பயணம் செய்தார். பிறகு, அடுத்த 30 வருஷங்களுக்குள் ஆஸ்திரேலியா முழுவதும் சைக்கிளிலும், பைக்கிலும், காரிலும் பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் சகோதரர் ப்ரிக்கெல் பயணம் செய்தார். ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்கள் (அபோரிஜின்ஸ்) மத்தியில் பிரசங்க வேலையை அவர் ஆரம்பித்து வைத்தார், புதிய சபைகள் உருவாக உதவினார். அந்த ஒதுக்குப்புறமான இடங்களில் இவர் பிரபலமானவராக இருந்தார். அந்த மக்களிடம் மதிப்பு மரியாதையைச் சம்பாதித்திருந்தார்.

சவால்களை சமாளித்தார்கள்

உலகத்திலேயே ஜனத்தொகை குறைவாக இருக்கும் இடங்களில் ஒன்று ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. அதுவும், ஆஸ்திரேலியாவின் ஒதுக்குப்புறமான இடங்களில் ஜனத்தொகை இன்னும் குறைவாக இருக்கும். அந்த இடங்களில் வாழ்கிற மக்களிடம் பிரசங்கிக்க வேண்டும் என்பதில் யெகோவாவின் சாட்சிகள் தீர்மானமாக இருந்தார்கள்.

ஸ்டுவர்ட் கெல்டி மற்றும் வில்லியம் டோரின்டென் என்ற பயனியர்களும் அப்படித் தீர்மானமாக இருந்தார்கள், அதைச் செயலிலும் காட்டினார்கள். 1933-ல், ஆஸ்திரேலியாவின் நடுவில் இருக்கிற ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் என்ற ஊரில் பிரசங்கிப்பதற்காக, மணல் குன்றுகள் நிறைந்த சிம்ப்சன் என்ற பெரிய பாலைவனத்தை அவர்கள் கடந்தார்கள். அவர்களுடைய காரில் திடீரென்று பழுது ஏற்பட்டதால், அதை அப்படியே விட்டுவிட வேண்டியிருந்தது. இருந்தாலும், மரத்தாலான கால் பொருத்தப்பட்டிருந்த சகோதரர் கெல்டி, ஒட்டகத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து பயணம் செய்தார். அவர்கள் அப்படிக் கடினமாக முயற்சி செய்து ஊழியம் செய்தது நல்ல பலன்களைத் தந்தது. ஒதுக்குப்புறத்தில் இருந்த வில்லியம் க்ரீக் என்ற ரயில் நிறுத்தத்தில் ஹோட்டல் நடத்திக்கொண்டிருந்த சார்ல்ஸ் பென்ஹார்ட் என்பவரை அவர்கள் சந்தித்தார்கள். பிற்பாடு, அவர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார். அவருடைய ஹோட்டலை விற்றுவிட்டு, ஆஸ்திரேலியாவின் மிகவும் வறண்ட பகுதிகளிலும், ஒதுக்குப்புறமான இடங்களிலும் 15 வருஷங்கள் தனியாக பயனியர் ஊழியம் செய்தார்.

1936-ல் ஆஸ்திரேலியாவின் ஒதுக்குப்புறமான இடங்களுக்குப் போய் பிரசங்கிக்க, பயணத்துக்குத் தேவையானவற்றை ஆர்த்தர் வில்லிஸ் எடுத்து வைக்கிறார்

ஆஸ்திரேலியாவின் ஒதுக்குப்புறமான இடங்களுக்குப் போய் பிரசங்கிக்க, பயணத்துக்குத் தேவையானவற்றை சகோதரர் ஆர்த்தர் வில்லிஸ் எடுத்து வைக்கிறார். —பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா, 1936

அப்போதிருந்த பயனியர்கள் நிறைய சவால்களை எதிர்ப்பட்டார்கள். அவற்றையெல்லாம் சமாளிக்க அவர்களுக்குத் தைரியமும் விடாமுயற்சியும் தேவைப்பட்டது. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சகோதரர் ஆர்த்தர் வில்லிஸ் மற்றும் பில் நியூலேண்ட்ஸ், ஒரு சமயம், 32 கி.மீ. (20 மைல்) பயணம் செய்வதற்கு 2 வாரங்கள் கஷ்டப்பட வேண்டியிருந்தது. ஏனென்றால், கன மழையால் பாலைவனம் முழுவதும் பயங்கர சகதியாக இருந்தது. சில சமயங்களில், கடுமையான வெயிலில் பிரமாண்டமான மணல் குன்றுகள் மேல் வாகனத்தை வியர்க்க விறுவிறுக்க தள்ளிக்கொண்டு, பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்குகள் மற்றும் மணல் நிறைந்த நதிப்படுகைகள் வழியாகப் பயணம் செய்தார்கள். அடிக்கடி அவர்களுடைய வாகனம் பழுதடைந்துவிடும். அப்போது, பல நாட்கள் நடந்தோ சைக்கிளிலோ பக்கத்திலிருக்கும் ஊருக்குப் போவார்கள். பிறகு, வாகனத்தில் மாற்றப்பட வேண்டிய பொருள்கள் வரும்வரை வாரக் கணக்கில் அங்கேயே காத்திருப்பார்கள். இவ்வளவு கஷ்டங்கள் மத்தியிலும் அவர்கள் நம்பிக்கையான மனநிலையோடு இருந்தார்கள். ஒருமுறை த கோல்டன் ஏஜ் என்ற பத்திரிகையில் வந்த ஒரு வாக்கியத்தை சுருக்கி சகோதரர் ஆர்த்தர் வில்லிஸ் இப்படிச் சொன்னார்: “அவரோட சாட்சிகளுக்கு எந்த பாதையும் கஷ்டமானதும் இல்ல, எந்த வழியும் நீளமானதும் இல்ல!”

சார்ல்ஸ் ஹாரிஸ் என்பவர் ஆஸ்திரேலியாவின் ஒதுக்குப்புறமான இடங்களில் ரொம்ப வருஷங்களாக பயனியர் ஊழியம் செய்தவர். அங்கே தனியாக இருந்ததும், கஷ்டங்களை எதிர்ப்பட்டதும், யெகோவாவோடு அவருக்கு இருந்த பந்தத்தை இன்னும் பலப்படுத்தியிருப்பதாக அவர் சொன்னார். “முடிஞ்சளவு கொஞ்சம் பொருளை வைச்சே வாழ கத்துக்கிட்டா, வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும். சில சமயங்கள்ல, நட்சத்திரங்களுக்கு கீழ திறந்த வெளியில தூங்குறதுக்கு இயேசு தயாரா இருந்தார்; அப்படீனா, நம்ம நியமிப்புகள செய்றப்போ, நமக்கும் அதே மாதிரியான சூழ்நிலை வந்தா நாமளும் அப்படிச் செய்றதுக்கு தயாரா இருக்கணும்” என்று அவர் சொன்னார். அதைத்தான் நிறைய பயனியர்கள் செய்தார்கள். அவர்களுடைய விடாமுயற்சியால் ஆஸ்திரேலியாவின் மூலைமுடுக்கெல்லாம் நல்ல செய்தி பரவியிருக்கிறது. அதனால், ஏராளமானவர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்காக தங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். அந்தப் பயனியர்களுக்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!

a பைபிள் மாணாக்கர்கள், 1931-லிருந்து யெகோவாவின் சாட்சிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.—ஏசா. 43:10.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்