1989 “தேவ பக்தி” மாவட்ட மாநாட்டிற்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்!
1 இன்னும் ஒருசில மாதங்களில், ஓர் உலகளாவிய, ஆவிக்குரிய வகையில் கட்டியெழுப்பும் நிகழ்ச்சிநிரல் ஆரம்பிக்கும்! மேலும் நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்! இந்தியாவில், “தேவ பக்தி” மாவட்ட மாநாடுகள் அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கும். அவை, ஜனவரி 1990 வரையில் நடத்த அட்டவணையிடப்பட்டிருக்கின்றன. எப்போதும் இருந்ததைவிட பெரிய எண்ணிக்கையாக மொத்தம் 23 மாநாடுகள் நடைபெறும். யெகோவா தாமே இந்த முன்னேற்பாட்டை அவருடைய அமைப்பின் மூலமாக செய்திருக்கிறார், ஆகவே ஏமாற்றத்தை எதிர்ப்படமாட்டோம் என்ற முழு நம்பிக்கையுடன் நாம் ஆஜராயிருக்கலாம்.—சங். 61:4; ஏசா. 54:13.
2 இந்த வருடத்தில், மாநாடுகள் தேவ பக்திக்கான தேவையை அழுத்திக் காட்டுவதோடு, இக்குணத்தைப் பயிற்சி செய்வதில் முன்னேற்றத்தைச் செய்ய நம்மைத் தூண்டும். நம்மைச் சுற்றியுள்ள தேவ பக்தியற்ற உலகை முன்னிட்டு இது விசேஷமாக முக்கியமாயிருக்கிறது.
3 முன்னேற்றமான பயிற்சி மற்றும் சிட்சையின் மூலமாக, யெகோவா நம்மை மரியாதை காட்டாத இந்தச் சந்ததியின் மத்தியில் இருக்கையில் ஓர் இணையற்ற ஜனமாக குறிப்பிடத்தக்க அமைப்பில் ஒன்றுபடுத்தியிருக்கிறார். நமது தேவ பக்தி உண்மையானது. கடைசி நாட்களில் மனுஷர் தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பலனை மறுதலிப்பவர்களாயிருப்பார்கள் என்று பவுல் கூறிய மாய்மாலத்திலிருந்து விடுபட்டதாகவும் இருக்கிறது. (2 தீமோ. 3:1, 5) நமது ஒத்துழைப்பின் ஆவி எப்போதுமே தேவ பக்தியைப் பிரதிபலிக்கட்டும். அந்த ஆவியின் வல்லமையை ஆதரித்து முன்னேற்றுபவர்களாக நாம் எப்போதும் நிரூபிப்போமாக.—1 கொரி. 14:40.
4 நேரத்துடன் வந்து சேருங்கள்: யெகோவாவின் சாட்சிகள் அவர்களது நம்பத்தக்க தன்மைக்கும், காலந்தவறாமைக்கும் நன்கு அறியப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். (லூக்கா 16:10) ஒரு மாநாட்டில் கலந்துகொள்கையில் இது முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நேரத்துடன் நாம் வந்துசேர்ந்துவிட வேண்டும், மேலும் நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன்பே அமர்ந்திருக்க வேண்டும். இது, நம்முடைய கவனத்தைத் தேவைப்படுத்தும் காரியங்களுக்காக தேவையான நேரத்தை அனுமதிப்பதைத் தேவைப்படுத்துகிறது. உதாரணமாக, நம் வாகனத்தை நிறுத்துவது, நம் குடும்பத்திற்கு ஏற்ற இருக்கைகளைக் கண்டுபிடிப்பது, உணவுக்கான மாநாட்டு சீட்டைப் பெறுவது போன்றவை.
5 மாநாட்டு சமயம், மகிழ்ச்சியான கூட்டுறவை அனுபவிப்பதற்கு ஒரு நேர்த்தியான சந்தர்ப்பத்தை அளிக்கிறது. ஆனால், சிநேகிதர்களை இரவு தாமதமாக சந்திப்பது, அடுத்த நாள் காலை சரியான நேரத்திற்கு வந்துசேர நமது முயற்சிகளைத் தடை செய்யக்கூடும். காலையில் தாமதமாக ஆரம்பிப்பதனால், பரபரப்பையும் மன அமைதியின்மையையும் உண்டுபண்ணக்கூடும். இவ்விதமாக காலையில் அதிக அவசரமாக காரியங்களைச் செய்ய வேண்டியதாகும். இதைத் தடுக்க, சில குடும்பங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு நியாயமான நேரத்தைக் குறிப்பது பயனுள்ளதாகக் கண்டிருக்கின்றன. ஓர் அட்டவணைக்கு இசையத் திட்டமாய் இருப்பதன் மூலம், அவர்கள் ஒரு நல்ல இரவு தூக்கத்தை பெறவும், அடுத்த நாள் தாமதமில்லாமல் அந்நாளை துவங்க தயாராக இருக்கவும் அதிக சாத்தியமிருக்கிறது. இது நிகழ்ச்சிநிரல் நடந்துகொண்டிருக்கையில் போய்ச் சேருவதைத் தவிர்க்கிறது. அவ்விதம் செல்வது ஏற்கெனவே அமர்ந்திருப்பவர்களின் கவனத்தைச் சிதறச் செய்து, தொந்தரவாகவும் இருக்கக்கூடும். இதில் நம்முடைய முன்யோசனை யெகோவாவுக்கு நமக்கிருக்கும் பயபக்தியையும் மரியாதையையும் பிரதிபலிப்பதாய் இருக்கக்கூடும். மேலும் அது உண்மையான தேவ பக்தியின் நிரூபணத்தைக் கொடுக்கும்.
