உங்களுடைய சபையின் பொதுப் பேச்சு நிகழ்ச்சிக்கு முழுமையாக ஆதரவளியுங்கள்
1 சில ஆண்டுகளுக்கு முன்பாக ஓர் இளைஞர், உள்ளூர் சபைக் கூட்டங்களை விளம்பரப்படுத்துகிற கைப்பிரதி ஒன்றை கண்டுபிடித்தார். அவர் சத்தியத்திற்காகத் தேடிக்கொண்டிருந்ததால், அந்த ஞாயிற்றுக்கிழமையே பொதுப் பேச்சுக்கு ஆஜராகத் தீர்மானித்து, வெகு நேரத்திற்கு முன்பே மன்றத்திற்கு வந்துசேர்ந்தார். பிரஸ்தாபி ஒருவர் கனிவுடன் அவரை வரவேற்றார்; சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், பைபிள் படிப்பு ஒன்றை கொண்டிருக்கும்படி கூறினார், அதை அவர் மறுத்துவிட்டார். என்றபோதிலும், நன்கு தயார்செய்யப்பட்ட பொதுப் பேச்சினால் மனங்கவரப்பட்டார், அதனால் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு, கூட்டம் முடிந்தப் பிறகு அந்தப் படிப்பை ஏற்றுக்கொண்டார். இந்த இளைஞர் வேகமாக முன்னேற்றம் செய்து, அநேக மாதங்களுக்குப் பிறகு முழுக்காட்டப்பட்டார். இந்த அனுபவத்திலிருந்து நாம் குறைந்தபட்சம் மூன்று பயனுள்ள பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
2 முதலாவதாக, அந்தப் பொதுப் பேச்சு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. உங்களுடைய சபைக் கூட்டத்தின் நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துவதற்கு, அச்சிடப்பட்ட கைப்பிரதிகளை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? வருகிற வாரத்தில் கொடுக்கப்படவிருக்கிற பொதுப் பேச்சின் தலைப்பை அக்கிராசனர் அறிவிப்புச் செய்கையில், பிராந்தியத்திலுள்ளவர்கள் தற்போது நம்முடைய பிரசுரத்தை வாசித்துவந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி, அந்தப் பேச்சுப் பொருளில் விசேஷமாக அக்கறைகாட்டக்கூடிய உங்களுடைய பிராந்தியத்திலுள்ளவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். சில ஆட்கள் வாசிக்க விரும்புவதில்லை, அல்லது அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வாசிக்கிறார்கள், ஆனால் வேதப்பூர்வமான தலைப்பின் பேரிலான பேச்சை செவிகொடுத்துக் கேட்பதற்கு ஒருவேளை விருப்பமுள்ளவர்களாய் இருக்கலாம்.
3 இரண்டாவதாக, அந்தப் புதியவர் கனிவான வரவேற்பு அளிக்கப்பட்டார். முடிந்தளவுக்கு முன்கூட்டியே மன்றத்திற்கு வருவதற்கு நீங்கள் திட்டமிடுவீர்களானால், உங்களுடைய சகோதர சகோதரிகளையும் அதோடு அக்கறையுள்ள எவரையும் நீங்கள் வரவேற்க முடியும். (எபி. 10:24) புதியவர் ஒருவர் முதல் முறையாக ஆஜராவாரானால், எதை எதிர்பார்த்திருக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கமாட்டார். நம்முடைய கூட்டங்கள் பாட்டு, ஜெபத்துடன் ஆரம்பமாகிறது என்பதை விளக்குங்கள், மேலும் கூட்டம் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதையும் அவருக்குச் சொல்லுங்கள். பொருத்தமாய் இருக்குமானால், உங்களுடைய பைபிள் மற்றும் பாட்டுப்புத்தகத்தை அவருடன் பகிர்ந்துகொள்ளும்படிக்கு, அவரை உங்களுடன் அமர்ந்துகொள்ள அழையுங்கள். கூட்டம் முடிந்தவுடனேயே, அவருக்கு இருக்கக்கூடிய எந்தக் கேள்விகளையும் குறித்து உங்களுடன் கலந்துபேசுவதற்கு அவரை அழையுங்கள்.
4 மூன்றாவதாக, அந்தப் பேச்சு நன்கு தயார்செய்யப்பட்டு இருந்தது. பொதுப் பேச்சாளர்களாக சபையைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு சிலாக்கியம் பெற்றவர்கள், சபையாரை மிகுந்த அன்பிற்கும் நற்கிரியைகளுக்கும் தூண்டுவதற்கு, நன்கு தயார்செய்வதிலும் ஒத்திகைப் பார்ப்பதிலும் அநேக மணிநேரங்களைச் செலவழிக்கின்றனர். நாம் அனைவரும் இன்று அழுத்தத்தில் இருக்கிறோம், கடவுளுடைய வார்த்தையிலிருந்து வருகிற புத்துணர்ச்சியளிக்கும் சத்தியங்களே நாம் சகித்திருப்பதற்கு உதவிசெய்ய தேவை. நிச்சயமாகவே, அந்தப் பொதுப் பேச்சு எவ்வளவு தகவலளிக்கக்கூடியதாய் இருந்தாலும்சரி, என்ன சொல்லப்படுகிறதோ அதற்கு நாம் தனிப்பட்ட விதமாக கூர்ந்து கவனம்செலுத்தினால் தவிர, எந்தப் பிரயோஜனமுமில்லை. பேச்சின்போது கவனத்தை ஒருமுகப்படுத்துவதை எப்பொழுதாவது நீங்கள் கடினமாகக் கண்டிருக்கிறீர்களா? நம்முடைய மாநாடுகளின்போது நாம் பெரும்பாலும் செய்வதுபோல, சுருக்கமான குறிப்புகள் எடுப்பது பயனுள்ளவையாய் இருக்கலாம். ஒவ்வொரு வசனமும் வாசிக்கப்படுகையிலும் விளக்கிக் கூறப்படுகையிலும் உங்களுடைய பைபிளோடு பின்பற்றுவதைக் குறித்து நிச்சயமாயிருங்கள்.
5 சங்கமானது வேதப்பூர்வமான பேச்சுப் பொருளின்பேரில் மிகுதியான அளவு பலதரப்பட்ட பொதுப் பேச்சுக்களை அளித்திருக்கிறது. நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒரு சகோதரரின்மூலம், சபையின் பொதுப் பேச்சு நிகழ்ச்சியை மூப்பர் குழு ஒத்திசைவிக்கிறது. சங்கத்தால் கொடுக்கப்பட்ட பேச்சுப் பொருள்கள், தற்போதைய உள்ளூர் தேவைகளைப் பற்றி பேசுவதற்கு தெரிந்தெடுக்கப்படுகின்றன. இந்த இன்றியமையாத தகவல் எதையும் தவறவிடாதிருங்கள், உங்களுடைய சபையின் வாராந்தர பொதுப் பேச்சுக்கு முழுமையாக ஆதரவளியுங்கள்.