நினைவு ஆசரிப்பில் வரவேற்கப்படுகிறவர்களாய் அவர்களை உணரச்செய்யுங்கள்
1 கடந்த சில வருடங்களில், நினைவு ஆசரிப்புக்கு ஆஜரான 3 ஆட்களில் 1 ஆள் மட்டுமே நற்செய்தியின் பிரஸ்தாபியாக இருந்தார். இந்த வருடத்திலும் அதுவே உண்மையாக இருக்கலாம். உறவினர் அல்லது மற்றொரு நகரத்தில் வசிக்கிற பழக்கமானவர் ஒருவருடைய உந்துவித்தலினால் சிலர் ஆஜராகலாம், அதேசமயத்தில் வேறு சிலர் உள்ளூர் பிரஸ்தாபிகளால் அழைக்கப்பட்டிருக்கலாம். ஆஜராகிற இன்னும் பிறர், முழுக்காட்டப்பட்டவர்களாய் இருந்தாலும், இனிமேலும் ஊழியத்தில் சுறுசுறுப்புள்ளவர்களாய் இல்லை. “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்ற இயேசுவின் கட்டளைக்கு மதிப்பைக் காட்டுகிற அனைவரையும் நாங்கள் மனமார வரவேற்கிறோம்.—1 கொ. 11:24; ரோ. 15:7, NW.
2 நியமிக்கப்பட்ட அட்டன்டன்டுகள், அனைவரையும், விசேஷமாக புதியவர்களை, ராஜ்ய மன்றத்திற்கு அவர்கள் வந்துசேருகையில் வரவேற்பதற்கு தயாராய் இருக்கவேண்டும். என்றபோதிலும், நினைவு ஆசரிப்பில் உபசரிக்கும் போக்கைப் பின்பற்றுவதில் நாமனைவரும் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம். (ரோ. 12:13) எவ்விதமாக?
3 அந்த நாள் மாலையில் பிரஸ்தாபிகளில் சிலர், அக்கறையுள்ள ஆட்களுக்குப் போக்குவரத்து வசதியை அளிப்பதில் சுறுசுறுப்பாய் இருப்பார்கள். மற்றவர்கள் முன்கூட்டியே வந்துசேர்ந்து, தாங்களாகவே வருகிற பார்வையாளர்களை வரவேற்க ஆஜராயிருக்கலாம். பழக்கமற்ற ஒருவர் மன்றத்திற்குள் நுழைகையில், அவரை மனதார வரவேற்று சம்பாஷணையை ஆரம்பியுங்கள். உள்ளூர் சகோதரர்கள் யாரையாவது அவருக்குத் தெரியுமா என்பதை அவரிடம் கேளுங்கள். அவருக்குத் தெரியுமென்றால், அந்தத் தனிப்பட்ட நபர் வரும்வரை அவரைக் கவனித்துக்கொள்ளுங்கள். (லூக்கா 10:35-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) தனிப்பட்ட விதமாக எவரையும் அவர் அறிந்திருக்கவில்லையென்றால், கூட்டம் நடக்கும்போது உங்களுடன் அமர்ந்துகொள்ளும்படி அவரை ஏன் அழைக்கக்கூடாது? நிகழ்ச்சிநிரலின்போது திராட்சரசமும் அப்பமும் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதை விளக்கிக்கூறுங்கள். பேச்சாளரால் குறிப்பிடப்படுகிற வேதவசனங்களை எடுத்துப் பார்ப்பதில் அவருக்கு உங்களுடைய உதவி தேவைப்படலாம்.
4 நினைவு ஆசரிப்பின் முடிவில், அவர் வந்ததில் நீங்கள் மகிழ்ச்சியடைந்தீர்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். நம்முடைய வேலையைப் பற்றிய கேள்விகள் அவருக்கு இருக்கலாம், நீங்கள் அவற்றிற்கு பதிலளிக்கலாம். உங்களுடைய தனிப்பட்ட அக்கறையானது, வேறு இடத்திலோ மற்ற இடங்களிலோ, பைபிள் பொருள் ஏதாவது ஒன்றின்பேரில் கலந்தாலோசிப்பதற்கு வழிநடத்தலாம். இந்தப் போற்றத்தக்கப் படியை எடுத்திருக்கிற விழிப்புள்ள சகோதரர்களினால் மிகச் சிறந்த படிப்புகள் சில ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இராஜ்ய மன்றத்தைவிட்டு அவர் கிளம்புவதற்கு முன்பாக, மற்றவர்களிடத்தில் அவரை அறிமுகப்படுத்தி மீண்டும் வரும்படி அவருக்குக் கனிவான அழைப்பு கொடுங்கள்.
5 கூட்டங்களுக்கு ஒழுங்காக ஆஜராயிராத அல்லது சில காலத்திற்கு ஊழியத்தில் சுறுசுறுப்பாய் இருந்திராத நம்முடைய அன்பான சகோதர சகோதரிகளை வரவேற்பதற்கு நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறோம்! ஏன் அவர்கள் வரவில்லை என்பதைப் பற்றிய கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, அவர்கள் வந்திருப்பதைக் குறித்து வெறுமனே உங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்திக் காட்டுங்கள். ஒருவேளை நினைவு ஆசரிப்பு பேச்சின்போது அவர்கள் கேட்கிற ஏதோவொன்று, யெகோவாவுடன் உள்ள தங்களுடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட உறவை மறுபடியும் மதிப்பிட்டுப் பார்ப்பதற்கு அவர்களை உந்துவிக்கலாம். நாம் கொடுக்கிற கனிவான வரவேற்பும் நாம் காண்பிக்கிற உண்மையான அக்கறையும் அவர்களுடைய இருதயங்களைத் தொடலாம். அவர்களை மீண்டும் பார்ப்பதற்கு நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருப்பதைக் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.—ரோ. 1:10, 11.
6 பெரும்பாலான சபைகளில் ஏப்ரல் 10 அன்று, “மனித சமூகத்தின் தேவைகளை உண்மை மதம் பூர்த்திசெய்கிறது” என்று தலைப்பிடப்பட்ட விசேஷித்தப் பொதுப் பேச்சு கொடுக்கப்படும். நினைவு ஆசரிப்புக்கு ஆஜராகிறவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருப்பதையும் ஆஜராயிருக்க உதவியளிக்கப்பட்டிருப்பதையும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். இந்த விசேஷித்த கூட்டங்களுக்கு ஆஜராகிறவர்கள் வரவேற்கப்படுகிறவர்களாய் உணருவார்கள், மேலும் யெகோவாவின் மக்கள் மத்தியில் காணப்படுகிற கனிவான கூட்டுறவு மனப்பான்மையை அனுபவிப்பார்கள் என்பது எங்களுடைய நம்பிக்கையாகும்.—சங். 133:1.