6 மூன்று-தின மாநாடு: “தேவ பக்தி” மாவட்ட மாநாடு மூன்று நாட்கள் நீடிப்பதாயிருக்கும். நம்முடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானதாக இருக்கும் கவனமாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் ஒவ்வொரு கூட்டத்திலும் அளிக்கப்படும். தேவ பக்தியோடு தொடர்புடைய பல்வேறு பொருட்கள் பேச்சுகளிலும் நடிப்புகளிலும் ஒரு தற்காலத்திய நாடகத்திலும் விளக்கிச் சொல்லப்படும்.
7 ஒரு கூட்டத்தையுங்கூட தவறவிடக்கூடாது என்பது உங்களுடைய தீர்மானமாக இருக்கட்டும். இது தனிப்பட்ட தியாகங்களையும், உங்கள் அட்டவணையில் சரிமாற்றங்களைச் செய்வதையும் தேவைப்படுத்தலாம். சிலர் தங்களுடைய எஜமானர்களுடன் விசேஷ ஏற்பாடுகளைச் செய்வது அவசியமாக காண்கின்றனர். பலர், எல்லாக் கூட்டங்களிலும் ஆஜராவதற்காக வருவாய் சம்பந்தப்பட்ட நன்மைகளையும்கூட விட்டுக்கொடுக்கின்றனர். இக்காரியத்தை உள்ளார்ந்த ஜெபத்தின் பொருளாக்கி, மனமார்ந்த முயற்சி எடுப்பவர்களை யெகோவா நிச்சயமாக ஆசீர்வதிப்பார்.—லூக்கா 13:24.
8 கருத்தூன்றிக் கவனியுங்கள்: மாநாட்டு நிகழ்ச்சிநிரலின்போது, மேடையிலிருந்து கலந்தாலோசிக்கப்படும் பொருளோடு தொடர்பில்லாத ஓசைகளாலும் காட்சிகளாலும் கவனச் சிதைவுக்குள்ளாகாதீர்கள். நாம் விரும்பும் எண்ணங்களின் பேரில் நம் கவனத்தைக் “கருத்தூன்றி” ஒருமுகப்படுத்தும் திறமையை நமக்கு அளித்திருக்கும் யெகோவாவுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நம் தேவ பக்தி ஏசாயா 55:2-லுள்ள “எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்” என்ற யெகோவாவின் வேண்டுகோளோடு ஒத்திசைந்த தெரிவைச் செய்ய நம்மைத் தூண்ட வேண்டும்.
9 ஞாயிறு மத்திய வேளையின்போது கொடுக்கப்படும் சொற்பொழிவு பொது ஜனங்களுக்கொன்று விளம்பரப்படுத்தப்படுகிறது என்பது உண்மையானாலும், இம் மாநாட்டில் அளிக்கப்பட இருக்கும் பெரும்பாலான விஷயங்கள் யெகோவாவுக்கு ஏற்கெனவே ஒப்புக்கொடுத்திருப்பவர்களுக்கென்று விசேஷமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. காலத்துக்கொத்த தேவைகளை நம் கவனத்திற்குக் கொண்டுவந்து, யெகோவாவின் அமைப்பு முன்னேறும் வேகத்தோடு நாமும் அத்துடன் சேர்ந்துசெல்ல மாநாடு நமக்கு உதவும். கவனமின்றி இருத்தல் நாம் பின்தங்கிவிடுவதில் விளைவடையும். நாம் நிறைவான ஆவிக்குரிய உணவிலிருந்து முழு பலனையும் பெற்றுக்கொள்ள நிகழ்ச்சிநிரலில் அமிழ்ந்துவிட வேண்டும்.—1 பேதுரு 2:2.
10 கடந்த ஆண்டுகளாக, மாநாட்டுப் பிரதிநிதிகளில் பலர் நிகழ்ச்சிநிரலின்போது குறிப்பெடுக்கும் பயனுள்ள பழக்கத்தை அபிவிருத்தி செய்திருக்கின்றனர். குறிப்பெடுக்கத் தேவைப்படும் பொருத்தமான ஏதுக்கள், பைபிள்களோடும் மற்றும் பாட்டுப் புத்தகங்களோடும் சேர்த்துவைத்து, இவை மாநாட்டுக்கு எப்போதும் கொண்டுவரப்படும் பொருட்களாக இருக்க வேண்டும். சிலர் குறிப்பெடுப்பதில் எந்த மெய்யான நன்மையும் இல்லை என்று எண்ணி, அதை ஒரு நல்ல பழக்கமாக ஏற்க விரும்பாதவர்களாய் இருந்திருக்கலாம். நீங்கள் அவ்வித மனச்சாய்வு உடையவர்களாயிருந்தால், “தேவ பக்தி” மாநாட்டின்போது குறிப்பெடுக்க நீங்கள் ஏன் முயற்சி செய்யக்கூடாது? மற்ற அநேகருக்கு உண்மையாய் இருப்பதுபோல், உங்கள் கவனத்தை சொல்லப்படும் காரியங்களின் மீது உறுதிப்படுத்துவதற்கும், பகற்கனவிலிருந்து அல்லது உங்கள் மனதை அலைய விடுவதிலிருந்து உங்களைக் காக்கவும் அது ஒரு நல்ல வழியாக நீங்கள் காணலாம்.
