நமது பழைய பதிப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுதல்
1 யெகோவா நமக்குச் செழிப்பான ஆவிக்குரிய உணவை அபரிமிதமாக அளித்திருக்கிறார். இந்தப் பொருளில் பெரும்பாலானவை சமீப ஆண்டுகளில் பிரசுரிக்கப்பட்டுள்ள 192-பக்க புத்தகங்களின் வடிவில் இருந்திருக்கின்றன. நாம் ஜனவரியில், விசேஷ விலையில் வினியோகிப்பதற்காக நம் ராஜ்ய ஊழியத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 192-பக்க பழைய பதிப்புகளில் எதையேனும் அளித்துக்கொண்டிருப்போம். இன்னும் நல்ல நிலையிலிருக்கிற புத்தகங்களில் சிலவற்றை நீங்கள் உங்களுடைய வீட்டில் வைத்திருக்கிறீர்களா? உங்களுடைய சபையிலிருந்து தேவையானவற்றைப் பெற்றுக்கொண்டீர்களா? அப்படியானால், அவற்றிலுள்ள பொருளடக்கத்தை மறுபார்வைசெய்து, உங்களுடைய பிரசங்கத்தில் பயன்படுத்தக்கூடிய பேச்சுக் குறிப்புகள் சிலவற்றைத் தெரிந்தெடுங்கள்.
2 “நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு” (ஆங்கிலம்) புத்தகத்தைச் சிறப்பித்துக் காண்பித்துக்கொண்டிருந்தால், இந்த அணுகுமுறையை நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்:
◼ “இந்த உலகத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதால், மகிழ்ச்சியை காண்பது பெரும்பாலான மக்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இப்போது இருக்கிற நிலைமைகளில் மகிழ்ச்சியாயிருப்பது சாத்தியமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதிலுக்காக அனுமதியுங்கள். பக்கம் 106-க்குத் திருப்பி, வன்முறையின் காரணமாக மனிதவர்க்கம் எவ்வாறு பயத்தில் வாழ்கிறது என்பதைக் குறிப்பிடுங்கள்.] இன்றைய பிரச்சினைகளை எவ்வாறு சமாளிக்கலாம், கடைசியில் எவ்வாறு எல்லையற்ற மகிழ்ச்சியை சமாதானமான புதிய உலகில் அனுபவித்து மகிழலாம் என்பதை பைபிள் காட்டுகிறது. [பக்கம் 188-க்குத் திருப்பி, 2 பேதுரு 3:13-ஐ வாசியுங்கள்; பக்கம் 189-ல் உள்ள படத்தை விளக்கிக்காட்டுங்கள்.] பைபிளே இந்த நற்செய்தியின் ஊற்றுமூலமாக இருக்கிறது, அதைப் புரிந்துகொள்வதற்கு இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவிசெய்யக்கூடும்.”
3 வீட்டுக்காரர் சர்ச்சுக்கு செல்பவராக இருந்தால், “உம்முடைய ராஜ்யம் வருவதாக” புத்தகத்தை இதுபோன்று அறிமுகப்படுத்தி அளிக்கலாம்:
◼ “கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காக ஏறக்குறைய 2,000 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் ஜெபித்திருக்கிறார்கள். அந்த ராஜ்யம் மனிதவர்க்கத்திற்கு என்ன செய்யப்போகிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதிலுக்காக அனுமதியுங்கள். பக்கம் 25-ல் உள்ள பெட்டிக்குத் திருப்பி, ராஜ்ய ஆட்சியில் நிறைவேற்றப்படும் ஆசீர்வாதங்கள் சிலவற்றைக் குறிப்பிடுங்கள்.] அந்த ராஜ்யம் நிறைவேற்றப்போவதை இந்தப் புத்தகம் கலந்தாலோசிக்கிறது. அதோடு நீங்களும் உங்களுடைய அன்பானவர்களும் எவ்வாறு பயனடையலாம் என்பதை விளக்குகிறது. அதை நீங்கள் வாசிக்க விரும்பினால், ஒரு பிரதியை உங்களிடம் விட்டுச்செல்ல சந்தோஷப்படுகிறேன்.”
4 “மெய் சமாதானமும் பாதுகாப்பும்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?” புத்தகத்தைப் பயன்படுத்துவீர்களானால், இதை முயற்சித்துப் பார்க்க நீங்கள் விரும்பலாம்:
◼ “சமாதானமும் பாதுகாப்பும் இருக்கிற ஒரு உலகத்தில் வாழவே ஒவ்வொருவரும் விரும்புகிறோம். நம்முடைய வாழ்நாட்காலத்தில் நாம் அதை அனுபவிக்கவில்லை என்பது வருந்தத்தக்கது. சமாதானத்தையும் பாதுகாப்பையும் உண்மையான காரியமாக்குவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] இந்தப் பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்கான வல்லமை கடவுளிடம் இருக்கிறது, அதைச் செய்யப்போவதாக அவர் வாக்கும் கொடுத்திருக்கிறார்.” பக்கம் 4-ல் உள்ள படத்திற்குத் திருப்பி, பின்பு மீகா 4:3, 4-ஐ வாசியுங்கள். நன்றாக செவிசாய்ப்பவரானால், ராஜ்ய நம்பிக்கையைப் பற்றி இன்னும் அதிகமாக விளக்கி, அந்தப் புத்தகத்தை அளியுங்கள்; மறுசந்திப்புக்காகவும் ஏற்பாடுகள் செய்யுங்கள்.
5 “இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?” புத்தகத்தைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் தெரிவுசெய்யலாம். அப்படியானால், இதைச் சொல்லலாம்:
◼ “இந்த உலகத்தில் கடவுள் ஏன் இவ்வளவு துன்பத்தை அனுமதித்திருக்கிறார் என்று அநேக ஜனங்கள் யோசிக்கிறார்கள். அவர் சர்வ வல்லமையுள்ளவராக இருப்பதால், நம்முடைய துயரத்திற்கு முடிவுகட்ட ஏன் ஒன்றும் செய்யாமலிருக்கிறார்? நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] கடவுள் நம்மை கைவிட்டுவிடவில்லையென்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.” 142, 143-ம் பக்கங்களுக்குத் திருப்பி, ஏசாயா 11:6-9, வெளிப்படுத்துதல் 21:2-4 ஆகிய மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி, இதைத்தான் நாம் எதிர்நோக்கியிருக்கலாம் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். பைபிளிலிருந்து சங்கீதம் 37:11, 29-ஐ வாசியுங்கள். புத்தகத்தை ஏற்றுக்கொண்டால், அதை விளக்குவதற்கு மீண்டும் வருவதாக சொல்லுங்கள்.
6 பைபிளை மிகக் கவனமாக ஆராய்வதற்கு நம்முடைய பிரசுரங்கள் ஆயிரக்கணக்கானோரைத் தூண்டுவித்திருக்கின்றன. அவர்கள் கற்றுக்கொண்டது மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அவர்களுக்கு கொண்டுவந்திருக்கிறது. (சங். 146:5) அவர்களுக்கு உதவிசெய்வது நம்முடைய சிலாக்கியமாகும்.