11 குறிப்புகள் விரிவானதாக அல்லது விளக்கமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கமாக ஓரிரு சொற்றொடர்கள் ஒரு முக்கியக் குறிப்பிற்குப் போதுமானதாயிருக்கும். மூப்பர்கள் ஊழியக் கூட்டத்தில் ஓர் அர்த்தமுள்ள விமர்சனத்தை நடத்துவதற்கு, தெளிவாகவும் சீராகவும் அமைத்துள்ள குறிப்புகள் பயனுள்ளதாகக் காண்கின்றனர். அவர்கள் அதன்பிறகு தங்களுடைய கற்பிக்கும் மற்றும் மேய்க்கும் வேலையிலும் மாநாட்டில் கொடுக்கப்பட்ட குறிப்புகள் பலவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
12 நாம் அனைவருமே எப்படி செவிகொடுக்கிறோம் என்பதற்குக் கவனஞ் செலுத்த வேண்டும், ஏனெனில் அது நம் சந்தோஷத்தையும் நம் ஜீவனையுமே குறிப்பதாய் இருக்கிறது. “தேவ பக்தி” மாவட்ட மாநாட்டிற்கு ஆஜராகும்போது, நாம் நீதிமொழிகள் 8:33-35-லுள்ள யெகோவாவின் அறிவுறுத்தலை மனதில் கொண்டிருக்க வேண்டும்: “நீங்கள் புத்தியைக் கேட்டு ஞானமடையுங்கள்; அதைவிட்டு விலகாதிருங்கள். என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் சந்தோஷமுள்ளவன். என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான்.”
13 பாட்டும் ஜெபமும்: நம் தேவ பக்தியின் மிக அழகான அலங்காரங்களுள் ஒன்று யெகோவா தேவனுக்குத் துதியுண்டாகும்படி பாடுவதாகும். பாட்டுபாடுதல் முதற் நூற்றாண்டில் மெய்க் கிறிஸ்தவத்தின் ஓர் ஒழுங்கான மற்றும் தனிச் சிறப்பான அம்சமாக இருந்ததாகத் தெரிகிறது. (1 கொரி. 14:15) உருக்கமான ஜெபங்களில் தம்முடைய ஜனங்கள் தம்மை அணுகுவதில் யெகோவா பிரியமும் கொள்கிறார். ஆயிரக்கணக்கான நம் சகோதர சகோதரிகளோடு பாட்டின் மூலமும், ஜெபத்தின் மூலமும் யெகோவாவைத் துதிப்பதற்கு ஓர் இணையற்ற சந்தர்ப்பத்தை மாவட்ட மாநாடுகள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன. அப்படியிருந்தபோதிலும், சிலர் நம் வணக்கத்தின் இந்த மிக முக்கிய பாகங்களுக்கு மதிப்புக் குறைவைக் காட்டியிருக்கின்றனர். எப்படி? ஆரம்பப் பாட்டும் ஜெபமும் நடந்துகொண்டிருக்கையிலோ, அல்லது அதன் பிறகோ காரணமில்லாமல் மாநாட்டிற்கு வந்து சேர்வதன் மூலம். நிகழ்ச்சிநிரலின் முடிவின்போது சிலர் பாட்டின்போது அல்லது ஜெபத்திற்கு முன்பு தங்கள் இருக்கைகளை விட்டுச் செல்கின்றனர். ஏதோ ஒரு சமயத்தில் அவ்வாறு செய்வதற்குக் காரணங்கள் இருக்கலாம். இருந்தாலும், சிலர் பாட்டுப் பாடுவதிலும், ஜெபத்தில் கலந்துகொள்வதிலும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிலாக்கியங்களை, வெறுமென தங்கள் கார்களை விரைவில் எடுப்பதற்கென்றே நெகிழவிடலாம். மற்றவர்கள் சாப்பாட்டுக்காக அல்லது புதிதான புத்தக வெளியீடுகளைப் பெற வரிசையில் முதலில் நிற்க தங்கள் இருக்கைகளை விட்டுச் சென்றிருக்கின்றனர். தனிப்பட்ட வசதியை நாடுவதில், உலகப் பிரகாரமான ‘நான் முதல்’ என்ற மனநிலையை அல்லது தேவ பக்தியற்ற பண்புகளாகிய பேராசை மற்றும் தன்னலம் ஆகிய இவை நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடைசெய்ய அனுமதிக்காதிருக்க கவனமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். தேவ பக்தியுடைய ஜனங்களாக, யெகோவாவைத் துதிப்பது மற்றும் அவரிடம் ஜெபிப்பது ஆகிய நம் வணக்கத்தின் மேன்மையான அம்சங்களுக்குப் பொருத்தமான மரியாதையை காட்ட நாம் பிரயாசப்பட வேண்டும்.
14 நம் கிறிஸ்தவ நடைப்பாணிகள்: பல வருடங்களாக, மாநாடுகளில் நம் கிறிஸ்தவ நடைப்பாணிகளும் தோற்றமும் யெகோவாவின் சாட்சிகளாக ஒரு நல்ல புகழை நமக்குச் சம்பாதித்திருக்கின்றன. இது ஏனெனில், நாம் மாநாடுகளை, சமுதாய இன்பப் பயணமாக அல்ல, ஆவிக்குரிய பண்டிகையாக சரியாகவே நோக்குவதால் ஆகும். அதற்கிசைய, நாம் ஓர் ஆவிக்குரிய ஒழுங்கமைப்பைக் கொண்ட மனதை வெளிக்காட்டவும். நம்மை ஊழியர்களாக நடத்திக்கொள்ளவும் முயற்சி செய்கிறோம்.
15 கடந்த கோடையில், ஒரு மாநாட்டு பட்டணத்தில், சாட்சிகளாயிருந்த ஒரு குடும்பம் உணவு விடுதியில் சாப்பிடும்போது அனுபவித்த இந்த நல்ல அனுபவத்தைக் கவனியுங்கள். அந்தச் சகோதரர் எழுதினார்: “ஓர் ஆளும் அவர் மனைவியும் எங்களுக்கு அடுத்த மேஜையில் இருந்தனர். அவர்கள் தங்களுடைய சாப்பாட்டை முடித்த பிறகு அந்த ஆள் எங்கள் மேஜையை நெருங்கி, பேச அனுமதி கேட்டுக்கொண்டு, எங்களுடைய சுத்தமான ஒழுங்கான தோற்றத்தைக் குறித்து போற்றுதல் தெரிவிக்க விரும்புவதாகக் கூறினார். நாங்கள் அந்த வாரக் கடைசியில் நடந்துகொண்டிருந்த உவாட்ச்டவர் மாநாட்டிற்கு வந்திருந்தோம் என்று என் மனைவி அவரிடம் கூறினார். அப்படிதான் இருக்கும் என்று தான் நிச்சயமாயிருந்ததாகக் கூறினார். அவர் நம்முடைய சகோதரர் சகோதரிகளில் அநேகரை அவரும் அவருடைய மனைவியும் தங்கியிருந்த விடுதியைச் சுற்றிலும் கண்டிருந்தார், அனைவருமே முன்மாதிரியான நடத்தையையும் உடைபாணியையும் கொண்டிருந்தனர். அவர் செல்லும் சர்ச்சில், இளைஞர்கள் நம் இளைஞர்களைப்போல ஆடை அணிகிறதில்லை, நம் இளைஞர்களைப்போல் நடப்பதில்லை என்று கூறினார். இது, நம்முடைய பிள்ளைகள் எல்லாச் சமயங்களிலும் ஒரு நல்ல கிறிஸ்தவ மாதிரியாக இருக்கும் வகையில் சிறுவயதிலிருந்தே அவர்களை வளர்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் மதித்துணரும்படி செய்தது. ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கும்படி யெகோவாவின் அமைப்பால் கொடுக்கப்படும் பலமான ஆலோசனையும் வழிநடத்துதலுமே இவற்றுக்குக் காரணம் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.”
16 வருந்தத்தக்க வகையில், மாநாடுகளுக்கு வருகை தரும் சிலர் முறையற்று தங்கள் மனநிலை, உடை, பேச்சு மற்றும் நடத்தையில் ஏனோதானோ என்றிருப்பவர்களாய் ஆகிவிட்டிருக்கின்றனர். அத்தகைய காரியம் உள்ளூர் சபையிலோ அல்லது ஒரு மாநாட்டின் சமயத்திலோ தெளிவாகத் தெரிந்தால், ஆவிக்குரிய தகுதியுடையவர்கள், இப்படிப்பட்டவர்கள் தங்கள் மனநிலையில் சரிமாற்றம் செய்துகொள்ள உதவி செய்யும் எண்ணத்துடன் அன்பான ஆலோசனையைக் கொடுக்க வேண்டும். (கலா. 6:1; எபே. 4:11, 12) நம் தேவ பக்தியானது, எல்லாக் காலங்களிலும் நடத்தையின் உயர்ந்த தராதரத்தைக் காத்துக் கொள்ளவும் நல்ல பெயரை நிலைநிறுத்துவதில் கடினமாக உழைப்பதற்கும் நம்மை அசைவிக்க வேண்டும்.
17 நியாயமான வாடகைக்கு நல்ல தங்கும் விடுதிகள் நமக்குக் கிடைப்பதனால், நாம் அதற்குப் போற்றுதலைக் காட்டி, தங்கும் விடுதிப் பணியாளரிடம் கரிசனையுடன் நடந்துகொள்ள வேண்டும். அடக்கமான நடத்தையுடனும் அதிகம் வற்புறுத்திக் கேட்காதவர்களாயும் இருக்கவேண்டும். மாநாட்டின்போது தங்கும் விடுதிகளில் சரியான நடத்தையைக் குறித்து அதிக வழிநடத்துதல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பலர் சாதகமான விதத்தில் பிரதிபலித்திருக்கின்றனர். மேலும் தங்கும் விடுதிப் பணியாளர்களுடன் முழுமையாக ஒத்துழைக்க மெய்யார்வத்துடன் உழைக்கின்றனர். அத்தகைய ஒத்துழைப்பு இருந்தபோதிலும், சில இடங்களில் சாட்சிகளைப் பற்றி ஆட்களுக்கு அவ்வளவு நல்ல எண்ணம் இல்லை என்பது கவனிக்கப்பட்டிருக்கிறது. ஏன்? பின்வரும் தகவல்களில் சில சந்தேகமின்றி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கும். ஆனால் சிலரால் உண்டாக்கப்பட்ட பிரச்னையை நோக்குகையில், இக்குறிப்புகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவது தேவையாக இருக்கிறது.
18 ஆங்கில விழித்தெழு! ஜூன் 22, 1986 தேதியிட்ட பத்திரிகையில் பக்கங்கள் 24-7-லுள்ள கட்டுரைகள் “சிறு அன்பளிப்பு நன்கொடை கொடுப்பதா, வேண்டாமா” என்பதும் “சிறு அன்பளிப்பு நன்கொடையைப் பற்றிய சிறு குறிப்பு” என்பதும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. தயவுசெய்து இக்கட்டுரைகளை மறுபடியும் வாசியுங்கள். அவை, வெவ்வேறு நாடுகளின் வழக்கத்திற்கேற்ப யார் அன்பளிப்பு நன்கொடைகளை எதிர்பார்ப்பர் மற்றும் எவ்வளவு எதிர்பார்ப்பார்கள் என்பதைப் பற்றி திட்டவட்டமாக வரையறுக்கின்றன. பக்கம் 24-ல் ஐக்கிய மாகாணங்களில், “சிறு அன்பளிப்பு நன்கொடை கொடுப்பது, கூடுதலான சேவைக்கு ஒரு நன்றி தெரிவித்தலைக் காட்டிலும் அதிகத்தைக் குறிக்கிறது. ஓர் ஆளின் வருவாயின் பெரும்பகுதி அதுவாகவே இருக்கிறது” என்பதாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. மேலும், “உணவு விடுதி மேஜைப் பணியாள் மட்டுமல்லாமல், அறைக்குத் தேவையான பொருள் விநியோகம் செய்பவர், அறைகளை சுத்தம் செய்பவர், சாமான்கள் வைக்கும் இடம், கழுவறை இவற்றை சுத்தம் செய்பவர் ஆகிய இவர்களும் தங்கள் வாழ்க்கைக்காக சிறு அன்பளிப்பு நன்கொடயைச் சார்ந்திருக்கின்றனர் என்பதை அந்தக் கட்டுரை காட்டுகிறது. இந்தியாவிலும் தங்கும் விடுதி வேலையாட்கள் அன்பளிப்பு நன்கொடையை எதிர்பார்க்கின்றனர். இவ்வுண்மைகளை புறக்கணிப்பது, தங்கும் விடுதிப் பணியாளர்களின் பங்கில் சிநேகப்பான்மையற்ற பிரதிபலிப்பை அறுவடை செய்திருக்கிறது. சில சந்தர்ப்பங்களில், அதிருப்தியுள்ள நபர்கள், மாநாட்டுப் பிரதிநிதிகள் திருடியதாக அல்லது தொலைதூர சந்திப்புகள் செய்ய தொலைபேசியை உபயோகித்துவிட்டு அதற்குரிய கட்டணம் கட்ட மறுத்ததாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
19 கூடுதலாக, மேலே கூறப்பட்ட விழித்தெழு! கட்டுரைகள், “மாநாட்டிற்கு வருகை தரும்போது, நீங்கள் தனிப்பட்டவர்களாக என்ன செய்கிறீர்களோ அது முழு தொகுதியின் பேரிலும் பிரதிபலிக்கிறது. ஜனங்கள் உங்கள் நடத்தைக்கு ஏற்றவாறு தொகுதி முழுவதையும் நியாயந்தீர்ப்பர்” என்று கூறியது. ஆகவே சிறு அன்பளிப்பு நன்கொடையைப் பற்றிய உங்கள் சொந்த நோக்குநிலை எதுவானாலும், நீங்கள் யெகோவாவின் சாட்சிகளின் மாநாட்டின் பிரதிநிதியாக ஒரு பட்டணத்திற்குச் செல்லுகையில், வெகு சிறிய நன்கொடை அளிப்பவர்களாய் அல்லது நன்கொடை எதுவுமே அளிக்காதவர்களாயிருந்தால், மற்றவர்கள் யெகோவாவின் சாட்சிகள் கஞ்சத்தனமானவர்கள் என்று அல்லது செய்யப்பட்ட சேவைகளுக்கு ஊதியமளிக்க மனமில்லாதவர்கள் என்று முடிவு செய்யலாம். இவ்விதமாக அன்பளிப்பு நன்கொடை அளிக்கும் உள்ளூர் பழக்கங்களுக்கு இசைய செய்வது, “நற்செய்தி”யின் சார்பாக நம்மால் கூடியவரை எல்லாரோடும் நாம் சமாதானமாய் நடந்துகொள்வதற்கு அதிக துணைப்புரியும்,
20 பெரும்பாலான சகோதரர்கள் யெகோவாவுக்குக் கனத்தைக் கொண்டுவந்த போதிலும், மாநாட்டுக்கு வருகைதரும் சில குடும்பங்கள் குறை கூறுவதற்கான காரணங்களைக் கொடுத்திருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். உதராணமாக, ஓர் அறை, குழந்தைகள் உட்பட நான்கு அல்லது ஐந்து நபருக்கு மேற்படாத கொள்ளளவுக்குக் கணிக்கப்பட்டு, வாடகைக்கு அமர்ந்த பிறகு, சிலர் பத்து நபர்கள்வரை உள்ளே கொண்டு வந்திருக்கின்றனர், இது நேர்மையற்றதாகும். அவர்களுக்கு இடவசதி செய்வதற்காக, கட்டிலின் மீதுள்ள விரிப்புக்களை எடுத்து தரையில் போட்டு அந்த விரிப்பில் சிலர் தூங்கும்படி செய்து, மற்றவர்கள் நேரடியாக கட்டிலில் படுத்திருக்கின்றனர். பிறகு அதிகப்படியான போர்வைகள் நிர்வாகத்தினரிடமிருந்து கேட்டிருக்கிறார்கள்.
21 கவனஞ் செலுத்தப்பட வேண்டிய மற்றொரு விஷயம் யாதெனில், சிலர் காலிசெய்கையில் தங்கள் அறைகளை அலங்கோலமான நிலையில் விட்டு சென்றிருக்கின்றனர். தங்கள் அறைகளில் உண்ணும்படி உணவு பொருட்களை வாங்கியிருக்கும் சிலர் கவலையீனமாக இருந்திருக்கின்றனர். உணவுத் துணிக்கைகள் இருக்கைகளிலும், ஐமுக்காளங்கள் மேலும், சுவரிலும் காணப்பட்டிருக்கின்றன. உணவு எச்சில்கள், காகிதக் குப்பைகள் அதாவது உணவுப் பொட்டலங்கள், பைகள், கோப்பைகள் ஆகியவை அறைகளில் விட்டுச் சென்றிருக்கின்றனர். அத்தகைய கரிசனையற்ற நடத்தை நம்முடைய நற்பெயரைக் கெடுத்துவிட்டிருக்கின்றன. மேலும் நம் தேவ பக்தியை பிரதிபலிப்பதில்லை. வரவிருக்கும் மாவட்ட மாநாடுகளில், “நம்முடைய இரட்சகருடைய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக” நம்மை நடத்திக்கொள்ள கடினமாக உழைப்போமாக.—தீத்து 2:9.
22 பெற்றோருக்காக: சிறு பிள்ளைகளும் இளைஞர்களும் “தேவ பக்தி” மாவட்ட மாநாட்டிற்கு ஆஜராகும்படி விசேஷமாக அழைக்கப்படுகின்றனர். அளிக்கப்படும் அதிகமான தகவல்கள் குறிப்பாக அவர்களுக்கு உற்சாகமூட்டுவதாயிருக்கும். எல்லாக் கிறிஸ்தவ கூட்டங்களிலும் கூர்ந்து கவனம் செலுத்தவும், மாநாட்டு நிகழ்ச்சிகளில் கருத்தூன்றி அக்கறைக்காட்டவும் கற்றிருக்கும் இளைஞர்களது தேவ பக்தியைப் பார்ப்பது எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது! (சங். 148: 12, 13) ஆனால் பெற்றோரின் மேற்பார்வையிலும், முன்மாதிரியிலும் அதிகம் சார்ந்திருக்கிறது. அநேக இளைஞர்கள் குறிப்பு எடுப்பதற்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பெடுப்பது எப்படி என்று நீங்கள் இன்னும் உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பித்திராவிட்டால் மாநாட்டிற்கு முன்னதாக இன்னும் மீந்திருக்கும் நேரத்தை நீங்கள் ஏன் பயன்படுத்தக்கூடாது? மிகச் சிறிய பிள்ளைகளுங்கூட வேத வாக்கியங்களையும், அதோடு தொடர்புடைய பேச்சாளர் எடுத்துரைக்கும் முக்கிய வார்த்தைகளையும் எழுதுவதற்கு உற்சாகமளிக்கப்படக்கூடும். சில பெற்றோர், தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்குத் திரும்பியப் பிறகு அல்லது வீட்டிற்குப் பிரயாணம் செய்துகொண்டிருக்கையில், அந்த நாளின் நிகழ்ச்சிநிரலினுடைய முக்கியக் குறிப்புகளை விமரிசனம் செய்ய ஏற்பாடு செய்கின்றனர்.
23 மெய்தான், பெரும்பாலான பெற்றோர் பிள்ளைகளின் இயல்பான மனச்சாய்வு விளையாடுவது என்பதை ஒத்துக்கொள்கின்றனர். அவர்கள் வாழ்க்கையில் அனுபவத்தில் குறைவுபடுகின்றனர், மேலும் முதிர்ச்சியற்றவர்கள். அப்படியானால் கூட்டங்களில், தங்களை எவ்வாறு நடத்திக்கொள்ள வேண்டும் என்றும் எப்படி கவனிக்க வேண்டும் என்றும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். இது பெற்றோரின் நல்ல மேற்பார்வையைத் தேவைப்படுத்துகிறது. சில பெற்றோர் இவ்விஷயத்தில் கடமையில் தவறிவிட்டிருக்கின்றனர். சில சமயங்களில், ஜெபத்தின்போது பெற்றோர் யெகோவாவுக்கு சரியான மரியாதையைக் காட்டுகிறவர்களாயிருக்கலாம், ஆனால் அவர்கள் பிள்ளைகள் விளையாடிக்கொண்டு, பிறரது கவனத்தைச் சிதறச் செய்யலாம். தங்கள் பிள்ளைகள் ஜெபத்தின்போது என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதைப் பெற்றோர் தெரிந்திருக்க வேண்டும். நிகழ்ச்சிநிரலின்போது அவர்கள் இருக்கைகளை விட்டுச் செல்லுகையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? மாநாட்டு நிகழ்ச்சிநிரலின்போது அல்லது அதற்குப் பிறகு பிள்ளைகள் மேற்பார்வையின்றி விடப்படுகின்றனரா?
24 உங்களது முழு ஒத்துழைப்பும் விரும்பப்படுகிறது: மாநாட்டுக்கு ஆஜராகும் அனைவருக்கும் போதுமான இருக்கைகள், புத்தகங்கள், உணவு மற்றும் பிற வசதிகள் கிடைக்கப்பெறும்படி போதிய திட்டமும், உழைப்பும் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஏற்பாடுகளைத் திறம்பட செய்வதை நிச்சயப்படுத்துவதற்காக ஒவ்வொரு சபையும் ஒரு குறிப்பிட்ட மாநாட்டுக்குத் திட்டமான விதத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறது. அதிகமான கூட்டத்தைத் தடுப்பதற்கு உங்கள் ஒத்துழைப்பு மிக முக்கியமாயிருக்கிறது. ஒரு சிலருக்கு வேறொரு பகுதியில் ஒரு மாநாட்டில் ஆஜராவது தேவையானதாக சூழ்நிலைகள் இருப்பது மெய்தான். என்றபோதிலும், பெரும்பாலும் தங்களுக்கென்று நியமிக்கப்பட்ட இடத்தில் மாநாட்டில் ஆஜராவது கூடிய காரியமாகும்.—1 கொரி. 13:5; பிலி. 2:4.
25 இருக்கைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் உங்களது முழுமையான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தயவுசெய்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது யாதெனில், மிக நெருங்கிய குடும்ப அங்கத்தினருக்காக அல்லது உங்களோடு பிரயாணம் செய்பவருக்காக மட்டுமே இருக்கைகள் பாதுகாக்கப்படலாம். தயவுசெய்து மற்றவர்களுக்காக இருக்கைகளை ஒதுக்கீடு செய்யாதீர்கள். சில சமயங்களில் அதிகப்படியான இருக்கைகள் குறிப்பாக யாருக்கு என்றல்லாமல் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இது, அட்டென்டென்ட்களுக்கும், இருக்கைகளுக்காக தேடிக்கொண்டிருக்கும் மற்றவர்களுக்கும் தவறான எண்ணம் கொடுப்பதாக இருக்கும், அன்பற்றதாகவும் இருக்கும். பைபிள் புத்திமதிக்கு இசைய நம் தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும் கூட்டி, இருக்கைகளைப் பாதுகாப்பதில் அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடுகளோடு முழுமையாக ஒத்துழைப்போமாக.—2 பேதுரு 1:5-8.
26 மாநாடு நடக்கும் இடத்திற்கு சொந்த பொருட்களைக் கொண்டுவருவதில் நல்ல புத்தியை பயன்படுத்தும்படி ஆலோசனை கொடுக்கப்படுகிறது. முன்பெல்லாம் சிலர் பெரிய கொள்கலங்கள் அல்லது தங்கள் இருக்கைகளுக்கடியில் வைக்க முடியாத அளவு பெரிய பொருட்களை கொண்டு வந்திருக்கின்றனர். இவை இருக்கைகளின் வரிசைகளுக்கிடையில் அல்லது இருக்கைகளின் மீது வைக்கப்பட்டன. இது சிலருக்கு இருக்கை கிடைக்கப் பெறாமல் செய்வதிலும், சில சமயங்களில் நெருப்பு மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறியதிலும் விளைவடைந்தது. அத்தகைய விஷயங்களில் நாம் கரிசனை காட்டுபவர்களாய் இருக்க வேண்டும்.
27 மாநாடு நடக்கும் இடத்தில் வீடியோ காமராக்களும் ஆடியோ பதிவு செய்யும் கருவிகளும் பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகிறது. என்றபோதிலும் அத்தகைய கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் மற்றவர்களைத் தொந்தரவு செய்யாமலும் கவனத்தைச் சிதறப்பண்ணாமலும் இருக்க கவனமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். அத்தகைய கருவிகள் இருக்கைகளின் வரிசைகளுக்கு இடையிலோ அல்லது வெளிசெல்லும் வழியிலோ வைக்கப்படக்கூடாது. இத்தகைய கருவிகள் ஒலிபெருக்கி அமைப்பு அல்லது மின் இணைப்புக்கள் இவற்றோடு இணைக்கப்படக்கூடாது. அதிசக்தி வாய்ந்த ஒளிக்கருவிகளும் பயன்பட அனுமதிக்கப்பட மாட்டாது. கவனச் சிதைவுக்குக் காரணமாயிருப்பவர்கள் அல்லது மேற்கூறப்பட்ட வழிநடத்தலைப் புறக்கணிப்பவர்கள், அவை தங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகையில் தயக்கமின்றி காரியத்தைச் சீர்செய்ய வேண்டும். இவ்வழிநடத்துதலுக்கு மீறுதல் இருப்பின், இதற்குப் பொறுப்புள்ள அட்டென்டென்ட்களும் மற்றவர்களும் அதைச் சரிசெய்யக் கவனமாயிருப்பர். மேலும் அவர்கள் அத்தகைய கருவிகளைப் பயன்படுத்துபவர்களிடமிருந்து முழு ஒத்துழைப்பையும் பெறவேண்டும்.
28 நம்முடைய தேவ பக்தி சமீப எதிர்காலத்தில் கடுமையாக சோதனைக்குட்படுத்தப்படும். “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனமாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.” (2 தீமோ. 3:12) “தேவ பக்தி” மாவட்ட மாநாட்டைப் போன்ற ஆவிக்குரிய ஏற்பாடுகளுக்காக யெகோவாவுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம், அங்கு அவர் நம்மை, “அவபக்தியையும் லெளகீக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ணும்படி போதித்து” பயிற்சி அளிக்கிறவராயிருப்பார்.—தீத்து 2:12.
[பக்கம் 5-ன் பெட்டி]
மாவட்ட மாநாடு நினைப்பூட்டுதல்கள்
அறைவசதி: மாநாட்டின் மூலம் அளிக்கப்பட்டுள்ள தங்கும் வசதியைப் பயன்படுத்துவதில் உங்கள் ஒத்துழைப்பு மிகவும் போற்றப்படுகிறது. உங்கள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டிய தேவை ஏற்பட்டால், நீங்கள் தங்கும் விடுதிக்கு நேரிடையாக தொலைபேசி மூலம் தெரிவிக்கவோ அல்லது எழுதவோ வேண்டும். எவ்வளவு முன்னதாக அதைச் செய்யக்கூடுமோ, அவ்வாறு விரைவாக செய்வதன் மூலம் நீங்கள் அந்த அறை பிறருக்குக் கிடைக்கும்படி செய்யக்கூடும்.
முழுக்காட்டுதல்: முழுக்காட்டுதல் பெறும் நபர்கள் சனிக்கிழமை காலையில் நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன்பே அவர்களுக்காக குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கும்படி முயற்சி செய்ய வேண்டும். முழுக்காட்டுதல் பெறத் திட்டமிடும் ஒவ்வொருவரும் அடக்கமான குளியல் ஆடையும் ஒரு துவாலையும் கொண்டுவர வேண்டும். பேச்சாளரால் முழுக்காட்டுதல் பேச்சும் ஜெபமும் முடிந்தபிறகு, அக்கூட்டத்தின் அக்ராசினர் முழுக்காட்டுதல் பெறும் அங்கத்தினர்களுக்குச் சுருக்கமான ஆலோசனைகளைக் கொடுப்பார், பிறகு பாட்டு பாடும்படி அறிவிப்பார். கடைசி அடியின் ஆரம்பத்துடன், அட்டென்டென்ட்கள் முழுக்காட்டப்பட இருப்பவர்களை முழுக்காட்டுதல் நடைபெறும் இடத்திற்கு அல்லது அவ்விடத்திற்கு அவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு வழிநடத்துவார், மற்றவர்கள் பாட்டுப் பாடுவதை முடிக்கின்றனர். முழுக்காட்டுதல் ஒருவரது ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக, மிக நெருங்கிய மற்றும் தனிப்பட்ட விஷயமாக யெகோவாவுக்கும் தனிப்பட்ட ஒருவருக்கும் இடையே இருப்பதால், கூட்டாளி முழுக்காட்டுதல் என்றழைக்கப்படும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முழுக்காட்டுதல் பெறும் நபர்கள் ஒருவரையொருவர் தழவிக்கொண்டு அல்லது கைகளைப் பிடித்துக்கொண்டு எடுக்கப்படும் ஓர் ஏற்பாடு கிடையாது.
பயனியர் அடையாளம்: எல்லா ஒழுங்கான பயனியர்கள், விசேஷித்த பயனியர்கள், மற்றும் பிரயாணக் கண்காணிகள் யாவரும் தங்கள் உவாட்ச்டவர் அடையாளம் மற்றும் நியமனம் அட்டை (S-202)-ஐ மாநாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். அவர்கள் ஆஜராகும் மாவட்ட மாநாட்டின்போது, குறைந்தபட்சம் ஆறு மாதங்களாக பயனியர் பட்டியலில் இருப்பவர்கள் ரூ60/- மதிப்புள்ள உணவு அனுமதிச் சீட்டுகளைத் தங்கள் உவாட்ச்டவர் அடையாள அட்டையைக் காட்டுவதன் மூலம் ஒரு மாநாட்டில் மட்டும் பெற்றுக்கொள்வர். அப்படியானால், அந்த அட்டையைப் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுபோல் கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். மாநாட்டில் அதை மாற்றுப்பெற முடியாது. புத்தக இலாக்காவாவில் கொடுக்கப்படக்கூடிய ஏதாவது பரிசு வெளியீடுகள் அல்லது பயனியர் விலையில் புத்தகங்கள், தங்களது உவாட்ச் டவர் அடையாள அட்டையைக் காட்டுவதன் பேரிலேயே கிடைக்கப்பெறும். இதே விதமாக பெத்தேல் சேவை செய்பவர்கள் தங்களுடைய பெத்தேல் அடையாள அட்டையைக் காட்டுவதன் மூலம் அவற்றைப் பெறலாம்.
வாலண்டியர் சேவை: ஒரு மாவட்ட மாநாட்டின் சுமுகமான செயல்முறைக்கு வாலண்டியர் உதவி தேவைப்படுகிறது. மாநாடு நாட்களில் ஒரு குறிப்பிட்ட சமயம் மட்டுமே நீங்கள் வேலை செய்யக்கூடும் என்றாலும், உங்கள் சேவைகள் போற்றப்படும். நீங்கள் உதவிசெய்யக்கூடுமானால், நீங்கள் மாநாட்டை அடைந்தவுடன் தயவுசெய்து வாலண்டியர் சேவை இலாக்காவில் அறிக்கை செய்யுங்கள். 16 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளும் மாநாட்டின் வெற்றியில் பங்குகொண்டு உதவலாம். ஆனால் அவர்கள் பெற்றோருடனோ அல்லது மற்ற பொறுப்புள்ள வயது வந்த ஒருவருடனோ சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.
லெப்பெல் அட்டைகள்: தயவுசெய்து மாநாட்டின்போதும் மாநாடு நடக்குமிடத்திற்கு வரும்போதும் விட்டுச்செல்லும்போதும் விசேஷ லெப்பெல் அட்டையை அணியுங்கள். இது பிரயாணம் செய்கையில் எப்போதுமே ஒரு நல்ல சாட்சி கொடுத்தலை நமக்குக் கூடியதாக்குகிறது. லெப்பெல் அட்டைகள் மாநாடுகளில் கிடைக்காததால், உங்கள் சபையின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
எச்சரிக்கை: நீங்கள் எங்கு நிறுத்தினாலும் உங்கள் வாகனத்தை எல்லாச் சமயங்களிலும் பூட்டி வைக்கவேண்டும். மேலும் ஒருபோதும் பார்க்கக்கூடிய விதத்தில் பொருட்களை உள்ளே விட்டுவராதீர்கள். உங்கள் உடைமைகளை கூடுமானால் பெட்டிக்குள் பூட்டி வையுங்கள். மேலும், மிகுந்த கூட்டத்தால் கவரப்படும் திருடர்களுக்கும், பிக்பாக்கெட் செய்பவர்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். இது மதிப்புள்ள பொருட்களை மாநாட்டின்போது இருக்கைகள் மீது கவனியாமல் விட்டு செல்லக்கூடாது என்பதையும் குறிக்கும். தயவுசெய்து கவனமாயிருங்கள்.
சில தங்கும் விடுதிகள் இழிபொருள் ஓவியத்தன்மையுள்ள மற்றும் ஒழுக்கயீனமுள்ள தொலைக்காட்சித் திரைப்படங்களைக் காண எளிதான வாய்ப்பளிப்பதாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இது, இத்தகைய இடங்களில் தங்கியிருக்கும் பிள்ளைகள் மேற்பார்வையில்லாமல் டி.வி. பார்ப்பதைத் தவிர்ப்பதன் அவசியத்தை அறிவுறுத்துகிறது.